“காளியப்ப கவுண்டர் வீட்டு மகள் பூவாயும் அப்பாவுப் படையாட்சி வீட்டு இருசப்பனும் வீட்டை விட்டுக் காணாமல்  ஓடிப்போய்க் கல்யாணம் செஞ்சு கிட்டாங்களாம்!” 

honor killingசித்திரை வெயிலில் சருகாய்க் காய்ந்துபோன வைக்கோலில் நெருப்புப் பற்றியது போல மட மடவென்று ஊரெங்கும் வெகு வேகமாகப் பற்றிப் பரவியது செய்தி.

காளியப்ப கவுண்டரின் வீட்டு முன்பு சிறிது நேரத்திற்குள் உறவினர்கள் கூட்டம் கூடி விட்டது.

வடக்கு தெற்காகச் செல்லும் சாலையின் கிழக்குப் புறத்தில்தான் ஊர் அமைந்துள்ளது. ஊருக்குள் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கையே ஐம்பது அல்லது அறுபதுதான் இருக்கும். அதில் பெரும்பாலான குடும்பங்கள் படையாட்சிக் குடும்பங்கள். நிலமில்லாதவர்கள். விவசாயக் கூலித் தொழிலையே முழுக்க நம்பியிருப்பவர்கள். அங்கு சில கவுண்டர் குடும்பங்கள் இருந்தாலும், பெரும்பாலான கவுண்டர்கள் தங்களுடைய தோட்டத்திலேயே வீடு கட்டி ஊருக்கு வெளியிலேயே குடியிருக்கின்றனர்.

மேற்குப் புறத்தில் சற்று உள்ளே தள்ளி இருந்த தோட்டத்தின் நடுவில் இருந்தது காளியப்ப கவுண்டரின் வீடு. கை ஓடு போட்டு வேய்ந்திருந்த பழங்காலத்து வீடு. பக்கத்திலேயே  தோட்டத்துக் கிணறு. பருவம் தவறாமல் மழை பெய்தால் கிணற்றில் நீர் இருக்கும். அவருக்கு உள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தில் ஓரளவு வருமானம் பார்த்து விடுவார். பற்றாக் குறைக்கு அந்த ஊரில் இருக்கும் இரண்டு  பெரும் பண்ணையக்காரர்களின் தோட்டங்களில்  கிடைக்கும் கூலி வேலை கை கொடுக்கும்.

பாழாய்ப் போன வானம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகக் கண் திறக்காமல் வஞ்சித்து விட்டது. கிணற்றுப் பாசனத்தை நம்பியிருந்த விவசாயம் ஏமாற்றி விட்டது. சுற்று வட்டாரத்தில் பச்சை என்பது ஒரு காசு அளவுக்கும் இல்லை. ஊரே பிழைப்புத் தேடி வாய்க்கால் கரை வெளிக்குச் சென்றது. காளியப்ப கவுண்டரும், அவரது மனைவி பவளாயும், மகள் பூவாயும் ஊராருடன் சேர்ந்து  சர்க்கரை ஆலைக்குக் கரும்பு வெட்டும் வேலைக்குக் கரை வெளிக்குச் சென்றனர்.

காலையில் ஊரிலிருந்து கிளம்பும் முதல் பேருந்தைப் பிடித்துக்  கரை வெளிக்குச் சென்று, நாள் முழுவதும் கரும்பு வெட்டி, லாரிக்குப் பாரம் ஏற்றி விட்டு, நன்கு இருட்டிய பிறகு மீண்டும் கடைசிப் பேருந்தைப் பிடித்து ஊர் திரும்புவது தினசரி வாழ்க்கையானது. சிறிய வயதிலிருந்தே ஒருவரை அறிவர் அறிந்திருந்த ஒரே ஊர்க்காரர்களான  பூவாயிக்கும் இருசப்பனுக்கும் இடையில் ஒரே இடத்தில் தொடர்ந்து வேலை செய்தது நெருக்கத்தையும் புரிதலையும் அதிகரித்தது.

நெருக்கமும், புரிதலும், அன்பும், பரிவும் இருவருக்கும் இடையில் காதல் வேரைத் துளிர வைத்தது. அது ஆல மரமாக வளர்ந்து வலுப்பெற்று சாதியப் பழஞ்சுவரைத் தகர்த்து எறிந்தது.

இரண்டு குடும்பங்களும் தமது திருமணத்துக்குச் சம்மதிக்கமாட்டார்கள் என்பதை நன்கு அறிந்த இருசப்பனும் பூவாயும் இரண்டு குடும்பங்களுக்கும் தெரிவிக்காமல், கரும்பு வெட்டும் இடத்தில் அறிமுகமான வேறு ஊரைச் சேர்ந்த  சில நண்பர்களின் உதவியுடன் இரகசியமாகத் திருமணம் செய்து கொண்டனர்.

செய்தி கேட்டு இடி விழுந்தது போல நிலைகுலைந்து வீட்டின் உள் அறையில் சுவரில் சாய்ந்த பவளாயியின் கண்கள் ஒரே திசையில் நிலை குத்தி நின்றன. அதிர்ச்சி, அவமானம், வேதனை, வெறுப்பு என்ற பல்வேறு உணர்வுகளாலும் தாக்கப்பட்டு, இறுகிப் போனவளாக, உணர்வுகள் மறுத்துப் போனவளாக  அவள் அமர்ந்திருந்தாள்.

“குல மானத்தையே குழி தோண்டிப் பொதைத்து விட்ட அந்த அவிசாரியை சும்மா விடக் கூடாது. அவ எங்கிருந்தாலும் இழுத்து வந்து காவு கொடுக்க வேண்டும்” என்று பவளாயின் அண்ணன் மனைவி அம்மணி தனது கனத்த குரலில் கத்திக் கொண்டிருந்தாள். 

பக்கத்து ஊரில் இருக்கும் பவளாயின் அண்ணன் கந்தசாமிக் கவுண்டர் தனது  உறவினருக்குச் சொந்தமான காரில்  சில உள்ளூர்க்காரர்களையும் அழைத்துக் கொண்டு பூவாயியையும் இருசப்பனையும் தேடிச் சென்று இருந்தார். பூவாயி எங்கிருந்தாலும் அவளை இருசப்பனிடமிருந்து பிரித்து இழுத்து வந்து விட வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம்.

வேலைக்குச் சென்ற இடத்தில் ஆணும் பெண்ணும் பேசிக் கொள்வது இயல்புதான். பொதுவாக இருசப்பன் கலகலப்பாக எல்லோரிடமும் பழகும் இயல்பு கொண்டவன், மற்றவர்கள் வேலையில் பின்தங்கி இருக்கும்போது வலிய வந்து உதவி செய்வான். வேலை செய்யும் அனைவருமே அவனோடு நட்போடும் உரிமையோடும் பழகுவார்கள். அது போலத்தான் பூவாயும் இருசப்பனும் உள்ளனர் என பவளாயி நினைத்திருந்தாள். நிலைமை இந்த அளவுக்குப் போகும் என்று அவள் ஒரு சிறிதும் எண்ணிப் பார்த்ததில்லை.

பூவாயியைக் கூட்டி வந்து என்ன செய்வார்கள்? என்பதை எண்ணிப் பார்க்கவே பவளாயிக்கு  இதயம் நின்று விடும்போல ஆகியது.. கொன்று விடுவார்களோ? அவளால் அதைத் தாங்கிக் கொள்ள முடியுமா?

ஏற்கனவே ஒரு பெண் குழந்தையைப் பறி கொடுத்திருந்தவள் அவள். பூவாயிக்குப் பிறகு ஒரு குழந்தை பிறந்தது. ஆணாக இருக்கும் என எதிர்பார்த்திருந்தவர்களுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. பிறந்தது பெண் குழந்தை.

“இருக்கும் ஒரு பொட்டையைக் கரை சேர்க்கவே கோவணத் துண்டு அளவு உள்ள நிலம் பத்தாது. இந்த லட்சணத்தில் இன்னொரு பொட்டை தேவைதானா?” எனக் கூறி அவளது மாமியாரும் மற்றவர்களும் பாலில் நெல்லைக் கலந்து ஊற்றி அந்தச் சிசுவை மடித்தனர்.

அந்தக் குழந்தையின் மரணமே இன்னும் அவளது நெஞ்சைப் பாறாங்கல்லாக அழுத்திக் கொண்டிருக்கிறது. இன்னொரு இழப்பை அவளால் தாங்கிக் கொள்ள முடியுமா?

கிராமமே இருளில் மூழ்கியிருந்தது. சாலையில் வந்த கார் காளியண்ண கவுண்டர் வீட்டை நோக்கித் திரும்பி மெதுவாகச் சென்றது. வீட்டில்  நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டும் இருந்தனர். காரில் இருந்து இறங்கிய கந்தசாமிக் கவுண்டர் மற்றும் சிலருடன் பூவாயும் இருந்தாள். அவள் அங்கமெல்லாம் ஒடுங்கித் தலை குனிந்தவாறு காரிலிருந்து இறங்கினாள்.

அவளைக் கண்டதும் அவளுடைய அத்தை அம்மணி ஓடி வந்தாள், “அடி, நாசமாய்ப் போனவளே, சாதி மானத்தையே கெடுத்துட்டியேடி, இனி எப்படியடி நம்ம சாதி சனங்க மத்தியிலே  தலை நிமிர்ந்து நடப்போம்?” என்று பெருங்குரலெடுத்துக் கத்தியபடி ஓடி வந்தாள், வந்தவள் பூவாயின் தலை முடியை இறுகப் பற்றித்  தரதரவென்று வீட்டிற்குள் இழுத்துச் சென்றாள். ஒரு கயிற்றுக் கட்டில் மேல் அவளைத் தள்ளினாள்.

வரும்போதே பூச்சிக் கொல்லிப் பாட்டிலைக் கடையிலிருந்து கந்தசாமிக் கவுண்டர் வாங்கி வந்திருந்தார். அதைத் திறந்து அம்மணி கையில் தந்தார். காளியண்ண கவுண்டர் வெளியே திண்ணையில் மரக் கட்டை போல எந்த உணர்வின்றியும் அமர்ந்திருந்தார். பூவாயி படுத்திருந்த கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த சுவரில்தான் பவளாயி சாய்ந்த நிலையில் கிடந்தாள். அவளுடைய கண்கள் மட்டும் வெறித்த நிலையில் நிலை குத்தியவாறு இருந்தன.

கந்தசாமிக் கவுண்டர் பூவாயின் கைகள் இரண்டையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். அம்மணி அம்மாள் பூச்சிக் கொல்லிப் பாட்டிலைக் கையில் வைத்தவாறு,

“தேவடியா முண்டை, இதை நீயே வாங்கிக் குடித்து விட்டு செத்துத் தொலை. அப்பத்தான் இந்தக் கேவலத்திலிருந்து நாங்கள் விடுபடுவோம். இல்லையனா, நானே ஒன் வாயிலே ஊத்திக் கொன்னு போடுவேன்” என மிரட்டிக் கொண்டிருந்தாள்.        

“என்னை உயிரோடு விட்டுருங்க, நா எங்காவது போயி பொளைச்சுக்குறேன்” எனக் கெஞ்சிக் கொண்டிருந்தாள் பூவாயி.

கடைசியாக தனது அம்மாவைப் பார்த்து, “நீயாவது இரக்கம் காட்ட மாட்டாயா, அம்மா?” எனக் கெஞ்சினாள். கதறினாள். ஆனால் பவளாயியின் முகத்தில் எந்த உணர்வும் இல்லை. சவக் களைதான் அந்த முகத்தில் தெரிந்தது..

அதைக் கண்ட பூவாயி தனது அத்தை கையில் இருந்த பூச்சிக் கொல்லியை வெடுக்கென்று பிடுங்கித் தனது வாயில் வேகமாகக் கொட்டிக் கொண்டு “அம்மா!” என்று பெரும் சத்தத்துடன் படுக்கையில் சாய்ந்தாள்.

அப்பொழுதுதான் யாரும் எதிர்பாராதது நடந்தது. 

பூவாயின் குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுக் கனவிலிருந்து விழித்துக் கொண்டவளைப் போல உணர்வு பெற்ற பவளாயி, “மகளே, இந்தக் கொலைகாரப் பாவிகள் பெண்களை உயிரோடு வாழ விட மாட்டார்கள். பெண் குலமே பிறக்காமல் இந்தச் சாதி அழிந்து நாசமாகப் போகட்டும்!” என ஓங்காரக்குரலில் பெரும் சப்தமிட்டுக் கொண்டே எழுந்து வெளியில் ஓடினாள். ஓடிய வேகத்தில் வெளியில் இருந்த நீரில்லாத கிணற்றில் குதித்தாள்.

கூடியிருந்த உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

அடுத்த நாள் காளியண்ண கவுண்டர் வீட்டில் இருந்து இரண்டு பிணங்கள் அடக்கம் செய்யப்படுவதற்காக இடு காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.  காளியண்ண கவுண்டர் நடை பிணமானார். 

- புவிமைந்தன்

Pin It