“புதிய முன்னோடி”- இன் சென்ற இதழில் (எண் 3, ஜூலை-அக். 2015) பாஸ்கர் என்ற கட்டுரையாளர் எழுதிய “சாதிய ஆணவக் கொலைகளின் பொருளாயத அடிப்படை” என்ற கட்டுரையில் வாசித்த வாசகர்களில் ஒரு சிலர் பிற்பட்ட சாதியினர் அனைவருமே பொருளாதாரத்தில் மேலோங்கியவர்கள் என்பதாக ஒரு தொனியின் சாய்வு தென்படுவதாக நேரில் தெரிவித்தனர். அதன் பொருட்டே இவ்விளக்கம்.

சாதிய ஆணவக் கொலையில் முதன்மையாக ஈடுபடுவது பிற்படுத்தப்பட்ட சாதிகளில் உள்ள ஆதிக்கச் சக்திகளே. சாதி மறுப்பு / காதல் திருமணம் செய்வோரில் பெண், தலித் அல்லாத சாதியைச் சேர்ந்தவராக இருந்தால் மட்டுமே முதன்மையாக அதை தடுப்பதும் அவசியப்பட்டால் / சாத்தியப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆணை கொல்லுவதுமாக நடக்கிறது. அக்கொலைகளை செய்வது பெற்றோரில் ஒரு சிலர் மட்டுமே.

அதிகமானோர் அக்கிராமம் / வட்டாரத்தைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட சாதி சங்கத்தின் அல்லது அச்சாதியின் குறியீடாக கருதப்படும் தலைவர் அல்லது சிற்றரசர் பெயரிலான அமைப்பின் அல்லது குறிப்பிட்ட ஒரு சாதிக்காகவே நடத்தப்படும் அரசியல் கட்சிகளின் உள்ளூர் / வட்டார / மாவட்ட அளவிலான நிர்வாகியாகவே இருக்கின்றனர்.

அவர்களின் பொருளாதார நலனுக்காகவே சம்பந்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஏனைய ஆதிக்கச் சக்திகளின் / மேட்டுக் குடிகளின்/ அதிகார வர்க்கத்தின் ஆதரவுடன் / பங்கேற்புடன் இவை நடக்கின்றன. பிற்படுத்தப்பட்ட சாதியினர் அனைவருக்கும் இதில் பங்கில்லை.

அவர்களில் பெரும்பாலோர் உழைக்கும் வர்க்கத்தினராகவே இருப்பதால் அவர்களுக்கு இதில் பங்கு இருப்பதற்கான அவசியம் இல்லை. அப்படி பங்கிருந்தாலும் அது அறியாமை பாற்பட்டதாகவே இருந்து சாதியவாதத்திற்கு பலியாடுகளாக ஆக்கப்படுகிறார்கள் என்றே அறியவேண்டியுள்ளது. 

Pin It