வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவுள்ள நேரத்தில் புதிய புதிய ஜனநாயக காவலர்கள் வீதிதோறும் முளைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். வெளிப்படைத்தன்மை, ஊழலற்ற நிர்வாகம், திறமையான ஆட்சி என பல வண்ண காற்றாடிகளை அவர்கள் காற்றில் பறக்க விடுகின்றனர். பல கோடிகளைக் கையில் வைத்துக் கொண்டு என்ன செய்வது என தெரியாமல் விழித்துக் கொண்டு இருந்தவர்கள் தங்களின் பணத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும், அதை இன்னும் பல மடங்கு பெருக்கவும் சரியான தொழில் அரசியல் என்பதை சரியாக அடையாளம் கண்டு கொண்டனர். நேற்றுவரை தன்னுடைய சொந்த சாதிக்காரனைக் காலில் போட்டு மிதித்து அதன்மேல் தன்னுடைய வளர்ச்சியை நிலைநாட்டியவன், நேற்றுவரை தன்னுடைய சொந்த மொழி பேசும் மக்களை அடமானம் வைத்து அரசியல் செய்தவன் எல்லாம் இன்று இனமானப் போராளிகளாக, தமிழகத்தைக் காக்க வந்த தரும பிரபுக்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்.
இப்படி மக்களைக் காப்பாற்ற அவதாரம் எடுத்த பல இனமான உபதெய்வங்கள் அரசியலில் மூலதெய்வங்கள் இருக்கும் திசை நோக்கியே மண்டியிட்டு கிடக்கின்றன. சில உப தெய்வங்களுக்கு பணம் மட்டும் போதுமானதாக இருக்கின்றது. இன்னும் சில உப தெய்வங்களுக்கு பதவியும், வேறு சில உபதெய்வங்களுக்கு இப்போதைக்கு புகழ் மட்டுமே போதும் என்ற அளவிலும் மூலதெய்வங்களின் முன் கோரிக்கை வைக்கின்றன. மூல தெய்வங்களின் கடைக்கண் பார்வை தங்கள் மீது படாதா என பகீரதப் பிரயத்தனம் செய்கின்றன. ஆனால் மூல தெய்வங்களோ உப தெய்வங்களை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் தங்கள் சன்னதியில் இருக்கும் கழிப்பறையை உபதெய்வங்கள் சுத்தம் செய்வதை உத்திரவாதம் செய்ய வேண்டும் என உறுதியாக இருக்கின்றன.
உபதெய்வங்களோ கழிப்பறையை மட்டும் அல்ல, சீட்டு கொடுத்தால் இன்னும் கழிவுகள் வெளியேறும் ‘அந்த’ அறையையும் சேர்த்தே சுத்தம் செய்யத் தயாராகவே இருக்கின்றன. சமூகத்தை சுத்தம் செய்து அரசியலில் காலுன்றுவதை விட கழிப்பறையைச் சுத்தம் செய்து அரசியலில் காலுன்றுவது மிக எளிதாக அவர்களுக்கு இருக்கின்றது. அவர்கள் மானத்தை மறைக்க வேட்டி அணிந்திருப்பதாகவே மக்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் அவர்களோ அதிகாரத்தின்முன் அடிக்கடி அம்மணமாக இருக்க நேர்வதால் வசதி கருதியே அதை அணிந்திருப்பதாக தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
ஜனநாயகத்தைக் காப்பாற்ற புத்துணர்வுடன் புறப்பட்ட இவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு வரலாற்றுக் கதை இருக்கின்றது. ஒருவர் தனது தொலைக்காட்சியை மக்கள் பெரும்பான்மையானவர்கள் கவனிப்பதால் தன்னையும் கவனிப்பார்கள் என்று கட்சியைக் கட்டினார். இன்னொருவர் பாசிசத்துக்கு ஓட்டு கேட்கப் போகும் போது கேட்க வந்த கூட்டத்தில் தன்னுடைய பேச்சைக் கேட்பதற்காக தான் கூட்டம் கூடுவதாக கூட்டத்தில் யாரோ வதந்தியைக் கிளப்பிவிட கட்டிய கோவணத்துடன் முருகன்மேல் பாரத்தைப் போட்டுவிட்டு கட்சி ஆரம்பித்து களத்தில் இறங்கிவிட்டார். இன்னொருவர் கோடிக்கணக்கான மக்கள் சாலையோரத்தில் கொசுக்கடியில் தூங்காமல் துன்புறுவதைப் பார்த்து உங்களை தூங்கச் செய்வது கொசுவல்ல, உங்களை தூங்க விடாமல் செய்வதே கொசுவு என்று எதோ வல்லரசு போதையில் யாரோ உலறி வைத்துவிட்டு செத்துப்போக அந்த மொக்கை வசனத்தை மூலதனமாக வைத்தே கட்சியை ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்துவிடலாம் என கனவுகண்டு கட்சியை ஆரம்பித்துவிட்டார். மேலும் வாய்ப்பு கிடைத்தால் வீதிக்கு ஒரு அணு உலை வைத்துக் கொடுப்பதாக தேர்தல் வாக்குறுதி வேறு கொடுக்கப் போகின்றாராம்.
இப்படியாக ஒவ்வொரு கட்சியும் இந்தப் பூமியில் தோன்றியதற்கான ஆதி காரணத்தை ஆராயப் புகுந்தோம் என்றால் பல அறிய தகவல்களை நாம் அறிந்துகொள்ள முடியும். அதன்மூலம் நம்முடைய தத்துவ பலத்தையும் ஆன்ம பலத்தையும் பல மடங்கு பெருக்கிக் கொள்ள முடியும்.
மக்கள் படும் துயரங்களைக் கண்டு மனம் வெதும்பி கட்சி ஆரம்பித்த சில நல்ல உள்ளங்கள் தத்துவ வறுமையாலும், தன வறுமையாலும் தொண்டர்களுக்கு ஊட்டச்சத்து கொடுக்க முடியாமல் நாளடைவில் கட்சியை வந்த விலைக்கு விற்றுவிட்டு ஊர்ப்பக்கம் போய் சேர்ந்தனர். இன்னும் சிலர் கட்சியை மாற்றி மாற்றி அடமானம் வைத்துவிட்டு கடைசியாக யாரிடம் அடமானம் வைத்தோம் என்பதையே மறந்துபோய் எப்படி மீட்பது என்று தெரியாமல் குழப்பத்தில் சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஒட்டுமொத்த சமூகமே சுயமரியாதையைத் தொலைத்துவிட்டு அதற்கு மாற்றாக பிழைப்புவாதத்தையும் அற்பவாதத்தையும் தனதாக்கிக் கொள்ள, அரசு கட்டுமானத்தையே புரட்டிப் போட்டு புரட்சி செய்யப் போவதாக புறப்பட்ட சில புண்ணியவான்கள் புரட்சியை முன்னிலைப்படுத்தாமல் புரட்சியாளர்களை முன்னிலைப்படுத்தினர். சுவரொட்டிகளில் தங்களது புகைப்படத்தைப் போட்டு ‘என்னைப் பார் யோகம் வரும் கழுதைகளாக’ என்னைப்பார் புரட்சி வரும் என்று புதிய இலக்கணத்தை தோழர்களுக்குக் கற்றுக் கொடுத்தனர்.
எல்லாம் மோசம்; எதுவும் சரியில்லை; பேசாமல் கூட்டத்தோடு கூட்டமாக கலந்துவிடலாம், ஜனநாயகத் திருவிழாவில் பங்கெடுத்துவிடலாம் என்றால் ‘இலை அமைதியை விரும்பினாலும் காற்று விடுவதில்லை’ என்று மாவோ சொன்னதுபோல பசியும், பட்டினியும், வேலையில்லா திண்டாட்டமும், ஊழலும், கண்முன்னாலேயே நாட்டின் வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதும், நீதிமன்றங்கள் அதற்குச் சட்ட அங்கீகாரம் வழங்குவதும் கொடும்காற்றாக நம்மை அசைத்துக் கொண்டே இருக்கின்றது. இது ஜனநாயகத்தைக் காப்பதற்காக அல்ல, அதை ஒழித்துக் கட்டுவதற்காக நடக்கும் திருடர்களின் திருவிழா என்ற உண்மையைப் புற நிலைமைகள் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
திரும்பிய பக்கமெங்கும் பொய்யர்களும், புரட்டர்களும், புல்லுருவிகளும், பிழைப்புவாதிகளும், அற்பவாதிகளும், சாதியவாதிகளும், மதவாதிகளும், இனவாதிகளும் சூழ்ந்து நிற்க ஜனநாயகத்தின் பெரும் திருவிழா ஆரவாரத்துடன் நடைபெற இருக்கின்றது. காட்டிக் கொடுப்பதும், கூட்டிக் கொடுப்பதும், குழிபறிப்பதும், குந்தகம் விளைவிப்பதும் கொள்கைகள் அற்ற அரசியல் நிர்வாணிகளால் ராஜதந்திரம் என பெயர் சூட்டப்பெற்று அவையே ஜனநாயகத் திருவிழாவில் கலந்து கொள்வதற்கான அடிப்படை தகுதியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது. சிலர் இந்தத் திருவிழாவை நிராகரிக்கின்றார்கள், பலர் இதை உச்சிமோந்து வரவேற்கின்றார்கள். இன்னும் சிலரோ நிராகரிக்கின்றேன் என்று சொல்லிவிட்டு நரித்தனமாக வரவேற்பவர்களுடன் கள்ள ஒப்பந்தங்களை செய்து கொள்கின்றார்கள். என்ன செய்வது, நாம் என்ன தான் காது கிழியக் கத்தினாலும் எல்லாமே திருவிழாவின் களேபரத்தில் யாருக்கும் கேட்க மாட்டேன் என்கின்றது.
- செ.கார்கி