தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், 2016 மே 16 அன்று நடைபெறவுள்ள சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல், தேர்தல் அரசியலின் சீரழிவை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவில், இந்தத் தேர்தலில் வெளிப்படையான பண பேரங்கள் நடை பெறுவதை அரசியல் கட்சிகள் ஒன்றின் மீது ஒன்று வைக்கும் குற்றச்சாட்டுகளே வெளிப்படுத்துகின்றன. கொள்கைகள் - கோட்பாடுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, வாக்குவங்கி அடிப்படையிலான கூட்டணி பேரங்களும், அதற்கான குதிரை பேரங்களும்தான் பெருமளவில் நடைபெறுகின்றன.

தி.மு.க.வுடன் நடிகர் விசயகாந்தின் தே.மு.தி.க. கூட்டணி வைக்காத நிலையில், அதனை எதிர்த்து அக்கட்சியிலிருந்து வெளியேறிய சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார், தாலியை அடகு வைத்து செலவு செய்து கட்சியை வளர்த்ததாகவும், தி.மு.க.வுடன் கூட்டணி வைக்காததால் தேர்தலில் தோற்றுப்போய் எல்லாவற்றையும் இழக்க வேண்டும் என்றும் ஊடகங்களில் வெளிப்படையாகக் குமுறினார். ஆக, இவர்களைப் பொறுத்தவரை கட்சி வளர்க்க செலவு செய்வதென்பது, பதவி பெற்ற பின் வருமானம் ஈட்டுவதற்கான ஒரு முதலீடாகவே கருதப்படுகிறது. 

கடந்த 05.04.2016 அன்று மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய சேம வங்கி ( ரிசர்வ் வங்கி ) ஆளுநர் இரகுராம் ராஜன், சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ரூபாய் 60,000 கோடி கூடுதல் பணப்புழக்கம்  ஏற்பட்டுள்ளது என்றும், இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்திருப்பது, தேர்தலின் வழியே புழங்கும் சட்டவிரோதப் பணம் குறித்து எச்சரிக்கிறது.

இவ்வளவு பெரும் பணத்தை “முதலீடாக“ மேற்கொள்கின்ற கட்சிகளும், அதன் வேட்பாளர்களும், ஆட்சிக்கு வந்தபின் அதனை வட்டியுடன் திரும்ப எடுப்பதற்கான ஊழல் - தரகுத் தொகை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவையெல்லாம், மக்கள் அனைவருக்கும் தெரிந்தே நடைபெறுவது, தேர்தல் அரசியலின் சீரழிந்த தன்மையை உணர்த்துகிறது.

தேர்தல் அல்லாத காலங்களில் மக்கள் சிக்கலில் போராடும் கட்சிகள் கூட, வெற்றி வாய்ப்பை மட்டுமே கணக்கில் கொண்டு கொள்கையற்ற கூட்டணிகளில் இறங்குகின்றன.

இன்னொரு புறத்தில், இக்கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் சொல்லுவது போலவே இந்தத் தேர்தலிலும் வானளாவிய வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கை என்ற பெயரால் அள்ளி வீசுகின்றன. எடுத்துக்காட்டாக, வேளாண்மையைப் பாதுகாப்பதாகச் சொல்லிக் கொண்டே, கண்மண் தெரியாத தொழில் வீக்கத்தையும், நூறு நாள் வேலைத் திட்டத்தை - நூற்றைம்பது நாள் வேலைத் திட்டமாக மாற்றுவதாகவும் அறிவிப்பது வேளாண்மையை அழிக்கும் செயல் என்பதை தெரிந்தே முன் வைக்கிறார்கள். அதேநேரம், வேளாண்மையை வளர்ப்பதற்கு என்று சொல்லி வானளாவிய திட்டங்களையும் அறிவிக்கிறார்கள்.

1970களிலிருந்து “மாநில சுயாட்சி” பற்றி பேசிவரும் தி.மு.க., பலமுறை காங்கிரசுடனும் பா.ச.க.வுடனும் நடுவண் அரசில் பங்கேற்ற போது, “மாநில சுயாட்சி”க்காக ஒரு துரும்பும் அசைக்காது நின்றுவிட்டு, தற்போது மீண்டும் அதே மாநில சுயாட்சி முழக்கத்தை வெட்கமின்றி தங்கள் தேர்தல் அறிக்கையில் வைக்கின்றனர்.

“மதுவிலக்கு சாத்தியமில்லை” என்று கூறிக் கொண்டு, மது விற்பனையை அதிகப்படுத்த புதியத் திட்டங்கள் தீட்டிய செயலலிதா, மதுவிலக்கு கேட்டு போராடியவர்களைக் காவல்துறையினரைவிட்டு தாக்குவதும், தளைப்படுத்தி இழுத்துச் செல்வதும் என இரக்கமற்று நடத்திய செயலலிதா, மது விலக்குப் போராளி - காந்தியவாதி சசிப்பெருமாள் அவர்கள் மரணத்திற்குக் காரணமான தமிழ்நாட்டு அரசின் முதல்வர் செயலலிதா, தற்போது மீண்டும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு படிப்படியாகக் கொண்டு வரப்படும் என வெட்கமின்றி முழங்குகிறார்.

தமிழ்நாட்டை ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட பெரும் திராவிடக் கட்சிகள் இப்படியென்றால், மற்ற கட்சிகளோ “மாற்று” என்ற பெயரில், அதே பெரும் திராவிடக் கட்சிகளின் குட்டிப் பிரதிநிதிகளாக காட்சியளிக்கின்றன. கூட்டணியில் இடம் கிடைக்காதோர் ஒன்றிணைந்து புதுக்கூட்டணி உருவாக்குகின்றனர். அதுவும் அமையாத போது, தனித்துப் போட்டி என முழங்குகின்றனர். கொள்கைகளுக்கோ கோட்பாடுகளுக்கோ மாற்றுத் திட்டங்களுக்கோ, எந்த வேலையுமின்றி சீட்டுக் கணக்கு மட்டுமே ஒவ்வொரு கட்சியையும் வழிநடத்துகிறது.

தமிழ்நாட்டின் உரிமைச் சிக்கல்களான காவிரிச் சிக்கல், கச்சத்தீவு சிக்கல், முல்லைப் பெரியாறு அணை உரிமை, அணுஉலைகள் திணிப்பு, ஏழு தமிழர் விடுதலை, ஏறுதழுவல் உரிமை உள்ளிட்ட சிக்கல்களோ, வேளாண் தொழில் நசிவு, தொழில்துறை முடக்கம், விலைவாசி உயர்வு, கனிம வளக் கொள்ளை, தமிழ்வழிக் கல்வி, தமிழீழ விடுதலை உள்ளிட்ட சிக்கல்களோ, இக்கட்சிகளின் உண்மையான நிகழ்ச்சி நிரலில் இல்லை. ஊடகங்கள் கூட, அவற்றை முக்கிய சிக்கல்களாக முன் வைப்பதில்லை. மாறாக, நட்சத்திர வேட்பாளர்கள் குறித்தும், வாக்கு வங்கி வரலாறு குறித்துமே அவை பேசுகின்றன.

இவை அனைத்திற்கும் மேலாக, அரசமைப்புச் சட்டப்படி மக்களுக்கான அடிப்படை சிக்கல்களைத் தீர்ப்பதற்குரிய அதிகாரமற்ற தீர்மான மன்றமே (மசோதா மன்றமே) சட்டமன்றம் என்ற உண்மையை மறைத்து, இந்திய வல்லாட்சியின் கைகளை வலுப்படுத்தும் செயலில் இறங்குகின்றன.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஈழத்தமிழர் குறித்தோ, ஏழு தமிழர் விடுதலை குறித்தோ, காவிரி உரிமை குறித்தோ, முல்லைப் பெரியாறு உரிமை குறித்தோ இயற்றியத் தீர்மானங்கள் வெறும் தீர்மானங்களாக - சட்ட வலுவற்றவை களாக இருந்து வருகின்றன.  தமிழ்நாடு சட்டமன்றம் சட்டம் இயற்றிட - தமிழர் உரிமைகளை நிலைநாட்டிட வலுவற்றது என்பது இதனால் தெளிவாக்குகிறது.

ஆயினும், தமிழ்நாட்டு மக்களின் தலைவிதியையே மாற்றி அமைப்பதற்கு வல்லமை உள்ளதுபோல் படம்காட்டி வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்படும் முதலமைச்சர்கள், இந்திய அரசின் செயல்திட்டங்களை நிறைவேற்றும் கங்காணிகளாகவே செயல்படுகின்றனர். இந்திய அரசமைப்பு இதனை உறுதி செய்கிறது.

இந்திய அரசமைப்பு சட்டத்தைத் திருத்துகிற அதிகாரம், சட்டப் பேரவைக்குக்  கிடையாது. தற்போதைய மாநில அரசின் அதிகார வரம்பு என்பது இந்திய அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதுதான். உண்மையான அதிகாரத்தை கொடுக்கக் கூடாது என்ற நோக்கில் வெள்ளைக்காரன் அளித்த திட்டமே, இப்போதைய பொதுத் தேர்தல் நடைமுறைகள்!

கடுமையான மின் தட்டுப்பாடு நிலவியபோது கூட, தமிழ்நாட்டின் நெய்வேலியில் உற்பத்தி செய்யப்படுகிற கோடிக்கணக்கான யூனிட் மின்சாரம், நமக்கு நீர் தர மறுக்கும் அண்டை மாநிலங்களுக்குப் பிரித்து அனுப்பப்பட்டது. அதைத் தடுத்து த் தமிழ்நாட்டிற்குப் பயன்படுத்தும்  அதிகாரம் நமது சட்டப்பேரவைக்கோ, முதல்வருக்கோ கிடையாது. காவிரிப் படுகையில் கிடைக்கும் பெட்ரோலியம், எரிவளி போன்ற இயற்கை வளங்களைத் தமிழ்நாட்டு மக்களுக்குப் பயன்படுத்தும் அதிகாரம் கிடையாது.

ஆதிக்க அரசு நடத்தும் தேர்தலில் பங்கேற்பது, அதன் அரசக் கட்டமைப்பை வலுப்படுத்தும் செயல் என்பதை உணர்ந்து தான் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் சிங்கள அரசு நடத்தியத் தேர்தல்களில் பங்கேற்கவில்லை. தென்னாபிரிக்க விடுதலை இயக்கத் தலைவர் நெல்சன் மண்டேலா, வெள்ளை நிறவெறி அரசு நடத்திய தேர்தலில் பங்கேற்கவில்லை. இந்திய விடுதலையை முன்னெடுத்த காங்கிரசு கூட, ஆங்கிலேய அரசின் தேர்தலில் 1936 வரை பங்கேற்கவில்லை.

ஆனால், பிரபாகரன் - மண்டேலா - காந்தியின் படங்களைப் போட்டுக் கொண்டு, “விடுதலை” அரசியல் பேசுவது போல் பம்மாத்து செய்யும் பலரும் தயக்கமின்றி, அவர்களது படத்தைப் பயன்படுத்திக் கொண்டே தேர்தலிலும் நிற்பது வேடிக்கை!

எனவே, தமிழினத்தின் உரிமைச் சிக்கல்களில் அக்கறை செலுத்துவோர், தூய்மையான அரசியலை விரும்புவோர், இந்நோக்கங்களுக்கு உதவாத சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்களிக்காமல், இப்பொதுத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும். மாறாகத் தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை நிலைநாட்டும் மக்கள் திரள் போராட்டப் பாதைக்கு அணிதிரள வேண்டும்.

Pin It