பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டுகளில் நிகழ்த்தபட்ட முற்போக்காளர்கள் (பன்சாரே, தபோல்கர், கல்புர்க்கி) படுகொலைகளைத் தொடர்ந்து தாத்திரியில் இஸ்லாமிய முதியவர் படுகொலை, மாட்டிறைச்சி விற்பனைக்குத் தடை, கல்விக் கொள்கையில் காவிமயம், புனா பிலிம் இன்ஸ்டிட்யூட் காவிமயம் என அரசியல் அதிகாரத்தின் துணைகொண்டு மக்களின் மீது பலவந்தமாகத் திணிக்கிப்பட்டு வருகிற இந்துத்துவ பாசிச வன்முறைகளைக் கண்டிக்கும் விதமாகவும், கூர்மையடைந்து வருகிற பாசிசவாதத்தைக் கண்டுகொள்ளாமால் கள்ள மௌனம் சாதித்து இந்நடவடிக்கைகளை ஊக்கமளித்து ஏற்றி நடத்தி வருகிற (ஆர்.எஸ். எஸ், பஜ்ரங்தள் சார்பாக) மோடி அரசை கண்டிக்கிற வகையிலும் சாகித்திய அகாதமி, பத்ம விருதுகளை நாற்பதற்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் திருப்பியளித்து, ஆளும் மோடி அரசுக்கு எதிரான தங்களின் வரம்பிற்குட்ப்பட்ட தளங்களில், எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.

nayantara sahgalஇச்சூழ்நிலையில், “விளம்பரத்திற்காகத்தான் விருதை திருப்பி அளிக்கின்றனர்; சாகித்திய அகாதமியானது அரசு நிறுவனம் அல்ல; விருதை திருப்பியளிப்பது, அரசு மீதான எதிர்ப்பை காட்டுவதற்கான வழியல்ல” என்கிற திலகவதி அம்மையார், “விருதைத் திருப்பியளித்த நயந்தரா சஹால் ஓர் எலைட்டிஸ்ட், செல்வந்தர், நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர், மற்ற விருதாளர்கள் மத்திய நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சாமானியர்கள், எனவே விருதை திருப்பியளிப்பதை நிறுத்திவிட்டு தெருக்களில் நடக்கும் இடதுசாரிப் போராட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும்” என்கிற அபிலாஷ் போன்றோர்களின் கூற்றுக்களானது, பிரச்சனைக்கு எதிரான போராட்ட வடிவத்தை விமர்சிப்பது என்ற மட்டத்திலும் விருதை திருப்பியளித்த நயந்தரா சஹாலின் அரசியல் நேர்மை மற்றும் சமூக மதிப்பை கேள்விக்குட்படுத்துவது என்ற மட்டத்திலும் மையப்படுத்துவதன் ஊடாக, ஆளும் இந்துத்துவ கருத்தியலுக்கு எதிராக இதுவரை விருதை திருப்பியளித்துள்ள ஒட்டுமொத்த எழுத்தாளர்களின் எதிர்ப்பரசியலையும் கொச்சைப்படுத்துகிற, திசை திருப்புகிற, மழுங்கடிக்கிற அயோக்கியத்தனத்தையே தங்களின் சொந்த கருத்தியலாக இருத்திக்கொண்டு ஆளும் வர்க்க கருத்தியலுக்கே மறைமுகமாக சேவை செய்கின்றனர். போராட்ட வடிவத்தையும், விருதை திருப்பியளித்த சஹாலையும் பிரதான விமர்சன இலக்காகக் கொண்டு அரசியல் புரிதலற்ற, அறமற்ற பிதற்றல்களின் ஊடாக தங்களின் இயலாமையை பலவந்தமாக காத்துக்கொள்ள முயல்கின்றனர்.

விருதை திருப்பியளிப்பது குறித்து எதிர்மறையாக விமர்சிப்பவர்களின் கருத்துக்களுக்கு, விருதை திருப்பியளித்தவர்கள் வழங்குகிற நியாயப்பாட்டையே எதிர் நிறுத்துவது பொருத்தமாக இருக்கும்.

அவ்வகையில் சமீபத்தில் வங்காளக் கவிஞர் சென், சாகித்ய விருதை திருப்பியளித்ததற்கான காரணத்தையும், தொடர்புடைய கேள்வி ஒன்றிற்கும் கீழ்வருமாறு பதிலுரைக்கிறார்.

“வளர்ந்து வருகிற வகுப்புவாதப் போக்கையும் முற்போக்காளர்கள் மீதான தாக்குதலையும் கண்டொக்கிற விதமாக எனது எதிர்ப்பை இவ்வாறு பதிவு செய்கிறேன்.

மேலும், சாகித்திய அகாடமியானது இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழேயே வருகிறது. அகாதமியில் ஆளும் அரசே ஆளுமை செலுத்துகிறது. எனவேதான் விருதை திருப்பியளிக்க முடிவு செய்தேன்” என்கிறார்.

“நான் பாஜக ஆட்சியில் இவ்விருது வாங்காவிட்டாலும் இவ்விருதை திருப்பியளித்து எனது எதிர்ப்பை பதிவு செய்கிறேன்” என கூறிச் செல்கிறார்.

விருதை திருப்பியளித்தல் என்பது ஆளும் வர்க்க கருத்தியலுக்கு உடன்படாத படைப்பாளிகளின் ஓர் எதிர்ப்பு வடிவம். ஆளும் வர்க்கத்தால் பொது மக்களின் மீது ஏவப்படுகிற கருத்தியல்/நடைமுறை வன்முறைகளை தங்களால் இயன்ற தளங்களின் ஊடாக எதிர்ப்பது என்பது தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் ஆளும் வர்க்க கருத்தியலுக்கு நெருக்கடி கொடுக்கிற எதிர்ப்பரசியலின் ஒரு பகுதி. சர்வதேச வெளியில் இந்துத்துவத்தின் கோர முகத்தை அம்பலப்படுத்த முடியும் என்ற அளவிலும், விருதை திருப்பியளித்தல் போராட்டம் என்பது சாகித்திய அகாதமிக்கு எதிரான போராட்டமல்ல; அது ஆளும் அரசின் மதச் சார்புநிலை அரசியலுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு கூறாக - இந்திய அளவில் முற்போக்கு எழுத்தாளர்கள் இந்துத்துவத்திற்கு எதிராக ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைந்து அரசின் வன்முறைகளை எதிர்ப்பது என்பதிலும், இப்போராட்டத்தில் தமிழக விருதாளர்கள் இணைந்து கொள்ளவேண்டும் என்கிற அரசியலின் அடிப்படையிலேயே முன்வைக்கப்படுகிறது. அன்றி, விருதாளர்களின் மீதான சொந்த, அரசியல் பகைமையின் பொருட்டோ, இப்போராட்ட வடிவம் மட்டுமே ஒட்டுமொத்த தீர்வை அளிக்கும் என்கிற கருதுகோள்களின் அடிப்படையிலோ முன்வைக்கப்படவில்லை. கையைப் பிடித்து, இழுத்து வந்து, விருதை திருப்பியளித்தே ஆக வேண்டும் என்றும் கோரவில்லை.

அபிலாஷ் சந்திரன் கூறுகிறார், “விருதை திருப்பியளித்தல் என்கிற இவ்வெதிர்ப்பு வடிவமானது ஒட்டுமொத்த பிரச்சனையிலிருந்து திசை விலகி, “விருதை திருப்பியளித்தல்” என்ற செயல்பாட்டை மட்டுமே விவாதக் களமாக மாற்றும். மீடியாக்களுக்கு இதுவே தீனி போடும், விருதை திருப்பளியப்பது என்பது மீடியா அரசியல், அதிர்ச்சி மதிப்பீடுகள், பிரச்சனைக் களமான இந்துத்துவ வன்முறையை விட்டுவிட்டு கருத்துரிமைக் கோரிக்கையாக பிரச்சனை மடைமாற்றம் அடையும், விருதை திருப்பியளிக்கிறவர்கள் தியாகிகள், அரசை நெஞ்சுரத்தோடு எதிர்ப்பவர்கள் என்றளவில் தனி நபர் மையநீரோட்டத்தில் பிரச்சனைகள் கரைந்து விடும், இவர்களின் இச்செயல்கள் குட்டையைக் குழப்பும், வெறும் அதிர்ச்சி மதிப்புப் போராளிகள் இத்தியாதி இத்தியாதி” என கூறிச்செல்கிறார்.

ஒட்டுமொத்தமாக இவரின் வசைபாடுதல் படலத்தை தொகுத்துப் பார்கையில் விருதை திருப்பியளிக்கிற எதிர்ப்பு வடிவத்தையே ஆகப்பெரும் அயோக்கியத்தன செயல்பாடாக கட்டமைப்பதிலேயே வேர் விட்டுள்ளது தெளிவாகிறது. பலவந்தமாக ஒருவரையும் விருதைத் திருப்பியளிக்க கோராதபோது ஏன் இத்தனை வன்மம்? இந்துத்துவத்திற்கு எதிராக பலமான முற்போக்கு முகாம் இல்லாத போது, ஏன் இத்துனை அறமற்ற வகையிலான நச்சு உமிழ்வு?

அவரின் பிரதான குற்றச்சாட்டுகளைப் பார்ப்போம்.

“விருதை திருப்பியளித்தல் போராட்டமானது மையப் பிரச்சனையிலிருந்து திசை விலகி போராட்ட வடிவம் குறித்த விவாதமாக சுருக்கப்படும்”

இந்துத்துவ பாசிசத்துக்திற்கு எதிரான மையப் போராட்டத்தில், விருதை திருப்பியளித்தல் என்கிற போராட்ட வடிவமானது எவ்வாறு முழக்கத்தையும் கோரிக்கையையும் சுருக்குவதாக அமைய முடியும்? அப்படிப் பார்த்தால் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளும் பொது மக்களும் வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் ரேஷன் கார்டை திருப்பியளிக்கிற போராட்ட வடிவத்தில் கோரிக்கை கவனம் பெறாமல் “ரேஷன் கார்டுகளை திருப்பியளிப்பது” மட்டும்தான் கவனம் பெற்றதா என்ன? அவரவர் வரம்பிற்கு உட்பட்டளவில் அரசுக்கு எதிரான அவநம்பிக்கைகளை வெளிப்படுத்துகின்றனர் என்ற அரசியலின் அடிப்படையில் ரேஷன் கார்டுகளை திருப்பியளித்தல் போராட்டம் என்பது பலவீனமான போராட்ட வடிவமென்று கூற முடியுமா?

இந்திய ராணுவம் எங்களை வன்புணர்வு செய்தது என்று முழக்கமிட்டு தங்களை நிர்வாணமாக்கிப் போராடிய வடகிழக்கு மாகாணப் பெண்களின் பிரதான முழக்கத்திற்கு மாறாக போராட்ட வடிவம் மட்டுமே பேசப்பட்டதா என்ன?

கூடங்குளத்தில் மண்ணுக்குள் புதைந்து போராட்டம், நீருக்குள் அமிழ்ந்து போராட்டம் என அணுசக்தி பயன்பாட்டிற்கு எதிரான போராட்ட வடிவங்களில், கோரிக்கை பின்னுக்குத் தள்ளப்பட்டு வடிவம் மட்டுமே விவாதத்திற்குள்ளானதா என்ன?

போராட்ட வடிவங்களை, பிரதான மக்களிடமும் அரசிடமும் பெரும் அசைவை ஏற்படுத்தும் வகையில் அமைத்துக் கொண்டு, மையக் கோரிக்கையை முன்வைப்பதே எதிர்ப்பரசியலாக நிலவுகிற போது, இவர் கூறுகிற தலைகீழ் விளக்கத்தை எவ்வாறு புரிந்துகொள்வது!

“அதிர்ச்சி மதிப்பீட்டு போராட்டம், பிரச்சனைகளை நீர்த்து போகச் செய்யும்”

abilash 250அதிர்ச்சி மதிப்பீடுகளின் பேரில் இவ்வாறு துவக்கப்படுகிற போராட்டம் தொடர்ச்சியின்மை காரணத்தால் விரைவாக சுருக்கப்படுகிறதாக கூறுகிறார். உதாரணத்திற்கு டாஸ்மாக் போராட்டத்தை சுட்டிக்காட்டுகிறார். டாஸ்மாக் போராட்டம் தோல்வியடைந்த போராட்டம் என்று எதைக் கொண்டு நிறுவுகிறார்? தமிழக அளவிலும் இந்திய அளவிலும் ஒரு வார காலத்திற்கு உலுக்கிய இப்போராட்டமானது மாணவர்கள் அரங்கில் இன்றளவில் அதன் தொடர்ச்சியான அரசியல் வீச்சுகளை ஏற்படுத்தியுள்ளதை இவர் மறுக்க முடியுமா? வருகிற சட்டமன்றத் தேர்தலில் இது என்ன விளைவை ஏற்படுத்துப் போகும் என்று ஆளும் அரசு யோசிக்காதா என்ன? அனைத்து அரசியல் கட்சிகளையும் மதுவிலக்கு குறித்து பேச வைத்ததே? அந்தக் கங்கு இன்னும் மாணவர் மத்தியிலும் பொது மக்கள் மத்தியிலும் கனன்று கொண்டு தானே உள்ளது. தோல்வி என்று எதைக் கொண்டு நிறுவுகிறார்?

இவர்களின் அதிர்ச்சி மதிப்பீட்டு போராட்டமானது (மீடியா போராட்டம்), நடைமுறை அரசியல் போராட்டமாக (அமைப்பாக திரண்டு தெருவில் இறங்கி போராடுவது) உருப்பெரும் போது எனது குற்றச்சாட்டுகளை பின்வாங்குவதாக எழுதுபவர், அவ்வகையில் நடைபெறாது என்று நம்புகிற காரணத்தால் இப்போதே இதை எழுதுகிறேன் என்கிறார். இது என்ன விதமான விமர்சன யுக்தி? வெற்று யூகத்தின் அடிப்படையில் முன்வைக்கப்படுகிற குற்றச்சாட்டுகளுக்கு எதன் அடிப்படையில் வினையாற்றுவது? ஒருவேளை இவர்கள் அமைப்பாக திரண்டு இந்துத்துவ கருத்தியலை எதிர்த்தால் என்ன செய்வார்? ஓராண்டு காலம் ஒற்றுமையாக இருக்கட்டும் பார்க்கலாம் என்பார், பிறகு இவர்கள் ஏன் கட்சியாக வளர்ச்சி பெறவில்லை என்பார்? கூறிக்கொண்டே போகலாம்.

மேலும், எஸ்.வி.ஆர், அ.மார்க்ஸ், வ.கீதா போன்றோர்கள் அதிர்ச்சி மதிப்புக் காரியங்களை ஒருபோதும் செய்யமாட்டார்கள் என்று அபிலாஷ் கூறுகிறார்.

பேராசிரியர் அ.மார்க்ஸ், வாஸந்திக்கு இந்தியா டுடே இதழ் பக்கங்களை மலம் துடைத்து அனுப்பி எதிர்வினை ஆற்றியது அதிர்ச்சி மதிப்பாகத் தெரியவில்லையா? சொல்வதையாவது திருந்தச் சொல்லலாம் அல்லவா!

“சஹாலை மட்டுமே முன்வைத்து போராட்டத்தை விமர்சிக்க வேண்டுமா?”

சாகித்ய அகாதமி விருதைத் திருப்பியளித்தல் என்ற பிரச்சனையில் சஹாலை மட்டுமே மையமாக வைத்து விமர்சிக்கிறவர், விருதை திருப்பியளித்த நாற்பதிற்கும் மேற்பட்ட விருதாளர்களை என்ன வரம்பிற்குள்ளாக வைக்கப் போகிறார்? ஒருவேளை அவர்கள் நேரு குடும்பத்தினராக இல்லாத, செல்வந்தராக இல்லாத, எலைட்டாக இல்லாத பிற விருத்தாளர்களாக இருந்தால் என்ன சொல்வார்? ஐயகோ சஹாலை நம்பி நீங்கள் எல்லாம் ஏமாந்து விட்டீர்கள் என்று மீண்டும் சஹாலை மையப்படுத்திய எதிர்ப்பு வடிவமாக சுருக்குவார் (ஏதோ மற்ற எழுத்தாளர்கள் அனைவருக்கும் சுய அறிவு இல்லாமல், சஹாலை நம்பி ஏமாந்தவர்களாக)

“விருதை திருப்பியளித்தல் குட்டையைக் குழப்புமா?”

விருதை திருப்பியளிப்பவர்கள் அனைவரும் இந்துத்துவ பாசிசத்தின் முகத்திரையையே தெளிவாக தோலுரிக்கிறார்கள். அதையே, தெளிவாக தங்களின் அனைத்து உரையாடல்களிலும் பதிவு செய்கிறார்கள். இன்று வரை இப்பிரச்சனை கருத்துரிமை பிரச்சனையாக சுருக்கப்பட்டதாக எந்த நாளிதழிலும் செய்தி வரவில்லை, ஒருவேளை அப்படி வந்தாலும் சார்புநிலை ஊடகத்தால் மட்டுமே அதுவும் சாத்தியமாகும்.

சாகித்ய அகாதமி விருதாளர்கள் மட்டுமல்லாமல் பிற துறை சார்ந்த அறிவுஜீவுகளும் இப்போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்று சஹால் விடுத்த கோரிக்கையை கவனத்தில் கொள்கையில், இந்துத்துவப் பாசிசத்திற்கு எதிரான பிற துறைகள், அரங்கங்களின் போராட்டங்களை தூண்டுவதற்கான வாய்ப்பை வழங்கலாம் என்றளவில் இப்போராட்ட முன்னெடுப்பை வலுவான எதிர்ப்பரசியலாகவே பார்க்க வேண்டுமே ஒழியே போராட்டத்தை முன் நகர்த்தாது குட்டையைக் குழப்பும் என்பது முரணான வாதமாகும்.

“வரிசையாக அனைவரும் சாகித்ய விருதுகளை திருப்பியளிக்கிறார்களே, அவசரக் கூட்டம் கூடுவதாக ஏதேனும் உத்தேசம் உள்ளதா?” என்ற கேள்விக்கு சாகித்ய அகாதமியின் தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரி கூறுகிறார் “இப்போது நான் அவசரக்கூட்டத்தை கூட்டினால் ரூ.15 லட்சம் திடீர் செலவு ஏற்படும்” என்று.

ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ். வருகிற அக்டோபர் 23ஆம் தேதியில் அவசரக் கூட்டம் கூட்டப்போவதாக அவரே கூறுகிறார். இத்தனை வன்முறைகள் நடந்த பிறகும் நாட்டின் முதன்மை அமைச்சர் என்ற முறையில் இதுவரையில் வாய் திறக்காத மோடி “தாத்ரி சம்பவம் துரதிர்ஷ்டவசமானது” என்றாவது கூறுகிறார், மேலும் எல்லாவற்றிற்கும் மத்திய அரசை குறை சொல்வதா என சிறுபிள்ளையாக சிணுங்குகிறார். இவையெல்லாம் எவ்வாறு சாத்தியமானது அபிலாஷ்?

தமுஎகச பொதுச்செயலாளர் சு.வெங்கடேசன் அறிக்கையினாலா? மரபு கம்யூனிஸ்ட் கட்சிகளின் நடைமுறை அரசியல் தந்திரங்கள் மற்றும் போராட்டங்களினாலா?

'விருதை திருப்பிக் கொடுக்க மாட்டேன்' என்று அதைக் கட்டிக் கொண்டு  அழும் அபிலாஷ் போன்ற தமிழ் எழுத்தாளர்களை யாரும் இங்கு கட்டாயப்படுத்தவில்லை. 'இது மட்டுமே போராட்டமல்ல' என்று உபன்யாச உரைகளை எழுதுவதை விட்டு விட்டு, தீவிரமான போராட்ட வடிவங்களை நீங்கள் முன்னெடுக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். அதைச் செய்வீர்களா?

அருண் நெடுஞ்செழியன்

Pin It