cow politics

மனித இயல்புகளில் ஒன்று, எப்போதும் குழுக்களாக இயங்க விரும்புவது. ஒவ்வொரு தனி மனிதனும் ஏதோ ஒரு அமைப்பில் தன்னை இணைத்துக் கொள்வதையே பாதுகாப்பாக உணர்கிறான். ஒரே கருத்தியல் தளத்தில் சக மனிதனை இணைத்து, தான் சார்ந்த அமைப்பை அதாவது குழுவை பலப்படுத்தி இயங்குவது, சக மனிதனோடு உறவு கொண்டாட இலகுவானது என்ற எண்ணம் அவனுள் வலுப்பெறுகிறது. இப்படி தன் எண்ணம் ஒத்த மனிதக் கூட்டமே, அவனுடைய சமூகம் என்றாகிறது.

அந்த அமைப்பு இறுதியில் ஆட்டு மந்தை இயல்புகளையே பெறுகிறது. மாற்றி யோசிக்கவோ, மாற்றம் உண்டாக்கவோ அமைப்புகளில் அனுமதி மறுக்கப் படுகிறது. மாற்றம் இல்லாத இடத்தில் தேக்கமே நிலைபெறுகிறது. அங்கு பழமை வாதம் ஓங்குகிறது.

இன்னும் அவன் உண்ணும் உணவு, உடுத்தும் உடை ஆகியவற்றையும் அவன் சார்ந்த அமைப்பே தீர்மானிக்கிறது. தன் சொந்த விருப்புகளில் இருந்து விலகி அமைப்பு சார்ந்த விருப்புகளை ஏற்கிறான்.

இந்த அமைப்பாக, சக மனிதனை இணைக்கும் புள்ளியாக, மனிதன் நியமித்து இருப்பது பெரும்பாலும் மதங்களையே!

இந்த அமைப்பில் மனிதன் பாதுகாப்பை உணர்கிறான். எதை இழந்தும் தான்சார்ந்த அமைப்பை கட்டிக்காக்கத் துணிகிறான். இறுதியில் அந்த அமைப்பே [மதமே] அவன் குறீயீடு என்றாகிறது. தன் குறியீடுகளை காக்கப் போராடுகிறான். அங்கே உணர்வு நிலை பிறழ்ந்து உணர்ச்சி நிலைக்கு செல்கிறான். இங்கு தான் அறிவிற்கான தடையும் உண்டாகிறது. மனிதன் என்ற புள்ளியில் இருந்து விலகி மதம் சார்ந்தே இயங்கத் தொடங்குகிறான்.

பெரும்பாலான நாடுகளில் அரசியலின் நகர்வுகள், மதம் சார்ந்து இயங்குவதற்கும், மத நிறுவனங்களே அரசை பின்னின்று நடத்துவதற்கும், மதங்கள் மனிதர்களை இணைக்கும் புள்ளியாக[?] விளங்குவதே காரணம். . . .

சென்ற வாரம் உ.பி.இல் இஸ்லாமியர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம், இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாரதிய ஜனதா பொறுப்பேற்றதில் இருந்து இது போன்ற மதவாத அச்சுறுத்தல்கள் தொடர்ந்த வண்ணம் தான் உள்ளன.

தான் உண்ணும் உணவிற்காக கொல்லப்படுவது என்பது எவ்வளவுப் பெரிய கொடுமை. மாட்டை புனிதம் என்று சொல்லுகிற இந்த இந்து மதம் தான், சக மனிதனை பறையன் என்றும், அவன் தொட்டால் தீட்டு என்றும் இன்றளவும் சொல்லிக் கொள்கிறது. . .

எளிய மக்களின் புரதம் நிரம்பிய ஊட்டச்சத்து... இன்னமும் மாட்டின் இறைச்சி எங்களுக்குப் பிடித்த உணவு... அதில் தலையிட யாருக்கு உரிமை இருக்கிறது?

இப்போதும் மாட்டு இறைச்சி தொடர்பான, தொடர்ந்த வண்ணம் உள்ள திமிரான அறிக்கைகளை என்னவென்று சொல்வது?

1. பசுக்களைக் காக்க கொலையும் செய்வேன் –சாகஷி மகராஜ்.

பசு மேல மட்டும் உங்களுக்கு அப்படி என்ன பாசம் மாண்புமிகு மந்திரி? ஆடு, கோழி மேல எல்லாம் அந்த அக்கறை இல்லையே ஏன்? மனித உயிரை விடவா, உங்கள் பசுவின் உயிர் சிறந்தது?

பசு தாய் மாதிரி உங்களுக்கு... அந்த தாய்க்குள்ள இருக்கிற முப்பத்து முக்கோடி தேவர்களையும், ரிஷிகளையும், நவ கிரங்களையும் நம்புற நீங்க உங்க ஆத்தாவக் காப்பாற்ற ஒரே ஒரு வேளை, புல்லு போட்டு இருக்கீங்களா? தவிடாவது வச்சது உண்டா?

பஞ்ச கௌவியத்தையும் பவ்வியமா கரைத்துக் குடிக்கிற நீங்கள் ஒரு நாலாவது சாணி அள்ளி உங்க தாய் வீட்டை [தொழுவத்தை] சுத்தப்படுத்தியது உண்டா?

பால், நெய், வெண்ணெய்னு கலந்தே உங்க உணவெல்லாம் இருக்க, என்றைக்கவாது பால் கறந்தது உண்டா?

மாட்டை பராமரிக்கிற, வளர்க்கிற, செத்த மாட்டைப் புதைக்கிற நாங்கள், நாலாம் சாதிக்காரர்கள் [உங்களுக்கு] வளர்க்கிறதும், திங்கிறதும் எங்கள் விருப்பம்.

2. மலத்தை வேண்டுமானும் உண்ணுங்கள் - ராம கோபாலன்

அன்றைக்கு உங்கள் மலத்தை அள்ளி எங்களை வாழப் பணித்தீர்கள். இன்றைக்கு உண்ண வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று சொல்லும் பெரியவரே! குறைந்த பட்சம் உன் வீட்டு மலத்தொட்டி உடைந்தால் நீங்கள் சுத்தப்படுத்தியது உண்டா? உங்களை அள்ளும்படி நாங்கள் வைத்து இருந்தால், உங்களின் மேல் சாதி வெண்ணெய் கொழுப்பு குறையும்.

3. மாட்டு இறைச்சி உண்பது சகோதரியுடன் உறவு கொள்வதற்கு சமம் - கிரிராஜ் சிங்

இந்துக் கதைகளை நல்லா படிச்சி இருக்கின்றபடியால், தான் உங்க புத்தி இப்படி வேலை செய்யுது. தாழ்த்தப்பட்டோரும், இஸ்லாமியரும் உண்ணுகிறார்கள் என்று எரிச்சல் அடைகின்றீர்களா?
வேத காலத்தில உங்க முப்பாட்டன் எல்லாம் விரும்பி உண்டது மாட்டு இறைச்சி தானாம்! அதனால, உங்கள் அறிக்கை உங்களுக்கும் பொருந்தும்.

* மாடு ‘பொருளாதார முக்கியத்துவம் உள்ள விலங்கு’ என்று நீங்கள் சொல்லி இருந்தால் நாங்கள் ஒரு வேளை உங்கள் வார்த்தைகளை கேட்டு இருக்கலாம்.

* தனியுடைமை சமுதாயம் பிறந்தபொழுதே பசு ‘நம் வீட்டின் ஓர் அங்கம்’ என்றால் உங்கள் கருத்தை நாங்களும் ஒரு வேளை ஆமோதித்து இருக்கலாம்.

ஆனால்,

- உங்கள் மதத்தில் மாட்டை 'புனிதம்' என்றும், சக மனிதனை ‘தீட்டு’ என்றும் சொல்லி இருப்பது தான் என்னுள் உங்கள் வார்த்தைகளை கேட்க விடாமல் தடுக்கிறது.

- மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் இந்திய நாடு, முதல் இடத்தில் இருக்கிற அதே நேரத்தில், நீங்கள் என்னை உண்ண வேண்டாம் என்று தடுக்கும் முரண் என்னை, எரிச்சல் அடையச் செய்கிறது.

- ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தமான இந்த நாட்டின் காடுகளையும், கனிமங்களையும், வளங்களையும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்த்து விட்டு, மனிதன் வாழத் தகுதி அற்ற இடமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டே, இன்னமும் நீங்கள் பசுக்களை பற்றியே யோசித்துக் கொண்டு இருப்பது உங்கள் மீது உள்ள சந்தேககத்தை வலுப்படுத்தவே செய்கிறது.

மத்திய அமைச்சர்களும், மதவாதிகளும் கொடுக்கும் இது போன்ற அறிக்கைகளுக்கு, அரசின் கள்ள மௌனம் ஏன்?

உங்களின் ஆட்சி பசுவிற்கானதா? இல்லை மனிதனுக்கானதா?

மதம் என்ற புள்ளியிலிருந்து விலகி, உங்கள் அடையாளங்களை அப்புறப்படுத்தி விட்டு மனிதர்களாக இணையுங்கள். அந்த இணைப்பு மட்டுமே பிரிவினைகள் அற்றது; பலமானது.

- கவுதமி தமிழரசன்

Pin It