எல்லாக் காலங்களிலும், எல்லா நாடுகளிலும் இப்படி நடந்து கொண்டுதான் இருக்கிறது. சமூக சீர்திருத்த வாதிகளும், பகுத்தறிவாளர்களும் அடிக்கடி படுகொலை செய்யப்படுகின்றனர். இந்தியா மட்டும் அதற்கு விதி விலக்கா? தேசத்தந்தை எனப்படும் மகாத்மா காந்தி யையே சுட்டுக்கொன்ற நாடுதானே இது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஒரு பத்திரிகை யாளர் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 5 அன்று மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் அவர் வீட்டருகே இரவு 8 மணியளவில் சுடப்பட்டுள்ளார். நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். மர்ம மனிதர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர்.
சமூகச் சிந்தனையாளர்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர். இடதுசாரி சிந்தனை கொண்ட அவர், இந்துத்துவா கொள்கைகளைக் கடுமையாக எதிர்த்து வந்தார். கர்நாடக மாநிலத்தில் மூடநம்பிக்கைகளை எதிர்த்து வந்ததோடு அதற்கென ஒரு சட்டத்தை இயற்ற வேண்டுமென்றும் வலியுறுத்தி வந்தார்.
மத்தியில் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அவரது அரசியலைக் கடுமையாகச் சாடி வந்தார். ஆர்.எஸ்.எஸ்., விசுவஇந்து பரிஷத், பஜ்ரங்தள் ஆகிய இந்துத்துவ அமைப்புகளின் செயல்பாடுகளை விமர்சித்து வந்தார். அவர்களின் எதிர்ப்புக்கு ஆளானார்.
இதுபற்றி மாநில உள்துறை அமைச்சர் இராமலிங்க ரெட்டி, ‘இலக்கியவாதி கல்புர்கியைக் கொலை செய்தது போலவே கவுரி லங்கேசும் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. விரைவில் கொலையாளிகளைக் கைது செய்வோம்’ என்று கூறியுள்ளார்.
கல்வியாளரும், பகுத்தறிவாளருமான கல்புர்கி கொலை செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளானாலும் இன்னும் கொலையாளிகளை கைது செய்யவில்லை. அந்தத் துணிச்சலில்தான் கொலையாளிகள் அதே முறையில் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். அரசும், காவல்துறையும் வெறும் பேச்சுப் பேசாமல் கொலையாளிகளைக் கைது செய்து மக்கள் மன்றத்தில் நிறுத்த வேண்டும்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும். பாதிக்கப்பட்ட தலித்தியர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்ததால் இந்துத்துவ சக்திகளால் அச்சுறுத்தப் பட்டார், கொலை மிரட்டல்களுக்கும் ஆளானார்.
2000ஆம் ஆண்டில் கர்நாடகாவில் ‘பசுமை வேட்டை’ என்ற பெயரால் நக்சலைட்டுகளுக்கு எதிராகத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதனால் அப்பகுதிகளில் வாழ்ந்த பழங்குடியின மக்களும், தலித்தியர்களும் வாழ்ந்த பகுதிகளில் சூரையாடப்பட்டனர்.
அப்போது அரசாங்கம் விதித்திருந்த அத்தனைத் தடைகளையும் தாண்டி வனப்பகுதிக்குள் நுழைந்த கவுரி லங்கேஷ் உண்மைகளை வெளியுலகத்துக்குக் கொண்டுவந்தார். அரச பயங்கரவாதத்தை அம்பலப் படுத்தினார்.
கர்நாடக அரசுடன் பேசி, நக்சலைட் மறுவாழ்வுத் திட்டம் உருவாகக் காரணமாக இருந்தார், இதனால் மேற்குத் தொடர்ச்சி மலை மக்கள் நிம்மதியாகவும், அமைதி யாகவும் வாழ வழி ஏற்படுத்தித் தந்தார். இதனால் அவர் ‘தீவிரவாதி’ என்று அநியாயமாக முத்திரை குத்தப்பெற்றார்.
மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்துத்துவக் கொள்கையை விரைவுபடுத்தினார். ‘பசுவதை’ என்ற பெயரால் இசுலாமியர்களும், தலித்தியர்களும் அடித்துக் கொல்லப்பட்டனர். மத நல்லிணக்கத்துக்கு எதிரான சாமியார்களிடம் உ.பி. போன்ற பெரிய மாநிலங்களை ஆளும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு தேசிய இன மக்களின் தனித்தன்மைகளை அழித்து ஒற்றை மொழி, ஒற்றைப் பண்பாடு என ஓலம் இடப் படுகிறது. அதனை நடைமுறைப்படுத்தும் முகமாக, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் பசு, காளை, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக் காக விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டது.
ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் இவற்றை யெல்லாம் எதிர்த்து நிற்பது தமது கடமை என்று கவுரி லங்கேஷ் கருதினார்; பத்திரிகைகளில் எழுதியதோடு, மேடைகளிலும் முழங்கினார், தமக்கு எதிராகக் கொலை மிரட்டல் இருந்தபோதும், பாதுகாப்புக் கருதி காவல் துறையை அணுகவில்லை. ‘நடப்பது நடக்கட்டும்’ என்றும், ‘நாளை நடப்பது இன்றே நடக்கட்டும்’ என்றும் ஓங்கிக் குரல் கொடுத்தார்.
“ஒரு குடிமகளாக பா.ச.க.வின் பாசிச மற்றும் இனவாத அரசியலை ஒருபோதும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்து அமைப்பில் உள்ள சாதிய அமைப்பை நான் தொடர்ந்து எதிர்ப்பேன். நம் அரசியல் அமைப்புச் சட்டம் எனக்கு மதச்சார்பின்மையைக் கற்றுக்கொடுத்தது. எனவே மதவாதத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுப்பது என்னுடைய அடிப்படை உரிமையாகும்” என்று இவர் தொடர்ந்து துணிந்து குரல் கொடுத்து வந்தார்.
‘நீ உன் குரலை நிறுத்தாவிட்டால் நாங்கள் நிறுத்தி விடுவோம்’ என்று கொலையாளிகள் கூறாமல் கூறு கின்றனர். இந்தக் கொலையின் மூலம் மற்றவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கின்றனர், இனிமேல் இந்துத்துவாவை எதிர்க்கும் துணிவு எவருக்கும் வரக்கூடாது என்று மிரட்டுகின்றனர் என்பதைத் தவிர வேறு என்ன?
கடந்த 2015 ஆகஸ்டு 30 அன்று ஹூப்ளியில் எம்.எம். கல்புர்கி என்ற பேராசிரியர் இதே முறையில் கொலை செய்யப்பட்டார். இரண்டு ஆண்டுகளாகியும் கொலையாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதே கொலையாளிகள்தாம் தொடர்ந்து அச்சமின்றி இக்கொலையை அரங்கேற்றியுள்ளனர்.
கர்நாடக அரசும், காவல் துறையும், உளவுத் துறையும் இதனைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யவில்லையா, கண்டுபிடிக்க முடியவில்லையா என்ற கேள்வி எழுகிறது. இந்த நீண்ட இடைவெளியின் காரணமாகவே இந்தக் கொலையும் அரங்கேறியுள்ளது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
‘சமூக நீதிக்காகப் போராடுகிறர்களை நாட்டில் நடமாட விடமாட்டோம்’ என்று ஓர் அநியாயக் கும்பல் அறைகூவல் விடுக்கிறது என்பதுதானே பொருள். இந்த வெறியர்களின் நெறிகெட்ட போக்கை இன்னும் எத்தனை காலம் அனுமதிக்கப் போகிறோம்?
2016 பிப்ரவரி 16 அன்று கோலாப்பூரில் கோவிந்த் பன்சாரே கொலை செய்யப்பட்டார். 2013 ஆகஸ்ட் 20 அன்று புனேயில் நரேந்திர தபோல்கர் படுகொலை செய்யப்பட்டார். என்ன நடந்தது? அரசியல் தலைவர்கள் கண்டித்தனர். பத்திரிகைகள் கண்டித்து எழுதின. பத்திரிகையாளர் சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களும், இரங்கல் கூட்டங்களும் நடத்தின. போதுமா?
மனிதன் எப்படி படிப்படியாய் வளர்ச்சியடைந்தான் என்பதை டார்வின் கண்டுபிடித்தார். மானிட சாதியின் வரலாறு எப்படி படிப்படியாய் வளர்ச்சியடைந்தது என்பதை கார்ல்மார்க்ஸ் கண்டுபிடித்தார். இதற்கு இடைவிடாத சிந்தனையின் உழைப்பே முதலீடாகும்; மூலதனமாகும்.
கார்ல்மார்க்ஸ் இறந்து போனதை, ‘அவர் சிந்திப்பதை நிறுத்திவிட்டார்’ என்று அவர் தோழர் ஏங்கல்ஸ் குறிப்பிட்டார். டெஸ்கார்ட்டே என்ற தத்துவஞானி, ‘நான் சிந்திக்கிறேன்; எனவே உயிரோடு இருக்கிறேன்’ என்று கூறினார்.
எனவே சிந்திப்பதும், செயல்படுவதும் சமுதாய மாற்றத்தை விரும்பும் மேதைகளின் செயல்பாடுகளாகும். எழுத்துக்கு எழுத்தும், பேச்சுக்குப் பேச்சுமே பதில்களாக இருக்க வேண்டும், அதுவே ஆக்கப்பூர்வமான வளர்ச்சி யாகும்.
அதைவிடுத்து தனிமனிதர்களைத் தாக்குவதும், கொலை செய்வதும் கோழைகளின் எதிர்நடவடிக் கைகளாகும். இதன்மூலம் சிந்தனையையும், செயல்பாட்டையும் தடுத்து நிறுத்த முடியாது. அவர் விட்டுச்சென்ற பணியை வேறொருவர் தொடர்வார். இதற்கு முடிவு கிடையாது.
“அரசியல் கொடுமைகளை விட சமூகக் கொடு மைகளே மிகப் பயங்கரமானவை. எனவே சாதிக் கொடுமைகளை எதிர்த்துப் போராடும் சமூகச் சீர்திருத்த வாதியே அரசியல்வாதியைவிட அதிக வலிமை மிக்கவன்” என்றார், டாக்டர் அம்பேத்கர்.
உலக வாழ்வில் சாதி, சமயம் என்பவை தவிர்க்க முடியாத - தடுக்க முடியாத அம்சமாக இருக்கும் வரை மூடநம்பிக்கைகளும் வளர்ந்து கொண்டேயிருக்கும். தலைவிதியைக் காரணம் காட்டி உழைக்க மறுக்கும் இளைஞர்களின் எதிர்காலம் வீணாவதை யாரால் தடுக்க முடியும்?
உண்மைகளை ஏற்க மறுக்கும் மனிதர்கள் மூடநம்பிக்கைகளின் பின்னே ஓடுகின்றனர், ‘இது என் நம்பிக்கை’ என்று சொல்கிறவர்களை எப்படித் திருத்த முடியும்? படிப்பறிவில்லாத பாமர மக்களுக்கும், இவர் களுக்கும் வேறுபாடு இல்லை.
“கிறித்து பிறப்பதற்கு முந்தைய காலத்துப் புத்த கங்களை ஆதாரமாக வைத்துக் கொண்டு இன்றைய பிரச்சனைகளைத் தீர்க்க முனைவது அறியாமையாகும். நிகழ்காலம் என்பது ஓடுகிற ஆற்று வெள்ளத்தைப் போன்றது. கடந்த காலமாகிய மலையிலிருந்துதான் அது உதிர்ந்தது என்றாலும், எதிர்காலமாகிய கடலை நோக்கியே அது ஓட வேண்டும்” என்றார், காண்டேகர்.
“சாதிப் பிரிவுகள் சொல்லி - அதில்
தாழ்வென்றும் உயர்வென்றும் கொள்வார்
நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்”
என்று பாரதி பாடுகிறார்.
“மூடப் பழக்கம் முடிவற்ற கண்ணுறக்கம்
ஓடுவ தென்றோ? உயர்வதென்றோ? நானறியேன்”
என்று பாரதிதாசன் தன் ஆற்றாமையை வெளிப்படுத்து கிறார்.
தமிழ்நாடு மற்ற மாநிலங்களிலிருந்து கொஞ்சம் வேறுபட்டு உள்ளது. இங்கும் இப்படிப்பட்ட சமூகச் சீர்திருத்தவாதிகள் தோன்றாமல் இல்லை. பெரிய பூகம்பம் போல் எழுந்த பெரியார் தனி மனிதராகப் போராடவில்லை. ஓர் இயக்கமாகச் செயல்பட்டார். அதனால் அவர் எல்லாத் தாக்கு தல்களிலிருந்தும் தப்பிப் பிழைத்தார்.
கல்லடியும், சொல்லடியும் தொடர்ந்துவந்த போதிலும் துவண்டுபோகாமல் வீறுகொண்டு எழுந்தார். அவரது தொண்டர் படை அவரைக் காப்பாற்றியது. எதிரிகள் அவருடன் எதிர்த்து நிற்க முடியாமல் ஓடி ஒளிந்தனர்.
“சமூகச் சீர்திருத்தம் என்ற பெயரால் இங்கும் அங்கும் ஏதோ மாறுதல்களைச் செய்வதோ, ஒட்டு வேலை-மேல்பூச்சு வேலை செய்வதோ பயன்தராது. இன்றைய சமுதாய அமைப்பையே அடியோடு ஒழித்து விட்டுப் புதியதொரு சமுதாய அமைப்பை - சாதியற்ற, உயர்வு தாழ்வு அற்ற சமுதாய அமைப்பை உருவாக்க வேண்டும்” என்பது அவர் கொள்கை.
இப்படிப்பட்ட பகுத்தறிவாளர்கள் இந்தியாவில் மட்டும் அல்ல, உலகெங்கும் தோன்றி படாதபாடு பட்டுள்ளனர். அரசு அவர்களை வேட்டையாடியுள்ளது. நாடு கடத்தல், சிறை, மரண தண்டனை என அவர்களை ஓட, ஓட விரட்டியது. ஆனால் அவர்களது கொள்கைகளே இப்போதும் உலகை ஆளுகின்றன.
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை என்பதும் அதன் தொடர்ச்சியே! காந்தியைப் போல, கல்புர்கியைப் போல இவரும் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் கர்நாடகத்தில் மட்டுமே தெரிந்தவராக இருந்த இவர் உலகமே தெரிந்தவராக மாறியிருக்கிறார்.
மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடி வந்த பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் புனே நகர வீதியில் காலையில் நடைபயணத்தில் ஈடுபட்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் மிக நெருக்கத்தில் அவரைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடியுள்ளனர்.
இவ்வாறு இந்துத்துவாவை எதிர்க்கும் எல்லோ ரையும் திட்டமிட்டுக் கொலை செய்கின்றனர். இவை தனிநபர்களால் செய்யப்படுபவை அல்ல. தேர்ந்த அமைப்பினர் செய்யும் திட்டமிட்ட செயலாகவே தெரி கிறது. இவர்களைக் கைது செய்து மக்கள் மன்றத்தில் நிறுத்தினால் மட்டுமே உண்மை உலகுக்குத் தெரியும்.
இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 295-ஏ சட்டப் பிரிவு ‘மத உணர்வுகளை அவமதிக்கும் நோக் கத்துடன் வேண்டும் என்றே செய்யப்படுகின்ற விசமத்தனமான செயல்கள் தண்டனைக்குரியவை’ என்று கூறுகிறது. இது நீக்கப்பட வேண்டிய சட்டப் பிரிவு என்று அவர்கள் கூறுகின்றனர்.
ஆக்கபூர்வமான, பகுத்தறிவுடன் கூடிய விமர்சனங் களுக்கு இடமில்லையென்றால், பிற்போக்குத்தன மான, மோசமான பழக்கவழக்கங்களை ஒழித்துக்கட்ட முடியாமல் போய்விடும். அரசியல் ஆதாயங்களுக்காக மதவாத அடையாளங்களைப் பயன்படுத்தும் போக்கு அண்மையில் அதிகரித்துள்ளது அதனால்தான்.
நரேந்திர தபோல்கரின் படுகொலையால் மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. மக்களின் கொந்தளிப்பைக் கண்ட மாநில அரசு அவசரம் அவசரமாக மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தது.
‘நரபலி மற்றும் இதர மனிதநேயமற்ற கொடுமை யான பழக்கங்கள், பில்லி சூனியத்திற்கு எதிராகச் சட்ட முன்வரைவு’ என்பதன் அடிப்படையில் இந்த அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆண்டுக்கணக்காக சட்ட மன்றத்தில் முடங்கிக் கிடந்த இச்சட்ட முன்வரைவை நிறைவேற்ற வேண்டும் என இவர் பலகாலமாக வலி யுறுத்தி வந்தார்.
இவ்வாறு சமூகப் போராளிகள் தங்கள் உயிர்களைப் பணயம் வைத்தே சமுதாயத் தேரை இவ்வளவு தொலைவு நகர்த்தி வந்துள்ளனர். அவர்கள் தொகை கொஞ்சமாக இருக்கலாம். ஆனால் அவர்களே வெகு மக்களின் பிரதிநிதிகள். மனிதநேயத்தின் மறு உருவங்கள்.
அவர்கள் இல்லாமல் தேசமும் இல்லை; தேச முன்னேற்றமும் இல்லை. இந்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செய்வோம்.