“மக்களின் கோபாவேசத்தை தணிக்க, கொந்தளிப்பை அடக்க, எதிர்க்கட்சிகளின் வாயை மூட, ஆளுங்கட்சிக்கு ஆதரவான – ஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு ஒரு வருமானம் கிடைக்க – போடு ஒரு விசாரணைக் கமிசனை” –என்றார் வின்ஸ்ட்சன் சர்ச்சில்.

முதலாவது நாடாளுமன்றத்திலேயே நிறைவேற்றபட்ட முக்கியமான சட்டங்களில் ஒன்று – 1952ம் வருடத்திய விசாரணைக் கமிசன் சட்டம். அதிமுக்கியத்துவம் வாய்ந்த மக்கள் பிரச்சனைகள் மீது விசாரணை நடத்தி அரசுக்கு பரிந்துரை செய்ய வகை செய்யும் சட்டம். விசாரணைக் கமிசனின் பரிந்துரைகள் அரசுக்குக் கிடைத்த தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் அதை நாடாளுமன்றத்தில் அல்லது சட்டமன்றத்தில் சம்பந்தப்பட்ட அரசு தாக்கல் செய்யாவிட்டால் பரிந்துரைகள் காலாவதியாகி, அரசு அலுவலக குடோனில் தூக்கி வீசப்பட்டு பழைய பேப்பர் கடைக்காரனுக்கு எடை போட்டு விற்கப்பட்டு விடும்.

அதைவிட மோசம், பரிந்துரைகளை அரசு ஏற்கலாம் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கலாம். ஏன் நிராகரிக்கப்பட்டது என்று முடிவு செய்ய பத்து சாலமன் பாப்பையாக்கள் வேண்டும். இதுதான் விசாரணைக் கமிசன் சட்டத்தின் லட்சணம். இருந்தாலும் எதிர்கட்சிக்கள் அவ்வப்பொழுது தங்கள் இருப்பை காட்டிக்கொள்ள “விசாரணை வை” என்று போரடிக்காமல் 1952லிருந்து நாளதுவரை கோஷம் போட்டுக் கொண்டிருப்பதையும் பார்க்கிறோம்.

பிரதமர் இந்திராகாந்தி படுகொலையைத் தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்களால் டெல்லியிலும், வடமாநில நகரங்களிலும் சுமார் 6000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். குடியிருப்புகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. சீக்கியர்களுக்கு சொந்தமான வணிக நிறுவனங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

உச்ச நீதிமன்றத்தின் ஒய்வுபெற்ற நீதிபதிகள் ரங்கநாத் மிஸ்ரா, நானாவதி உட்பட மொத்தம் 10 விசாரணைக் கமிசன்கள் அமைக்கப்பட்டன. செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் HKL பகத், லலித் மக்கான், சஜ்ஜான் குமார், அர்ஜூன்தாஸ் மற்றும் பல பிரபலமான காங்கிரஸ் தலைவர்கள் சீக்கியர்கள் படுகொலையை திட்டமிட்டு தலைமை தாங்கி நடத்தினார்கள் என்று விசாரணைக் கமிசன் நீதிபதிகள் அடையாளங் காட்டினார்க்ள.

பகத், 1990ல் சிவலோக பதவி அடையும்வரை மத்திய மந்திரி சபையில் பல பதவிகளை வகித்து, அனுபவித்து காலமானார். உயிரோடிருந்தவரை ஒரு வழக்கு கூட அவர்மீது தாக்கல் செய்யப்படவில்லை. வெறுத்துபோன காலிஸ்தான் காமண்டோ போர்ஸ் மூன்று இளைஞர்கள் லலித் மக்கான், அவரது மனைவி, அர்ஜூன் தாஸ் ஆகியோரை சுட்டுக் கொன்றார்கள். சஜ்ஜான் குமார் மீது மட்டும் 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. சாட்சிகளை விலைக்கு வாங்கி 4 வழக்குகளி;ல் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். 5-வது வழக்குக்கும் அதே கதிதான்.

பாபர்மசுஉதி இடிக்கப்பட்ட சம்பவத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட லிபர்ஹான் கமிசன் 6 மாதங்களில் விசாரணையை முடித்து பரிந்துரைகள் செய்வதற்குப் பதிலாக 36 மாதங்கள் விசாரணை நடத்தி உப்பு சப்பில்லாத, உதவாக்கரை பரிந்துரைகளை அரசுக்கு கொடுத்தது. கடப்பாறை சேவைக்கு தலைமை தாங்கிய அத்வானி, முரளி மனோகர், உமாபாரதி, வினாய் கட்டியார் மற்றும் 16 முக்கிய குற்றவாளிகள் மீது 1991 பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் கிணற்றில்போட்ட கல்லாக கிடக்கின்றன. அனேகமாக குற்றவாளிகள் அனைவரும் கல்லறைக்குப் போகும்வரை லிபர்ஹான் கமிசன் பரிந்துரைகள் அமுலாக்கப்படப் போவதில்லை.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிர்வினையாக மும்பை நகரத்தில் பெரும் கலவரம் மூண்டது. சிவசேனா தொ(கு)ண்டர்கள் திட்டமிட்டு முஸ்லீம் மக்களைக் கொன்று குவித்தனர். அவர்களது வாழ்வாதாரங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

சிவசேனாவின் கொலை, கொள்ளை நடவடிக்கைகளை விசாரிக்க அன்றைய காங்கிரஸ் அரசு நீதிபதி கிருஷ்ணா கமிசனை நியமித்தது. கிருஷ்ணா கமிசன் பால்தாக்கரே உட்பட 152 பேரை (போலீஸ் அதிகாரிகள், கவுன்சிலர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், தாதாக்கள்) குற்றவாளிகளாக அடையாளங் காட்டியது.

152 பேரில் இதுவரை 17 பேர் மீது மட்டும் வழக்கு நடைபெற்று முடிந்திருக்கிறது. இதே நிலைதான் 1989ல் பிஹார் மாநிலம் பாகல்பூர் இந்து முஸ்லீம் கலவரத்தில் கொல்லப்பட்ட 1185 பேரின் நிலை. 2002 பிப்ரவரி 28, மார்ச் 1, 2 தேதிகளில் குஜராத்தில் சங்பரிவார் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைச் சம்பவங்களில் 3000 முஸ்லீம்கள் இறந்தனர். ஒரு லட்சம்பேர் அகதிகள் முகாம்களுக்கு துரத்தப்பட்டனர். இந்த கலவரங்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட நானாவதி கமிசன் கடந்த 13 வருடங்களாக விசாரித்துக் கொண்டே இருக்கிறது.

1952 தொடங்கி நாளதுவரை மத்திய, மாநில அரசுகள் நியமித்த விசாரணைக் கமிசன்கள் எவ்வளவு? ஒவ்வொரு கமிசனுக்கும் ஆன மொத்த செலவு என்ன? பரிந்துரைகள் என்ன? பரிந்துரைகளை அரசுகள் நிறைவேற்றினவா – போன்ற விவரங்களை ஆராய ஒரு விசாரணை கமிசனை நியமித்தல் நாட்டுக்கு நல்லது.

- கே.சுப்ரமணியன்

Pin It