இந்திய சமுதாய வரலாறும், அரசியல் வரலாறும், மக்களின் வாழ்க்கை வரலாறும் போதிய தெளிவு அற்றவை.
அதுவும் வடஇந்திய வரலாற்றைவிடத் தென்னிந் திய வரலாறும், தமிழ்நாட்டு வரலாறும் இன்னமும் தெளிவு இல்லாதவை.
தமிழரின் வாழ்க்கை நெறி நூலாக விளங்குவது திருக்குறள். அது பெரிதும் ஓர் அரசமைப்புப் பற்றிய நூலும் மக்களின் வாழ்க்கை நெறி பற்றிய நூலும் ஆகும்.
அதன் தோராயமான காலம் கி.மு.31.
அது கள்ளுண்ணாமை, சூது, வரைவின் மகளிர் என மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ள தமிழர் வாழ்க்கை நெறி பற்றிய - அரசியல் கொள்கை பற்றிய நூல். எப்படி?
கள் குடிப்பது தமிழரிடம் பரவியிருந்தது. எனவே அது தீமையானது என மக்களுக்கு அறிவுரை கூறியது. கள் குடிக்க மக்களை அனுமதிக்காதே என்று அரசனுக்குக் கட்டளையிட்டது.
சூது ஆடுவது மக்களிடம் பரவியிருந்தது. எனவே சூது ஆட மக்களை அனுமதிக்காதே என்று அரசனுக்கு - அரசுக்குக் கட்டளை இட்டது.
விலைப் பெண்டிரைத் தேடுவது தமிழரிடம் இருந்தது. அதனால் பொருளுக்கு உடலின்பத்தை விற்கும் வரைவின் மகளிரைத் தேடிப் போகாதீர்கள் என்று மக்களுக்கு அறிவுரை கூறியது. வரைவின் மகளிர் தொழில் செய்ய இடம் தராதே என்று அரசுக் குக் கட்டளையிட்டது.
ஆனால் தமிழரின் வாழ்வில் ஏற்கெனவே புகுந்து விட்ட மனுநீதி நெறி - அர்த்த சாத்திர நெறி இரண்டும் இதற்கு நேர்மாறாக அரசனுக்குக் கட்டளைகளை விதித்தன. சாத்திரக் கட்டளைகள் - என்பவை ஆயனேயவடிசல தன்மை உள்ளவை - அதாவது அரசனாலும் மக்களாலும் மீற முடியாதவை; மீறக் கூடாதவை.
எனவே அரசன் சாராயம் காய்ச்சவும், சாராயம் விற்கவும் மக்களை அனுமதிக்க வேண்டும். அவற் றைச் செய்கிறவர்களுக்கு வரிவிதிக்க வேண்டும் என்று அர்த்தசாத்திரம் கட்டளையிட்டது. அரசர்கள் - அதை அப்படியே செய்தனர்.
சூது ஆடும் கொட்டகைகளை அரசன் உருவாக்க வேண்டும். மக்களை சூதாடச் சொல்ல வேண்டும்; சூது ஆடுகிறவர்களுக்கு வரி போட வேண்டும் என்று அர்த்தசாத்திரம் கட்டளையிட்டது. அக்கட்டளைப்படி அரசர்கள் நடந்தார்கள்.
விலை மாதர் தெருக்களை அரசன் அமைக்க வேண்டும். விலைக்கு உடம்பை விற்கும் பெண் களுக்கு வரி போட வேண்டும் என்று அர்த்த சாத்திரம் கட்டளையிட்டது. அதை அரசர்கள் செய்தனர்.
எந்தத் தமிழரசனுக்கும் திருக்குறள் வாழ்க் கைச் சட்டம் பற்றி எந்த நூற்றாண்டிலும் எந்தப் புலவனும் எடுத்துச் சொன்னதற்கான சான்றும் வரலாறும் இல்லை. இது ஓர் அவலம்.
எனவே 2000 ஆண்டுகளாகத் தமிழரிடையே மதுக்குடி, சூதாடுதல், விலைப் பெண்டிரை நாடுதல் என்பவை இருந்தன. அவை மக்கள் நலனுக்குக் கேடானவை என்பதைத் தமிழர்களுக்கு எவரும் சொல்லவில்லை. அவற்றை நாம் சொல்ல வேண்டும்.
நாம் சொல்லுவதற்கு நமக்கான அரசு என்று ஒன்று நெடுங்காலம் இல்லை. இங்கு இருந்த தமிழ ரின் அரசுகள் வேத - சாத்திர - °மிருதி - சுருதி - இராமாயண நெறிப்படியே நடந்தன.
வெள்ளையர்கள் ‘இந்தியா’ என்ற ஒன்றைத் தம் பெரிய சுரண்டல் சந்தைக்கு ஏற்றதாக அமைத்தார்கள். சுரண்டலைத் திறம்படச் செய்தார்கள். அவர்களே அரசு மூலம் சாராயத் தொழிற்சாலைகளை நிறுவினர்; சாராயக் கடைகளைத் திறந்தனர்.
வெள்ளையர் காலத்துக் கள்ளுக்கடைகள், சாராயக் கடைகளை நான் பார்த்திருக்கிறேன். என்னைவிட மூத்தவர்கள் சிலர், நல்ல குடிகாரர்கள். அவர்களுடன் துணையாகப் போயிருக்கிறேன். ஆனால் - வள்ளலார் அருட்பாவை 15 அகவையிலேயே நான் கற்றுக் கொண்ட தால், தீய பழக்கங்கள் என்னைப பற்றிக்கொள்ள வில்லை. கள், சாராயம் குடித்த என் நண்பர்கள் 40 ஆண்டுகளுக்கு முன்னரே இறந்துவிட்டனர்.
தமிழ்நாட்டில் கள் ஒழிப்புக்கு ஒரு தனி வரலாறு உண்டு.
காந்தியாரின் நிர்மாணத் திட்டங்களில் ‘கள் ஒழிப்பு’ முதலாவது. அதுபற்றி அவர் திட்டம் தீட்டியது ஈரோட்டில், ஈ.வெ.ரா.வின் இல்லத்தில், 25.9.1921 முற்பகலில்தான்.
அவருடைய கள் ஒழிப்புத் திட்டத்தை மனமார ஏற்ற ஈ.வெ.ரா. இந்தியாவிலேயே முதன்முதலாக 1921 நவம்பரில் ஈரோட்டில் கள்ளுக்கடை மறிய லை - தம் மனைவி, தங்கை, உறவினர், நண்பர் களைக் கொண்டு நடத்தினார். 15.11.1921இல் தண்டனை பெற்றார். அது இந்தியா முழுவதிலும் எதிரொலித்தது. சேலத்தில் தனக்குச் சொந்தமாக இருந்த தென்னை மரங்களிலிருந்து கள் இறக்குவதை முதலில் நிறுத்தினார்; பிறகு தென்னை மரங்களையே வெட்டி னார். அப்போது ஈ.வெ.ரா. முதல்நிலை காங்கிரசுக் காரர்.
காங்கிரசுக் கட்சி அதிகார முறையில் (Official) 1937 சூலையில் சென்னை மாகாணத்தில் அரசு அமைத்தது. 215 பேர்களைக் கொண்ட சென்னை மாகாணச் சட்டப் பேரவையில் 159 பேர் காங்கிரசுக் காரர்கள். பிரதமராக (Premier) இருந்த சி. இராச கோபாலாச்சாரியார் கள் ஒழிப்புக்காக 1924இல் “விமோசனம்” என்ற ஏட்டை நடத்தியவர். மது ஒழிப்புப் பற்றி ஒரு நூல் எழுதியவர். சென்னை மாகாணத்தில் அப்போது 26 மாவட்டங்கள் இருந்தன. ஆனால் சேலம், சித்தூர், கடப்பா, வடஆர்க்காடு ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டுமே மதுவிலக்குச் சட்டத்தை ஆச்சாரியார் செயல்படுத்தினார்.
அதனால் கள்ளுக்கடை மூலம் வந்த வருவாய் சிறிது குறைந்தது. அதைச் சாக்கிட்டு, 2,200 சிற்றூர்ப் புறத் தொடக்கப் பள்ளிகளை உடனே மூடினர். சூத்திர ரின் தொடக்கப் படிப்பில் மண்ணைப் போட்டார்.
அடுத்து, வருமானத்துக்கு வழிசெய்ய வேண்டி, ‘விற்பனை வரி’ (Sales Tax) என்ற ஒன்றை அறி முகப்படுத்தினார். மேலும் ‘பணப்பண்டங்கள் சந்தைப் படுத்தல் வரி- (Commercial Crops Market Committee Act)’ என்ற “பணப்பயிர்கள் விற்பனைக்கான கூடங்களைத்” தென்னார்க்காடு, வடஆர்க்காடு மாவட் டங்களில் அறிமுகப்படுத்தி, ‘லெவி’ - சந்தை வரி விதித்து புதிய வருமானத்தை உருவாக்கினார்.
(இந்தத் துறையின் அலுவலகத்தில் தான், 1952 மார்ச்சு முதல் 1956 ஏப்பிரல் வரையில் நான் எழுத்தராகவும், கண்காணிப்பாளராகவும் பணியாற்றி னேன்).
1948இல் சென்னை மாகாணப் பிரதமராக (Premier) இருந்த ஓமந்தூர் பெரிய வளவு இராமசாமி ரெட்டி யார், சென்னை மாகாணம் முழுவதிலும் சாராயக் கடைகளை மூடினார்.
இங்கு நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்.
1948இல் நடைமுறைப்படுத்தப்பட்ட சாராய ஒழிப்பு வெற்றி பெற்றதா என்றால் - பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பது ஓர் உண்மை.
ஏன் முழு வெற்றி பெறவில்லை?
1. புதுவை மாநிலத்திலும், மைசூர் அரசிலும் சாராயக் கடைகள் இருந்தன. பேருந்துகள் குறைவான அக்காலத்தில், தமிழர்கள் தொடர் வண்டிகளில் அண்டை மாநிலங்களுக்குச் சென்று குடிக்கத் தலைப் பட்டார்கள்.
2. மதுக்குடி ஒழிப்பைக் (Prohibition) கண்காணிக்க வேண்டிய காவல் துறையில், தலைமைக் காவலர் (Head Constable) வேலைக்கு மேலே பெரிதும் பார்ப்பனர்களும் சில மேல்சாதிக்காரர் களுமே அன்று அதிகாரிகளாக இருந்தனர். அவர் கள் கள்ளச் சாராயம் உற்பத்தி, சாராயத்தைப் பல இடங்களுக்கும் அனுப்புதல் (விநியோகம்) இவற் றுக்குப் பாதுகாப்பாக இருந்தனர். அவர்களே கடு வட்டிக்குப் பணம் கொடுத்து கள்ளச் சாராயம் காய்ச்சவும் விற்கவும் துணைபோனதை நானே நேரில்பார்த்திருக்கிறேன். கள்ளச் சாராயம் பெருக இது தலையான காரணம்.
3. அவற்றையும் மீறி மது கலக்கப்பட்டிருக்கிற ‘வார் னிஷ்’ போன்றவற்றை மக்கள் குடித்தனர்; விரைவில் மாண்டனர். இவற்றை எடுத்துக்காட்டி, “சாராய ஒழிப்பு வெற்றி பெறாது” என்று கூறுவது அடாதது.
அடுத்து, அமெரிக்காவைப் போன்ற மேலை நாடு களில் 1920களில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுத் தோற்றுப்போனதைச் சான்றாகக் காட்டி, “முழு மது விலக்கு வேண்டாம்” என்று பலரும் கூறுவது பொருந் தாது.
மேலை நாடுகள் பெரிதும் கடுமையான குளிர் நாடுகள். கணவனும் மனைவியும் படுத்துப்புணர்ச்சி செய்ய முயன்றால்கூட, விரைவில் புணர்ச்சி உணர்ச்சி வராது. உணர்ச்சியும் கிளர்ச்சியும் பெற உடம்பில் சூடு வேண்டும். இதற்காக அவர்கள் தரமான ஒயின், பிராந்தி போன்றவற்றை மிக நளினமாகச் சப்பிச் சப்பிக் குடிக்கிறார்கள். மாட்டுக்கறி, எருமை நாக்கு, முட்டை, வெண்ணெய் இவற்றை உணவாகக் கொள்ளுகிறார் கள். புளி, மிளகாய் இவற்றைப் பயன்படுத்தாதவர்கள்.
இந்தியர்களுள் அதிகமாகப் புளியையும், காரத் தையும் உண்போர் தென்னாட்டார். இவை குடலைப் புண்ணாக்கும் தன்மை உள்ளவை. மேலும் இந்தி யர்களுள் 100க்கு 80 பேர் சத்தான உணவு கொள்ள வசதி அற்றவர்கள்.
இந்தியா நல்ல வெப்ப நாடு. உடம்பில் சூடேற்ற எந்தப் போதைப் பொருளின் தூண்டுதலும் மனி தருக்கு இங்கே தேவை இல்லை.
இப்படிப்பட்ட தமிழ்நாட்டில், 1971இல் மதுவிலக் கை தி.மு.க. அரசு ஒழித்தது மிக மிகத் தவறானது. காய்ந்த மாடு கம்பங்காட்டில் புகுந்த கதையாக - 33 ஆண்டுக்காலமாகக் குடியை அறியாத தமிழகம் - தமிழக ஏழை - நடுத்தர மக்கள் 1974க்குள் நல்ல குடிகாரர்கள் ஆனார்கள். அப்புறம் தி.மு.க. அரசு மதுவிலக்கை அமல்படுத்தியது. 1977இல் தி.மு.க. தோல்வி கண்டது.
1977இல் ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆர். 1981இல் மீண்டும் சாராயக் கடைகளைத் திறந்தார்.
1977 முதல் தி.மு.க. - அ.இ.அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் எதிரும் புதிருமாக அரசியலில் இருந்தாலும் - சாராயத் தொழிற்சாலைகளை அமைப்பது, தனியார் சாராயக் கடைகளை ஏலம் எடுப்பது இவற்றில் இணைபிரியாத கூட்டாளி களாக விளங்கினர். இது உண்மை.
தனியாருக்கு ஏலம் விடுவது ஒழிக்கப்பட்டு - தமிழ்நாட்டு அரசே தேநீர் விடுதி. பெட்டிக்கடை போன்று 6,856 ‘தமிழ்நாட்டு அரசு சாராயக் கடைகளை (Tasmac)’த் திறந்துவிட்டது.
சாராயம் குடிப்பதில் பாழாவோர் முதலில் ஏழை உழைப்பாளிகளே. அவர்களுடைய குடும்பங்களே பாழாகிவிட்டன. குடும்ப மகளிர் சொல்லொணாத துன் பங்களுக்கு ஆளாகிவிட்டனர். அவர்களின் குழந்தைகளின் படிப்பும், ஒழுக்கமும், மன அமைதியும் பாழாகிவிட்டன.
இத்தகைய தமிழகத்தில் (1) தன்னிச்சையாக - எல்லாக் கட்சிகளிலுமுள்ள மக்கள் நலன் நாடுவோர் குழுவினராக இணைந்து இடைவிடாது மதுக்குடி ஒழிப்புப் பரப்புரை செய்கிறார்கள்.
(2) நாடாளுமன்ற அரசியல் கட்சிகள் பலவும் தனியாகவும், கூட்டாக இணைந்தும் பரப்புரைகள், சாராயக் கடை முன் மறியல்கள், சாலை மறியல்கள் முதலான போராட்டங்களைப் பல ஆண்டுகளாக நடத்துகிறார்கள்.
(3) கள் நல்லது - சாராயம் ஒழிக்கப்பட வேண்டி யது என ஒரு சாரார் போராடுகிறார்கள்.
இவர்கள் எல்லோரும் பாராட்டுக்கும் போற்றுதலுக் கும் உரியவர்கள்.
இப் பல தரப்புப் போராட்டங்களுக்கு இடையே சசி பெருமாள் அவர்களின் போராட்டமும், உயிர் இழப்பும் தமிழ் மக்களின் குருதியில் சினத்தையும் வீரத்தையும் பாய்ச்சிவிட்டன.
இளைஞர்களும், மாணவர்களும், மாணவிகளும் தங்களை மறந்து தெருவுக்கு வந்து போராடுகிறார்கள்; அடிபடுகிறார்கள்; உதைபடுகிறார்கள்; காவல்துறையினரால் கொடுமையாகத் தாக்கப்படுகிறார்கள். இவை தமிழக அரசின் மூர்க்கத்தனத்தையே காட்டுகின்றன.
தமிழகக் காவல்துறையினரின் பொறுப்பும் கடமை உணர்வும் அற்ற அடாவடியால்தான் சசி பெருமாள் உயிரிழந்தார்.
60 வயதை எட்டியவர், 175 அடி உயரத்துக்கு செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறிப் போகிற வரை யில் காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது?
5 மணி நேரத்துக்குமேல் கடும் வெயிலில் கோபுர உச்சியில் நிற்க ஏன் அவரை அனுமதித்தனர்?
நான்கு பக்கங்களிலும் கயிற்று ஏணிகளைக் கட்டி அவரை 2 மணிநேரத்துக்குள் கீழே இறங்கி வரச் செய்யாமல் ஏன் சாகவிட்டனர்? அவருடைய உயிரைக் காப்பாற்றுவதைவிட, இவர்களுக்கு இருந்த சட்டம் - ஒழுங்குப் பாதுகாப்பு கடமை வேறு என்னவாம்?
முன்னாள் முதல்வர் ம. பக்தவத்சலம் அவர்கள் 26.1.1965 அன்று ஒரு மணிநேரம் “இந்தி ஆட்சி மொழி எதிர்ப்பு மாணவப் போராளிகளை”ச் சந்திக்க மறுத்தது. தமிழகத்தைப் போராட்டக் களமாக - குருதிக் களமாக மாற்றியது போல - ஒரு சசி பெருமாளை வேண்டுமென்றே சாகவிட்ட - சாவுக்கு வழிவிட்ட தமிழக அரசு, மக்களின் மதுக்கடை ஒழிப்புப் போராட்டத்தைக் கண்டுகொள்ள மறுப்பது - தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளுவதே ஆகும்.
“முழு மதுவிலக்கே வேண்டும்” என்பதி லிருந்து நாம் எவரும் பின்வாங்கக் கூடாது.
சிறிதும் அமைதிக்குக் கேடு செய்யாமல் நாம் போராடுவதுதான் நமக்கு வலிமை வளர ஒரே வழியாகும்.
இலக்கக்கணக்கான மக்களும் மாணவர்களும் மாணவிகளும் - குறிப்பாகத் தாய்மார்களும் - “முழு மதுவிலக்கு வேண்டும்” என்று கோரிப் போராடினால், வெற்றி நம் பக்கமே!
மதுவிலக்குப் போராட்டம் அனைத்திந்திய அள வில் நடத்தப்பட்டால் தான், நாம் இங்கே பெறுகிற வெற்றி நிலைப்படும்; இல்லாவிட்டால் நிலைபெறாது என்பதை நாம் உணர்ச்சி வயப்படாமல் தெளிவுடன் சிந்திக்க வேண்டும் - உணர வேண்டும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதி 47 (Article) “மது மற்றும் போதைப் பொருள்கள் ஒழிப்புக்கு அரசு முயற்சிக்க வேண்டும்” என்று தெளிவாகக் கூறுகிறது.
இதை நாம் தமிழக மக்களுக்கு உணர்த்த வேண்டும்.
“முழு மதுவிக்கு வேண்டும்” என்று கோருகிற தனி ஆள், தனி ஒரு கட்சி, கட்சிகளின் கூட்டணி, இயக்கங்களின் கோரிக்கை எவற்றுக்கும் எவரும் - குறிப்பாகத் தமிழ்நாட்டு அரசினர் உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது.
இவற்றை மனத்தில் கொண்டு -
1. “தமிழ்நாட்டு அரசே! முழுமையான மதுவிலக் கை உடனே அறிவித்திடு” என்று தமிழக மக்கள் எல்லோரும் கோர வேண்டும். மதுவிலக்கை அரசு அறிவிக்கிற வரையில் தொடர்ந்து நாம் போராட வேண்டும்.
2. “இந்திய அரசே! இந்திய அரசே! இந்தியா முழு வதிலும் மதுவிலக்கை அமல்படுத்து! அமல்படுத்து!” எனக்கோரி நாம் போராட வேண்டும்.
“அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட் டத்தில் - அரசமைப்பு விதி 47-அய் நடைமுறைப் படுத்திட - கள், சாராயம், போதை தரும் பொருள்களை இந்திய அளவில் ஒழித்திட, அரசமைப்பில் “போதைப் பொருள்கள் ஒழிப்புச் சட்டத்தை” நிறைவேற்று! நிறைவேற்று!” என நாம் கோர வேண்டும்.
3. நாடாளுமன்றத்தில் - ஆளும் பாரதிய சனதாக் கட்சிச் சார்பில், அடுத்துவரும் தொடர் கூட்டத்தில், “போதைப் பொருள்கள் ஒழிப்புச் சட்டத்தை” முன் மொழிந்து நிறைவேற்றக் கோர வேண்டும்.
4. தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் - அடுத்துவரும் தொடர் கூட்டத்தில் போதைப் பொருள் கள் ஒழிப்பு மசோதாவை தனிநபர் மசோதாவாக முன்மொழிந்திட வேண்டும் என, நாம் வலியுறுத்திட வேண்டும்.
5. தமிழ்நாட்டு அரசு முழு மதுஒழிப்பை நிறை வேற்றினால், அதனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்யப் பெரிய அளவில் இந்திய அரசு நிதிப் பங்களிப்புச் செய்யவேண்டும் - எனத் தமிழக மக்கள் கோர வேண்டும்.
6. பிரதமர் மோடி 2013 வரையில் ஆட்சி செய்த குசராத்தில் - முழு மதுவிலக்கு இருப்பது உண்மை. ஆனால் அங்கு கள்ளச் சாராயம் ஆறாக ஓடுகிறது என்பதும் மாபெரும் உண்மை.
வெகுமக்களும் மக்கள் தலைவர்களும், அரசியல் கட்சிகளும், ஆளும் அதிகார வர்க்கத் தினரும், அச்சு, தொலைக்காட்சி, திரைத்துறை ஊடகங்களுமே கூட்டாக இந்தக் கேடான நிலை மைக்குக் காரணங்கள்.
7. மது - கள் - சாராயம் - போதைப் பொருள்கள் உயிருக்கு உலை வைப்பவை; ஒழுக்கத்தை உருக் குலைப்பவை என்பதையும், சூது ஆடுவது கேடானது என்பதையும், சூது ஆடுவதற்கும் பாலியல் தொழி லுக்கும் அரசு உரிமங்கள் கொடுப்பதும் கேடானவை என்பதை 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் - அனைத்து இந்தியாவிலும் தமிழகத்திலும் கட்டாயப் பாடங்களாகக் கற்பித்திட வழிவகை செய் யும்படி இந்திய அரசையும் தமிழக அரசையும் நாம் வற்புறுத்திக் கோரிட வேண்டும்.
இந்திய விடுதலைப் போராட்ட ஈ.கி., சசி பெருமாள் அவர்களின் 42 ஆண்டைய மது ஒழிப்புக் கோரிக்கை முழுமையாக நிறைவேற் றப்படுவது - நம் 7.5 கோடித் தமிழ் மக்களின் - 126 கோடி இந்திய மக்களின் ஒட்டுமொத்த நன்மைக்காகவே.
வென்றெடுப்போம் முழு மதுவிலக்கை!