vinayagar sathurthi rally

கடந்த ஜனவரி 18ஆம் தேதி இயக்குனர் வேலு பிரபாகரன் இயக்கத்தில் ‘கடவுள்-2’ திரைப்படத் தொடக்க விழாவில் சென்னை வடபழனியில் பேசிய இயக்குனர் பாரதி ராஜா, ‘விநாயகன் இறக்குமதி செய்யப்பட்ட கடவுள்’ என்று பேசினார். அதற்காக இந்து மக்கள் கட்சி காவல் நிலையத்தில் புகார் கூறி பிறகு உயர்நீதிமன்றத்திலும் மனு போட்டு உயர்நீதி மன்ற உத்தரவின்படி காவல்துறை பாரதி ராஜா மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. பாரதி ராஜா பேசியது ‘இந்து’க்களைப் புண்படுத்துகிறதாம். வரலாற்றைக் கூறுவதே மதத்தைப் புண்படுத்துவதாகி விடுமா?

  • கி.பி. 642ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் தமிழ் நாட்டிற்குள் விநாயகன் வழிபாடு நுழைந்தது. ‘வாதாபி’யை ஆண்ட சாளுக்கிய மன்னன் புலிகேசி மீது ‘வாதாபி’க்கு படை எடுத்துச் சென்ற பல்லவ மன்னர் படைத் தளபதி பரஞ்சோதியின் வெற்றிக்குப் பிறகு அவனால் அங்கிருந்து தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்ததுதான் ‘விநாயகன் சிலை’.
  • ‘விநாயகனை’ வைத்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அரசியல் ஊர்வலங்களை நடத்திய பாலகங்காதர திலகர் விநாயகர் வடநாட்டுக் கடவுள் என்றே எழுதினார். “மகாராஷ்டிராவை ஆட்சி செய்த ‘பேஷ்வா பிராமணர்’களின் குலதெய்வம் விநாயகன்” என்று, தான் நடத்தி வந்த ‘கேசரி’ பத்திரிகையில் எழுதியிருக்கிறார். (கேசரி, செப்.9, 1896)
  • ‘கிரக சூத்திரம்’ என்ற சமஸ்கிருத நூல் விநாயகனை வேண்டாத கடவுள் என்றும், ‘பீடிக்கப்பட்ட தெய்வம்’ என்றும் குறிப்பிடுகிறது. “விநாயகனால் பீடிக்கப்பட்டவனுக்கு ஆளத் தகுதியிருந்தும் ஆட்சி நடக்காது; மணம் புரியத் தகுதி இருந்தும் பெண்ணுக்கு மணமகன் கிடைக்க மாட்டான்; பிள்ளைப் பேறுக்குரிய பெண், பிள்ளை பெற மாட்டாள்; ஆசானுக்கு மாணவர்கள் கிடைக்க மாட்டார்கள்” என்று நீண்ட பட்டியலிடுகிறது அந்த சமஸ்கிருத நூல்.
  • கணபதியின் அடியார்கள் செய்யும் ‘கணயாகம்’ என்ற சடங்கை செய்பவன் சிரார்த்த விருந்தில் (இழவு விருந்தில்) இருந்து விலக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது மனு சாஸ்திரம். (அத்:3; சுலோகம் 164)
  • இப்போதும் ‘சங்கீதக் கச்சேரி’களில் ‘வாதாபி கணபதி’ என்று அழைக்கும் துதிப் பாடல்களைத் தான் பார்ப்பன இசைக் கலைஞர்களே பாடுகிறார்கள். எனவே அது வாதாபி கடவுள். தமிழ்நாட்டுக் கடவுள் அல்ல.
  • தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் கரிசல் நிலப் பகுதிகளில் தொடர்ச்சி யாக மழை பெய்யாவிட்டால் வெட்ட வெளியில் இருக்கும் ‘விநாயகன்’ சிலை மீது மிளகாய் வத்தலை அரைத்துப் பூசுவதும், சாணியைக் கொழு கொழு என்று கரைத்து சிலையின் தலையில் ஊற்றுவதும் சடங்காக நடக்கிறது. மழை வருவதற்கு விநாயகனைத் தண்டிக்க வேண்டும் என்பதே அந்த சடங்கு.
  • விநாயகன் சிலை ஊர்வலங்களில் என்ன நடக்கிறது? விநாயகன் சிலைகளின் தும்பிக்கையை உடைத்து வயிற்றில் காலைப் போட்டு மிதித்து கிரேன்களில் தூக்கி நிறுத்தி கடலுக்குள் வீசுகிறார்கள். தொலைக்காட்சிகளிலும் ஏடுகளிலும் இந்தப் படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

இதற்கெல்லாம் ‘மனம் புண்படாதவர்கள்’, விநாயகன் வடநாட்டுக் கடவுள் என்று சொல்லியதற்காக ஏன் துடிக்கிறார்கள்?

பாரதிராஜா பார்ப்பன ராஜாக்களை எதிர்க்கிறார்; காவிரி உரிமைக்குப் போராடுகிறார்; பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக வீதிக்கு வருகிறார்; இதுதான் பாரதிராஜா மீது இவர்களுக்குள்ள ஆத்திரம்.

காவல்துறை, பாரதிராஜா மீது வழக்குப் போடுவது இருக்கட்டும்; முன் பினை மறுக்கப்பட்ட எஸ்.வி. சேகரை முதலில் கைது செய்து காட்டட்டும்.

Pin It