இந்து முன்னணி அமைப்பாளர் கே. பக்தவத்சலம், சென்னை இந்து முன்னணி தலைமை அலுவலகத்திலிருந்து அளித்த பேட்டியில், ‘இந்த ஆண்டு விநாயகன் சிலை ஊர்வலம், அரசியல் முழக்கத்தை முன் வைத்து நடத்தப்படுகிறது’ என்று கூறியிருக்கிறார்.

“பக்தி இலக்கியத்தை பரப்புவோம்; போலி தமிழ் தேசியத்தை வீழ்த்துவோம்” - இதுதான் தமிழ்நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள விநாயகன் சிலைகளின் ஊர்வலங்களுக்கான முழக்கமாம்.

(The theme for this year is ‘Promote divine Tamil and Crack down on fake Tamil identity. - The Hindu Aug.29, 2019)

இவர்கள் வீழ்த்தப் போவது தமிழ் தேசியத்தையா அல்லது போலி தமிழ் தேசியத்தையா என்பது இங்கே பிரச்சினையல்ல.

இந்த ஊர்வலம் மதத்துக்கான ஊர்வலம் அல்ல; அரசியல் ஊர்வலம். அதுவும் பா.ஜ.க.வின் அரசியலுக்காக ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளுக்காக நடத்தப்படும் ஊர்வலம்.

ஏதோ ‘விநாயக சதுர்த்தி’க்கான மத ஊர்வலம் போலவும், மத ஊர்வலங்கள் நடத்துவதற்கான உரிமைகளை சட்டப்படி மறுக்க முடியாது என்பது போலவும் தமிழக அரசும், காவல் துறையும் இதற்கு அனுமதி வழங்குகிறது.

பதட்டங்களை உருவாக்கிவரும் இந்த ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த கடந்த பல ஆண்டுகளாக காவல் துறை விதித்த கட்டுப்பாடுகளும் இப்போது காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. நிறுவப்படும் விநாயகன் சிலை ஒவ்வொன்றுக்கும் காவல்துறை, தீயணைப்புத் துறை, மின்சாரத் துறை, பசுமைத் தீர்ப்பாயத்திடமிருந்து உரிய அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை காவல்துறையே நீர்த்துப் போகச் செய்து விட்டது. இந்த அனுமதிகளை காவல்துறையே பல்வேறு துறைகளிடம் பேசி சிலைகளை நிறுவ விரும்புவோரிடம் வழங்கும் திட்டத்தை அமுல்படுத்தியிருக்கிறது.

‘நாங்கள் நடத்துவது அரசியல் ஊர்வலம் தான்’ என்று வெளிப்படையாக அறிவித்த பிறகும் காவல்துறை, அதற்கு ஓடோடி உதவி செய்ய முன் வரலாமா?

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து இந்த  அரசியல் ஊர்வலத்துக்கு எதிர் வினையாக பெரியார் கைத்தடி ஊர்வலங்களை நடத்தி வந்தது.

இந்த ஆண்டு மக்களை பிளவுப்படுத்தும் வேத மதம் முன்னிறுத்தும் விநாயகன் சிலை அரசியல் ஊர்வலத்துக்கு மாற்றாக - மக்கள் சமத்துவத்துக்கான மார்க்கத்தை நிறுவிய புத்தரின் சிலையை முன் வைத்து ஊர்வலம் நடத்தத் திட்டமிட்டுள்ளது.

Pin It