வழக்கறிஞர் அ.அருள்மொழி - நேர்காணல் – தொடர்

பசுவின் புனிதம் பற்றிய ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரத்திற்கு காங்கிரசில் இருந்த பார்ப்பனர்களும் துணையாகவே நின்றார்கள். இந்துமத அடிப்படைவாதிகள் காங்கிரசு கட்சியில் இருந்தும், சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் என்ற பெயரிலும் அரசியல் சாசனக் கொள்கை வரைவுக் குழுவில் இடம் பெற்று, அவர்களால் ஆனமட்டும் போராடிப் பார்த்தார்கள். எதற்கு? பசுவைத் தேசிய அடையாளங்களில் ஒன்றாக வைத்து, பசுவைக் கொல்வது இந்தியாவில் விலக்கப்பட்ட செயல் என்று அறிவிப்பதற்கு. அது நிறைவேறவில்லை. அடுத்து அவர்கள் மேற்கொண்ட முயற்சி, ‘‘பசுவைக் கொல்லக்கூடாது’’ என்கிற ஆணையை அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைகள் என்னும் பகுதியில் சேர்ப்பதாகும். ஆனால் அவர்களால் முடிந்ததென்னவோ, அரசியல் சாசனத்தின் நான்காம் பகுதியான அரசுக்கான வழிகாட்டு நெறிமுறைகளின் உறுப்பு 48 (Article 48) இல் ஒரு அங்கமாகத்தான் சேர்க்க முடிந்தது. அதுவும் விவசாய வளர்ச்சி, பால் உற்பத்தி, கால்நடை வளம் (Modern Agriculture, Milk Production, Animal Husbandry) என்ற காரணங்களுக்காக, பசுவும் மற்ற பால் கொடுக்கும் விலங்குகளும் கொல்லப்படாமல் தடுக்க அரசு முயற்சியெடுக்க வேண்டும் என்று சேர்க்கப்பட்டதை அவர்களால் அதாவது இந்து மத அடிப்படைவாதிகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று பார்த்தோம். அதற்கு என்ன காரணம் என்பதைப் பார்ப்போம்.

அரசியல் சாசனத்தில் அடிப்படை உரிமைகள் எனும் மூன்றாம் பாகம் மிக வலிமை வாய்ந்தது. அதை நிறைவேற்றுவது அரசின் கடமை. அப்படி நிறைவேற்றத் தவறினால், உயர்நீதிமன்றத்திலோ, உச்சநீதிமன்றத்திலோ வழக்கு தொடுத்து ‘நீதிப்பேராணை’ மூலம் அந்த உரிமையை நிலை நிறுத்த முடியும். தெருவில் நடக்க, குளத்தில் குளிக்க, கோயிலில் நுழைய, பள்ளியில் படிக்க, வேலைவாய்ப்பைப் பெற, என எந்த இடத்திலும், இனத்தால், மொழியால், இடத்தால் ஆண் பெண் வேறுபாட்டால் யாருக்கும் உரிமையை மறுக்க முடியாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். சட்டத்தின் பாதுகாப்பு அனைவருக்கும் சமம் என்னும் கூறுகளும் அடிப்படை உரிமைகளில் உள்ளவை பேச்சுரிமை, கருத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை, சொத்து வாங்கும் உரிமை, வாழ்வுரிமை அமைப்பாகும் உரிமை என இவை அனைத்தும் அடிப்படை உரிமைகளே.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த உரிமைகளை உறுதிப்படுத்தும் மூன்றாம் பாகத்தில் பசுவைக் காப்பதும் கொல்லாமல் இருப்பதும் அடிப்படை உரிமைகளில் ஒன்று என்று சேர்க்க நினைப்பவர்கள் எத்தகைய மதவெறியர்களாக இருக்க வேண்டும். சரி, அரசியல் சாசனத்தின் நான்காம் பாகமான, அரசுக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் சேர்ப்பதால் என்ன பாதிப்பு? இந்தப் பிரிவுகள் அரசுக்கான வழிகாட்டும் நெறிகள்தான். (Directive principles of state policy) அரசு ஒரு கொள்கை முடிவை எடுப்பதற்கான வழிகாட்டி. அவ்வளவுதான். இந்தப் பிரிவில் சொல்லப்பட்டுள்ள எவ்வளவு உயர்ந்த கொள்கை நெறியையும், அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட முடியாது. அனைவருக்கும் கல்வி, சமஊதியம், வீடுகள் கட்டித்தருவது, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றுக்குத் திட்டம் வகுத்துச் செயல்படுவது ஒரு அரசின் கொள்கை முடிவு. அதை இப்படிச் செய்ய வேண்டும். இத்தனை நாட்களில் நிறைவேற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட முடியாது.

இந்து மத அடிப்படைவாதிகளான மேல் ஜாதித் தலைவர்கள் இவ்வளவு முயன்றும் மதரீதியான அடையாளமாக பசுவை முன்னிறுத்த முடியாமல், பொருளாதார முன்னேற்றம், விவசாய வளம், பால், சாணி உரம் என்றெல்லாம் அரசியல் சாசன நிர்ணய சபையில் புலம்பித் தள்ளியிருக்கிறார்கள். அவர்களை தங்கள் விவாதத்தால் எதிர்கொண்ட இஸ்லாமிய சமூகத் தலைவர்கள், நாங்கள் பசுக்கொலைத் தடையை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் ஏன் கொல்லக்கூடாது என்பதை வெளிப்படையாகக் கூறுங்கள். நீங்கள் கூறும் பொருளாதாரக் காரணங்கள் அனைத்து விலங்குகளுக்கும் பொருந்தும். முற்பகுதியில் விவசாய முன்னேற்றம் என்று கூறிவிட்டு பிற்பகுதியில் விலங்குகளைக் கொல்லக் கூடாது என்று கூறுவது பொருத்தமற்றது. ஏனெனில் விவசாயத்திற்கும், பாலுக்கும் பயனற்ற விலங்குகளே கொல்லப்படுகின்றன என்று வாதிட்டனர். உண்மையில் இந்துமத அடிப்படைவாதிகளின் கோரிக்கையினை பெரும்பான்மையான இந்து சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் ஆதரிக்கவில்லை.

மதச்சார்பற்ற அரசியல் சாசனத்தில், ஒரு மதத்தினர், அதிலும் சில பிரிவினர் வணங்கும் ஒரு விலங்கை மட்டும் பாதுகாக்க வேண்டிய தேசியச் சின்னமாக அரசியல் சாசனத்தில் சேர்ப்பது கேலிக்கூத்தாகிவிடும் என்ற கருத்தே ஓங்கி நின்றது. ஆனாலும், இந்துமத அடிப்படைவாதிகளின் விடாமுயற்சி அரசியல் சாசனத்தின் உறுப்பு 48இல் பசுவையும் மற்ற விலங்குகளையும் சேர்த்து அவற்றைப் பாதுகாக்க/கொல்லப்படுவதைத் தடுக்க அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்ற வடிவத்தில் சேர்க்கப்பட்டது. அதற்கு உடன்பட்டதையே பசு பக்தர்கள் ‘தியாகம்’ என்று குறிப்பிட்டார்கள்.

அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து ஆர்.எஸ்.எஸ் இன் தலைவர் கோல்வாக்கர் ஒரு தீவிர முயற்சியில் இறங்கினார். இப்போது தடை சொல்ல மகாத்மா காந்தி இல்லை. பிரதமர் நேரு ஆர்.எஸ்.எஸ். கோரிக்கையை ஏற்கமாட்டார் இருக்கவே இருக்கிறார் குடியரசுத்தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத். ஏற்கனவே தனக்கு ஆயிரக்கணக்கான கடிதங்கள் (பசுவை கொல்வதற்குத் தடை விதிக்கக் கோரி) வந்து கொண்டே இருக்கின்றன என்று காந்தியிடம் கூறியவர். எனவே அவரை வைத்தே தங்கள் வேலையை முடித்துக் கொள்ளலாம் என்று ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டது. மீண்டும் கடிதங்கள், கையெழுத்து இயக்கம் என்று பிரச்சாரம் செய்து, அந்தத் தாள்களை மாட்டுவண்டிகளில் ஏற்றிக் கொண்டு ஊர்வலமாகச் சென்று, ஜனாதிபதி பாபு ராஜேந்திர பிரசாத்திடம் கொடுத்தார்கள்.

இந்த செய்திகள் நம்முடைய கற்பனையல்ல. ஹொ.வே. சேஷாத்ரி என்பவர் எழுதிய சென்னை கேசவா; பதிப்பகம் 1989இல் வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ். ஆற்றும் அரும்பணிகள் என்ற நூல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதோ அந்தப்பதிவு.

பசு: போற்றுதலுக்குரிய சின்னம் - ஆர்.எஸ்.எஸ்.

யுகயுகமாக பாரதத்தின் தேசியச் சின்னமாக போற்றப்பட்டு வருவது பசு, சுதந்திரப் போராட்டத்திலும் கூட அது பிரிக்கப்பட முடியாதபடி அங்கம் வகித்தது.

பசு என்றால் இந்த தேசமே தலை வணங்குவது கண்ட ஹுமாயூன், அக்பர் போன்ற மொகலாயப் பேரரசர்கள் கூட பசுவதையைத் தடை செய்திருந்தார்கள். முஸ்லீம் ஆட்சி காலத்திலும் சரி, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் சரி, படையெடுத்து வந்தவர்களிடமிருந்து பசுவைக் காப்பதற்காக மக்கள் பெரிய பெரிய தியாகங்கள் செய்து வீர மரணம் எய்திய சம்பவங்கள் வரலாற்றின் பொன்னேடுகளாக மெய்சிலிர்க்கச் செய்கின்றன. அண்மைக் காலத்தில் சுதந்திரப் போராட்டத்தின் தானைத்தலைவர்களாக விளங்கிய லோகமான்ய திலகரும் மஹாத்மா காந்தியும் ஸ்வராஜ்யம் அடைவதில் பசுப்பாதுகாப்பு ஒரு ஆதாரமான அம்சம் என்று கருதினார்கள். சுதந்திர பாரதம் இயற்றுகின்ற முதல் சட்டம், பசுவதைத் தடைச் சட்டமாக இருக்க வேண்டும் என்று திலகர் அறிவித்தார். சுயராஜ்யத்தையும் விட பசுப்பாதுகாப்புக்குத் தலையாய இடமளித்தார் காந்திஜி. பசுவுக்கு ஒரு சிறு தீங்கு நேருவதைக் கூட சற்றும் சகித்துக் கொள்ள முடியாமல் கடுமையாக எதிர்த்தவர் டாக்டர் ஹெட்கேவார்.

நாடு சுதந்திரம் அடைந்த போது நாட்டின் அரசியல் சாஸனத்தில் ‘வழிகாட்டிக் கொள்கை’களில் ஒன்றாக பசுப்பாதுகாப்பைச் சட்ட நிபுணர்கள் அமைத்தார்கள். ஆனால் நாள் செல்லச் செல்ல, இது ஏட்டுச் சுரைக்காயாக நின்றுவிட்டது. மிக பயங்கரமான அளவில் மக்கள் வதைக்கப்பட்டு வருகின்றனர்.

‘பசுப்பாதுகாப்பு என்பது வெறும் பொருளாதாரப் பிரச்சினையல்ல, அது இந்த நாட்டின் பண்பாட்டிற்கு அளிக்கப்படும் அங்கீகாரம்: நமது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு அடையாளம் என்று சங்கத்தின் அகில பாரதீய பிரதிநிதிசபை 1952-ஆம் ஆண்டு தீர்மானமொன்றில் வலியுறுத்தியது. நாடு நெடுகிலும் உள்ள லட்சோப லட்சம் மக்களின் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் வகையில் ஒரு வெகுஜன இயக்கம் மீது நிர்ப்பந்தம் கொண்டு வருமாறு பிரதிநிதிச் சபை கூறியது.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் அறைகூவலுக்கு இணங்க நாடு முழுவதிலும் நூற்றுக்கணக்கான பொதுக்கூட்டங்கள்  நடைபெற்றன. 1952 கோபாஷ்டமி அன்று இந்த இயக்கம் துவங்கியது. அனேகமாக எல்லாக் கட்சிகளும் இதில் ஈடுபடுத்தப்பட்டன. இயக்கம் முழு வேகத்தில் நடைபெறலாயிற்று. இந்தக்கூட்டங்களில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார்கள். அரசுக்கு சமர்ப்பிக்கும் மகஜர்களில் கையொப்பமிட்டார்கள்; இவ்வாறு, பசுப்பாதுகாப்பு ஹிந்துக்களுடைய விஷயம் என்ற பொய் தகர்க்கப்பட்டது. உதாரணமாக, ஒரிஸ்ஸாவில் உள்ள கட்டக்கில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு மாநில ஆளுநர் சையத் ஃபசல்அலி தலைமை வகித்தார். அவர் பேசுகையில், பசு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்ல, அதற்கென்று ஒரு புனிதத் தன்மையும் உண்டு என்பதை வலியுறுத்தினார். இந்த இயக்கத்தின் விளைவாக, பூனா, துலியா (துளே), போபால், மொஹம்மதாபாத் போன்ற ஒரு சில நகராட்சி மன்றங்கள், தங்கள் நகராட்சி எல்லைக்குள் பசுவதை செய்வதைத் தடை செய்தன.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான டெல்லிவாசிகள் கலந்து கொண்ட பிரம்மாண்டமான கூட்டத்தில் குருஜி சொற்பொழிவாற்றினார், பாரத நாட்டின் அதி உன்னதமான தேசியத் தன்மானச் சின்னமாகிய பசுவை வதை செய்வதை அனுமதித்து வருகிற எந்த ஒரு அரசும் தன்னை சுயராஜ்ய ஆட்சி நடத்துவதாகச் சொல்லிக் கொள்ள முடியாது என்று குருஜி அறிவித்தார். நாமதாரி சீக்கியர்களின் குருவான பிரதாப்சிங் மஹராஜ் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். பாரதீய ஜனசங்கத்தின் தலைவரும் நாடாளுமன்றத்தின் தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவருமான டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி, அகில பாரதீய ஹிந்து மஹாசபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த பாரிஸ்டர் என்.ஸி.சட்டர்ஜி, பஞ்சாபின் ஆரியப்பிரதிநிதி சபைத் தலைவர் மஹாசய கிருஷ்ணா, கோ சேகவ சமாஜத்தின் செயலாளர் ஹர்தேவ் ஸஹாய் மற்றும் பலர் அன்றைய தினம் சொற்பொழிவாற்றினார்கள்.

நான்கே வாரங்களில் அத்தனை கையொப்பங்களும் சேகரிக்கப்பட்டன என்றும், அவை நேர்மையான விதத்தில் சேகரிக்கப்பட்டன என்றும் குருஜி அறிவித்த போது கரவொலி விண்ணை எட்டியது. சேகரிக்கப்பட்ட மொத்த கையொப்பங்கள் 1,75,39,813, தொடர்பு கொண்ட கிராமங்கள், 81,524, மறுதினம், லாலா ஹன்ஸ்ராஜ் குப்தா,  குருஜி ஆகியோர் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்தைச் சந்தித்து, பாரத அரசு பசுவதையைப் பரிபூரணமாகத் தடை செய்து சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரும் சின்னஞ்சிறு மகஜர் ஒன்றை அளித்தனர். இதற்காக நடத்தப்பட்ட இயக்கம் பற்றிய விவரங்களையும் எடுத்துக்கூறினார்கள். பசுப்பாதுகாப்புக்காக அரசு மேற்கொள்ளக் கூடிய எந்த ஒரு திட்டத்திலும் பரிபூரண ஒத்துழைப்பு நல்க சித்தமாக இருப்பதாக  குருஜி குடியரசுத் தலைவரிடம் உறுதிமொழி அளித்தார்.

இப்படி ஒரு புறம் ஆர்.எஸ்.எஸ்காரர்களின் பசுப்போராட்டம் நடந்து கொண்டிருக்க, காங்கிரசில் இருந்த பசு பக்தர்கள் சும்மா இருப்பார்களா? காங்கிரஸ் ஆட்சியில் இருந்த மாநிலங்களில் எப்படியாவது ‘பசுவை மட்டும் கொல்லாதே’ என்று சட்டம் இயற்ற முயற்சி செய்தார்கள். அதன்படி சட்டமியற்றப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. 1958ஆம் ஆண்டில் தமிழ்நாட்டு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு 28.4.1958 அன்று ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று, 7.5.1958 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டு, 1.07.1959 முதல் நடைமுறைக்கு வந்த அந்த சட்டத்தின் பெயர். "தமிழ்நாடு விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 1958.

The Tamilnadu Animal Preservation Act 1958. இந்த சட்டமாவது பசு பக்தர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்ததா என்றால் இல்லை. இல்லவே இல்லை. ஏனெனில் இந்த சட்டமும் ‘விலங்குகள்’ அனைத்திற்குமான பாதுகாப்புச் சட்டம் என்பதே நான் உயர்ந்தவன், என் மாடு மட்டுமே புனிதமானது என்பதுதானே இந்து மதத்தின் அடிப்படை அவர்கள் எப்படி மற்ற விலங்குகளையும் சேர்த்த ஒரு சட்டத்தை ‘பசுப்பாதுகாப்புச்’ சட்டமாக ஏற்றுக் கொள்வார்கள். மேலும் பசுவோ, மற்ற வீட்டு விலங்கோ 10 வயது ஆகிவிட்டாலோ, ஊனமாகிவிட்டாலோ உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தாலோ, அதைக் கொல்வதற்கு உரிய அனுமதி பெற்று அவற்றை வெட்டலாம் என்று இச்சட்டம் அனுமதி அளித்தது.

இந்த சட்டத்திலும் பசுவுக்குத் தனி இடம் இல்லை. இந்தச் சட்டத்தை நிறைவேற்றியவர் அப்போது தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த பச்சைத் தமிழர் காமராசர் அவர்கள். பசு பக்திப் பார்ப்பனர்களுக்கு காமராசர் அவர்கள் மீது வெறுப்பும் கோபமும் உண்டானதன் காரணங்களில் இது முதன்மையானது. அச்சட்டத்தை மீறுபவர்களுக்கு 1000 ரூபாய் வரை அபராதமும், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் வழங்கப்படும் என்றும் தண்டனை வரையறுக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பசுபக்தர்கள் இந்திய அளவில் ஒரு சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று விடாது முயற்சி செய்த அதே காலகட்டத்தில் இந்தியாவில் விலங்குகள் மீது அக்கறை செலுத்தும் அமைப்புகள் செயல்படத் தொடங்கின. அவர்கள் விலங்கு நலவாரியம் ஒன்று அமைக்க வேண்டும் என்று கோரினர். அவர்களுடைய விடாமுயற்சியால் 1960ஆம் ஆண்டு சட்ட எண் 59 ஆக இந்திய அரசு ஒரு முழுமையான சட்டத்தைக் கொண்டு வந்தது. விலங்குகள் பராமரிப்பு, பாதுகாப்பு, பரிசோதனைக்குப் பயன்படுத்துவது, காட்சி விலங்காகப் பயன்படுத்துவது, விலங்குகளைத் துன்புறுத்துவது, பலிெகாடுப்பது ஆகிய அனைத்துவிதமான செயல்பாடுகளையும் அவற்றுக்கான அனுமதி, தடை, விதிவிலக்கு, குற்றம் தண்டனை வழங்கும் முறை என விளக்கமான தனித்தனிப் பிரிவுகளில் வைத்து அதற்கான விதிமுறைகளையும் வெளியிட்டது அந்த சட்டம் 59/1960.

ஆனால்...அந்தோ இந்துமத அடிப்படைவாதிகளுக்கு மீண்டும் தோல்வி. இந்திய அரசின் இந்த சட்டம் விலங்குகளை துன்புறுத்துவதைத் தடுக்கும் சட்டம் 1960 (சட்டம் 59/1960) என்று பெயர் பெற்றது. (THE PREVENTION OF CRUELTIES TO ANIMALS ACT 1960. (ACT 59 OF 1960) மீண்டும் "விலங்குகள்" பாதுகாப்புதானா? பசுப்பாதுகாப்பு இல்லையா? என்று ஆர்.எஸ்.எஸ் கேட்டது. இந்த 1960ஆம் ஆண்டு சட்டப்படிதான் ‘விலங்கு நல வாரியம்’ (Animal welfare Board) அமைக்கப்பட்டது. இந்த சட்டத்தின் அய்ந்தாம் பாகத்தில்தான் விலங்குகளை பயிற்றுவித்து பொதுமக்கள் முன்னிலையில் காட்சிப்படுத்துவது பற்றிய விதிமுறைகள் இடம் பெற்றன. அந்தப் பிரிவுகளுக்குள்தான் ஒரு திருத்தம் செய்யப்பட்டு, மாடுபிடிக்கும் விளையாட்டான ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது. விலங்குகள் துன்புறுத்தப்பட்டால் அந்த விளையாட்டைத் தடை செய்யும் அதிகாரத்தையும் நீதிமன்றங்களுக்கு இந்த சட்டம் வழங்கியது. ஆயிரம் இருந்தும், ‘‘பசுமாடு மட்டும் புனிதமானது எக்காரணத்தினாலும் அதைக் கொல்லக் கூடாது’’ என்ற இந்துப் பார்ப்பன, உயர் சாதிக்கான கோரிக்கைக்கு அந்த சட்டம் இடம் கொடுக்கவில்லை.

எத்தனையோ விதமான மதரீதியான வேண்டுகோள்களை ஏற்றுக் கொண்ட இந்திய அரசும் குறிப்பாக நாட்டின் அடிப்படை சட்டங்களை வகுத்த அண்ணல் அம்பேத்கர், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு, மற்றும் பல அரசியல் தலைவர்கள் இந்த பசுப்புனிதம் பசுவதைத்தடை போன்றவற்றை ஏற்க மறுத்து, அதில் உறுதியாக நின்றார்கள். காரணம் இப்படி ஒரு சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்திவிட்டால் இறைச்சி உணவு உண்ண யாரை வேண்டுமானாலும் பசுப்பாதுகாப்பு என்ற பெயரால் துன்புறுத்த முடியும் பசுவின் பேரால் யாரை வேண்டுமானால் கொல்ல முடியும். அந்த அதிகாரத்தை அளித்து எளிய மக்களின் வன்மத்தைத் தூண்டிவிட்டு தங்கள் சித்தாந்தக் கொலைகளை நிகழ்த்துவதுதான் ஆர்.எஸ்.எஸ்.இன் நோக்கம் என்று அந்தத்தலைவர்கள் உறுதியாகக் கருதினார்கள்.

அந்த அச்சம் எவ்வளவு சரியானது என்பதை ஆர்.எஸ்.எஸ்.இன் அடுத்தடுத்த வன்முறைத் தாக்குதல்கள் நிரூபித்தன. அதன் உச்சகட்டம் 1966ஆம் ஆண்டில் டெல்லியில் நடத்திய கலவரமாகும். அந்த காலகட்டத்தில் இந்தியாவின் பிரதமர் இந்திராகாந்தி அவர்களும், அகில இந்திய காங்கிரசு கட்சியின் தலைவராக பச்சைத்தமிழர் காமராசர் அவர்களும் இருந்தார்கள். நாடாளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்ட அதிகார வலிமைமிக்க ஆளுங்கட்சியின் தலைவராக காமராசர் இருந்தார். (இப்போது அதே இடத்தில் அமித்ஷா இருக்கிறார்) ‘பசுவதைத் தடுப்பு’க்காக ஒரு தனிச்சட்டம் போட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். கோரியதை கடுமையான, கண்டனத்துடன் நிராகரித்தார் காமராசர்.

மாட்டுக்கறிக்கே தடைவிதிக்க வேண்டும் என்று கேட்பது முட்டாள்தனம் என்றும் மற்றவர் என்ன சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்று சொல்ல நீ யார்? என்று கேட்டார். அவரை எதிர்த்து அந்த சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றாது என்பதைப் புரிந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ் 1966 நவம்பர் மாதத்தில் டெல்லியில் பெரும் கலவரத்தை நடத்தியது. மதத்திற்கான போராட்டம் என்று நிர்வாண சாதுக்களை இறக்கியது. அதன் தொடர்ச்சியாக நவம்பர் 7ஆம் தேதி இரவு காமராசர் டெல்லியில் வசித்து வந்த வீட்டிற்கு சாதுக்கள் கூட்டம் தீ வைத்தது. அந்நேரத்தில் விழித்திருந்த காமராசரின் உதவியாளர் காமராசரை அழைத்துக் கொண்டு பின்வாசல் வழியாக வெளியேறியதால் காமராசர் உயிர்பிைழத்தார் இல்லையேல் மாட்டுக்கறியின் பெயரால் நடந்த படுகொலையில் முகமது அக்லக்கிற்குப் பதிலாக அல்லது முன்பாக காமராசர் அவர்கள் பெயர் சேர்ந்திருக்கும்.

இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு முயற்சிகளில் தோல்வியடைந்த ஆர்.எஸ்.எஸ் தனது சித்தாந்தவாதிகளை வைத்து அனைத்து அரசியல் இயக்கங்களிலும் ஊடுருவியது. பல்வேறு அமைப்புகளை வைத்து அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுத்தது. அதே நேரத்தில் தனது அரசியல் அணுகுமுறையால் பிரதமர் இந்திராகாந்தி அறிவித்த அவசர நிலை அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய காந்தியவாதிகளோடும், இடதுசாரிகளோடும் சேர்ந்து கொண்டு தேர்தலைச் சந்தித்தது. இந்திராகாந்தியின் தேர்தல் தோல்விக்குப் பிறகு அமைந்த ஜனதா ஆட்சியில் முக்கியமான துறைகளின் அமைச்சர்களாக வாஜ்பேயியும் அத்வானியும் சேர்ந்து கொண்டார்கள். தங்கள் திட்டத்தை சாதிக்க தங்களுடன் எவ்வளவோ முரண்பாடுகள் கொண்ட இயக்கங்களுடனும், கட்சிகளுடன் சேர்ந்து கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்.இன் அணுகுமுறைக்கு அடுத்த வாய்ப்பு வி.பி.சிங் அமைச்சரவையில் இணைந்து அமைச்சர் பதவிகளைப் பெற்றதில் மேலும் முன்னேறியது.

தங்கள் சனாதனக் கொள்கையை நிறைவேற்ற என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஒரு புறம், உயர்ந்த ஜனநாயகக் கொள்கைகளைக் கொண்டிருந்தாலும் தலைவர்களின் உறுதியற்ற தன்மையாலும், சுயநலத்திற்காக கொள்கையைப் பின்னுக்குத் தள்ளிய காங்கிரசும் அதுபோன்ற மாநிலக் கட்சிகளும் மறுபுறம். இவற்றுக்கிடையில் இந்துமத அடிப்படை வாதத்தை உள்ளத்தில் தாங்கிய பலர் நீதித்துறையில் முன்னேறி உயர்நீதிமன்றங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் நீதிபதிகளாக அமர்ந்தார்கள். அதன்பின் நீதிமன்றப் போக்கு பெரும்பாலும் இந்து சனாதனவாதிகளுக்கு ஆதரவாகவே அமைந்தது.

அந்த நிலை படிப்படியாக உருவானது. பசுவை கொல்லக்கூடாது என சட்டம் இயற்ற இந்திய அரசையோ, மாநில அரசையோ வலியுறுத்தக் கேட்டு நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இது முற்கால கட்டம். சில மாநிலங்களில் பசுவதைத் தடுப்பும் விலங்குப் பாதுகாப்பும் என்று சட்டங்கள் உருவான போது, பசுவை கொல்லக்கூடாது என்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இது இரண்டாம் கட்டம். மாடுகள் குறிப்பாக பசுக்கள் கடத்திச் செல்லப்படுவதாகவும், துன்புறுத்தப்படுவதாகவும் கூறி தொடரப்படும் வழக்குகளில் அரசுக்கு அறிவுரை கூறுகிறோம்’ என்ற அடிப்படையில் தீர்ப்புகளை வழங்குவது மூன்றாம் கட்டம்.

அந்தத் தீர்ப்புகளை ஆதாரமாகக் கொண்டு அரசு புதிய சட்டங்களை இயற்றுவதும், அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால், அதில் தலையிட முடியாது என்று நீதிமன்றம் மறுப்பது நான்காம் நிலை.

கடந்த பத்தாண்டுகளாக நமது பல உரிமைகளை இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தில் பறிகொடுத்துக் கொண்டே இருக்கிறோம்.

அதன் முக்கியமான பகுதிதான் நேபாளத்திற்கு மாடுகள் கடத்திச் செல்லப்பட்டு பலி கொடுக்கப்படுவதைத் தடுப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அந்த வழக்கின் தீர்ப்பில் மாடுகள் விற்பனையை ஒழுங்குபடுத்த உரிய சட்ட விதிகளை ஏற்படுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்திரவிட்டதும், அந்தத் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவை ஆளும் பி.ஜே.பி. அரசு வெளியிட்ட மாடு விற்பனை ஒழுங்குமுறை விற்பனை விதிகளுமாகும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் எழுந்த எதிர்ப்பினாலும், மாடுகள் விற்பனை குறைந்ததால் ஏற்பட்ட வருமான இழப்பும் அந்த விதிகளை மாற்றச் செய்துவிட்டன.

ஆனால் பி.ஜே.பி.யின் ஆட்சியில் உள்ள ஹரியானா மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பசுக்கொலை தடைசெய்யப்பட்டு, மாட்டிறைச்சியை வைத்திருப்பதே குற்றம் என்று ஆக்கப்பட்டுவிட்டது. அதற்குத் தண்டனையாக ஏழாண்டுகள், பத்தாண்டுகள் சிறைத்தண்டனை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்திற்கும் மேலாக இதுவரை நூற்றுக்கணக்கான இசுலாமியர் மற்றும் தலித் மக்கள் மாட்டுக் கறி வைத்திருந்ததாகவும், மாட்டைக் கொல்ல எடுத்துச் சென்றதாகவும், படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இந்தியா இன்னொரு விடுதலைப் போரை நோக்கி நகர்கிறது.

நேர்காணல் தொடரும்

Pin It