“இந்துத்துவத்தை எதிர்க்கிறோம்; இந்து மதத்துக்கு நாங்கள் எதிரிகள் அல்ல; பெண்ணுரிமையை ஏற்கிறோம்; ஆனால் பெண்களுக்கு சமத்துவத்தை மறுக்கும் மதங்களை எதிர்க்க மாட்டோம்” என்பதுதான் இங்கே பொதுவான முழக்கமாகவே இருந்து வருகிறது.

அரை நூற்றாண்டு காலமாக சபரிமலை அய்யப்பன் கோயில் ‘தீட்டாகிறார்கள்’ என்ற காரணத்துக்காக பெண்களில் கோயில் வழிபாட்டு உரிமைக்குப் போடப்பட்டிருந்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. ஆனாலும் அய்யப்பன் கோயிலின் பார்ப்பன அர்ச்சகர்களான தந்திரிகள், கேரள அரசை மிரட்டி வருகிறார்கள். கேரள அரசு தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு போட்டால்தான் அரசு பிரதிநிதிகளோடு பேச்சுவார்த்தை நடத்துவோம் என்கிறார்கள். ‘நாயர் சொசைட்டி’ என்ற உயர்ஜாதியினரின் அமைப்பும் பந்தளம் மன்னர் குடும்பமும் தீர்ப்புக்கு எதிராக ஆட்சியை மிரட்டுகிறது.

கேரள காங்கிரஸ்காரர்களும் பா.ஜ.க.வின ரோடு கைகோர்த்துக் கொண்டு பெண்கள் உரிமைக்கு எதிராகப் போராடுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ்.சும் பெண்களுக்கு எதிராகவே பேசுகிறது. பெண்களையே இன்னும் ‘சுயம்சேவக்குள்ளாக’ அங்கீகரிக்காமல் ஆர்.எஸ்.எஸ்.இல் உறுப்பினராகத் தடை செய்து வைத்திருக்கும் அமைப்பிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்? வேடிக்கை என்னவென்றால் கேரளாவில் பா.ஜ.க. நாளிதழான ஜென்ம பூமியில் ஆர்.எஸ்.எஸ். உயர்மட்ட சிந்தனைனக் குழுவான ‘பாரதிய விச்சார கேந்திரம்’ என்ற அமைப்பில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் ஆர். சஞ்சய்யன் என்பவர் உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று கட்டுரை தீட்டியுள்ளார்.

அனைத்து வயது பெண்களையும் அய்யப்பன் கோயிலில் அனுமதிக்கக் கோரி ஆர்.எஸ்.எஸ். தலைவர்களே 2006ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள் என்று கேரள அமைச்சர் சுரேந்திரன் கூறியிருக்கிறார்.

இந்துத்துவா சக்திகள் கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் பெண்களைத் திரட்டி, உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துப் போராட வைக்கிறது. மதபோதையிலும் கடவுள் போதையிலும் மூழ்கிக் கிடக்கும் பெண்களில் பெரும் பகுதியினர் தங்கள் அடிமைத்தனம் மதத்தின் பெயரால் வரும்போது அடி பணிந்து பயபக்தியோடு ஏற்கத் தயாராகவே இருக்கிறார்கள். பெண்களுக்கான உரிமை யானாலும் விடுதலையானாலும் அது ஆண்கள் ஆதிக்கத்தில் மட்டுமே இருக்கிறது என்று பெண்ணுரிமை எதிர்ப்புக்கான எல்லைகளை சுருக்கிக் கொள்ளவே பல பெண்ணுரிமையாளர்கள் விரும்புகிறார்கள். ஜாதியமைப்பும் அதை நிலைப்படுத்தி வரும் மதங்களும் அதன் வழியாகத் திணிக்கப்படும் சடங்குகளும் நம்பிக்கைகளும் பெண்ணடிமை யின் பண்பாடுகளாக இருப்பதை சிந்திக்க மறுக்கிறார்கள். மத எதிர்ப்பு சடங்குகள் எதிர்ப்புகளிலிருந்து விடுவித்துக் கொள்ளாத எந்தப் பெண்ணும் முழுமையான உரிமைப் பெண்ணாகவோ, அல்லது விடுதலைப் பெண்ணாகவோ முடியாது. சமூகம் இந்த மதப் பண்பாடுகள் வழியாக பெண்களுக்கான அடிமை ஒழுக்கத்தை நல்லொழுக்கமாகவும் பொது ஒழுக்கமாகவும் கட்டமைத்திருக்கிறது.

“இந்துத்துவத்தை எதிர்க்கிறோம் இந்து மதத்துக்கு நாங்கள் எதிரிகள் அல்ல; பெண்ணுரிமையை ஏற்கிறோம்; ஆனால் பெண்களுக்கு சமத்துவத்தை மறுக்கும் மதங்களை எதிர்க்க மாட்டோம்” என்பது தான் இங்கே பொதுவான முழக்கமாகவே இருந்து வருகிறது.

வரலாற்றைக் கூர்ந்து நோக்கினால் பெண்களுக்கான ஒவ்வொரு உரிமையும் மதத்தின் பிடியிலிருந்தே மீட்டெடுக்கப்பட் டிருக்கின்றன என்ற உண்மை புரிய வரும்.

• இந்து சமூகம் கணவன் இறந்து எரியூட்டப்படும் நெருப்பில் மனைவியை உயிருடன் எரிக்கும் ‘சதி’ எனும் கொடுமையை ஒழிக்க சட்டம் போடும்போது பார்ப்பனர்களும் வைதீகர்களும் எதிர்க்கவே செய்தனர். 1829ஆம் ஆண்டு வில்லியம் பெண்டிங், இந்தக் கொடுமையை சட்டப்படி ஒழித்தாலும் சட்டத்தை மீறி ‘சதி’ நடந்து கொண்டுதான் இருந்தது.

• பெண்ணாகப் பிறந்த குழந்தையைக் கொல்லும் ‘பெண் சிசுக் கொலை’ - மதம் கட்டமைத்த கொடுமைதான் இன்று வரை அது தொடரவே செய்கிறது. 1870இல் தடைச் சட்டம் வந்தது. ஆனாலும் பெண் குழந்தைகள் மீதான வெறுப்பு மட்டுமல்ல; பெண் பக்தைகள் என்றாலும் ‘தீட்டுக் குரியவர்கள்’ என்று இன்று வரை அவமதிக்கப்படுகிறார்கள்.

• 1855இல் கிரான்ட் என்ற பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் இந்தியாவுக்கான ஆலோசனைக் குழுவில் இந்து விதவைகள் மறுமணம் என்ற மசோதாவை அறிமுகப்படுத்தினார். அப்போதும் பார்ப்பனர்களும் வைதீகத்தில் ஊறிய பழமைவாதிகளும் இந்து பழக்க வழக்கங்களில் கிறிஸ்தவர்கள் தலையிடுகிறார்கள் என்று கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசுக்கு எதிர்ப்பு மனுக்களை அனுப்பினர். 1889இல் ஜி.சுப்ரமணிய அய்யர் தன்னுடைய விதவை மகள் சிவப்பிரயாம்பாள் என்பவருக்கு மறுமணம் செய்து வைத்தார். அதற்காகப் பார்ப்பனர்கள் ஒன்று கூடி அவரை சமூகத்திலிருந்து ‘ஜாதி நீக்கம்’ செய்து வைத்தனர்.

• குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் ‘பால்ய விவாகம்’ என்ற கொடுமையை ‘வர்ணக் கலப்பு’ ஏற்பட்டுவிடாமல் தடுக்க பார்ப்பனர்கள் சமூகத்தில் திணித்தனர். 1924இல் சென்னை மாகாண சட்ட ஆலோசனைக் குழு வழியாக பால்ய விவாக எதிர்ப்பு மசோதா கொண்டு வரப்பட்டது. அப்போதும் பார்ப்பனர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். விதவை மறுமணச் சட்டம் வந்தவுடன் பணக்காரக் குடும்பத்து ‘விதவை’ சிறுமிகளை ஏழைக் குடும்பத்து சிறுவர்கள் (ஒரே ஜாதிக்குள்) திருமணம் செய்ய முன் வந்தனர். ஏழை குடும்பத்து விதவைகள் நிலையோ மிக மோசமானது. எவரும் திருமணம் செய்ய முன் வரவில்லை. அதற்குப் பிறகு திருணமான சிறுவன் தொடக்கப் பள்ளியில் சேருவற்கு தடைவிதிக்கப்பட்டது. இந்து மதப் பழக்கங்களில் கிறிஸ்தவர்கள் தலையிடுகிறார்கள் என்றே அப்போதும் பார்ப்பனர்கள் கூக்குரலிட்டார்கள். குழந்தைகள் திருமணத்தைத் தடுப்பது இயற்கைக்கு எதிரானது என்று 1915இல் சென்னை மகாஜனசபை என்ற அமைப்பு அரசுக்கு கடிதம் எழுதியது. இது குறித்து மக்களிடம் கருத்து கேட்பதே முட்டாள்தனம் என்று அக்கடிதம் கூறியது.

• இந்து மதத்தைச் சார்ந்த ஆணுக்கு 15 வயதும், பெண்ணுக்கு 12 வயதும் திருமணத்துக்கு உகந்த வயது என்று 1927இல் சென்னை மாகாண சட்டசபையில் மசோதா கொண்டு வரப்பட்டபோது கடும் எதிர்ப்புகள் வந்தன. இந்த மசோதாவுக்கு காரணமாக இருந்தவர் சாரதா.

• பெண்களுக்கு கோயில் சேவை என்ற பெயரில் தேவதாசிகளாக்கும் கொடுமையை ஒழிக்கும் மசோதாவும் பார்ப்பனர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மசோதாவைக் கொண்டு வந்ததில் முனைப்புக் காட்டினார். பெரியார் ஆதரித்தார்; சத்தியமூர்த்தி போன்ற தேசிய பார்ப்பனர்கள் எதிர்த்தார்கள். உண்மையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு முன்பாகவே 1912லேயே மானக்ஜி தாதாபாய் மற்றும் முதோகர் என்பவர்கள் இணைந்து இந்தக் கொடுமைக்கு எதிராக 3 மசோதாக்களைக் கொண்டு வந்தனர். அப்போது இந்திய அரசு அதில் ஆர்வம் காட்டவில்லை. 1927லிருந்து முத்துலட்சுமி ரெட்டி போராட்டம் தொடங்கியது. தென்னகத்துக்கு சுற்றுப் பயணம் வந்த காந்தியும் தேவதாசி முறைக்கு எதிர்ப்பாகப் பேசியும்கூட பார்ப்பனர்கள் பணியவில்லை. இந்தியா ‘சுதந்திரம்’ பெற்ற பிறகு 1947ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி பி.பாலசுப்ரமணியம் என்பவரால் சென்னை மாகாண சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம்தான் தேவதாசி முறையை முடிவுக்குக் கொண்டு வந்தது.

அதே மதவெறி தான் 2018ஆம் ஆண்டிலும் பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் நுழைவதை எதிர்க்கிறது.

பெண்களுக்கான உரிமைப் போராட்டம் மதவாதம் - பார்ப்பனிய எதிர்ப்போடு நடத்தப்பட வேண்டிய அவசியத்தையே வரலாறு உணர்த்துகிறது.

பெண்கள் அமைப்புகள் - முற்போக்கு அமைப்புகள் - இந்தப் பிரச்சினையில் மவுனத்தை உடைத்து பெண்களுக்கு ஆதரவாகவும் வைதீக இந்து மதத்துக்கு எதிராகவும் வெளியே வரவேண்டும்.

Pin It