தோழர் திருமுருகன் காந்தி அவர்களுக்கு,

நான் பாரதி எழுதுகிறேன்.‘அமெரிக்கத் தூதரகம் முற்றுகை ஏன்?’ எனும் தலைப்பில், கீற்று இணையத்தில் உணர்வாளர் ஒருவரின் வினா ஒன்றுக்கு விடை தரும் வகையில் நீங்கள் எழுதிய மார்ச் 13 ஆம் தேதியிட்ட கட்டுரை கண்டேன். அது குறித்து உங்களிடம் சிலவற்றைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். கட்டுரையின் தொடக்கமாக நீங்கள் எழுப்பும் மையமான இரு வினாக்கள்:

“இந்தியாவிடம் கோரிக்கை வைக்கப் போகிறோமா? அல்லது இந்தியாவைக் குற்றவாளியாக்கப் போகிறோமா?”

“இந்தியாவை அம்பலப்படுத்துகிறோம் என்றால் யாரிடம் அம்பலப்படுத்துகிறோம்? இந்தியர்களிடமா? தமிழர்களிடமா? சர்வதேசத்திடமா?”

இந்த இரு மையமான வினாக்களில் இரண்டாம் வினா குறித்த தெளிவே ஈழப் போராட்டத்துக்கு முதன்மையானதும் அடிப்படையானதும் எனக் கருதுகிறேன். இந்தியாவை அம்பலப்படுத்தியே ஆக வேண்டும். அதுவும் முதன்மையாகத் தமிழீழ மக்களிடம் அம்பலப்படுத்தியாக வேண்டும்.. இந்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் சர்வதேசத்தவர்க்கும் என்கிற உங்கள் பட்டியலில் தமிழீழத் தமிழர்கள் இடம்பெறாமல் போய் விட்டனர். தமிழகம், இந்தியா, சர்வதேசம் என மூன்று தளங்களில் இது செய்யப்படுதல் அவசியம் என நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். மூன்று தளங்கள் அல்ல, நான்கு தளங்கள், இவற்றில் தமிழீழமே வரிசையில் முதல் இடத்துக்குரியது.

manmohan rajapakse 460

இந்தியா தமிழீழ விடுதலைக்கு எதிராக சிங்களப் பேரினவாதத்துக்கு முப்பது ஆண்டுகளாய்த் துணை செய்கிறது, தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கிறது. இதை வெறும் கோட்பாட்டளவில் வெளிப்படுத்திக் கொண்டிருப்பது போதாது. ஈழப் போராட்டம் சர்வதேசத் தளத்துக்கு அவ்வளவாக வந்திராத போதும், பெருமளவில் வரத் தொடங்கிய போதும் இந்தியா எப்படியெல்லாம் சிங்களத்துக்குப் பக்கபலமாய் நின்றது, இன்று அப்போராட்டம் சர்வதேசத் தளத்துக்கு வந்து விட்ட 2009 க்குப் பிறகு எவ்வகையிலெல்லாம் துணை நிற்கிறது என்பதையும் முதலில் ஈழ மக்களுக்கு நாம் உணர்த்தியாக வேண்டும். இதுவே நமது முதல் கடமை.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் களம் தமிழீழமே! தமிழீழ மக்கள்தான் தங்கள் விடுதலையைப் போராடி வெல்ல வேண்டும். நாம் அவர்களுக்குத் துணை செய்ய முடியுமே தவிர, அவர்களுக்கு மாற்றாக முடியாது.. இந்த அடிப்படையிலிருந்துதான் நாம் எதையும் காண வேண்டும் எனக் கருதுகிறேன்.

தமிழீழ மக்கள் போராடுவதற்குத் துணையாக நாம் சிங்களத்தைத் தனிமைப்படுத்த வேண்டும். முதலில் சிங்களத்தின் இனக்கொலைக் குற்றத்தை நிறுவ வேண்டும், அதில் இந்தியாவின் பங்கை நிறுவ வேண்டும், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பங்கை நிறுவ வேண்டும். இறுதியாக ஐநாவின் பங்கை நிறுவ வேண்டும் . இந்த வரிசைதான் நட்பாற்றல்களை ஒருங்கிணைக்கும், பகையாற்றல்களைச் சிதறடிக்கும், அவர்களுக்குள் பிளவேற்படுத்தும். சிங்களத்தைத் தனிமைப்படுத்தும் போதுதான் தமிழீழ மக்கள் போராடுவதற்கான சனநாயக வெளி முழுவதுமாய்த் திறக்கும்.

“இந்தியாவிடம் கோரிக்கை வைக்கப் போகிறோமா அல்லது இந்தியாவைக் குற்றவாளியாக்கப் போகிறோமா?” என்று கேட்கிறீர்கள். அதாவது கோரிக்கை வைத்தால் அவர்களை குற்றவாளியாக்க முடியாது; குற்றவாளியாக்க வேண்டுமென்றால் அவர்களிடம் கோரிக்கையே வைக்கக் கூடாது என்பதே இதன் பொருள். கடந்த 2008-09 காலக்கட்டத்தில், போரை நிறுத்து என்று போரை நடத்திக் கொண்டிருந்த இந்தியாவைக் கேட்டோம்.

தடா, பொடா போன்ற அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுமாறு இந்தியாவை வலியுறுத்தினோம். மூவர் தூக்கை ரத்து செய்க என்று இந்தியாவிடம்தான் கோரிக்கை வைத்தோம். கூடங்குளம் அணுஉலையை இழுத்து மூடு என்றும், மீத்தேன் திட்டத்தை ரத்து செய்க என்றும் நாம் கோரிக்கை வைத்ததும் வைப்பதும் இந்தியாவிடம்தான். ஏன், தற்போது காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகம் அணைகட்டுவதைத் தடுத்து நிறுத்த நாம் கோருவது ஏறக்குறைய 40 ஆண்டுகளாய்த் தமிழகத்துக்கு எதிராகக் கர்நாடகத்தின் பக்கம் மட்டுமே நிற்கும் இந்தியாவிடம்தான். குற்றவாளியாய் இருக்கும் அரசிடம் கோரிக்கை வைக்கக் கூடாது என்றால் நாம் இதுவரை இப்படி நடத்திய போராட்டங்கள் அனைத்தும் தவறென்றாகும். மே 17 இயக்கமும் இப்படித்தான் மேற்சொன்னவற்றில் இந்தியாவிடம் கூட்டாகவோ தனியாகவோ கோரிக்கை வைத்தது என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். நீங்கள் இந்தியாவை இதன்மூலம் அம்பலப்படுத்தத் தவறி விட்டீர்கள் என நான் சொல்ல மாட்டேன். என்னைப் பொறுத்த வரை இந்தியாவை நோக்கிய அந்தக் கோரிக்கைகள் மூலம் நாம் இந்தியாதான் குற்றவாளி என்பதை நம் மக்களுக்கு அம்பலப்படுத்தியுள்ளோம் என்பதே இறுதி விளைவு.

அமெரிக்காவே, ஆப்கனை விட்டு வெளியேறு; ஈராக்கை விட்டு வெளியேறு என்று அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்து அமெரிக்க சனநாயக ஆற்றல்கள் போராடியது அமெரிக்காவின் குற்றத்தை மறைக்கத்தான் என்று சொன்னால் அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்! அவர்களின் அப்போராட்டம் உலகத்திடம் அமெரிக்காவின் குற்றத்தை ஓங்கிச் சொன்னது என்பதை யாரும் மறுக்க முடியாது.

சுருங்கச் சொன்னால், ஒரு நாட்டின் சர்வாதிகாரியை நோக்கி, நாட்டை விட்டு வெளியேறு என்று கோரிக்கை வைத்துப் போராடுவது அம்மக்களை அந்த ஆட்சிக்கு எதிராக அணிதிரட்டுகிறது. சர்வாதிகாரியிடம் அடக்குமுறைச் சட்டங்களை ரத்து செய்க என்று கோரிக்கை வைத்துப் போராடுவது அந்த ஆட்சிக்கு அழுத்தம் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், அதனை அம்பலப்படுத்தவும் அம்மக்களை அணிதிரட்டவும் பயன்படுகிறது என்பதை மறுக்க முடியாது.

ஈழவிடுதலையை சீர்குலைப்பதைக் கைவிடு! பிராந்திய நலனுக்காக ஐநா அரங்கில் இலங்கைக்குத் துணை போகாதே! என்ற கோரிக்கைகளை முன்வைத்து சென்ற மார்ச் 14 ஆம் நாள் அமெரிக்கத் தூதரக முற்றுகைப் போராட்டத்தை மே 17 இயக்கம் ஒருங்கிணைத்தது. குற்றவாளியான அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்து முற்றுகைப் போராட்டம் நடத்துவது அமெரிக்காவை அம்பலப்படுத்தத்தான் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. இதே ஏரணப்படி இந்திய அரசிடம் கோரிக்கை வைத்து ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தினால், அது இந்தியாவை அம்பலப்படுத்தும் என்பதை நீங்கள் ஏற்க மறுத்தால் முரண் இல்லையா?

பகைவனிடம் கோரிக்கை வைத்துப் போராடுவதுதான் அவனைக் குற்றவாளியாகக் காட்டச் சரியான வழி என்பதே நான் என் சிறு அரசியல் அனுபவத்தில் கற்ற எளிய பாடம். கோரிக்கை வைக்காமலும் அதனடிப்படையில் போராடாமலும் எப்படி அம்பலப்படுத்துவது?. இந்த இரண்டையும் செய்யாமலே அம்பலப்படுத்துவது என்றால் மக்களிடம் பரப்புரை செய்வதின் வழியாகத்தான் அம்பலப்படுத்த முடியும். அந்தப் பரப்புரைக்குக் கோரிக்கை வேண்டும். பரப்புரை செய்வதே போராடச் செய்வதற்கு என்றால் கோரிக்கை வைக்காமல் எப்படிப் போராடுவது? கோரிக்கையைப் பகைவனிடம் வைக்காமல் வேறு யாரை நோக்கி வைப்பது?

மணிப்பூர் இரோம் சர்மிளா அவர்கள் ஆயுதப் படைகள் சிறப்பதிகாரச் சட்டத்தை நீக்கம் செய்! என்று கொலைகார இந்திய அரசிடம் கோரிக்கை வைத்து 11 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருவதன் மூலம் இந்தியத்தை சொந்த மக்களுக்கு எதிரானக் குற்றவாளியாக அம்பலப்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் மறுக்க முடியுமா, தோழர்?

இடையில் பிரேமன் அறிக்கை குறித்து இப்படிக் குறிப்பிடுகிறீர்கள்:

“துரதரிஸ்டவசமாக பிரிமென் தீர்ப்பாயத்தில் இந்திய-அமெரிக்கா-இங்கிலாந்து குறித்த இனப்படுகொலைக் கூட்டாளிகள் பற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை ஏற்றுக் கொள்ளவோ அது குறித்து விவாதிக்கவோ பலருக்கு மனம் வரவில்லை. அதை மறைக்கவும் புறக்கணிக்கவுமே விரும்பியது மட்டுமே வெளிப்படையாகத் தெரிந்தது. இந்தியாவை அம்பலப்படுத்த வேண்டுமென்று சொல்லுபவர்கள் கூட இது குறித்துக் கள்ள மௌனம் காத்தார்கள்....”

ஆனால், பிரேமன் அறிக்கை அமெரிக்கா குறித்தும் பிரிட்டன் குறித்தும் வழங்கியது போன்ற இனக்கொலைக் குற்றத் தீர்ப்பை இந்தியா குறித்துத் திட்டவட்டமாக வழங்க மறுத்தது ஒரு குறைதான் என்பதையும் சேர்த்துச் சொல்ல வேண்டும்.

இந்தியாவை அம்பலப்படுத்த நீங்கள் உங்கள் கட்டுரையில் சொல்லும் வழி இது:

“இந்தியாவைக் குற்றவாளியாக்க ஒரு சர்வதேச விசாரணையை ஐநாவில் கோருவது என்பதுதான் தமிழகத் தமிழர்களின் கோரிக்கையாக இருக்க முடியும்.”

ஐநா எவ்வகையிலெல்லாம் ஈழப் போரில் சிங்களப் பேரினவாதத்துக்குத் துணை போனது என்பதை வெளிகொணர்ந்ததில் மே 17 இயக்கத்துக்கும் ஒரு பங்குண்டு. குற்றவாளியான ஐநாவிடமே கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தால் எப்படி ஐநாவை அம்பலப்படுத்துவது? குற்றவாளியிடம் கோரிக்கை வைக்கக் கூடாது என்ற உங்கள் வாதப்படி ஐநாவிடம் கோரிக்கை வைப்பதும் தவறுதான் அல்லவா?

நீங்கள் இரண்டு இடங்களில் இப்படிக் குறிப்பிடுகிறீர்கள்:

“இனப்படுகொலை என்பதை மறுத்ததும், மதச்சிறுபான்மையினர் என வரையறுத்ததும், பயங்கரவாதத்தின் மீதான போர் என்றதும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் நல்லிணக்கம் என்பதும் அமெரிக்காவினால் ஐநா வழியாக நிர்பந்திக்கப்படுகிற ஒரு நடவடிக்கை.”

ஐநாவின் மனித உரிமைக் கமிசனின் கூட்டம் அமெரிக்காவினால் தனது பிராந்திய நலனுக்காகப் பயன்படுத்தப்பட ஆரம்பிக்கப்பட்ட தருணத்தைக் குறிப்பிடுவதின் தொடர்ச்சியாக நீங்கள் சொல்கிறீர்கள்:

“அமெரிக்கா தெற்காசிய பிராந்தியத்திலும் இலங்கையிலும் காலூன்ற தமிழர்கள் பிரச்சனையைப் பகடைக்காயாகப் பயன்படுத்துகிறது.”

அப்படியானால், ஐநாவை அமெரிக்காவால் எப்படி வேண்டுமானாலும் ஆட்டுவிக்க முடியும் என்கிறீர்கள். போரில் சிங்களத்துக்குத் துணை நின்றது மட்டுமல்ல, இன்றும் அமெரிக்காவின் ஈழ மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குத் துணை நிற்கும் ஐநாவிடம் எப்படிக் கோரிக்கை வைக்கத் துணிந்தீர்கள்? நீங்கள் சொல்வதின்படி அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதற்கான மேடைதான் ஐநா என்றாகிறது. இப்படிப்பட்ட ஐநாவை அம்பலப்படுத்தத் தேவை இல்லை எனக் கருதுகிறீர்களா? அல்லது, எல்லாப் பகைவர்களையும் ஒரே தட்டில் நிற்க வைக்க முடியாது என்ற முடிவுக்கு வந்து விட்டீர்களா? குற்றவாளியாகக் கணிக்கப்படும் நாடுகளை அம்பலப்படுத்தி விட்டு அதன்பின் ஐநாவிடம் வரலாம் என்று முடிவெடுத்துள்ளீர்களா? கடைசியாக ஐநாவிடம் வரலாம் என்பது சரி என்றால், ஏன் இந்தியாவுக்குப் பின் அமெரிக்காவிடம் வரக் கூடாது? இப்படிக் கேட்பதன் மூலம் அது வரை அமெரிக்காவைக் கண்டுகொள்ளாமல் விடச் சொல்வதாகப் பொருள் கொள்ளக் கூடாது. அமெரிக்கா, பிரிட்டன், ஐநா என அனைத்தையும் எதிர்த்து நாம் போராடித்தான் ஆக வேண்டும். ஆனால் இவை துணைப் போராட்டங்களாக இருக்கலாமே தவிர, முதன்மைப் போராட்டமாக அன்று. ஏனென்றால் சிங்களத்தையும் இந்தியாவையும் அமெரிக்காவையும் பிரிட்டனையும் ஐநாவையும் ஒரே நிலையில் வைத்துப் போராடுவது நம்மை பலவீனமாக்கி பகைவனின் பலத்தைப் பன்மடங்கு பெருக்கும்படியான விளைவையே தரும்.

rajapakse modi 600

தமிழீழ மக்களின் முதல் எதிரியான இலங்கையை உலகத்திடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும். அதற்கு நாம் செய்ய வேண்டிய முதல் வேலை இந்தியா இலங்கையைப் புறக்கணிக்கச் செய்வதே. இது ஏதோ மனுக் கொடுத்துத் தொட்டுத் தடவிச் செய்யக் கூடிய காரியமல்ல. தமிழர்களின் ஒன்றுபட்ட போராட்டங்களின் மூலம் இந்தியாவின் கழுத்தை நெரிக்கும் வகையில் போராடினால்தான் இது சாத்தியப்படும்.

அமெரிக்கா 2012, 2013 ஆண்டுகளில் இலங்கையை தப்புவிப்பதற்காகவே ஐநா மனித உரிமை மன்றத்தில் தீர்மானங்களைக் கொண்டுவந்தது என்பதை நாம் அறிவோம். அடுத்து வந்த 2014 தீர்மானமும் முழுமையாக ஏற்கத்தக்கதல்ல என்ற போதிலும், பன்னாட்டு விசாரணைக்கான வழிவகை அதில் இடம் பெற்றிருந்ததால் நமக்கு ஒரு படி முன்னேற்றம் எனக் கருதினோம். முக்கியத்துவம் வாய்ந்த இந்த முன்னேற்றம் எப்படிக் கிடைத்தது? புவிசார் அரசியல் கணக்குகள் ஒருபுறமிருக்க, தமிழ் மக்களின் போராட்டத்துக்கு இதில் பங்கில்லையா? உலகு தழுவிய மனித உரிமை ஆற்றல்களின் துணையோடு தமிழீழ, தமிழக, உலகத் தமிழர்கள் நடத்திய போராட்டத்தின் பலனாகவே ஒவ்வொரு முன்னேற்றமும் சாதிக்கப்பட்டது.

ஐநா எப்படியெல்லாம் இலங்கையரசின் குற்றத்தை மறைத்து அதற்குத் துணைநின்றது என்பதற்கு சார்லஸ் பெட்ரியின் உள்ளக அறிக்கையே தக்க சான்று. இன்னும் ஐநாவின் கொடிய முகத்தை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அந்த ஐநாவின் பொதுச் செயலாளர் பான் கி மூன் தான் மூவல்லுனர் குழு அமைத்தார். அது தற்சார்பான பன்னாட்டு விசாரணை வேண்டும் என்று அழுத்தமாகப் பரிந்துரைத்தது. அதன் தொடர்ச்சியாக நீண்ட இழுபறிக்குப் பின் வந்தது பன்னாட்டு விசாரணை. ஐநாவால் ஏற்பட்ட இச்சிறு முன்னேற்றங்கள் எப்படி நிகழ்ந்தன?

உலகத் தமிழரின், தமிழகத் தமிழரின், குறிப்பாகத் தமிழக மாணவர்களின் ஒன்றுபட்ட போராட்டங்கள், சேனல் 4 காணொளிகளும் மூவல்லுனர் குழு அறிக்கையும் டப்ளின் தீர்ப்பாயமும் பிரேமன் தீர்ப்பாயமும் நமக்குப் பெற்றுத் தந்திருக்கிற அறவலிமை. அறவலிமை கொண்டு நாம் நடத்தும் தொடர் போராட்டங்களின் அழுத்தம் நம் எதிர்காலப் போராட்டத்திற்கான சிறந்த கருவிகளை நம் எதிரிகளிடம் இருந்தே பெற்றுத் தந்துள்ளது.

நீங்களே குறிப்பிடுவது போல்

“அமெரிக்கா தன்னை யோக்கியவானாகக் தமிழகத் தமிழரிடத்தில் காட்ட விரும்பினால் இனப்படுகொலை விசாரணையை வைக்கும், இல்லையெனில் அம்பலப்படும்.”

உண்மையில் அமெரிக்கா என்று வரும் இடத்தில் இந்தியா என இருந்தால்... தன்னைத் தமிழகத் தமிழரிடம் யோக்கியவானாகக் காட்டிக் கொள்ள வேண்டிய தேவை அமெரிக்காவைக் காட்டிலும் இந்தியாவுக்குத்தான் உண்டு.

2012, 2013 அமெரிக்கத் தீர்மானங்கள் சிங்கள அரசைத் தப்புவிக்கும் வழி தந்திருந்தாலும் இன்னொரு வகையில் சர்வதேச அளவில் சிங்களத்துக்கு முதல் தோல்வி தந்தது. அந்த வகையில் இலங்கைக்கு எதிராக இரண்டு முறையும் இந்தியா வாக்களித்தது. காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த வேண்டும் என்று முன்மொழிந்த இந்தியாவின் பிரதமரால் அம்மாநாட்டிற்குப் போக முடியவில்லை. இவையெல்லாம் பெரிய வெற்றிகள் அல்ல என்றாலும் சிங்களத்துக்கும் இந்தியத்துக்கும் நம்முடைய போராட்டங்களால் ஏற்பட்ட முதல் விரிசல். இதைப் பிளவாக மாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கே உண்டு. தமிழகத் தமிழருக்குரிய இந்த வரலாற்றுப் பாத்திரத்தில் வேறு எந்த மக்களாலும் பொருந்த முடியாது.

நம்மைப் பொறுத்தவரை இலங்கையைத் தனிமைப்படுத்துவதில்தான் ஈழ விடுதலையின் திறவுகோல் உள்ளது. இலங்கையை, இந்தியாவை, அமெரிக்காவை, பிரிட்டனை எல்லோரையும் அம்பலப்படுத்துகிறோம் எனும் பெயரால் சிங்களப் பேரினவாதத்துடன் மற்றவர்களையும் ஒரே கோட்டில் இணைத்து விடுகிறீர்கள். இது சிங்களத்தைத் தனிமைப்படுத்துவதற்கு பதில் வலிமைப்படுத்தி விடும். உங்களை அறியாமலே நீங்கள் முன்வைக்கும் தர்க்கங்கள் இலங்கைக்கு சாதகமான விளைவை ஏற்படுத்தக் கூடியது. சிங்களத்தைத் தனிமைப்படுத்தும் போராட்டத்தில் நமது அடுத்த கண்ணி தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வுக் கோரிக்கை. இதனடிப்படையிலேயே இலங்கையைப் புறக்கணிப்போம் என முழங்குகிறோம். அதன் முதல் படி இந்தியாவை அரசுறவு, பொருளாதாரம், பண்பாடு, கலை, விளையாட்டு என அனைத்து வகையிலும் இலங்கையைப் புறக்கணிக்கச் செய்வதே என்கிறோம். இது மற்ற அரசுகளையும் இலங்கையைப் புறக்கணிக்கச் செய்யும். அதுதான் ஈழ மக்களுக்கான போராட்ட வெளியை ஏற்படுத்தித் தரும். பிறகு, ஈழப் பிள்ளையை அவர்கள் ஈன்றெடுப்பார்கள்.

இந்தியா அனைத்து வகையிலும் இலங்கையைப் புறக்கணித்தால் மற்ற அரசுகளுக்கு இந்தியாவா? இலங்கையா? என்ற முடிவெடுக்கும் நிலை ஏற்படும். இந்தியாவுக்கு இலங்கையைப் புறக்கணிப்போம் என்ற தமிழ் மக்களின் முழக்கத்திற்கு நாம் இணங்கத் தவறினால் அது இந்தியாவைப் புறக்கணிப்போம் எனும் முழக்கமாக மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்படும். அச்சம் தருகிற அளவில் ஒற்றுமையான நம் போராட்டங்கள் அமைய வேண்டும். இந்த நெருக்கடியை தமிழகத் தமிழர்கள் இந்தியாவைத் தவிர வேறு எந்த அரசுக்கும் அதே அளவில் கொடுக்க முடியாது.

தோழர், அமெரிக்க எதிர்ப்புப் போராட்டங்கள் தேவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. முதன்மையான போராட்டம் இந்தியாவுக்கு எதிரானதாக இருக்க வேண்டும் என்கிறேன்.

உங்கள் செயல்வழி சிங்களப் பேரினவாதத்தைத் தனிமைப்படுத்தத் தடையாவதால், தமிழீழ மக்களின் நீதிக்கும் விடுதலைக்குமான போராட்டத்துக்குத் துணையாகாது என்பதைச் சுட்டிக்காட்டத்தான் வேண்டும். உங்கள் நோக்கம் எதுவானாலும் விளைவு இதுதான்.

என் கருத்துகளைக் கருதிப் பாருங்கள். விடை எதிர்பார்க்கிறேன். ஒற்றுமைநோக்கில் விவாதிப்போம்.

- வே.பாரதி, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

Pin It