தேசிய இனப்பிரச்சனையைப் பற்றிப் பேசும்போது தோழர் ஸ்டாலின் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க லெனினியத்தின் அடிப்படை அம்சங்கள் என்ற புத்தகத்தில் பின்வருமாறு கூறுவார்.
கடந்த இருபது வருடங்களாக தேசியப்பிரச்சனை அநேக முக்கிய மாறுதல்களுக்கு ஆளாகியிருக்கிறது, இரண்டாவது அகிலத்தின் காலத்திய தேசிய இனப்பிரச்சனையும், லெனினிய காலத்திய தேசிய இனப்பிரச்சனையும் ஒன்றே அல்ல. பரிமாணத்தில் மட்டுமல்லாமல் அவற்றின் உள்தன்மையிலும் அவை தீர்க்கமாக வேறுபட்டுள்ளன. (120)
இரண்டாவது அகிலத்தின் காலத்திற்கும் தோழர் ஸ்டாலின் சொல்லும் பேராசான் லெனினின் காலத்திற்கும் இடையே குறைவான ஆண்டுகள் இடைவெளியே இருந்தாலும் அதற்குள்ளாக தேசியப் பிரச்சனை பற்றிய புரிதலில் மற்றும் அதுபற்றிய உரையாடலில் ஏற்பட்ட பாரதூரமான மாறுதல்களைப் பற்றி அவர் பேசுகிறார். எனவே இயக்கவியல் விதிகளின்படி பார்த்தோமானால் தேசியப் பிரச்சனை என்பதும் அதற்கான போராட்டத்திற்கான செயலுத்திகளை வகுப்பது என்பதும் மாறாத ஒன்றல்ல. மாறாக அது பருண்மையான சூழல்களுக்கேற்ப பருண்மையான செயலுத்திகளை வேண்டுகிறது. தொடர்ச்சியாக போராட்டத்திற்கும் மற்றும் போராட்டத்தை முன்கொண்டு செல்லும் அமைப்பிற்கும் செயலுத்திகளைப் பற்றிய பிரக்ஞையும் அதை நீண்டகால நோக்கில் முன்னெடுப்பதும் மிகவும் முக்கியமானது. சரி இப்போது நாம் மார்க்சிய லெனினிய வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு ஈழப்பிரச்சனையைப் பார்ப்போம். ஈழத்தின் நான்காம்கட்டப்போர் கொடூரமான முறையில், ஈழ தேசியப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் ராணுவத் தலைமையை மாபெரும் பின்ன்டைவிற்குள்ளாக்கியதோடு அதன் கட்டளைத் தலைமையையும் பாரதூரமான அளவில் சிதைத்துள்ளது. பேராசான் மாவோ சொன்னதுபோல் மக்களுக்கு படை எவ்வளவு இன்றியமையாதது என்பதை நாம் பருண்மையாக உணரும் காலமிது.
நம்மிடையே போராட்டத்தை முன்னின்று முன்புபோல் எடுத்துச்செல்ல ஒரு ஒற்றைத் தலைமையோ மற்றும் அதற்கு துணையாக ஓர் ஆயுதங்தாங்கிய மக்கள் படையோ இன்று இல்லை. மாறாக நம் போராளிகளில் பலரும் மற்றும் லட்சக்கணக்கான அப்பாவி மக்களும் வதைமுகாம்களில் இன்னும் வதைபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்று உலகம் முழுவதும் வாழக்கூடிய பரந்தளவிலான உழைக்கும் மக்களுக்கு முக்கியமாக தமிழ் மக்களுக்கு ஈழ விடுதலைக்காக போராட முன்வந்த அம்மாபெரும் போராளிகளையும் அவர்களோடு உடனிருந்த அந்த அப்பாவி மக்களையும் உடனடியாக இலங்கை சிங்கள இனவெறி அரசின் வதைமுகாம்களில் இருந்து மீட்டெடுக்கும் தேவையும் கடமையும் உள்ளது. அதேபோன்று நயவஞ்சகத்தினாலும் துரோகத்தினாலும் பன்னாட்டு சதிகளாலும் கொல்லப்பட்ட மாவீரர்களின் மரணத்திற்கு நியாயம் கேட்கவும் மனிதாபிமானமற்ற முறையில் ஓர் இனப்படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களின் மரணத்திற்கு நியாயம் கேட்கும் கடமையும் அத்தகைய இனப்படுகொலையாளர்களை உலகின் முன்பு நிறுத்தி அவர்களுக்கான ஊழியத்தை வாங்கித்தரும் பொறுப்பும் கடமையும் அனைத்துலக உழைக்கும் மக்களுக்கும் தமிழர்களுக்கும் உண்டு.
இரண்டாவதாக பேசப்பட்ட விடயங்கள் நம் உடனடிக்கடமைகளாக இன்று நம் முன்பு நின்றாலும் நமது மூலவுத்தி ரீதியில் தீர்க்கப்படவேண்டிய பிரச்சனையான தமிழர்களின் தாகமான தமிழீழத்தாயகத்தை நாம் என்றும் மறந்துவிடமுடியாது. நமது ஒவ்வொரு உடனடிக் கடமைகளைத் தீர்க்க முன்வைக்கப்படும் செயலுத்திகள் நீண்டகால தேவையான மூலவுத்தி தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உதவி புரிவதாகத்தான் இருக்கவேண்டும். இதையே பேராசான் மாவோ தனது முரண்பாடுகள் பற்றி என்ற கட்டுரையில் தெள்ளத்தெளிவாகக் கூறுவார். அதேநேரத்தில் நமது உடனடித் தேவைகளில் ஒரு சிலவற்றை தீர்த்துவைக்க ஏகாதிபத்திய அரசுகள் முன்வரும்போது ஒரு கண்ணால் நாம் அதை வரவேற்கவும் மறுகண்ணால் அதை சந்தேகிக்கவும் தெரிந்திருக்கவேண்டும். இன்று நமது உடனடித் தேவையான இனப்படுகொலையாளர்களை தண்டிப்பது மற்றும் போராளிகளையும் இன்னபிற அப்பாவி மக்களையும் விடுவிப்பது பற்றி அய்நாவின் அறிக்கை பேசி வருவது மகிழ்வைத் தருவதாக இருந்தாலும் அந்த உடனடிக் கடமையே நமது மூலவுத்தி ரீதியிலான பிரச்சனையான தனித்தமிழீழத்தை அடைய உதவாது.
அதுபோக அய்.நா. பற்றி இந்திய பொதுவுடமைக்கட்சி(மாவோவியர்) அன்றைய நேபாள பொதுவுடமைக்கட்சி (மாவோவியர்) எழுதிய திறந்த மடல் மிகவும் பயனுடையது, உபயோகமானது. அதில் நேபாள மாவோவியர்கள் தமது ஆயுதத்தையும் மற்றும் அன்றைய ஞானேந்திரா அரசுக்கும் மாவோவியர்களுக்கும் இடையேயிலான போர்நிறுத்தத்தை பார்வையிட அதுபற்றி கண்காணிக்க அய்நாவின் நாட்டாமைக்கு அனுமதி வழங்கியபோது அதுபற்றி அன்றே இந்திய மாவோவியர்கள் எச்சரித்தார்கள். அவர்களின் அய்நா பற்றிய எச்சரிக்கை நேபாள மாவோவியர்களுக்கு மட்டுமன்றி உலகம் முழுவதும் போராடக்கூடிய அமைப்புகளுக்கும் இன்றியமையாதது. ஏனெனில் அய்நாவின் பிறப்பின் மூலம் அப்படிப்பட்டது. ஊரறிந்த பார்ப்பானுக்கு பூணூல் தேவையில்லை என்பது போல அய்நாவின் ஏகாதிபத்திய சார்பு என்பதும் அது ஏகாதிபத்தியங்களின் நீட்சி என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி. இப்படிப்பட்ட பின்னணியில்தான் நாம் அய்நாவின் தற்போதைய அறிக்கையையும் தமிழீழ மீட்புப்போருக்கான செயலுத்திக்கான செயல்பாடுகளையும் பார்க்க வேண்டியிருக்கிறது. அதுபோக இந்த அய்நா அறிக்கையினை பல ஏகாதிபத்திய நாடுகள் மிகத் தீவிரமாக ஆதரிப்பதும் நமக்கு மகிழ்வையன்றி மாறாக சந்தேகத்தையே தரவேண்டும்.
அய். நா அறிக்கையினை வைத்துக்கொண்டு தனது பிராந்திய நலனை வலுப்படுத்திக்கொள்ள வல்லரசுகள் முயற்சிப்பது தமிழீழ விடுதலையை மேலும் தள்ளிப்போட அல்லது மறுப்பதற்கான முயற்சியை சமீபத்திய நிகழ்வுகள் உணர்த்துகின்றன. இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தினை கட்டுப்படுத்துவதும் அதிலும் முக்கியமாக தனது பசிபிக் கட்டளை கடற்படைக்கு வலுவான ஒரு தளத்தினை உருவாக்கும் அமெரிக்காவின் 30 ஆண்டுகால் முயற்சியின் வெற்றியின் இறுதி கட்டத்தினை நாம் பார்க்கிறோம். புலிகள் இருக்கும் வரை தனது பிராந்திய கனவான திரிகோணமலையை வசப்படுத்துவதும் இலங்கையின் கிழக்கு கடற்கரையை தனது கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெறாது என உணர்ந்த அமெரிக்க அரசு புலிகளை இலங்கை அரசினை கொண்டு வீழ்த்தியதை பல்வேறு தகவல்கள் நமக்கு உறுதி செய்கின்றன.
அதுபோக இங்கு இந்தியாவின் பங்கு தூய்மையான தன்னலமானது. எப்படி தேசியத்தலைவர் தோழர் பிரபாகரன் 1993 ஆம் ஆண்டு தமது மாவீரர் உரையின்போது “உலகின் ஒவ்வொரு நாடுகளும் தமது சொந்த நலன்களையே முன்னிறுத்துகின்றன, ஒரு நீதிசார் சட்டமோ அல்லது மக்களின் உரிமையோ அல்லாமல் பொருளாதார மற்றும் வணிக நலன்களே இன்றைய உலகின் ஒழுங்கை தீர்மானிக்கின்றன“ என்று சொன்னாரோ, தேசியத்தலைவரின் வார்த்தைகளை காலம் நூற்றுக்கு இருநூறு சதம் உண்மை என்று நிரூபித்திருக்கிறது. தேசியத்தலைவரின் வார்த்தைகளை மனதில் இருத்திக்கொண்டு நாம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் இந்தியாவின் அமெரிக்க சார்பு நிலையையும் ஆராய்ந்தோமென்று சொன்னால் அமெரிக்க மட்டும் இந்தியா தேசிய இனங்களுக்கெதிராக தமது நிலைப்பாடுகளை பல தசாப்தங்களாக கைக்கொண்டு வந்ததை நாம் அறிந்து கொள்ளலாம்.
போலி இடதுசாரிகளால் கோமணத்திற்குள் சோசலிசத்தை ஒளித்து வைத்திருந்தாக கருதப்பட்ட அந்த டுபாக்கூர் சோசலிஸ்ட் நேரு தேசிய இனங்களின் நலன்களுக்கெதிரான இந்தியாவின் கருத்துக்களை முன்பே எடுத்துரைத்துள்ளார். அதுபோக அவர் ஒரு பரந்த இந்தியாவையும் ஆசியாவில் மிகப்பெரிய வல்லரசாக இந்தியா உருவாக்கும் கனவையும் முன்வைத்திருந்தார். அந்த பரந்த வல்லரசு இந்தியா என்பது அண்டையிலுள்ள் சின்னஞ்சிறு நாடுகளையும் அடக்கி ஒடுக்கி உள்ளடக்கியதுதான் என்பது பற்றி நாம் சொல்லித் தெரியவேண்டிதில்லை. எனவே இந்தியா என்பது என்னவோ இந்திராவின் காலத்தில் ஈழத்திற்கு ஆதரவாக இருந்தது என்றும் பின்பு வாயில் விரலை வைத்தால் கடிக்கத்தெரியாத ராசீவை சில மலையாளிகள் சேர்ந்து ஈழத்திற்கு எதிராக திருப்பிவிட்டார்கள் என்பதும் கவைக்குதவாத கற்பனையே, அது மட்டுமன்றி இதுபோன்ற இயக்கவியல் பார்வையற்ற செயல்பாடுகள் நமக்கு ஈழ விடுதலையைப் பெற்றுத்தரா.
அதுமட்டுமன்றி இன்று தரகு முதலாளிகளாக இருந்துகொண்டு நாட்டை அமெரிக்க ஏகபோக கம்பெனிகளுக்கு அடகு வைத்துக்கொண்டிருக்கும் இந்திய பெருமுதலாளிகளும் ஒருகாலத்தில் மொழிவாரி மாநிலங்கள்கூட அமைவதை எதிர்த்து நின்றார்கள் என்பதும் தெள்ளத்தெளிவான உண்மை. இதற்கு உதாரணமாக மொழிவாரி மாநில மறுசீரமைப்பிற்கு அகில இந்திய மார்வாரி கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்ததை எடுத்துக்கொள்ளலாம். அதுபோக இந்திய ஆளும் வர்க்கத்தின் கொள்கை என்பது எப்போதும் தேசிய இனங்களுக்கு எதிராகத்தான் இருந்து வந்திருக்கிறது என்பதற்கும் இந்தியாவின் தனது அண்டை நாடுகளை மற்றும் வங்காளதேசம் மற்றும் ஈழம் போன்ற தேசிய இனப்பிரச்சனைகளை தனது விரிவாக்க கனவோடும் தனது பெருமுதலாளிக்க்ளுக்கான விரிந்த சந்தைக் கனவோடும்தான் அணுகி வந்திருக்கிறது என்பதற்கு பலகோடி சான்றுகள் வரலாறு முழுவதும் மலிந்து கிடக்கின்றன. இதை பின்வரும் நேருவின் வார்த்தைகள் நன்கு விளக்கும்.
“நவீன உலகில், ஆசியாவின் மையப்பகுதியாக இந்தியா இருக்கவேண்டியது தவிர்க்க முடியாத்தாகத் தோன்றுகிறது. (இதில் பசிபிக் பெருங்கடல் பகுதியிலுள்ள ஆஸ்திரேலியாவும், நியூஸிலாந்தும், கிழக்கு ஆப்பிரிக்காவும்கூட அடங்கும்)... ஒரு மாபெரும் கூட்டமைப்பின் மையமாக இந்தியா விளங்கப்போகிறது."
"இந்தியப்பெருங்கடல் பிரேதேசத்தை அரசியல், பொருளாதாரரீதியில் மேலாதிக்கம் செலுத்தும் வாய்ப்பு இந்தியாவிற்குள்ளது."
"சிலோனும் (இன்றைய இலங்கை) இந்தியாவின் ஒரு பகுதிதான். இந்தியக்கூட்டமைப்பின் சுயாட்சி பெற்ற அலகாக அது இருக்கவேண்டும்."
மேலே நாம் கொடுத்துள்ள இந்த விரிவாதிக்க வாந்திகளை எடுத்தது நமது ‘சோசலிச‘ நேருதான். அதுமட்டுமன்றி அவர் தேசிய இனங்களைப் பற்றியும் அருவருப்பான பிற்போக்கு எண்ணங்களை வைத்திருந்தார் என்பது அவரின் எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் மலிந்து விரவிக்கிடக்கிறது. அதுபோக சோசலிச முகாமும் முக்கியமாக அதன் தலைமை பீடமாக இருந்த சோவியத் ரசியாவும் வீழ்ச்சியடைந்த பின்பு இந்தியா அமெரிக்காவின் அடிவருடியாக தெற்காசிய பிராந்தியத்தில் வலம்வர தொடங்கியது. அமெரிக்காவின் குரலாக தன்னை வரித்துக்கொண்டு அவர்களின் கட்டளைகளை சிரமேற்கொண்டு செயல்படுத்த ஆரம்பித்தது. அதுபோக தேசிய இனத்திற்கெதிரான முக்கியமாக ராசீவின் மரணத்திற்குப்பிறகு தமிழர் விரோத, தமிழீழ விரோத எண்ணங்களை தமது அமெரிக்க விசுவாசத்திற்கும், தனது தரகு முதலாளிகளுக்கும் ஆதரவாக செயல்படுத்த ஆரம்பித்தது. அமெரிக்காவின் இந்த திட்டத்தினுடனேயே இந்தியாவின் களத்துணைகொண்டு இந்த இனப்படுகொலையை நடத்தியது. இலங்கையே விரும்பாமல் இருந்திருந்தாலும் இந்தப் போர் நடந்தே இருக்கும்.
அதேநேரத்தில் இனப்படுகொலைக்கான போர் முடிவுற்றதும் விடுதலைப் புலிகளை வீழ்த்த பெரிதும் பயன்பட்ட இராசபக்சே தற்போது முழு அதிகாரத்துடன் இலங்கையை வசப்படுத்துவதும், சீன நலன்கள் முன்னுக்கு தள்ளப்படுவதும் விரும்பாத அமெரிக்கா புலிகளை ஒடுக்க பயன்படுத்திய பிறகு ராசபக்சேக்கள் தேவையில்லை எனும் நிலையை எடுத்து இருக்கிறார்கள். அதாவது இராசபக்சேவை தண்டிப்பது அவசியம் ஏனெனில் திட்டமிடப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பல குற்றம் புரிந்தார்கள்; அதற்கான தண்டனையை அவர்கள் அனுபவிக்க வேண்டும்; அதுவே பலிகொடுக்கப்பட்ட தமிழர்களுக்கு அளிக்கப்படும் நீதி எனும் வாதம் முன்வாசல் வழியாக நமக்கு வைக்கப்படுகிறது. பின் வாசல் வழியே அமெரிக்காவின் இராணுவ நலனும், இந்தியாவின் தரகுமுதலாளிகளின் வர்த்தக நோக்கமும் மட்டுப்படுத்தப்பட்ட சீனாவின் ஊடுருவலோடு வைக்கப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே மனித உரிமை மீறல்கள் மட்டுமே பேசப்பட்டு விடுதலை கோரிக்கை பின்னுக்குத் தள்ளப்பட்டதை நாம் இங்கு காண்கிறோம். மனித உரிமையைப் பற்றி மட்டும் பேசுவதானால் புலிகளின் மீதும் சில அவதூறுகளை வைப்பதன் மூலமாக விடுதலைப் போரை நடத்திய தமிழர் பிரதிநிதிகளான அந்த தியாகப் போராளிகளை குற்றவாளிகளாக மாற்றிவிட்டு, அந்த போராளிக்குழு எந்த அடிப்படை காரணத்திற்காய் தமிழர்களின் ஆதரவோடு தமிழர்களுக்காகப் போராடியதோ அந்தக் காரணத்தை பின்னுக்கு சுலபமாகத் தள்ளிவிடலாம். சுருக்கமாக பார்த்தால் “இராசபக்சே தண்டிக்கப்படலாம்; ஆனால் தமிழர்களுக்கு விடுதலைத்தமிழீழம் இல்லை” என்பதே. இதற்கான காரணங்களாய் ஏராளமான ஆதாரங்களை நாங்கள் வைக்கமுடியும்.
அய். நாவிற்கான நிபுணர் குழு போரில் இலங்கை புரிந்த குற்றங்களை மிகச்சரியாக பதிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்றுபட்ட இலங்கை அரசின் நீதி பரிபாலனைகளுக்கு ஏற்ப நடைபெறுமாவெனில் அதற்கான சாத்தியப்பாடும் இருக்கிறது. அதாவது இராசபக்சே தூக்கி ஏறியப்பட்டு அந்த இடம் வேறொரு தலைமை மூலம் நிரப்பப்பட்டு அது இந்த விசாரனையை மேற்கொள்ளலாம். புதிய இலங்கை அரசானது போர்க் குற்றவாளிகளாக சிலரைப் பிடித்து விசாரணையை சர்வதேச கண்காணிப்புடன் நடத்தி பின் தண்டிக்கும். மேலும் தமிழர்களுக்கு வழங்கப்படும் நீதியாக “வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைப்பதற்கான சட்ட வரைவு கொண்டு வரப்பட்டு இலங்கை அரசே முன்வந்து தமிழர்களுக்கான நீதியை பேரினவாதத்தை எதிர்கொண்டு நடத்தி காட்டும்.” இதை நடத்திக் காட்ட தோதாக ஒரு வரதராசப்பெருமாளை இந்தியா முன்னிருத்தலாம்.
நேர்மையான சுயஇராணுவ துணையற்ற தமிழர்களுக்கு ஒரு பொம்மை தலைவரை வைப்பதன் மூலம் திரிகோணமலையிலும் இதர கிழக்கு கடற்கரையிலும் அமெரிக்கா தனது கப்பற்படைக்கான கடல் தளம், பொழுதுபோக்கு குடியிருப்புகள் உள்ளிட்ட கேளிக்கை வசதிகளை அமைத்து தனது பசிபிக் கட்டளை கடற்படையை வலுப்படுத்தலாம். இந்த தமிழர்களுக்கான நீண்ட கால அரசியல் தீர்வை இந்தியா மூலம் செய்வதன் மூலம் தந்து அமெரிக்காவின் எடுபிடி இந்தியா தமிழ்நாட்டில் தமிழீழத் தமிழர்களுக்கு தீர்வு வழங்கி விட்டதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும். இதன் வழியாக காங்கிரசோ, பா.ச.கட்சியோ அல்லது ஏனைய தேசிய கட்சிகளோ தமிழர்களை தமிழ்த்தேசிய, தமிழீழ ஆதரவு மற்றும் இந்திய எதிர்ப்பு நிலையிலிருந்து மாற்றி தனது ஓட்டு வங்கியாக மாற்றிக் கொள்ள முடியும். மேலும் நீண்டகால கனவான சம்பூர் அனல்மின் நிலையம் இழுத்தடிக்கப்படாமல் இறுதி செய்யப்படும். 2007 முதல் தட்டிக்கழிக்கப்பட்டு வரும் செபா பெரு வர்த்தக ஒப்பந்தம் மிக எளிதாக கையொப்பமிடப்படும். இலங்கைக்கு நிதியுதவியாக கொடுக்கப்பட்ட 1000 கோடி ரூபாய்க்கான கட்டுமானத்திட்டங்கள் இந்திய தரகுமுதலாளித்துவ நிறுவனங்களுக்கே அளிக்கப்படும். கூடுதலாக சீனாவின் அச்சுறுத்தலையும் குறைக்க முடியும். ராசபக்சேவை மிரட்டுவதன் மூலமும், அகற்றுவதன் மூலமும் நீளும் பயன்கள் ஏகாதிபத்திய அமெரிக்காவிற்கும் அதன் ஆசிய கைக்கூலி இந்தியாவிற்கும் மற்றும் அதன் பெருமுதலாளிகளுக்கும் ஏராளம்.
பின்வரும் தகவல்களை நீங்கள் முழுமையாக படித்தபின் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இறுதியில் விவாதித்து இருக்கிறோம். தமிழர்கள் வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டத்தில் ஒரு நேர்மையான வெளிப்படையான ஒற்றைத் தலைமை நம் முன்னால் இல்லாத ஒரு சூழலில் இருக்கிறோம் என்பதை நாம் முன்பே கண்டோம். நமக்குள் நடக்கும் ஆழமான விவாதமும், பகிர்வுகளும் அதன் அடிப்படையில் நடக்கும் களப்பணிகளுமே நம்மை நேர்கோட்டில் செலுத்தும் என உறுதியாய் நம்புகிறோம்.
ஈழம் - ஏகாதிபத்தியங்களின் ஆடுகளம்
பயன்படுத்தியபின் தூக்கி எறியும் பழக்கம் கொண்ட அமெரிக்கா ஜியா உல் ஹக், சதாம் உசேன், அன்வர் சதாத் போன்று இராசபக்சேவும் எறியப்படலாம். ஏனெனில் பல வழிகளில் ராசபக்சே ஆபத்தானவராக, சீன ஆதரவாளராக அமெரிக்காவிற்கு தெரிகிறார். அதே போல இராசபக்சேவை தூக்கி எறிய தேவைப்படும் ஒரு வலுவான காரணமாக தமிழர்கள் இனப்படுகொலை முன்வைக்கப்படும். ஆனால் இனப்ப்படுகொலையாக இல்லாமல் போர்குற்றமாக வைக்கப்படலாம். அதாவது போர் நியாயமானது, ஆனால் அதில் நடைபெற்ற குற்றமானது மனித குல விரோதமானது எனும் வாதம் மிகச் சன்னமாக வைக்கப்படுகிறது. இதை அமெரிக்காவின் இராபர்ட் பிளேக் நமக்கு மிக மேலும் புரிய வைக்க முயற்சி செய்கிறார். அதாவது பின் லேடனும், பிரபாகரனும் ஒன்று எனும் போது அவர் இந்தப் போரை பயங்கரவாதத்திற்கு எதிரான போராக நிறுவுகிறார். இலங்கை அரசின் நலனையும் உறவையும் அமெரிக்கா மேற்கொள்ளும் அல்லது கவனத்தில் கொள்ளும் எனும் போது இலங்கை விட்டுக் கொடுக்கப்ப்பட மாட்டாது எனும் குறியீடு வைக்கிறார்கள்.
இதை புரிந்து கொள்ளவேண்டுமானால் சதாம் உசேனுக்கும் – குர்து இன மக்களுக்கும் நடைபெற்றதைத் திரும்பி பார்க்க வேண்டும். குர்து இனமக்கள் தனது இனவிடுதலைக்காக போராடினார்கள், அதன் காரணமாக ஈராக்கில் சதாம் உசேனாலும், ஈரானிய அரசாலும், துருக்கிய அரசாலும் ஒடுக்கப்படுகிறார்கள். வடஈராக்கில் உள்ள குர்து இன நகரில் சதாமின் ஒடுக்குமுறைக்கு உள்ளான ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை வைத்து வழக்கு தயாரிக்கப்பட்டது. இதில் 144க்கு சற்று அதிகமான குர்து மக்களைகொன்ற வழக்கில் சதாம் விசாரிக்கப்பட்டு தூக்கில் ஏற்றப்பட்டார். இந்த வழக்கின்போது குர்து இனமக்களுக்கு நீதி கிடைத்துவிடும் என்பது போன்ற மாயை அப்பாவி மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டதை நாம் கவனிக்க வேண்டும். இதுபோன்ற நியாய இறக்குமதிகளை அமெரிக்கா பல நாடுகளுக்கு செய்திருக்கிறது.
அதே போன்றதொரு நிலையே இங்கும் இன்று ஏற்படுத்தப்படுகிறது. ஆட்சி மாற்றம் நடைபெறலாம். இராசபக்சே தண்டனை பெறலாம் அல்லது சூடான் அதிபர் ஒமர் அல் பஷிர் போல மேற்குலத்திற்கு தேவையான எண்ணை வளம் நிறைந்த தெற்கு சூடானை பகிர்ந்து அளித்துவிட்டு தனது தலையை காப்பாற்றிக் கொள்ளலாம். (ஆனால் தனித்தமிழீழத்தை பிரித்துகொடுப்பது என்பது இந்தியாவின் அடிமடியில் கைவைப்பதுபோல். ஏனெனில் இந்தியாவைப் பற்றி பேராசான் கார்ல் மார்க்சு கூறும்போது "இந்தியாவின் அரசியல் ஒற்றுமை ஆங்கிலேயர்களின் கத்திமுனையில் புகுத்தப்பட்டதுதான்" என்று கூறினார். தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவிற்கு தனித்தமிழீழம் தனது கால்களுக்குகீழ் அமைவது என்பது யானையின் காதுக்குள் எறும்பு சென்ற கதைதான்). எனவே தனது அமெரிக்க எசமானனிடம் எதையும் அடகு வைத்து ஈழவிடுதலையை தடுக்க இந்தியா தயாராகவே இருக்கும். எனவே அமெரிக்க மற்றும் இந்திய ஆளும் வர்க்கங்களின் கருணைமழையால் தமிழீழம் என்பது இலவம் பஞ்சு பழுக்க தமிழ்க்கிளிகள் காத்திருக்கும் கதைதான்.
இதே போல தமிழர்களுக்கு மேற்குலகம் முன்வைக்கும் ஒரு தீர்வை ஒத்துக் கொண்டு, மிக முக்கியமாக மேற்குலனின் நலனை கவனத்தில் கொண்டு, இராசபக்சே நடந்து கொள்ளும்போது எல்லாம் சரியாகலாம். தமிழர்கள் அனைவருக்குமான அப்பம் அளிக்கப்பட்டுவிடும், அதில் தமிழர்களுக்கு தமிழீழம் மட்டும் இருக்காது. கிடைப்பதை பெற்று நிறைவுறும் கோடாரிக்காம்பு குழு ஒன்று உலகின் மிக முக்கிய, பெரிய செய்தி தொலைக்காட்சிகளில் தமிழர்களுக்கு கிடைத்த நலனை பூரிப்புடன் விளக்கி நன்றி பாராட்டுவார்கள். பி.பி.சி யும், லே மாண்டேவும், சி.என்.என்னும், ஏன் சின்ஹுவாவும் கூட வழிமொழியும். அதற்கான அனைத்து ஒத்திகைகளும் இப்போது நடைபெறுவதை நாம் காண்கிறோம். இவ்வாறு வைக்கப்படும் தீர்வை அரசியல் சக்தியாக மூன்று இடங்களில் பிரிந்து இருக்கும் தமிழ் சமூகமாகிய தமிழீழத் தமிழர்களின் பிரதிநிதியாக தமிழ் தேசிய கூட்டணியும், தமிழர்களின் பலம் பொருந்திய பகுதியாக பார்க்கப்படும் தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்படும் தமிழர்களின் தலைவியாக செயலலிதாவும் முன் நிறுத்தப்படுவார்கள்.
புலம்பெயர்ந்த தமிழர்களில் தமிழீழமே தீர்வு என உறுதியாக இருக்கும் சக்திகள் அந்தந்த நாடுகளால் கடுமையாக ஒடுக்கப்படுவார்கள். (இதை நாம் இப்போது காணமுடிவதாக உள்ளது). நேர்மையானவர்கள் தவிர்த்து ஒரு பொம்மைத் தலைவரை மேற்குலகம் முன்னிறுத்துவார்கள் அல்லது முன்னிருத்தப்பட்ட தலைவரை பணிய வைப்பார்கள். இந்தியா செயலலிதாவின் பின்னணி சக்தியாக காய் நகர்த்தும் (ஏற்கனவே தமிழீழ ஆதரவு அமைப்புகளை செயலலிதாவை முழுமையாக நம்ப வைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன(செயலலிதாவோடும் அவரின் கூட்டணிக் கட்சிகளோடும் நாடாளுமன்றத்தேர்தல் சமயத்தில் நாம் போட்ட கூட்டென்பது ஒரு போர்த்தந்திர ரீதியிலானதே). இதற்கு ஏதுவாகத்தான் செயல்லிதா- இரணில் விக்கிரமசிங்கே சந்திப்பை இந்தியா உருவாக்குகிறது. இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக (எமக்கு தெரிந்து) ஒரு மாநில முதல்வரும், அண்டை நாட்டின் முன்னால் அதிபரும் அந்த நாட்டின் பிரச்சனையை பேசப்போகிற காட்சியை நாம் பார்க்கிறோம். இதற்கு பிள்ளையார் சுழியாய் இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் சூரியநாரயண் ஜெயலலிதா பேசுவதற்கான பின்னணியின் கருத்துருவாக்கத்தை உருவாக்க ஆரம்பித்து இருக்கிறார். (இந்த காலச்சுவடு புகழ் புண்ணியவான் நீண்ட நாளைய தமிழீழ எதிரி, ஆனால் ஆழ்ந்த ஆராய்ச்சியாளர் என அவரது நண்பர்களால் சொல்லப்படுபவர். இந்த நபர் இந்திய அதிகாரவர்க்கத்தின் குரலாக தெற்காசிய பிராந்தியத்தினை பற்றி கருத்துக்களை பதிய வைப்பவர்.) ஆக இரணில்-ஜெயல்லிதா சந்திப்பு இந்த திட்டங்களை உறுதி செய்கிறது.
இதனுடன் இராபர்ட் பிளேக்கின் தமிழ் தேசிய கூட்டணித் தலைவர்களான சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர்களை சந்தித்ததை நாம் கவனத்தில் கொள்ளுதல் நலம். மேலும் இந்த நிகழ்ச்சிகளின் ஊடாக மேற்கு-இந்திய அழுத்தங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இராசபக்சே இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதை ஜி.எல் பெரிஸ்சின் இந்திய வருகையின்போது அவர் உறுதிபடுத்தியுள்ளார். செபா பெருவர்த்தக ஒப்பந்தத்தினையும், சம்பூர் அனல்மின் நிலைய வேலைகளையும் உறுதி செய்தது அந்த சந்திப்பு. அந்த சந்திப்பின் பின்னான பேச்சுவார்த்தை குறிப்புகள் இதை உறுதிப்படுத்துகிறது. அதே வாரத்தில் தமிழகத்தில் ஈரோட்டில் உள்ள ஒரு கட்டிட நிறுவனத்திற்கு 2000 வீடுகள் கட்டும் ஒப்பந்தமும் வழங்கப்படுகிறது. மேலும் இதே சமயத்தில் யாழ்பாணத்தில் உயர் பாதுகாப்பு வளையத்தில் அபகரிக்கப்பட்ட நிலத்தை பசில்-ராசபக்சே தமிழர்களுக்கு வழங்கி மற்றவர்களுக்கு தான் இன்னமும் தமிழர்களுக்கான தீர்வில் உறுதியாய் செயல்படுவதாக காட்ட முற்படுகிறார். இந்த சமயங்களில் தமிழ் பிரதிநிதிகள் அதிகாரப்பகிர்வு பற்றி விரிவாக பேசுவதை கவனிக்கமுடிகிறது. மற்றும் ஆட்சி மாற்றத்தை பேசவேண்டிய அவசியம் இல்லை என இராசபக்சேவின் அரசு முணுமுணுப்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அனைத்து தரப்பிற்கும் வெற்றி எனும் தீர்வாக இந்த மாற்றங்கள் நிகழும். இதை நாம் ஏற்றுக் கொள்கிறோமா என்பதே நம் முன் நிற்கும் மிக முக்கியமான கேள்வி.
இப்பொழுது நிகழும் அனைத்து நிகழ்வுகளும் அமெரிக்க அரசால் நகர்த்தப்படும் நகர்வுகள். இதை இராபர்ட் பிளேக்கின் 2008 அக்டோபரில் சென்னை பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய உரை விரிவாக விளக்குகிறது. இதில் “கொழும்பு புலிகளை ஒடுக்குவதற்கான காலம் நெருங்கி விட்ட்து… புலிகளுக்கு பின்னான சமூகத்தில் இந்தியாவின் இலங்கைக்கான தீர்வே இறுதியானது” அதாவது தமிழர்களின் தீர்வில் இந்தியாவும்- அமெரிக்காவும் ஒன்று எனும் செய்தி தெளிவாக அவரால் உணரவைக்கப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளாக மிகத் தீவிரமாக பின்னணியில் வேலை செய்த அமெரிக்காவினை நாம் புரிந்து கொள்ளுதல் அவசியம். அமெரிக்காவின் பிராந்திய நலனுக்கான திட்டமும் நமது விடுதலையும் பிணைந்துள்ளன. இனி வரும் காலத்தில் நாம் மிகத் தீவிரமாகவும், நுணுக்கமாகவும், ராசதந்திர நோக்குடன் நமது மக்கள் போராட்டத்தையும், அதிகார வட்டத்திலான பேச்சுவார்த்தையையும் நடத்துதல் அவசியம். இவை இரண்டும் ஒரு சேர நகரவேண்டும்.
பின்வரும் தகவல்களை கூர்ந்து கவனித்தால் அமெரிக்கா எவ்வாறு இலங்கை அரசின்மூலமாக தனது போரை நடத்தியது என்பதை கவனிக்கலாம். இதன் அர்த்தம் இந்தியா இதில் பங்காற்றவில்லை என்பதல்ல. அமெரிக்காவின் நோக்கத்தில் இந்தியா தனது வக்கிரத்தையும் தமது தரகுமுதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களையும் இணைத்துக் கொண்டது. அமெரிக்கா மூலமாக தனது பிராந்திய ஆதிக்கத்தை நிலை நாட்டிக்கொள்ள விரும்புகிறது.
தொடர்ச்சி:
2. அமெரிக்காவும் தமிழீழப்போரும்
3. தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்
- திருமுருகன் காந்தி (