இன்றைய உலகத்தில் 200க்கும் மேற்பட்ட தனிச் சுதந்தர நாடுகள் உள்ளன. இவற்றுள் 195 நாடுகள் அய்க்கிய நாடுகள் அவையில் உறுப்பினராக உள்ளன.
அய்க்கிய நாடுகள் அவை இரண்டாவது உலகப் போர் முடிந்தபிறகு, 1945இல் உருவாக்கப்பட்டது. அந்த அவையிலிருந்து 15 உறுப்பு நாடுகள் தேர்வு செய்யப்பட்டு ஒரு பாதுகாப்புக் கவுன்சில் அமைக்கப்பட்டது. அதன் முதலாவது கூட்டம் 17.9.1946இல் நடைபெற்றது.
இந்தக் கவுன்சிலின் கடமைகள் யாவை?
1. உலக நாடுகளில் அமைதியை நிலைநாட்டுவது;
2. உலக நாடுகளுக்குப் பாதுகாப்பு இருக்கும்படிப் பார்த்துக் கொள்வது;
3. அடங்காத நாடுகள்மீது இராணுவ நடவடிக்கை எடுக்க அனுமதிப்பது:
4. போர் மற்றும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அமைதியை நிலைநாட்ட வேண்டி பொதுப்படைகளை அனுப்புவது;
இப்படிப்பட்ட அதிகாரம் படைத்த பாதுகாப்புக் கவுன்சிலில் உறுப்பினராக உள்ள 15 நாடுகளில் 5 நாடுகள்மட்டும் நிரந்தர உறுப்பு நாடுகள். இந்த 5 நாடுகள் அய்க்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் கவுன்சில் நிறைவேற்றும் தீர்மானத்தை ஏற்கவோ, இரத்துச் செய்யவோஅதிகாரம் படைத்தவை. அந்த அதிகாரம் படைத்த 5 நாடுகள் அமெரிக்கா, பிரான்சு, சீனா, இரஷ்யா இங்கிலாந்து ஆகியவை.
நிரந்தரமற்ற 10 உறுப்பு நாடுகள், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறிமாறி வரும் காலியாகும் இடங்கள் தேர்தல்மூலம் நிறைவு செய்யப்படும். இப்படிப்பட்ட இரத்துச் செய்யும் அதிகாரத்தை 1954க்குப்பிறகு 43 தடவைகள் அமெரிக்காவும், 10 முறைகள் இங்கிலாந்தும் பயன்படுத்தியுள்ளன. இந்தப் பாதுகாப்புக் கவுன்சிலில் ஏற்கெனவே ஒரு முறை இந்தியா நிரந்தரமற்ற உறுப்பினராக இருந்தது; இரண்டாவது தடவையாக இதில் இப்போது இந்தியா உறுப்பினராகி உள்ளது.
இரண்டாவது உலகப் போரின்போது இரஷ்யாவின் வேண்டுகோளை ஏற்று செருமனிக்கு எதிராக அமெரிக்காவும் இங்கிலாந்தும் இரஷ்யாவுடன் சேர்ந்து கூட்டணி அமைத்தன. அப்போது அமெரிக்காவும் இங்கிலாந்தும் விதித்த நிபந்தனைப்படி, “கம்யூனிஸ்டு அகிலம்” கலைக்கப்பட்டது. அதன்பிறகு உலகக் கம்யூனிஸ்டு நாடுகள் கூடிப்பேசுவதற்கான வாய்ப்பு அருகிவிட்டது. ஏனெனில் கலைக்கப்பட்ட அகிலம் மீண்டும் அமைக்கப்பட வில்லை.
உலகப்போரின் முடிவுக்குப்பிறகு, இங்கிலாந்து, குடியேற்ற நாடுகளுக்கு விடுதலை அளித்தது. 1947இல் இந்தியாவுக்கும் விடுதலை அளித்தது. இந்தியாவைச் சுற்றியுள்ள பாகிஸ்தான் 1947இல் அமைந்தது. இலங்கை 1948இல் விடுதலை பெற்றது.
இந்தியாவை அடுத்துள்ள அராபிய நாடுகளிலும் ஈரானிலும் 1909க்குப்பிறகு பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்டது. 1948முதல் அமெரிக்கா எண்ணெய் வளநாடுகளில் அமைதி நிலவாமல் பார்த்துக்கொண்டது.
1953இல் சோவியத்து நாட்டின் அதிபர் ஜே.வி. ஸ்டாலின் மறைந்தார். குருச்சேவ் காலம் முதல் சோவியத்து நிலைதடுமாறிற்று.
1990இல் சோவியத்து சோசலிச ஒன்றியம் கலைக்கப்பட்டது. அதுவரையில் உலக அளவில் இரண்டு அதிகார மய்யங்கள் இருந்தன. அமெரிக்கா அடாவடியாக ஒரு முடிவெடுத்தால், அதைத் தடுத்து நிறுத்த சோவியத்து இரஷ்யா வரிந்துகட்டிக்கொண்டு முன்வந்தது. அதன்பிறகு அந்த நிலை இல்லை. அதனால் உலக அளவில் ஒற்றை அதிகார மய்யமாக அமெரிக்கா உருவெடுத்தது.
இந்தச் சூழலிலும், 1991இல் குவைத்து மீது ஈராக் படையெடுத்தபோது அதை எதிர்த்து அய்.நா. கூட்டுப்படைகளை அனுப்பியது. உலகில் போர்க்குற்றங்கள், உலக நீதிமன்ற நடைமுறை, இனப்படுகொலை, ஒரு குறிப்பிட்ட இனத்தை அழிக்கும் போர் இவற்றைக் கணக்கில் கொள்வது; பொருளாதாரத் தடைகளை விதிப்பது இவற்றை அய்.நா. செய்தது.
ஆனால், இப்போது இஸ்ரேல் நாடு 1969முதல் பாலஸ்தீனியரை அடக்கி ஒடுக்கி அழித்து வருவதை அய்.நா. அவை தடுக்க முன்வரவில்லை. அராஃபட் கொல்லப்படுவதைத் தடுக்க முன்வரவில்லை. அமெரிக்காவின் ஆதரவுடன் 1948இல் உருவான இஸ்ரேல், கிழக்கு ஜெருசலம், வெஸ்டு பேங்க் முதலான பாலஸ்தீனப் பகுதிகளை முற்றாக ஆக்கிரமிப்பதைத் தடுக்க முடியவில்லை. அண்மையில், பத்து மாதங்களாக அப்பகுதிகளில் கட்டடம் கட்டுவதை இஸ்ரேல் நிறுத்தியிருந்தது. இப்போது கிழக்கு ஜெருசலத்தில் 1300 வீடுகளையும், வெஸ்ட் பேங்க் பகுதியில் 800 வீடுகளையும் கட்டப்போவதாக இஸ்ரேல் அறிவித்துவிட்டது.
இதுபற்றி அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, அய்.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், அய்ரோப்பிய ஒன்றிய அயலுறவுச் செயலாளர் கேதரின் ஆஷ்டன் ஆகியோர் தெரிவித்த கண்டனங்களை இஸ்ரேல் காற்றில் பறக்கவிட்டுவிட்டது. அய்.நா. அவை பல்லில்லாத பாம்பாக-தோட்டா இல்லாத துப்பாக்கியாக- அமெரிக்கா விரும்புகிறபடி ஆடும் அமைப்பாக மாறிவிட்டது. அமெரிக்காவின் கைப்பாவையாக ஆகிவிட்டது.
பாலஸ்தீனம் விடுதலை பெறுவதை அமெரிக்கா எப்போதுமே விரும்பியதில்லை. ஏனெனில் இஸ்ரேல் என ஒரு நாடு உருவாக்கப்பட உதவியதே அமெரிக்காதான். ஆனால், இன்று பொய் வேடம் போடுகிறது.
1991இல் குவைத்து மீது ஈராக் படையெடுத்ததைத் தடுத்த அய்.நா.அவை, 2003இல் ஈராக் மீது அமெரிக்காவும், இங்கிலாந்தும் படையெடுத்ததைத் தடுக்க முனையவில்லை. ஈராக்கில் 2008க்குள் 1,11,032 பேர்- குடிமக்களும், பாதுகாப்புப் படையினரும் அமெரிக்கப்படையினரால் கொன்று குவிக்கப்பட்டுவிட்டனர். பாரக் ஒபாமா அமெரிக்க அதிபரான பிறகு, 2010இல், 50,000 படை வீரர்களை மட்டும் ஈராக்கில் தங்க வைத்துவிட்டு, மீதிப் படைகளை அமெரிக்கா திரும்ப அழைத்துக்கொண்டது. 2003இல் அமெரிக்காவுக்குத் துணைபோன இங்கிலாந்து பிரதமர் டோனி பிளைர் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார்.
அமெரிக்கா ஈராக்கில் 6 ஆண்டுகளில் செய்த அழும்புகளைக் காட்டுகிற 4 இலட்சம் இரகசிய ஆவணங்களை அமெரிக்கப் படையின் தலைமையகமான பெண்டகனிலிருந்து பெற்று, பிராலே மேன்னிங் என்பவர் விக்கி லீக்ஸ் மூலம் அமெரிக்கா, செருமனி, பிரான்சு முதலான நாடுகளிலிருந்து வெளிவரும் நாளேடுகளுக்குத் தந்து அம்பலப்படுத்திவிட்டார். இவ்வளவு பேரழிவை இப்போது செய்த அமெரிக்காவைத்தான் இன்று இந்தியா இரு கைகளை நீட்டி வரவேற்கிறது.
அரேபியாவில் பிறந்த ஒசாமா பின் லேடன் தலைமையிலான அல்-கொய்தா தற்கொலைப்படையினர் அமெரிக்காவிலிருந்த உலக வணிகக் கோபுரக் கட்டங்களை 2001 செப்டம்பரில் தூள்தூளாக இடித்துத் தள்ளினர். உடனே, ஒசாமா பின் லேடன் ஆப்கானிஸ்தானில் மறைந்திருப்பதாக அறிவித்துவிட்டு, ஆப்கனிஸ்தான் பேரில் அமெரிக்கா படையை ஏவி அந்நாட்டை அழித்துக்கொண்டிருக்கிறது.
பின் லேடன் சிக்கவில்லை. அவர் தன் உதவியளாளர் மூலம் - அமெரிக்காவுக்கு எதிராகவும் அய்ரோப்பாவுக்கு எதிராகவும் இன்னும் 30 ஆண்டுகளுக்கு அல்-கொய்தா போரிடுமென்று அறிவித்துவிட்டார்.
சோமாலியாவிலும், ஏமனிலும் தன் அமைப்பின்கீழ் நடக்கும் ஆட்சியை அமைக்கத் திட்டமிட்டிருப்பதாக அறிவித்துவிட்டார். எதிர்காலத்தில் இஸ்லாமியர்-கிறித்தவர் இடையேயான போராக இது உருவாகக்கூடும்.
நம்மை அடுத்துள்ள நாடு மியான்மர் (பர்மா). அந்நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்த வீரர் ஆங் சானின் மகள், இன்று 65 வயதுள்ள ஆங் சான் சூயி கீ ஆவார். அவர் இந்தியாவில் தங்கிப்படித்தவர்; இங்கிலாந்தில் வாழ்ந்தவர். 1990இல் மியான்மரில் நடைபெற்ற தேர்தலில் அவருடைய தேசிய மக்கள் நாயகக் கட்சி (சூ.டு.னு) மாபெரும் வெற்றியைக் குவித்தது. ஆயினும் அவரை ஆட்சியமைக்கவிடாமல் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டு, 1991இல் அவரை வீட்டுக்காவலில் வைத்தது. மியான்மருக்கு வந்த 20 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் வீட்டுக் காவலிலேயே அவர் அடைபட்டுக் கிடந்தார்.
இதுபற்றி அய்.நா. அவை கண்டுகொள்ளவில்லை; அமெரிக்காவோ, அண்டைநாடான இந்தியாவோ இதற்கு எதிராகச் சுட்டுவிரலைக்கூட அசைக்கவில்லை. இப்போது சூயி கீ 13.11.2010 அன்று விடுதலை ஆகிவிட்டார். இந்தியாவுடன் 1919 வரையில் இணைந்திருந்தது இலங்கை. 1948 பிப்ரவரியில் விடுதலை பெற்ற நாடு இலங்கை.
அப்போதுமுதல் இலங்கைத் தோட்டத் தொழிலாளத் தமிழர்களுக்கும், தமிழீழத் தமிழர்க்கும் தமிழ் பேசும் இஸ்லாமியர்க்கும் எண்ணிறந்த அநீதிகளைச் செய்தது இலங்கை அரசு. அவைபற்றி ஏன் என்று கேட்க இந்திய அரசு - இந்தியப் பார்ப்பன அரசு முன்வரவில்லை.
1983க்குப்பிறகு, தமிழ் ஈழத்திற்கு விடுதலை வேண்டி, ஆயுதம் தாங்கி இலங்கைப்படையை எதிர்த்துப் போராடிய தமிழீழ விடுதலைப்படையினர்-2005 வரையில் 17000 விடுதலை வீரர்களைச் சாகக் கொடுத்திருந்தனர். 80000 தமிழ்ப் பொது மக்களைக் காவு கொடுத்திருந்தனர். இலங்கையிலும் அயல்நாடுகளிலும் 7 இலட்சம் பேர் அகதிகளாகத் துன்புற்றனர். 2005 நவம்பர் தொடங்கி கொடுங்கோலன் அதிபர் இராசபக்சா தமிழீழ விடுதலைப் புலிகள் 22000 பேர்களைக் கொன்றார். தமிழ்ப் பொதுமக்கள் 80000 பேரை இரவிலும் பகலிலும் குண்டுமாரி பொழிந்து கொன்றார். கொடிய கொலையைத் தடுத்திருக்க வேண்டிய அய்.நா. அவை ஏற்ற முயற்சியை மேற்கொள்ளவில்லை. இந்திய அரசும், அரசு அதிகார வர்க்கமும்-போரைத் தடுக்க வேண்டியதற்கு மாறாக, இந்தக்கோரக் கொலைக்கு 100க்கு 200 மடங்காகத் துணை போயின. தமிழ்நாட்டு அரசும், தமிழ்நாட்டுத் தமிழரும், கைகட்டி, வாய்பொத்தி நின்றனர்; தில்லிக்குத் தெண்டனிட்டனர். அமெரிக்காவும் சீனாவும், சப்பானும், பாகிஸ்தானும் போட்டி போட்டுக்கொண்டு இலங்கை அரசுக்கு எல்லா வகை உதவிகளையும் அளித்தன.
19.5.2009 அன்று வெற்றியை அறிவித்தார் இராசபக்சா . தமிழ்நாட்டுப் பார்ப்பனர் நெஞ்சம் குளிர்ந்தது. பிரதமர் மன்மோகன் சிங் அகம் மகிழ்ந்தது. சோனியா காந்தியின் முகம் மலர்ந்தது.
மாவீரன் பிரபாகரன் விடுதலை வீரர் என்ற புகழுக்குச் சொந்தக்காரராகி விட்டார். தமிழ்நாட்டுத் தமிழரும், உலகத் தமிழரும் இனமானம்-இனமான உணர்வு அற்ற சோற்றுப் பிண்டங்களாக ஆகிவிட்டனர். இந்தக் கொடுமைகள் எல்லவாற்றிற்கும் சாட்சியாக விளங்கும் அய்.நா. பேரவையின் செயலாளர் பான்-கி-மூன் இலங்கைக்குச் சென்றபோதும், உருப்படியாக ஏதும் செய்திட இராசபக்சா இடந்தரவில்லை.
தமிழினத் துரோகிகளின் துணைக்கொண்டு கிழக்கு மாகாணத்தில் ஒரு மாகாண அரசை அமைத்துவிட்ட இராசபக்சா, வடக்கு மாகாணத்திலும் அப்படி ஓர் அரசை அமைக்க முனைகிறார். வடக்கு, கிழக்கு இணைப்பு பற்றியோ, தமிழர்களுக்கு என்னென்ன உரிமைகள் வழங்கப்படும் என்பதுபற்றியோ இராசபக்சா தன் திட்டத்தை அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் ஒற்றை அரசான இலங்கையில் ஒவ்வொரு தமிழனும் சிங்களம் கற்க வேண்டும் ஒவ்வொரு சிங்களனும் தமிழ் கற்க வேண்டும்; ஒவ்வொரு தமிழனும் சிங்களனும் ஆங்கிலம் கற்க வேண்டும் என ஆணையிட இராசபக்சா இப்போது திட்டமிடுகிறார்.
“போருக்கு முன்னும் பின்னும் இந்தியா இலங்கைக்கு இணக்கமாக உள்ளது” என்று ‘The Hindu’ ஆசிரியர் என். ராம் இடம் நேர்காணலில் (22, 23-11-2010 இதழ்கள்) கூறிப் பெருமைப்படுகிறார் இராசபக்சா.
இலங்கையில் தமிழினப் படுகொலை நடந்ததைத் தடுக்கவோ, போர்க்காலத்தில் பல நாட்டுப் படைகளை அனுப்பி இலங்கையில் அமைதியை நிலைநாட்டவோ இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்குத் தண்டனை வழங்கிடக்கோரி உலக நீதி மன்றத்தில் வழக்குத் தொடரவோ திராணியற்றதாக அய்.நா. அவை கிடக்கிறது.
இந்தியாவில் என்ன வாழ்கிறது?
இந்தியா- பாகிஸ்தான் என இரண்டு நாடுகள் 1947இல் உருவாயின. அப்போது ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுக்கு வெளியே - அயல்நாடாக இருந்தது. அந்நாட்டை ஆண்ட இந்து அரசர் அரிசிங் என்பவர் பாகிஸ்தான் பழங்குடிகளின் தாக்குதலுக்கு அஞ்சி அந்நாட்டை இந்தியாவுடன் இணைத்தார்.
அப்போது முதல் ஜம்மு-காஷ்மீரின் வடக்குப் பகுதி “ஆசாத் காஷ்மீர்” என்று பாகிஸ்தான் ஆட்சியின்கீழ் உள்ளது; தெற்குப் பகுதி ஜம்மு-காஷ்மீர் என்று இந்தியாவின் ஆட்சியின்கீழ் உள்ளது.
1. கடந்த 63 ஆண்டுகளாக, ஜம்மு-காஷ்மீரின் வடக்கு எல்லை திட்டவட்டமாக வரையறுக்கப்படவில்லை. எனவே, ஆசாத்-காஷ்மீர் இஸ்லாமியர்களும் அந்நாட்டின் வழியாகப் பாகிஸ்தான் இஸ்லாமியர்களும் ஜம்மு-காஷ்மீருக்குள் ஆயுதங்களுடன் நுழைகிறார்கள். எல்லைப் பகுதியில் இந்தியப்படையுடன் மோதுகிறார்கள். இது தொடர்ந்து நடைபெறுகிறது.
2. 1957இல் ஜம்மு-காஷ்மீர் அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டது. ஆனால், சில தன்னுரிமைக் கூறுகளைக்கொண்டது. அப்படி அவர்கள் பெற்றிருந்த தன்னுரிமைகள் அனைத்தையும் 1959க்குப் பிறகு இந்திய அரசு பறித்துக்கொண்டது.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீருக்கு முழு விடுதலை கோரியும், தன்னுரிமை கோரியும் அங்குள்ள மக்கள் போராடுகின்றனர். போராடுவோர் இஸ்லாமியர். இந்து பண்டிட் என்கிற பார்ப்பனர்கள் இதற்கு எதிரானவர்கள். போராடுவோரை ஒடுக்குவதற்கென்றே இந்திய அரசு, ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி உருபாயைப் பாழடிக்கிறது.அமெரிக்காவும் இங்கிலாந்தும் அவ்வப்போது ஜம்மு-காஷ்மீர் பற்றி இரண்டுங்கெட்டான் நிலையில் கருத்துகளைக் கூறிக் குழப்பிவிடுகின்றன. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஆயுதங்களை விற்பதிலேயே இந்நாடுகள் குறியாக உள்ளன.
எதற்கெடுத்தாலும் அமெரிக்காவைப் பின்பற்றும் இந்தியா, இப்போது அமெரிக்க அதிபராக உள்ள பராக் ஒபாமா அரசுடன் இந்தியாவுக்கு அணு ஆயுதம் தருவதால் விபத்தின்போது இங்கே நேரிடும் இந்தியக் குடிமக்களின் சாவுக்காகக் கோரப்படும் இழப்பீடு மிகப் பெரிய அளவில் இருக்கக்கூடும் என்றும், அதைத் தடுக்கவேண்டி அமெரிக்கா இதற்காக இயற்றியுள்ள சட்டத்தை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இந்திய அரசும் இதுபற்றிய சட்டங்களை இயற்ற வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்துகிறது.
மக்களவை, மாநிலங்களவை இவற்றில் எழுப்பப்பட்ட எதிர்ப்பையும் மன்மோகன் அரசு பொருட்படுத்தவில்லை.
ஒபாமா அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்றபோது அமெரிக்கரும் உலக நாட்டு மக்களும் அவரிடம் அதிகமான நல்ல நடவடிக்கைகளை எதிர்பார்த்தனர். ஆனால், ஒபாமா அமெரிக்கரின் எதிப்பையே இப்போது தேடிக்கொண்டார்.
ஏன்?
ஒபாமா அமெரிக்காவில் பொருளாதாரச் சீர்திருத்தம் செய்வதாகக் கூறி,
1. செல்வந்தர்களுக்கு வரிவிகிதம் குறைப்பு
2. நடுத்தர வகுப்பினருக்கு வரிவிகிதம் அதிகரிப்பு
3. மக்கள் நல்வாழ்வுக்குச் (சுகாதாரம்) செய்யப்படும் செலவுகள் குறைப்பு
4. அடமானம் வைக்கப்படும் சொத்துக்கு வட்டியைக் குறைத்தல் - அதனால் மிச்சப்படும் தொகையைக் கொண்டு பணக்காரர்களுக்கும் கார்ப்பொரேட் குழுமங்களுக்கும் வரிவிகிதத்தைக் குறைத்தல்
5. ஓய்வு பெறும் வயதை உயர்த்துதல்
6. அதிகச் சம்பளம் பெறுவோரின் ஓய்வு வயதை 69ஆக உயர்த்துதல் முதலான திட்டங்களை ஒபாமா அறிவித்துள்ளார்.
இதனால் அமெரிக்கர் பெரிய அளவில் அதிருப்தி அடைந்துள்ளனர்.
2010 நவம்பர் 4இல் வெளியான அமெரிக்கக் காங்கிரசுக்கான தேர்தல் முடிவு ஒபாமாவின் மக்கள் நாயகக் கட்சிக்குப் பெரிய அடி கொடுத்துள்ளது; அமெரிக்க செனட் தேர்தலிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில்இந்தியாவுக்கு வருகைதந்த பாரக் ஒபாமா இந்தியாவுக்கு வந்தவுடன், முதலில் 6.11.2010 அன்று “பயங்கரவாத ஒழிப்பில் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து போராடும்” என, தாஜ்மகால் பேலஸ் விடுதியில், 26.11.2008 தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்கான இரங்கல் கூட்டத்தில் பேசினார்.
“பயங்கரவாதம்” என்பது அரச பயங்கரவாதம் - கொள்கை வெற்றிக்குப் போராடுவோர் மேற்கொள்ளும் “பயங்கரவாதம்” என்கிற ஆயுதப் போராட்டம் இரண்டையுமே குறிக்கும். இது ஏகாதிபத்தியமும், முதலாளித்துவமும் பெற்றெடுத்த பிள்ளை. ஏகாதிபத்திய ஆட்சி முறையையும் முதலாளித்துவச் சுரண்டலையும் காப்பதற்காகவே அரசுகள் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, ஏகாதிபத்தியத்துக்கெதிரான முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிரான போராளிகளைக் கொல்லுகின்றனர். இது நீடிக்கிற வரையில் போராளிகளின் ‘பயங்கரவாதம்’ சாகாது; நீடிக்கும். அமெரிக்கர்கள் எப்போதும் தொழில் பெருக்கத்தையும் சந்தை விரிவாக்கத்தையும் நாடுபவர்கள். ஒபாமா அதில் குறியாக இருந்தார்.இந்தியப் பெருங்குழும முதலாளியான அனில் அம்பானி மற்றும் கார்ப்பொரேட் நிறுவனங்களின் சார்பில் ஜெபரி இம்மெல்ட், கிறிஸ்டோபர் சட்விக் , பூபேந்திர கன் சகரா ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தி, ஓராயிரம் கோடி டாலர் மதிப்புள்ள வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இந்திய நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் 8.11.2010 அன்று சிறப்புரையாற்றினார், ஒபாமா. அப்போது அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்படவேண்டிய தேவையைப்பற்றிக் குறிப்பிட்டார்.
அமெரிக்காவும் இந்தியாவும் இரண்டு பெரிய மக்கள் நாயக நாடுகள். அதன் முதலாவது அடையாளம் அமெரிக்க அரசமைப்புச் சட்டம் போலவே , இந்திய அரசமைப்புச் சட்டமும், “குடிமக்களாகிய நாம் - றுந வாந யீநடியீடந ......” என்று தொடங்குகிறது என்றார். இருநூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட அமெரிக்க அரசமைப்புச் சட்டம் மக்களின் பிரதிநிதிகளைக்கொண்டு எழுதப்பட்டது. பாதி எண்ணிக்கைக்கு மேற்பட்ட மாநிலங்களின் ஒப்புதலைப்பெற்று நிறைவேற்றப்பட்டது. ஆனால் 1949இல் நிறைவேற்றப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டம் அப்படி நிறைவேற்றப்படவில்லை. எனவே, ஒபாமாவின் கூற்று பொருத்தமற்றது; தவறானது.
அடுத்து,
1. நம் இரு நாடுகளும் சந்தைப் பொருளாதாரத்தைப் பேணுபவை;
2. நம் இரு நாடுகளும் நம்மை எதிர்நோக்கும் சவால்களை எதிர்த்து இணைந்தே செயல்படும் கூட்டாளி நாடுகள்;
3. நம் இரு நாடுகளும் பொருளாதார வளர்ச்சிக்குக் குந்தகமான - புதிய வளர்ச்சிக்கு இடையூறான இலவசப் பாதுகாப்புத் திட்டங்களை விரும்பாதவை;
4. நம் இரு நாடுகளும் வெப்ப மயமாக உலகத்தை மாற்றும் சூழல்கேட்டை எதிர்த்துப் போராடுகிற நாடுகள்;
5. நம் இரு நாடுகளும் இணைந்து வேளாண்மையை மேம்படுத்த முடியும் என்று பலவாறாகப் பேசினார்.
இவையெல்லாம் - அமெரிக்கப் பாதையில் இந்தியா நடைபோட வேண்டும் என்பதை இந்தியாவில் வந்து அவர் வற்புறுத்திக் கூறுவதாகும்.
இன்று உலக மக்களில் நூறுகோடிப்பேர் கொடிய வறுமையில் சிக்கித் தவிக்கிறார்கள். இந்தியாவில் 30 கோடி மக்கள் இரவில் பட்டினி கிடக்கிறார்கள்.
உலகில் 2050இல் 910 கோடி மக்கள் இருப்பர். இவர்களுக்கு உணவு தர வேண்டுமானால் இன்றுள்ளது போல் 70% அளவுக்கு உலக வேளாண்மை உற்பத்தி வளர்க்கப்பட வேண்டும்; வளரும் நாடுகளில் 140ரூ அளவுக்கு உணவு உற்பத்தி வளர்க்கப்பட வேண்டும்.
இந்திய வேளாண்மை 1990 முதல் வீழ்ச்சியடையத் தொடங்கியது. 2010இல் இந்தியா 5.74 கோடி டன் தானியத்தையே கொள்முதல் செய்தது; ஆனால், தேவையோ 6.21 கோடி டன் ஆகும். துண்டுவிழும் 47 இலட்சம் டன் உணவை எப்படிப் பெறுவது? இறக்குமதி மூலமா? அல்லது உணவு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமா?
தமிழ்நாட்டில் வேளாண்மை செய்ய ஏற்ற மொத்த நிலப்பரப்பு 51 இலட்சம் எக்டேர்; ஆனால், இன்று, இதில் 19 இலட்சம் எக்டேர் மட்டுமே பயிர் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் நீர்நிலைகள் பாதுகாக்கப்படவில்லை; புதிய பாசன வசதிகள் பெருக்கப்படவில்லை; மின் வசதி பெருக்கப்படவில்லை; வேளாண் கடன், உரம், விதை வசதிகள் உரிய காலத்தில் தரப்படுவதில்லை. இதன் காரணமாக 2001க்குப் பிறகு வேளாண் உற்பத்தியில் 20ரூ குறைந்துவிட்டது.
இந்தியாவில் 500 விதைப்பண்ணைகள் உள்ளன. இவற்றுள் மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் வெளிநாட்டு விதை நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகின்றன. இன்னும் 12 ஆண்டுகளில் இது பன்மடங்கு அதிகரிக்கும். இந்தியப் பாரம்பரிய விதைகள் அழியும். வேளாண்மையை நம்பியிருப்போர் வருவாய்க்கு வழியின்றித் தவிப்பர்.
தொழில்துறை முற்றிலுமாக உள்நாட்டு, வெளிநாட்டுப் பெரு முதலாளிகளிடம் விடப்பட்டு , அதனால் அந்நியப் பண மூலதனம் அளவுகடந்து நுழைந்துவிட்டது. அந்நிய முதலாளிகள் தொழில் மண்டலங்களை உருவாக்கி மலிவான விலைக்கு வேளாண் நிலங்களை வாங்கி, அரசிடம் தடையில்லா மின்வசதி, வரிகட்ட வேண்டாத விடுமுறைக்காலம், தடையற்ற நீர்வசதி, மலிவான கூலிக்கு உடலுழைப்பு மற்றும் மூளை உழைப்புக்காரர்களை வைத்து கார்,வேன், சரக்குந்து, மின்சாதனங்கள் முதலானவற்றை உற்பத்தி செய்து இந்தியாவைச் சுரண்டுகிறார்கள். இதற்கு இந்திய அரசு மிகவும் இணக்கமாக உள்ளது.அதே நேரத்தில் இந்திய முதலாளிகள், இந்திய அரசியல்வாதிகள், வணிகர்கள் சுவிஸ்நாட்டு வங்கியில், 2006 கணக்குப்படி, 1,45,600 கோடி டாலர் பணத்தைக் குவித்துள்ளனர். இந்தியாவில் உற்பத்தித் தொழிலில் பயன்படுத்தப்படாமல் இப்பெருந்தொகை அயல்நாட்டில் குவிக்கப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பு, கையூட்டாகப் பெற்றது, கமிஷனாகப் பெற்றது என இந்தியர்களால் 1948-2008 காலத்தில் மறைக்கப்பட்ட கறுப்புப் பணம் 20 இலட்சம் கோடி உருபா ஒளித்துவைக்கப்பட்டிருப்பதாக - உலக வங்கி நிதியின் நேரிய பயன்பாடு (Global Financial Integrity - GFI) அமைப்பைச் சார்ந்த உலக நிதியத்தின் முன்னாள் பொருளாதார அறிஞர் தந்த அறிக்கை கூறுகிறது. 2008இல் மட்டும் இந்திய தேசிய வருமானத்தில் 36ரூ இப்படிக் கறுப்புப் பணமாக மாறிவிட்டது என அவருடைய அறிக்கை கூறுகிறது.
* கார்ப்பொரேட் தொழில் வணிக முறை
* பெரு வணிகர்கள் மொத்த வணிகம் முதல் சில்லறை வணிகம் வரை நேரடியாக ஈடுபட அனுமதித்தல்
* அயல்நாட்டுத் தொழில் நிபுணர்களை வங்கித் தொழில் நிறுவனங்களில் அமர்த்திக்கொள்ளவும் எழுத்தர், கணினிப் பொறியாளர் பணிகளுக்கு இந்தியரைக் குறைந்த கூலிக்கு அமர்த்திக்கொள்ளவும் அனுமதித்தல்; தொழிலாளர்கள் சங்கம் வைக்கவும் போராடவும் கூடாது என்று முதலாளிகள் அரசிடம் எழுத்து மூலம் உறுதி பெறுவது;
பொதுத் துறை அரசுத் துறைப் பணிகளிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் அந்நிய நாட்டு வங்கிகள், தொழில் நிறுவனங்களில் நிருவாக மற்றும் ஆலோசகர்கள் பதவிகளில் அமர்த்தப்பட அனுமதிப்பது;
நிலக்கரி, இரும்பு, அலுமினியம் மற்றும் உள்ள கனிமப் பொருள்கள் புதைந்துள்ள நிலங்கள், காடுகள் மலைசார்ந்த இடங்கள் இவற்றை அந்நிய நாட்டினரும் இந்தியப் பெருமுதலாளிகளும் விலைக்கு வாங்கி, கனிமப் பொருள்களை அளவின்றித் தோண்டி எடுக்கவும், ஏற்றுமதி செய்யவும், காடுகளை அழிக்கவும், ஆற்றுப்
படுகைகளைத் தோண்டி எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்கவும், நீரை உறிஞ்சி எடுத்து விற்கவும் உரிமம் அளிப்பது என்பதை இந்திய ஏகாதிபத்திய அரசு மனங்கூசாமல் - நாட்டின் ஆதிபத்தியம் பற்றிக் கவலைப்படாமல் - இந்திய வளங்களை விலைக்கு விற்கிறது.
இந்திய ஆளும் மேல்சாதிக்கும்பல், அமெரிக்காவுக்கும், அய்ரோப்பிய நாடுகளுக்கும் இந்தியாவை அடகுவைத்துவிட்டது; இந்தியாவின், இந்தியரின் நலங்களை - நூற்றுக்கணக்கான தேசிய இனங்களின் ஒட்டுமொத்த நலன்களை உலக ஏகாதிபத்தியத்துக்குக் காவு கொடுத்துவிட்டது.
கி.பி. 2025க்குள் இந்தியா-இந்தியக் கொள்ளையர்களின், உலகக் கொள்ளைக்காரர்களின் கொள்ளைக்களமாக மாற்றப்பட்டுவிடும். இந்தியரும் - இங்குள்ள உழைப்பாளி மக்களும் பசி, பட்டினிக்கும், நோய்க்கும் ஆளாகி அல்லல்படுவர்.
நம் நாட்டின்- நம் ஊரின் அஞ்சத்தக்க இப்படிப்பட்ட எதிர்காலம் பற்றி நாம் கவலையோடு சிந்திக்க வேண்டும்.