பிரெஞ்சு சிந்தனையாளர், ழான் போத்ரியா (Jean Baudrillard) 1929-2007, நம் காலத்தில் வாழ்ந்த முக்கியமான ஒரு சிந்தனையாளர். கடந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த தத்துவாசிரியரான அவர், தற்கால சமூகம், பண்பாடு ஆகியவைகளை தத்துவக்கண் கொண்டு அலசினார். பின் அமைப்பியல், பின் நவீனவியல் வட்டங்களில் நன்கு அறியப்படும் போத்ரியா, முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதுயுள்ளார். பிரபலமான “தி மேட்ரிக்ஸ்” (The Matrix) திரைப்படம், போத்ரியாரின் கருத்துக்களை முன்வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். நுணுக்க கோட்பாடு (Critical Theory) முன்னோடியான போத்ரியா, தமிழுலகில் இன்னும் முழுமையாக அறிப்படாதவராகவே உள்ளார். இச்சிறுகட்டுரை, போத்ரியாரின் சில கருத்துக்களை அறிமுகப்படுத்துகிறது.

Jean Baudrillardழான் போத்ரியா எழுதியா செயற்போலிகள் (Simulations) நூலை படிக்கையில், பின்நவீன‌ சூழல் குறித்த நுணுக்கமான பல செய்திகள் அறியப்படுகின்றன. பின் நவீன காலத்தில் மக்கள், நடுவம் (Centre), குறிக்கோள் (Goal), என எதுவும் இல்லாமல் பல செயல்களை தொடர்ச்சியாக செய்வதாக அவர் கூறுகிறார். நவீன கால (Modern Period) மக்களும் ஒரே வகையான செயல்களைத் தொடர்ச்சியாக, இயந்திரத்தனமாக (Mechanical) செய்து வந்தாலும்,அந்த நவீன கால மக்கள் வாழ்க்கைக்கும், பின்நவீன‌ கால மக்கள் வாழ்க்கைக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. நவீன வாழ்க்கையானது, தொடர்ச்சியாக ஒரே வகையான (Repetitive) சுழற்சியான செயல்களை கொண்டு சலிப்பு தருவதாக அமைந்தது. ஆனால், பின்நவீன‌ கால வாழ்வானது, அதே சுழற்சியான வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தாலும், பின்நவீன‌ கால வாழ்வில் சலிப்பு இல்லாமல் ஒரு போலி சுவரசியம் நிறைந்துள்ளதாக போத்ரியா கூறுகிறார்.

எதார்த்தத்தில் பின்நவீன‌ காலம் பல புதிய மாற்றங்களைக் கொண்டிருப்பது போல் தெரிந்தாலும், இம்மாற்றங்கள் எதற்காக நிகழ்கின்றன என கேள்வி எழுப்புகிறார் போத்ரியா. பொதுவாக, மாற்றங்கள் என்பன அடுத்த தாளத்திற்கு முன்னேற்றங்களாக இருக்கும், ஆனால் பின்நவீன‌ காலத்து மாற்றங்கள் இது போல் எந்த குறிக்கோள்களும் (Telos) இல்லாமல், மாற்றங்கள் வெறும் மாற்றங்களுக்காகவே (Change for change) நிகழ்வதாக அவர் கூறுகிறார்.

ஒரு எளிமையான எடுத்துக்காட்டாக, இன்றைய தொலைக்காட்சிகளில் நிகழ்ந்துள்ள மாற்றங்களை அவர் குறிப்பிடுகிறார். இன்று செய்தித் தொலைக்காட்சிகள் பெருகி இருக்கின்றன. அவைகளை மாற்றி மாற்றி பார்க்கும் பார்வையாளனுக்கு அவை தகவல்களை அள்ளித் தருவது போல் தோற்றம் அளித்தாலும், உண்மையில் இறுதியாக மிஞ்சுவது வெறுமை உணர்வுதான் என அவர் கூறுகிறார். மேலும், எதற்காக செய்திகளைப் பார்க்கிறோம்? பார்த்த பிறகு எப்படி எதிர்வினையாற்றப் போகிறோம்? என எந்த எண்ண‌முமில்லாமல், மக்கள் வெறுமனே செய்திகளைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே செய்திகளைப் பார்ப்பதாகவும், மேலும் தொடர்ந்து மாற்றி மாற்றி பார்க்கும் இந்த சுழற்சியான செயல் சோர்வு தராமல், சுவாரசியம் தருவதாக இருந்தாலும், இந்த நடவடிக்கைகளில் குறிக்கோள் சார்ந்து எதுவும் இல்லை என்கிறார் போத்ரியா.

பின்நவீன‌ காலத்தில் நிகழும் இவ்வாறான செயல்களை, போத்ரியா, குறிக்கோள் அற்ற செயல்கள் (Non-Teleological Activity) எனக் கூறுகிறார். பெருநகரங்களில் நடத்தப்படும் தொடர் ஓட்டம் போன்ற போட்டிகளில், இதுபோலவே வெற்றி தோல்வி என எந்தக் குறிக்கோளும் இல்லாமல், ஓடுவதற்காக ஓடுவது, மற்றவர்களுக்காக கலந்துகொள்வது என இலக்கு இல்லாத மந்தை மனப்பாங்குடன் மக்கள் ஈடுபடுகிறார்கள் எனவும் அவர் கூறுகிறார். இவ்வாறாக பின்நவீன காலமென்பது வேலை X ஓய்வு, வெற்றி X தோல்வி என வேறுபாடுகள் எதுவுமில்லாத ஒரு வாழ்க்கையாக, அதே சமயம் அலுப்பு தட்டாத, சுவரசியம் நிறைந்த ஒரு வாழ்க்கையாக மாறி இருக்கிறது.

இவ்வாறான செயற்கையான கேளிக்கைகள், வாழ்க்கை முறைகள், ஒருகட்டத்தில், செயற்கை X இயற்கை என்ற முரணையும் தாண்டி, ஒரு தனிவகையாக மாறிவிடுகின்றன என்கிறார், போத்ரியா. இந்நிலை உருவாகவும், தொடரவும் காரணமாக இருப்பது, முன்றாம் நிலை செயற்போலிகள் (Third Order Simulations) என்கிறார் அவர்.

செயற்போலிகளை மூன்று நிலையாக தரம்பிரிக்கிறார் போத்ரியா. முதல் நிலை செயற்போலியானது (First Order Simulation), உண்மையை சுட்டிக்காட்டும் போலியாக இருக்கும். சான்றாக, ஓர் உண்மை நிகழ்வைக் காட்டும் நாடகம், புதினம், ஒரு நாட்டை காட்டும் வரைப்படம், புகைப்படம், ஓவியம் போன்றவை முதல் நிலை போலிகளாகும். இந்த முதல் நிலை போலிகள், தாங்கள் போலிகள் என தெளிவுப்படுத்திக் கொண்டே உண்மை நிலையை சுட்டிக் (Represent) காட்டுபவை.

இரண்டாம் நிலை செயற்போலி (Second Order Simulatioந்) உண்மையை அப்படியே ஒத்திருக்கும். நிஜத்தைப் போலவே இருக்கும் போலிகள் இரண்டாம் நிலை செயற்போலிகளாகும். எடுத்துக்காட்டாக, ஒரு சிங்கத்தைப் போலவே தோற்றத்தில், பருமனில், உருவாக்கப்பட்ட ஒரு பொம்மை சிங்கம். உண்மைக்கும், போலிக்கும் இடையேயான வேற்றுமைகள் மங்கவைக்கப்பட்டு, உண்மையும், பொய்யும் குழம்பிய நிலையாகும்.

முதல் நிலை செயற்போலிகள், ஓர் உண்மை நிலையை சுட்டுபவையாக‌ அமைகின்றன. உண்மைக்கும், அவைகளுக்கும் வேற்றுமை தெளிவாக அறியப்படும். இரண்டாம் நிலை போலிகள், ஒரு உண்மையை அப்படியே முழுவதுமாக நகல் எடுத்தாற்போல் பாவனை செய்பவை (முழுஉருவ சிங்கப் பொம்மை). இவைகள் அசலைப்போலவே உருவெடுத்து தோற்றமளிப்பவை. ஆக, இந்த இராண்டு போலிகளுக்கும் தாங்கள் போலிகள் ஆவதற்கு உண்மை-அசல் ஒன்று தேவைப்படுகின்றது.

மூன்றாம் நிலை செயற்போலி (Third Order Simulation)மிக நுணுக்கமானவை மற்றும் மிக முக்கியமானவை. மூன்றாம் நிலைப் போலிகள் மிக வித்தியாசமானவை, அவைகள் உன்மை நிலை-அசல் என்று ஒன்று இல்லாமலே, ஒரு பொய்யான நிலையை மீள்போலி செய்பவையாக அமைகின்றன. இதைப் புரிவதற்கு ஒரு விரிவான உதாரணத்தை நாம் அலச வேண்டியுள்ளது. போத்ரியா, தனது கருத்துகளை எடுத்துரைப்பதற்கு அதிகமாக அமெரிக்காவையே அலசுகிறார். இம்மூன்றாம் நிலைப் போலியை விளக்க, போத்ரியா நம்மை அமெரிக்காவில் உள்ள டிஸ்னிலேண்டுக்கு அழைத்துச் செல்கிறார்.

அமெரிக்காவில் உள்ள டிஸ்னிலேண்டு, ஒரு பெரிய பொழுதுபோக்கு பூங்காவாகும். அதன் தனித்துவம் என்னவென்றால், அங்கு இடம் பெற்றிருக்கக்கூடிய அனைத்தும் கற்பனை உலக (Fantasy) சங்கதிகளாகவே இருக்கும். மேலை நாட்டு மாயாஜால கதைகளில் வரும் கட்டிடங்கள், கார்டூன்களில் வரும் கதாப்பாத்திரங்கள், ஹாலிவுட் படங்களில் வரும் காட்சிகள் போன்றவைகள் டிஸ்னிலேண்டில் இடம்பெற்றிருக்கும். டிஸ்னிலேண்டில் நுழையும் எவரும் தாம் ஒரு கனவுலகில் திளைக்கிறோம் என அது நினைக்கவைக்கும். ஆக டிஸ்னிலேண்டில் உலாவரும் மக்கள் தாம் இருப்பது, செயற்கையான இடம் என்பதை உடனடியாக அறிந்து, உண்மையான உலகம், டிஸ்னிலேண்டிற்கு வெளியே இருக்கும் அமெரிக்க நாடு என நினைப்பார்கள்.

இங்கு தான் ஒரு நுணுக்கமான செய்தியுள்ளது. டிஸ்னிலேண்டில் இருப்பவர்கள், டிஸ்னிலேண்டில் இருப்பது பொய், வெளியே நடப்பவை மெய் என உணர்கிறார்கள் அல்லவா? இது தான், மூன்றாம் நிலை செயற்போலியின் செயல்பாடு. வெளியே, அமெரிக்காவில் நடத்தப்படும் வர்த்தகம், அரசு, அரசியல் ஆகியவை அனைத்தும் திட்டமிட்ட போலிகளாக இருக்க, டிஸ்னிலேண்டில் இருப்பவர்கள் அமெரிக்காவை, அங்கு நடப்பவைகளை உண்மை என நினைக்கிறார்கள். உண்மையில், அமெரிக்காவே ஒரு போலி பூமி என்று இருக்க, அதன் போலித்தன்மையை மறைக்க டிஸ்னிலேண்டு என்ற ஒரு செயற்கை நிலம் பயன்படுகிறது. ஆக, இங்கு இல்லாத ஒன்றை (போலிதன்மை அற்ற அமெரிக்கா), இருப்பது போல் காட்ட, பொய்யாக ஒன்று (டிஸ்னிலேண்டு) செயல்படுகின்றது.

முதல் இரண்டு போலிகள், ஒரு அசலை நகல் எடுத்து போலிகளாக திகழ்கின்றன. ஆனால், மூன்றாம் நிலை போலியோ அசலே இல்லாமல் (உண்மையாக செயல்படும் அமெரிக்கா), ஒரு அசல் இருப்பது போல், அந்த (இல்லாத) அசலுக்கு போலியாக செயல்படுகின்றது. இவ்வகையான போலிகள் சமூகத்தில் உருவாக்கும் நிலைமையை, போத்ரியா, மீமெய் (Hyperreal) என்று அழைக்கிறார். மேலும், இந்த மீமெய் நிலையில் அசல்-பொய் பாகுபாடுகள் விலகிவிடுவதாகவும், அந்நிலையில் போலி, அசலை முந்திவிடுவதாகவும் எடுத்துரைக்கிறார், போத்ரியா. இந்த மீமெய் நிலை, போத்ரியாரின் கருத்துக்களில் மிகவும் முக்கியாமானதாகும்.

போத்ரியா, இந்த மூன்றாம் நிலை போலியை எடுத்துக்காட்ட, இன்னொரு அமெரிக்க நிகழ்வைக் கூறுகிறார். எழுபதுகளில், அமெரிக்க அதிபர் நிக்சன் ஆட்சியில் நடந்த ஊழல்கள், அவர் தனது எதிர்க்கட்சியினரைக் கண்காணிக்க வாட்டர்கேட் (Watergate) என்ற கட்டிடத்தில் உளவுபார்த்த‌து முதலான செய்திகள் அமெரிக்காவை உலுக்கின. இவை பொதுவாக வாட்டர்கேட் ஊழல் என அழைக்கப்பட்டது. இந்த ஊழல், நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இறுதியாக நிக்சன் பதவிவிலகினார். அத்துடன் அமெரிக்காவில் ஊழல்கள் ஒழிந்துவிட்ட‌தாகவும், நிலைமை சீரானதாகவும் செய்தி பரப்பப்பட்டது.

இந்நிகழ்வுகளை, போத்ரியா வேறு விதமாகப் பார்க்கிறார். சீராக சென்றுகொண்டிருந்த அமெரிக்காவில் வாட்டர்கேட் ஊழலானது ஒரு தடுமாற்றம் எனவும், இப்பொழுது அது முடிந்துவிட்டதால், மீண்டும் அமெரிக்கா, நீதியான பாதைக்குத் திரும்பிவிடும் என ஒரு மீமெய் நிலையை வாட்டர்கேட் நிகழ்வு உருவாக்கியது. வாட்டர்கேட் முடிந்துவிட்டது என சொல்லி, எல்லாம் சரியாகிவிட்டது எனக் கூறுவது, அமெரிக்காவில் தொடர்ந்து நிகழும் மற்ற ஊழல்களை மறைக்கும் ஒரு மூன்றாம் நிலைப்போலி என்கிறார், போத்ரியா.

இக்கட்டுரையின் துவக்கத்தில் கண்ட பின்நவீன‌ கால வேற்று போலி சுவாரசியங்கள், இந்த மூன்றாம் நிலைப் போலிகளால் உருவாக்கப்படும் மீமெய் நிலைகளில் நிலைபெறுகின்றன. பின்நவீன‌ கால மக்கள் உண்மை-பொய் நிலைகளைத் தாண்டி ஒரு பெரும் திட்டமிடப்பட்ட போலி நிலையில் உழல்வதாக போத்ரியா கூறுகிறார்.

Pin It