சீனக் கம்யுனிஸ்ட் கட்சியைப் பற்றிய ஒரு மதிப்பீடு பற்றிய விமர்சனம்

நண்பர் மதி அரசு, சீனக் கம்யுனிஸ்ட் கட்சியைப் பற்றி ஒரு மதிப்பீடு செய்து எழுதி இருக்கிறார். ஆனால் அது திரிபு வாதத்திற்குத் துணை போவதாகத் தான் தோன்றுகிறது. அதைப் பற்றிய விமர்சனத்தை அளித்து உள்ளேன். வாசகர்கள் இரண்டையும் படித்துப் பகுப்பாய்வு செய்து கொள்ளவும்.

leninமதி அரசு: பொதுத் திட்டம் என்ற ஓர் ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டு அக்கட்சியைப் பற்றிய ஒரு புரிதலை அடைவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

நண்பர் மதி அரசு அவர்களே! ஒரு கட்சியின் ஆவணத்தை மட்டும் வைத்துக் கொண்டு அக்கட்சியின் கொள்கையைப் புரிந்து கொள்வது சரியாக இருக்குமா? அதன் செயல்பாட்டையும் வைத்து மதிப்பிடுவது தானே சரியாக இருக்கும்?

மதி அரசு: வர்க்கப் போராட்டமானது ஒரு குறிப்பிட்ட வகையில் நீண்ட காலத்திற்கு நீடிக்கும், சில நேரங்களில் (உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சக்திகளின் தாக்கத்தால்) கடுமையானதாகவும் இருக்கலாம். ஆனால் இது இனிமேலும் முதன்மையான முரண்பாடாக இல்லை.

ஒன்றுக்கொன்று எதிரெதிரான வர்க்கங்கள் இருக்கும் வரையிலும், சமூக வளர்ச்சியைப் பொருத்த மட்டில் அவ்வர்க்கங்களுக்கு இடையில் இருக்கும் முரண்பாடே முதன்மையான முரண்பாடாகும்.

மதி அரசு: மக்களின் வளர்ந்துவரும் பொருளாதார மற்றும் கலாச்சாரத் தேவைகளுக்கும், பின் தங்கிய உற்பத்தி நிலைக்கும் அதாவது மனிதனுக்கும் இயற்கைக்குமான முரண்பாடே முதன்மையானது.

இன்று மக்களின் தேவைகளை உருவாக்குவது சந்தையின் போட்டி முறைகளும் விளம்பர உத்திகளுமே. இது மக்களுக்கும் இயற்கைக்கும் உள்ள முரண்பாட்டின் அடிப்படையில் இல்லை. உழைக்கும் வர்க்கத்தை மேலும் மேலும் அடிமைப் படுத்தும் வகையிலேயே உள்ளது. ஆகவே வர்க்க முரண்பாடே முதன்மையாக உள்ளது.

மதி அரசு: எனவே பொருளாதார முன்னேற்றமே முதன்மை நோக்கமாகும். மற்ற எல்லா நடவடிக்கைகளும் இதற்கு துணை செய்வதாகவே இருக்க வேண்டும். உற்பத்தி சக்திகளை மேலும் விடுவிப்பதும், வளர்த்து எடுப்பதுமே அடிப்படைக் கடமையாகும். இதனை உறுதி செய்யாத உற்பத்தி உறவுகளையும், மேற்கட்டுமானத்தையும் படிப்படியாக மாற்றியமைப்பதுவுமே சோசலிச நவீனமயமாக்கலாகும்.

ஆனால் சீனாவில் என்ன நடைபெறுகிறது? இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி முறை ஊக்குவிக்கப்படுகிறது. மக்களுக்கு வேலை வாய்ப்பு உத்தரவாதம் மறுக்கப்படுகிறது. பசி பட்டினி இல்லாமல் இருந்த நாட்டில் இப்பொழுது அவை உருவாகி உள்ளன. ஒரே மாதிரியான தொழிற்சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. அதாவது தொழிற்சாலைகளில் நன்கு தெரிந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் (இலாப நோக்கத்தைக் கணக்கில் கொண்டு) எடுக்கப்படுவது இல்லை. இதை எப்படி சோஷலிசத்தை நவீனமயமாக்கல் என்று சொல்ல முடியும்?

மதி அரசு: ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சியின் கடமை வர்க்கப் போராட்டத்தைக் கூர்மைப்படுத்தி எடுத்துச் செல்வதா அல்லது அவற்றை சுருங்கச் செய்து ஒத்திசைவான சமூகத்தை உருவாக்குவதா? இது முற்றிலும் சார்புடையது ஆகும். அதாவது பாட்டாளிவர்க்கம் எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பொருத்தது. அது ஒடுக்கப்பட்ட வர்க்கமாக இருக்கும்போது ஆளும் வர்க்கத்திற்கு எதிராக வர்க்கப் போராட்டத்தை கூர்மைப்படுத்தி, அதைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டிய கடமையிலிருக்கிறது. அதே பாட்டாளி வர்க்கம் ஆளும் வர்க்கமாக மாறிய பிறகு அப்படிச் செய்ய வேண்டிய அவசியம் எழவில்லை. எப்போதும் ஆளும் வர்க்கத்திற்கு சமூக அமைதிதான் தேவைப்படுகிறது.

ஒத்திசைவான சமூகம் என்பது எதிர் எதிர் நலன்களை அடிப்படையாகக் கொண்ட வர்க்கங்கள் இல்லாத போது தான் சாத்தியமாகும். சுரண்டும் வர்க்கத்திற்கு உழைக்கும் வர்க்கம் அவசியம் தேவை. உழைக்கும் வர்க்கம் இல்லாவிட்டால் சுரண்டும் வர்க்கம் உயிரோடு இருக்க முடியாது. ஆகவே சுரண்டும் வர்க்கம் உழைக்கம் வர்க்கத்தை அடக்கி ஒடுக்கத் தான் முயலுமே ஒழிய ஒரு போதும் ஒழித்துக் கட்ட முற்படாது. ஆகவே ஒத்திசைவான சமூகம் என்ற சொல்லாடல்களை மயக்கு மொழிப் பேச்சாகப் பயன் படுத்தும். ஆனால் உழைக்கும் வர்க்கத்திற்கு, சுரண்டும் வர்க்கம் தேவையே இல்லை என்பதோடு அது சமூகத்திற்கு ஒரு சுமையும் ஆகும். ஆகவே ஒரு சோஷலிச அரசு சுரண்டும் வர்க்கத்தை வலுக்கட்டாயமாக உழைக்கும் வர்க்கமாக மாற்றத் தான் முயலுமே ஒழிய ஒத்திசைவான சமூகம் என்று கதை பேசிக் கொண்டு இருக்காது.

மதி அரசு: ஏகாதிபத்தியம் பலமாக இருக்கும்போது ஒப்பீட்டளவில் பாட்டாளி வர்க்கம் பலவீனமாக உள்ளபோது பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசியம் என்ற வகையில் பிறநாட்டு விவகாரங்களில் தலையிடுவது, மறுபுறத்தில் ஏகாதிபத்திய தலையீட்டை நியாயப்படுத்துகின்ற சூழலை உருவாக்கும். இதனால் பலமாக உள்ள ஏகாதிபத்தியமே பலனடையும். மாறாக புறநாட்டு உள்விவகாரங்களில் தலையிடாமை மேலும் உலக மக்கள் ஆதரவைப் பெற்றுத் தரும். இதனால் பாட்டாளி வர்க்கம் உண்மையில் பலம் பெறவே செய்யும். எனவே நீண்டகால நோக்கில் பார்க்கும்போது சீனாவின் கொள்கை சரியானதாகவே தோன்றுகிறது. இதனை சோவியத்-அமெரிக்க பனிப்போரின் முடிவுகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஏகாதிபத்யம் வலுவாகவும், பாட்டாளி வர்க்கம் பலவீனமாகவும் இருக்ககையில் புரட்சி வீரர் ஃபிடல் காஸ்ட்ரோவின் அணுகுமுறை தான் சரி.

மதி அரசு: உற்பத்தி சக்திகளின் பின்தங்கிய நிலையைக் கணக்கில் கொண்டு முதன்முதலாக புதிய பொருளாதாரக் கொள்கையை லெனின் உருவாக்கினார். அதாவது சோசலிசக் கட்டுமானத்திலிருந்து சற்று பின்வாங்குவது இது என்று லெனின் விளக்கினார். ஒரு பொருளாதார, கலாச்சார ரீதியில் பின்தங்கிய சமூகத்தில் மிகவும் முன்னேறிய உற்பத்தி உறவுகளாகிய சோசலிச உறவுகள் நிறுவினால் வெற்றி பெறாது. உற்பத்தி பெருகாது, மாறாக தேக்கமடையும் என்பது இதன் பொருளாகும். இதன்மூலம் முதலாளித்துவம் என்கிற வரலாற்றுக் கட்டத்தைத் தாண்டிக் குதித்து சோசலிசத்திற்கு செல்வது சாத்தியமில்லை என்று விளங்கும்.

லெனின் அறிவித்த புதிய பொருளாதாரக் கொள்கை புரட்சிகர உணர்வு எட்டாத, உழைக்க ஆயத்தமாக இருந்த விவசாயிகளுக்கானது ஆகும். அதுவும் மேலும் மேலும் வளர்வதற்காக அல்ல. அவர்கள் கூட்டுப் பண்ணை முறையின் நன்மைகளைக் கண்டு, அதற்கு மாறுவதே அதிக நலன்களைப் பயக்கும் என்று புரிந்து கொள்ளும் வரையிலும் தான். அதைச் சோஷலிசப் பாதையில் இருந்து விலகும் சீனாவின் செயலுக்கு ஆதரவாகக் காட்டுவது சற்றும் பொருத்தம் இல்லாதது. மேலும் முதலாளித்துவம் முழுமையாக முடிந்த பின் தான் சோஷலிசம் வர முடியும் என்று கூறுவது, நோய் முற்றிய பிறகு தான் சிகிச்சை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறுவது போல் உள்ளது.

மதி அரசு: வரலாற்றில் ஒவ்வொரு உற்பத்தி முறையும் சில நூறு ஆண்டுகள் நீடிக்கும்போது முதலாளித்துவத்தின் கருவறையில் சோசலிசம் வளர்ந்து பிறப்பெடுப்பதற்கும் சில நூறு ஆண்டுகள் தேவைப்படலாம். சோசலிசத்திற்கான அடித்தளம் முதலாளித்துவ சமூக அமைப்புக்குள்ளேயே (உலக முழுவதையும் கணக்கிலெடுக்க) நன்கு வளர்ச்சி அடைய வேண்டியுள்ளது. இல்லையெனில் அது குறைப்பிரசவமாகவே முடிவடையலாம். இதனைக் கருத்தில் கொண்டுதான் சீனக் கட்சியும் முதலாளித்துவ முறையிலான உற்பத்தி முறையையும் தொடருவதாக தெரிகிறது. நடைமுறையில் இது மக்களுக்கு நல்ல பலனையே முதன்மையாக கொடுத்துள்ளது. இதை அவர்கள் சோசலிச சந்தைப் பொருளாதாரம் என்கின்ற‌ர். பிரதானமாக பொதுத்துறையும் அக்கம்பக்கமாக தனியார் துறையும் ஊக்குவிக்கின்றனர். சந்தையானது மூலாதாரங்களை ஒதுக்குவதற்கும் பெருவீத பொருளாதார திட்டமிடலுக்கும் உதவுவதாகக் கூறுகின்றனர். உற்பத்தி உறவைப் பொருத்தவரை உழைப்புக்கேற்ற ஊதியம் என்ற சோசலிச உற்பத்தி உறவு பிரதானமாகவும், சில பகுதிகளும் நபர்களும் முதலில் முன்னேற அனுமதிக்கின்ற முதலாளித்துவ உறவு இரண்டாம் பட்சமாகவும் நிலவுவதாகக் கூறுகின்றனர். இது சரியானதாகவே தோன்றுகிறது.

எப்படியோ சீனா முதலாளித்துவ உற்பத்தி முறையில் செல்வதாக ஒப்புக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் முதலாளித்துவ முறையில் தான் வளர்ச்சியை அடைய முடியும் என்று கூறுவது இரண்டு விதங்களில் தவறு.

முதலில் சந்தை கட்டும் விலங்கு, சோஷலிசத்தில் இருக்காது. ஆகவே சோஷலிசத்தில் தான் வளர்ச்சி வேகம் அதிகமாக இருக்க முடியும். அப்படி நடக்கா விட்டால் சோலிசத்தைக் கையாள்பவர்களின் திறமைக் குறைவு தான் காரணமாக இருக்க முடியுமே ஒழிய உற்பத்தி முறையில் அல்ல.

இரண்டாவதாக வளர்ச்சி என்றால் என்ன என்பதில் உள்ள புரிதல் வேறுபாடு. புவியின் இயற்கை வளங்களைப் பிழிந்து எடுப்பது தான் வளர்ச்சி என்று முதலாளித்துவ அறிஞர்கள் கணக்கிடுகின்றனர். ஆனால் சோஷலிச முறைப்படி மக்களின் நல்வாழ்வு தான் உற்பத்தியின் அடிப்படையாக இருக்க வேண்டும். புவி வெப்பமும், சூழ்நிலைக் கேடும் புவியை அழிவுப் பாதையில் கொண்டு சென்று கொண்டு இருக்கும் இவ்வேளையில் இயற்கை வளங்களைப் பிழிவதை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு குறைப்பது தான் வளர்ச்சியின் அளவு கோலாக எடுத்துக் கொள்ள முடியும். இது முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு முற்றிலும் ஒவ்வாதது. இதை மனதில் வைத்துக் கொண்டு சீனாவின் அணுகுமுறையைப் பார்த்தால், அது சோஷலிசப் பாதையை விட்டு விலகியது மட்டும் அல்ல; அதைத் தீவிரமாக எதிர்க்கின்றது என்றும் புரியும்.

மதி அரசு: உற்பத்தி சக்திகளின் தொடர்ச்சியான வளர்ச்சியை உறுதி செய்யக்கூடிய உற்பத்தி உறவுகளும் மேல்கட்டுமானமும் இருக்கும் போது புரட்சிக்கான தேவையும் புறச்சூழலும் நிலவுவதில்லை. எனவேதான் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியானது உற்பத்திச் சக்திகளின் விடுதலையையும் வளர்ச்சியையும் முதன்மையானதாக கருதுகிறது. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கு மனிதர்களுக்கிடையிலான உறவு அதாவது உற்பத்தி உறவு தடையாக இல்லாதபோது இயற்கையுடனான முரண்பாடே பிரதானமாகிறது. அதாவது உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியானது இயற்கையை தனக்குச் சாதகமாக மனிதன் எந்த அளவுக்கு மாற்றியமைக்கிறான் என்பதைப் பொருத்ததாக அமைகிறது. உற்பத்திச் சந்திகளின் வளர்ச்சி என்பது எல்லா சமூக அமைப்பிற்கும் பொதுவான ஒரு அடிப்படையான செயல்பாடாகும். எனவே சீனக் கட்சியின் நிலைப்பாடு இந்த விசயத்திலும் சரியானதாகவே தோன்றுகிறது.

சீனா முதலாளித்துவப் பாதையில் அடியெடுத்து வைத்த பிறகு வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி இருப்பதையும், உழைக்கும் மக்களிடையே அமைதி இன்மை பெருகி இருப்பதையும், தொழிற்சாலை விபத்துகள் பெருகி இருப்பதையும் கண்ட பிறகு சீனாவின் நிலைப்பாடு சரியானது என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

- இராமியா

Pin It