உலகின் மிகப்பெரிய கட்சியாகிய சீனப் பொதுவுடைமைக் கட்சியானது ஏறத்தாழ எட்டு கோடியே இருபது லட்சம் உறுப்பினர்களைக் கொண்டது. இதன் பதினெட்டாவது காங்கிரஸ் நவம்பர் 2012ல் நடைபெற்று முடிந்தது. அக்கட்சியின் பொதுத் திட்டம் என்ற ஓர் ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டு அக்கட்சியைப் பற்றிய ஒரு புரிதலை அடைவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

mao-zedongபல்வேறு மார்க்சியக் கட்சிகளால், மாவோவின் மறைவுக்குப் பிறகு சீனாவில் முதலாளித்துவம் மீட்டெடுக்கப்பட்டு விட்டது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முழுமையான திரிபுவாதக் கட்சியாக மாறிவிட்டது என்றே கருதப்படுகிறது. இதற்கு மாறான கருத்தைக் கொண்டவர்களும் இருக்கவே செய்கின்றனர்.

முதலில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தங்களுடைய திட்டம் என்று கூறுவதை சுருக்கமாக காணலாம்.

1. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியானது சீனாவின் உழைக்கும் வர்க்கம், பொதுமக்கள் மற்றும் சீன தேசத்தின் முன்னணிப் படையாகும். முன்னேறிய உற்பத்தி சக்திகளையும், முன்னேறிய பண்பாட்டுத் திசைவழியையும் பிரதிநிதித்துவப்படுத்தி சீனத் தன்மைகளுடன் கூடிய சோசலிசத்திற்கான தலைமை சக்தியாகும்.

2. உடனடித் திட்டம் சீனத்தன்மைகளுடன் கூடிய சோசலிசத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதும், நீண்டகாலத் திட்டம் பொதுவுடைமையை நடைமுறைக்கு கொண்டு வருவதும் ஆகும்.

3. மார்க்சிஸ்ட் லெனினிய - மாவோ சிந்தனை இதன் வழிகாட்டும் தத்துவமாகும். மார்க்சிய லெனினித்தின் அடிப்படை கோட்பாடுகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறது.

4. கட்சியின் நான்கு அடிப்படைக் கொள்கைகளாவன கீழ்க்கண்டவாறு

i) சோசலிசப் பாதையிலேயே செல்லுதல்

ii) மக்கள் சனநாயக சர்வாதிகாரத்தை உயர்த்திப் பிடித்தல்

iii) சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பாத்திரத்தை உறுதி செய்தல்

iv) மார்க்சிய‌ லெனினிய மாவோ சிந்தனை.

5. கட்சி அமைப்புக் கோட்பாடு - சனநாயக மத்தியத்துவம்.

6. சீனா சோசலிசக் கூட்டத்தின் தொடக்க நிலையில் உள்ளது. ஒரு நீண்ட காலத்திற்கு நூறு ஆண்டுகளுக்கும் மேல் நீடிக்கும் இது ஒரு வரலாற்றுக் கட்டமாகும். இதைத் தவிர்க்க முடியாது. ஏனெனில் சீனா, சமூகப் பொருளாதார ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.

7. வர்க்கப் போராட்டமானது ஒரு குறிப்பிட்ட வகையில் நீண்ட காலத்திற்கு நீடிக்கும், சில நேரங்களில் (உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சக்திகளின் தாக்கத்தால்) கடுமையானதாகவும் இருக்கலாம். ஆனால் இது இனிமேலும் முதன்மையான முரண்பாடாக இல்லை.

8. மக்களின் வளர்ந்துவரும் பொருளாதார மற்றும் கலாச்சாரத் தேவைகளுக்கும், பின் தங்கிய உற்பத்தி நிலைக்கும் அதாவது மனிதனுக்கும் இயற்கைக்குமான முரண்பாடே முதன்மையானது.

9. எனவே பொருளாதார முன்னேற்றமே முதன்மை நோக்கமாகும். மற்ற எல்லா நடவடிக்கைகளும் இதற்கு துணை செய்வதாகவே இருக்க வேண்டும். உற்பத்தி சக்திகளை மேலும் விடுவிப்பதும், வளர்த்து எடுப்பதுமே அடிப்படைக் கடமையாகும். இதனை உறுதி செய்யாத உற்பத்தி உறவுகளையும், மேற்கட்டுமானத்தையும் படிப்படியாக மாற்றியமைப்பதுவுமே சோசலிச நவீனமயமாக்கலாகும்.

10. பஞ்சசீலக் கொள்கையின் அடிப்படையில் பிறநாடுகளில் தலையிடாமை, இறையாண்மையைப் பாதுகாப்பது, மேலாண்மையை எதிர்ப்பது, பிற உற்பத்தி முறையினை நாடுகளுடன் சமாதான சகவாழ்வு - மொத்தத்தில் சீனாவில் அமைதியான பொருளாதார வளர்ச்சிக்கு உகந்த சர்வதேச சூழலை உருவாக்குவது.

மேற்கண்ட அவர்களின் பொதுத்திட்டத்தில் மார்க்சிஸ்ட் லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரானதாக எதுவும் இல்லை என்றாலும் விவாதத்திற்குரிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன.

வர்க்கப் போராட்டமா ஒத்திசைவான ச‌மூகமா?

ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சியின் கடமை வர்க்கப் போராட்டத்தைக் கூர்மைப்படுத்தி எடுத்துச் செல்வதா அல்லது அவற்றை சுருங்கச் செய்து ஒத்திசைவான சமூகத்தை உருவாக்குவதா? இது முற்றிலும் சார்புடையது ஆகும். அதாவது பாட்டாளிவர்க்கம் எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பொருத்தது. அது ஒடுக்கப்பட்ட வர்க்கமாக இருக்கும்போது ஆளும் வர்க்கத்திற்கு எதிராக வர்க்கப் போராட்டத்தை கூர்மைப்படுத்தி, அதைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டிய கடமையிலிருக்கிறது. அதே பாட்டாளி வர்க்கம் ஆளும் வர்க்கமாக மாறிய பிறகு அப்படிச் செய்ய வேண்டிய அவசியம் எழவில்லை. எப்போதும் ஆளும் வர்க்கத்திற்கு சமூக அமைதிதான் தேவைப்படுகிறது.

பாட்டாளி வர்க்க சர்வதேசியமா சமாதான சகவாழ்வா?

ஏகாதிபத்தியம் பலமாக இருக்கும்போது ஒப்பீட்டளவில் பாட்டாளி வர்க்கம் பலவீனமாக உள்ளபோது பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசியம் என்ற வகையில் பிறநாட்டு விவகாரங்களில் தலையிடுவது, மறுபுறத்தில் ஏகாதிபத்திய தலையீட்டை நியாயப்படுத்துகின்ற சூழலை உருவாக்கும். இதனால் பலமாக உள்ள ஏகாதிபத்தியமே பலனடையும். மாறாக புறநாட்டு உள்விவகாரங்களில் தலையிடாமை மேலும் உலக மக்கள் ஆதரவைப் பெற்றுத் தரும். இதனால் பாட்டாளி வர்க்கம் உண்மையில் பலம் பெறவே செய்யும். எனவே நீண்டகால நோக்கில் பார்க்கும்போது சீனாவின் கொள்கை சரியானதாகவே தோன்றுகிறது. இதனை சோவியத்-அமெரிக்க பனிப்போரின் முடிவுகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

பொருளாதார வளர்ச்சி எந்தப் பாதையில்? முதலாளித்துவமா சோசலிசமா?

உற்பத்தி சக்திகளின் பின்தங்கிய நிலையைக் கணக்கில் கொண்டு முதன்முதலாக புதிய பொருளாதாரக் கொள்கையை லெனின் உருவாக்கினார். அதாவது சோசலிசக் கட்டுமானத்திலிருந்து சற்று பின்வாங்குவது இது என்று லெனின் விளக்கினார். ஒரு பொருளாதார, கலாச்சார ரீதியில் பின்தங்கிய சமூகத்தில் மிகவும் முன்னேறிய உற்பத்தி உறவுகளாகிய சோசலிச உறவுகள் நிறுவினால் வெற்றி பெறாது. உற்பத்தி பெருகாது, மாறாக தேக்கமடையும் என்பது இதன் பொருளாகும். இதன்மூலம் முதலாளித்துவம் என்கிற வரலாற்றுக் கட்டத்தைத் தாண்டிக் குதித்து சோசலிசத்திற்கு செல்வது சாத்தியமில்லை என்று விளங்கும்.

வரலாற்றில் ஒவ்வொரு உற்பத்தி முறையும் சில நூறு ஆண்டுகள் நீடிக்கும்போது முதலாளித்துவத்தின் கருவறையில் சோசலிசம் வளர்ந்து பிறப்பெடுப்பதற்கும் சில நூறு ஆண்டுகள் தேவைப்படலாம். சோசலிசத்திற்கான அடித்தளம் முதலாளித்துவ சமூக அமைப்புக்குள்ளேயே (உலக முழுவதையும் கணக்கிலெடுக்க) நன்கு வளர்ச்சி அடைய வேண்டியுள்ளது. இல்லையெனில் அது குறைப்பிரசவமாகவே முடிவடையலாம். இதனைக் கருத்தில் கொண்டுதான் சீனக் கட்சியும் முதலாளித்துவ முறையிலான உற்பத்தி முறையையும் தொடருவதாக தெரிகிறது. நடைமுறையில் இது மக்களுக்கு நல்ல பலனையே முதன்மையாக கொடுத்துள்ளது. இதை அவர்கள் சோசலிச சந்தைப் பொருளாதாரம் என்கின்ற‌ர். பிரதானமாக பொதுத்துறையும் அக்கம்பக்கமாக தனியார் துறையும் ஊக்குவிக்கின்றனர். சந்தையானது மூலாதாரங்களை ஒதுக்குவதற்கும் பெருவீத பொருளாதார திட்டமிடலுக்கும் உதவுவதாகக் கூறுகின்றனர். உற்பத்தி உறவைப் பொருத்தவரை உழைப்புக்கேற்ற ஊதியம் என்ற சோசலிச உற்பத்தி உறவு பிரதானமாகவும், சில பகுதிகளும் நபர்களும் முதலில் முன்னேற அனுமதிக்கின்ற முதலாளித்துவ உறவு இரண்டாம் பட்சமாகவும் நிலவுவதாகக் கூறுகின்றனர். இது சரியானதாகவே தோன்றுகிறது.

உற்பத்திச் சக்திகளா உற்பத்தி உறவுகளா? எது முதன்மையானது?

இங்கு மீண்டும் இது ஒரு சார்பியல் உண்மை என்பதை மறக்கக் கூடாது. உற்பத்திச் சக்திகளானது தொடர்ச்சியாக ஒரு சீரான வளர்ச்சிப் போக்கில் உள்ளன. சில அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு ஒரு பண்பு ரீதியான மாற்றங்களையும் அவை அடைகின்றன. உற்பத்தி உறவுகளோ சீர்திருத்த முறையில் ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்தபோதும் மேல்கட்டுமானத்தின் தலையீட்டால் பின் வளரமுடியாமல் ஒரு தேக்கநிலையை அடைகிறது. ஒரு கட்டத்தில் உற்பத்திச் சக்திகளின் தொடர்ச்சியான வளர்ச்சிக்குப் பொருத்தமாக உற்பத்தி உறவுகள் மாறாமல் ஒரே கட்டத்தில் தேங்கிவிடும்போது முரண்பாடு பற்றி மோதலாக, புரட்சியாக வெடிக்கிறது. இப்புரட்சி உற்பத்தி உறவுகளை தாங்கிப் பிடித்திருந்த - உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை மேலும் உறுதிசெய்யாத மேல் கட்டுமானத்தை தகர்க்கிறது. அதன்பிறகு தனக்குப் பொருத்தமான உறவுகளை அமைத்துக்கொண்டு தொடர்ந்து வளர்ச்சி அடைகிறது. இதுவே அவை இரண்டிற்குமான இயங்கியல் உறவாகும்.

உற்பத்தி சக்திகளின் தொடர்ச்சியான வளர்ச்சியை உறுதி செய்யக்கூடிய உற்பத்தி உறவுகளும் மேல்கட்டுமானமும் இருக்கும் போது புரட்சிக்கான தேவையும் புறச்சூழலும் நிலவுவதில்லை. எனவேதான் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியானது உற்பத்திச் சக்திகளின் விடுதலையையும் வளர்ச்சியையும் முதன்மையானதாக கருதுகிறது. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கு மனிதர்களுக்கிடையிலான உறவு அதாவது உற்பத்தி உறவு தடையாக இல்லாதபோது இயற்கையுடனான முரண்பாடே பிரதானமாகிறது. அதாவது உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியானது இயற்கையை தனக்குச் சாதகமாக மனிதன் எந்த அளவுக்கு மாற்றியமைக்கிறான் என்பதைப் பொருத்ததாக அமைகிறது. உற்பத்திச் சந்திகளின் வளர்ச்சி என்பது எல்லா சமூக அமைப்பிற்கும் பொதுவான ஒரு அடிப்படையான செயல்பாடாகும். எனவே சீனக் கட்சியின் நிலைப்பாடு இந்த விசயத்திலும் சரியானதாகவே தோன்றுகிறது.

Pin It