மானுட வாழ்வியல் கூறுகளான கலை, கலாச்சாரம், பண்பாட்டு அம்சங்களைக் காலங்காலமாகப் பின்பற்றி வரும் வழக்கத்தை 'மரபு' என்னும் சொற்பதம் உணர்த்துகிறது, 'நவீனம்' எனும் சொல்லோ மரபிலிருந்து வேறுபட்டு காலத்தின் தேவைகளை புதிய சிந்தனைகள்/யுக்திமுறைகள் மூலம் தீர்த்துக்கொள்ள, மனித வாழ்வியலை முன்னோக்கி நகர்த்த உதவும் ஓர் இயக்கவியல் அணுகுமுறை என்று அர்த்தம் பெறுகிறது. குகை ஓவியங்கள் தொடங்கி தனிமையில் உழலும் அரண்மனைப் பெண் அன்னபட்சியுடன் தன் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளும் ரவி வர்மாவின் ஓவியம் வரைக்கும் அவை தோன்றிய காலத்தில் நவீனம்தான். காமதேனு பசு சாணம் போடுமா? என்ற கேள்வியை எழுப்பும் சந்ருவின் ஓவியம் தன் காலத்தால் நவீனத்துவ/ பின்நவீனத் தன்மையை அடையும்போது ரவிவர்மாவின் படைப்பு மரபு என்னும் இடம் நோக்கி நகர்ந்துவிடுகிறது இயல்பாக.

நவீனத்துவம் என்பதும் கூட வர்க்கப் போராட்டங்களை மையமாகக் கொண்ட முற்போக்குவாத இலக்கிய மரபுகளிலிருந்துக் கிளைத்த பரிணாமம் தான் என்றாலும் பிரதானமாக தன் வயம், தனிமையின் இறுக்கம், நிராசை மனப்பான்மை, தீரா வேட்கை போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் ஓர் உத்திசார்ந்த கலை இலக்கிய வளர்ச்சி என்றுதான் அது கொண்டாடப்பட்டது. இதன் நீட்சியாகவும் மேற்கத்திய அமைப்பு மையவாத சிந்தனைகளை ஆதரமாகவும் கொண்டெழுந்த பின்நவீனத்துவ இலக்கிய கோட்பாடோ விளக்கங்களை மரபு சார்ந்த விளக்கங்களிலிருந்து விடுவிக்கும் விழைவு என்றெழுந்தது.

கலை இலக்கியம் நவீனமாதல் அல்லது பின்நவீனமயமாதலில் உட் கிடக்கையாக இருக்கும் சிறப்பு என்று பார்க்கப்போனால் அது சமூகப் பரிமாணங்களுக்கு மதிப்பளிக்கும் பண்பை தன்னகத்தே கொண்டுள்ளது என்பதுதான். தமிழ் கலை இலக்கியமானது எண்பதுகள் வரைக்கும் கூட
அறிவுடைமைப் பிரிவினர் என்றறியப்பட்ட பார்ப்பனர்களின் வாழ்வியலையும் சொத்துடைமை/உயர் சாதியரையும் மையமாகக் கொண்டியங்கியது என்பதுவே நம்முன் உள்ள கசப்பான நிதர்சனம். எண்பதுகளுக்குப்பின்பு அந்நவீனத்துவ கலை இலக்கியம் மேற்கத்திய கலை இலக்கிய சித்தாந்தத் தாக்கங்களுக்கு ஆளாகி பேசப்படாதவைகளையும் பேசப்படாதவர்களையும் பேசும் தன் தனித்துவத்தால் பின்நவீனத்துவம் என்று ஒளிர்ந்தது; ஒளிர்ந்துகொண்டிருக் கிறது. மேற்சொன்னவற்றின் அடிப்படையில்தான் இயல்பாக/தன்னிச்சையாக (spontaneity) வெளிப்படும் நாட்டுப்புற/வட்டார கலை இலக்கியங்களும் விளிம்பு நிலை மக்கள் இலக்கியமான தலித் இலக்கியமும் கொண்டாடப்பட்டன.

மரபு நவீனமாகவும் நவீனம் பின்நவீனமாகவும் மாறுதல் என்னும் இயக்கப்போக்கு அறிவியல் உண்மைகளையும் விட்டு வைக்கவில்லை; புற வயமான அறிவியல் உண்மைகளை ஆதரமாகக் கொண்ட பத்தொன்பதாம் நூற்றாண்டின் அறிவியல் உண்மைகள் இருபதாம் நூற்றாண்டுகளில் மாறி விட்டன என்பதற்கு அறிவியல் சூழலில் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை உதாரணமாக சொல்லப்படுகிறது என்பதுவே இதற்கு சான்று எனும் செய்தியை கொசுறாகவும் கொள்க இங்கு.

மரபுக்கும் நவீனத்துக்குமான வேறுபாட்டை கணக்கிடும்போது மரபு என்பது பழமைவாதம்/அடிப்படைவாதம் எனும் சட்டகத்துக்குள் முடங்குவதாகவும் ஆகிவிடுகிறது. நவீனம்/பின்நவீனம் என்பதுவோ சகோதரத்துவ/சமத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் விளிம்புநிலை விழுமியத்தை முன் இருக்கையில் அமர்த்தி அழகு பார்க்கும் தனது பெருந்தன்மையான குணாம்சத்தால் சகலவிதமானவர்களுக்கும் சகலவிதமானத் துறைகளிலும் சமவாய்ப்புகள் கோருகிறது; அதாவது புதிய அரசியல் ஜனநாயக மலர்ச்சிக்கு ஆதரவாகக் கொடிபிடிக்கும் நுண்ணரசியல் சித்தாந்தமாகவும் ஒளிரத் துவங்கி விடுகிறது. இந்தியச் சமுதாயத்தில் பிறப்பின் அடிப்படையில் ஒருவனின் சாதி நிர்ணயிக்கப்படுவதும், முதலாளித்துவ/அரை நிலபுரத்துவ சுரண்டல் முறைகள் இருப்பதுவும், குடும்ப/சமூக வன்முறைகளுக்கு வழிவகுக்கும் பெண்ணடிமை முறையும் இத்யாதிகளும் பல்லாயிரம் ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்து வரும் மரபான செயல்பாடுகள்தான். இதன் பிரகாரம் மரபு என்பதாலேயே சமூக நல்லிணக்கத்துக்கும் ஒற்றுமைக்கும் கேடாக விளங்கும், சமுதாயத்தைப் பிளவுபடுத்தும், சமூக/பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை உறுதிப்படுத்தும் பழமைவாத மரபுகளைக் கேள்விக்கு உட்படுத்தாமல், அதன் மீது புரட்சிகரமானதொரு மாற்றத்தைக் கோராமல் அப்படியே ஏற்றுக்கொள்வது அல்லது பின்பற்றுவது என்பது அறிவாகாதுதானே?

விஞ்ஞானமும் தகவல் தொடர்பு தொழில் நுட்பமும் அசுர வேகத்தில் முன்னேற்றமடைந்து வரும் இன்றையச் சூழலில் சமுதாயத்தைப் பின்னுக்குத் தள்ள மட்டுமே உதவும் மரபுக்கூறுகள் மீதும், அதுசார்ந்த சிந்தனைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் துணை போகும் எழுத்தாக்கங்கள், ஓவியங்கள் உள்ளிட்ட கலை இலக்கியங்கள் மீதும் சிறு சலனமும் உண்டுபண்ணாமல் சமூகத்தை முன்னோக்கி செலுத்துவதென்பது எப்படி சாத்தியம்? இவற்றின் அடிப்படையில் மரபு நவீனமாகுதல், நவீனம் பின்நவீனமாகுதல் என்பது தவிர்க்க முடியாதது என்றும் ஆகிவிடுகிறது.

ஒரு பக்கம் பார்க்கும்போது ஒருவிதமாகவும், மறுபக்கத்திலிருந்து பார்க்கையில் வேறு விதமாகவும் தெரியக்கூடிய ஓவியம் படைத்த ஸாதிகைன் "பார்வையின் நோக்கு அல்லது கோணம் மாறும்போது, ஓவியம் மாறாமல் இருந்தாலும் அதன் அர்த்தம் மாறிவிடுகிறது. ஓவியத்தில் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை,ஆனால் பார்க்கும் கோணம் மாறுவதால் பார்ப்பவருக்கு ஓவியம் வேறுவிதமான அர்த்தத்தைத் தருகிறது" என்றார். கலை இலக்கியங்களில் மரபை நவீனமாக்கல் வீக்கமா? வளர்ச்சியா என்று கேள்வி எழுப்புபவர்களை அனல் வாதத்துக்கு அழைக்கிறார் புதுமாதிரியான ஓவியங்கள் தீட்டுவதில் நிபுணராய் இருந்த ஸாதிகைன்.

இங்கு நவீனத்துக்கு எதிராக அப்பட்டமாய் மரபை முன்னிறுத்துகிறோம் என்று வறட்டு அர்த்தம் கொள்ளாமல் மரபினின்று மேம்பட்டது நவீனம் என்று பொருள் கொள்ளுமாறு வேண்டுகிறோம். மேற்கத்திய அமைப்புமையவாத, பின் அமைப்பியல் சிந்தனைகள் தமிழ் கலை இலக்கிய சூழலுக்குள் கால் கொண்டபின் இங்கு எழுந்து நின்றது பின் நவீனத்துவ இலக்கிய சிந்தனை. அது நவீனத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு சமூகம், அரசியல், இலக்கியம் என்ற தளங்களில் கண்மூடித்தனமாக பழமையைப் பின்பற்றாமல் அதற்கு எதிர்க்குரல் எழுப்பியது. மனித உரிமைகளுக்கும் தனி மனித சுதந்திரத்திற்கும் ஆதரவாக நின்றதுடன் பிரதியின் மீதான ஆசிரியனின் அதிகாரத்தைத் தகர்த்துவிட்டு வாசகனின் பங்களிப்பைக் கோரிய கலை இலக்கிய சிந்தனையை நவீனத்திலிருந்து எழுந்த பின்நவீன சிந்தனை என்று கொண்டாடும் நமக்கு மரபிலிருந்து நவீனம் பிறந்ததின் காரணத்தை வளர்ச்சி நிமித்தமானதா அல்லது வீக்கம் சார்ந்ததா என்றெழுந்திருக்கும் காலதாமதமான கேள்விதான் குழப்பத்தை அருள்கிறது. இக்குழப்பத்திற்குக் காரணம் நமது மனம் மரபு எனும் பழமைவாத, முற்போக்குவாத கருதுகோள்களுக்கு பழகிப்போனதுதான் என்பான் ஒரு படைப்பாக்க சுதந்திரத்தை வலியுறுத்தும் பின்நவீனத்துவ சிந்தனையாளன். மரபான கலை இலக்கியம் நவீன மயமாதல் அல்லது இன்னொன்றாக மாறுதல் என்பது ஒட்டுமொத்த சமுதாய இயக்கத்தை வளர்ச்சிக்கான பாதையில் செலுத்தும் மூலக்கூறுகளுள் முக்கியமானதெனக் கருதலாமேத் தவிர வீக்கம் என்று கூறலாகாது.

Pin It