விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இலக்கியங்களின் பின் நவீனத்துவ காலம் இது. இக்காலத்தில் அறநெறிகள் சார்ந்த விடயங்கள் மறுவாசிப்பிற்கு உட்படுத்தப்படுவதும், அவற்றின் பிறழ்வும் சாதாரணமாகும். பசிக்கொடுமையோடு வாழ்க்கையை நடத்துகிற வனுக்கு பொய் சொல்லாத ஒழுக்கம், கற்பு நெறி தவறாத வாழ்க்கை என்று யோசித்துப் பார்ப்பதும் பகுத்தறிவிற்கு ஒப்பாத விஷயமாகிவிட்டது. பண்பாட்டு கட்டமைப்புகள் நொறுங்கி விழும் சப்தம் பெருத்த ஓசையாய் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

            வெகுஜன மக்கள் திறள் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் முறைக்கு பண்பாடு என்று சொன்னால் இன்றைய கார்பரேட், முதலாளித்துவ உலகில் விளிம்பு நிலை மக்களின் பண்பாடு என்பது சமூகத் தேவை கருதி கட்டமைக்கப் பட்ட நடைமுறை நியதிகள் சுலபமாக மீறப்படுவதில் வெளிப்படுகிறது.

            வெறும் பொருளாதார நடவடிக்கையாய் நுழைந்த உலகமயமாக்கல் மிகப் பெரிய கலாச்சாரத் தாக்குதலாக கடந்த ஐந்து ஆண்டுகளில் ஊடுருவி விட்டது. பன்னாட்டு மூலதனம் தொழில் துறைகளில் மட்டுமல்லாது பல்வேறு கலாச்சார நிலைகளிலும் ஊடுருவி விட்டது. இதன் விளைவுகளை நாம் அனுபவித்து வருகிறோம்.

            பன்னாட்டு மூலதனமும், விரிவான முதலாளித்துவ நோக்கங்களும் பெரும் தொழிற்காலைகளை நிறுவியுள்ளன. கிராமப்புறங்களிலிருந்து பெரும் நகரங்க ளுக்கு விவசாயக் கூலிகள் இடம் பெயர்வது வெகு சாதாரணமாகிவிட்டது. விவசாய கூலிகள் மற்றும் விவசாயிகள் நிலை வெகு அவலமானது. மண்ணின் மீதுள்ள பிடிப்பைத் தளர்த்தி தற்கொலைக்குச் சென்று விடுகிறார்கள். இவ்வகையான விவசாய கூலிகள் பற்றி கண்மணி குணசேகரனின் கோரைபோன்ற நாவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் நகரங்களில் தொழிற்சாலைக் கூலிகளாகி நவீன கொத்தடிமைகளாக வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். தாங்கள் தொழிலாளிகள் என்ற உரிமையை நிலைநாட்டிக் கொள்ளாமல் நகரவாழ்க்கை தரும் அற்பக் கூலியை பல சமயங்களில் ஏமாந்து போகிறார்கள். இவ்வகையான புதிய தொழிலாளி வர்க்கம் எல்லா நகரங்களிலும் உருவாகி விட்டது. இவர்களுக்குத் தேவை தினப்படி கூலியும், முடங்கிக் கொள்ள தெரு முனைகளும். நிரந்தர வேலை வாய்ப்பு, சமூக பாதுகாப்பு ஆகியவை நிராகரிக்கப்பட்ட ஜென்மங்களாய் வாழ்கிறார்கள். இளம் பெண்கள் சுமங்கலித்திட்டம் போன்றவற்றால் கொத்தடி மைகளாகுகிறார்கள். இந்தத் தொழிலாள வர்க்கத்தின் நவீன கொத்தடிமைத் தனத்தை எனது தேநீர் இடைவேளை”, “சமையலறைக் கலயங்கள்நாவலும், தமிழ்ச் செல்வியின் நாவல்களும் கோடிடுகின்றன.

            விளிம்புநிலை மக்களின் முக்கிய அங்கமாகிய தலித் மக்கள் இலவச பிச்சைப் பாத்திரங்களால் முகமூடியிடப்பட்டிருக்கின்றன. தலித் ஜாதியின் உள்பிரிவுகள் ஜாதிய இறுக்கத்தை இன்னும் கூர்மையாக்கிக் கொண்டிருக்கிறது. பாமாவின் நாவல்கள் இதைப்பற்றிச் சொல்கின்றன. இதில் கோவிலும் அது சார்ந்த அதிகார கட்டமைப்பும் விபரீதமானது. இதை எஸ்ஸார்சியின் சமீபத்திய நாவல் கோடிடுகிறது.

            விளிம்பு நிலை மக்களுக்கு பண்பாடு சொல்லும் கற்பு, தனிமனித ஒழுக்கம் என்பது கொச்சையான வார்த்தைகளாகிவிட்டன. தினசரி வாழ்க்கையில் பசியைத் தவிர்க்க அவர்கள் எடுக்கும் முயற்சிகளில் கற்பு பற்றின கற்பிதங்கள் உடைந்து நொறுங்கிவிடுகின்றன. இந்த நெறி பிறழ்வு வெகு சாதாரணமாகி நகரங்களில் வாழும் பெண்களிடம் இருக்கிறது. சல்மாவின் நாவலில் வரும் பெண்களுக்கு முஸ்லீம் சமூகத்து கட்டுப்பாடுகள் இப்படித்தான் சரிந்து வீழ்கின்றன. முஸ்லீம்களுக்குள் இருக்கிற தாழ்த்தப்பட்ட பிரிவினரின் வாழ்க்கை சிதைவுகள் பண்பாட்டு மாற்றங்களாய் கீரனூர் ஜாகீர் ராஜாவின் நாவல்களிலும், கிறிஸ்துவ சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரிவினர் வாழ்வும், அவர்களை புராதன கிறிஸ்துவர்கள் புறக்கணிப்பதும் ஜேடி குரூஸ்ஸின் நாவல்களில் பதிவாகியிருக் கின்றன. தலித் முஸ்லீம்கள், தலித் கிறிஸ்தவர்கள் என்ற பிரிவுகள் பெரும் சுவர்களாய் எழும்பி நிற்கின்றன.

            25 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் உளவியல் விசித்திரமானதாக இருக்கிறது. நுகர்வு கலாச்சாரத்தின் முக்கிய கூறுகளை நுகர்ந்து அனுபவிக்கத் துடிக்கிறவர் களாக இருக்கிறார்கள். கலாச்சார போலித்தனத்தை அவர்கள் கட்டுடைக் கிறார்கள். ஆனால் அபாய எல்லைகளைத் தான் தாண்டிப் போகிறார்கள். வா.மு.கோமுவின் நாவல்களில் வருகிற பனியன் தொழிலாள இளைஞர் வர்க்கம் கட்டுப்பாடற்ற பாலியல் தொல்லைகளால் அலைக்கழிக்கப்படுகிறது. தமிழ்நதியின் நாவலும் குடும்ப அமைப்பில் பாலியல் சுதந்திரம் குறித்து பேசுகிறது. பேக்டரி தொழிலாளி வர்க்கம்எனப்படும் தொழிலாளர்கள் பிரச்சினைகள் அவர்களை வெறும் இயந்திரமாக்கிவிட்டன. தொழிற்சங்கத் தலைவர்களும் அவர்களுக்கு துரோகம் புரிகிறவர்களாக இருக்கிறார்கள். இதை புதிய ஜீவாவின் குறுநாவல்கள் விரிவாக சொல்கின்றன. இதற்கு எதிர்நிலையிலுள்ள பன்னாட்டு மூலதன நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்கள் தங்களின் வசதியான வாழ்க் கையை சுலபமாக அனுபவிக்கும்போது, பாதாளத்தில் தள்ளப்படும் குறுகிய ஆயுள் பற்றி கவலைப்படாமல் இருக்கிறார்கள். அதிலும் தகவல் தொழில் நுட்பத்திலும், கணிணித் துறையிலும் பணியாற்றும் இளைஞர்களை இந்தியாவில், வெளிநாட்டுப் பின்னணியிலும் வைத்து இரா.முருகனின் நாவல்கள் பதிவு செய்திருக்கின்றன.

            பன்னாட்டு நிறுவனங்கள், ஏகபோக சக்திகள் மலைகளையும், காடுகளையும் அதன் இயற்கைச் செல்வங்களுக்காகவும், கனிம வளங்களுக்காகவும் ஆதிவாசி களை அவர்களின் பூர்வீக பூமியில் இருந்து விரட்டிக் கொண்டிருக்கிறார்கள். திருப்பூர் குழந்தைவேலுவின் நாவல்களில் வரும் ஆதிவாசிகள் மின்சாரத்துறை அதிகாரிகளால் தொழிலாளி அந்தஸ்து தரப்பட்டு, பலியாக்கப்படுகிறார்கள். இதை அவரின் மின்சார வேர்கள், மலையக மல்லன் போன்ற நாவல்களில் காணலாம். சி.ஆர். ரவீந்திரனின் மணியபேராநாவல் உலகமயமாக்கல் ஆதிவாசிகளையும் மலைவாழ் மக்களையும் சாதாரணக்கூலிகளாக்கி சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கும், நகர தொழிற்சாலைகளுக்கும் நிரந்தர கூலித் தொழிலாளிகளாகியிருப்பதைக் காட்டுகிறது. இந்த ஆதிவாசியின் நுகர்வு கலாச்சார பாதிப்பால் உடைகளிலும், மனப்போக்குகளிலும் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் அவர்கள் இயற்கையின் உபாசகர்களாக, இயற்கையை வழிபடுபவர் களாக இருந்த நிலையை மாற்றி, இயற்கையின் வளங்களை கொள்ளையடிப்பவர் களுக்குத் துணை போகிறவர்களாக்கியிருக்கிறது. அவர்கள் மீது அரசு பயங்கரவாதம் செலுத்தும் ஆதிக்கத்தின் கொடுமையை பாலமுருகனின் சோளகர் தொட்டிநாவல் எடுத்துரைக்கிறது.

            தலித்துகள், ஆதிவாசிகள், பெண்கள் போன்ற விளிம்புநிலை மாந்தர்களில் முக்யமானவர்களான திருநங்கைகளின் வரலாறு எல்லாக் காலத்தை விடவும் கடந்த ஐந்து ஆண்டுகளில் வித்யா என்ற சரவணன்போன்ற தன் வரலாறுகளாக வும், “பிரியாபோன்றவர்களின் நாவல்களாலும் எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. ஓரினப் புணர்ச்சி சார்ந்த கதாபாத்திரங்களும், தமிழ்த் திரைப்படப்பரப்பிலும், இலக்கியப் பரப்பிலும் குறிப்பிடத்தக்க அளவில் பதிவாகியிருக்கின்றன.

            அரிசியும், நெல்லும் விற்பது பண்பாட்டு வியாபார தர்மமாக இருந்திருக் கிறது. ஆனால் சோறு விற்பதும், விற்பனைப் பொருளாக்கப்படுவதும் மனித நேயத்தின் பெரும் சரிவாகவே கடந்த பத்து நூற்றாண்டுகளாய் கணிக்கப் படுகிறது. அதேபோல் மருத்துவம் என்ற கொடை இன்று பெரும் வியாபாரம் ஆகிவிட்டது. போலி மருந்துகளும், தேதி முடிந்துபோன மருந்துகளும், வெளி நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகளும் இந்தியாவில் சுலபமாக விற்கப் பட்டு பலரை பெரும் செல்வந்தர்களாக்கியிருக்கிறது. மருந்துகளே விஷமாகிப் போன காலத்தில் கொங்கு நாட்டுப் பகுதிகளின் பிரசித்தி பெற்ற விருந்தோம்பல் குணம் நகர கலாச்சார பாதிப்பால் குணம் குன்றிவிட்டது. நிலவுடமையின் சொத்தும் ஆசையும் தந்த பாதிப்புகளை மீறி விருந்தோம்பல் உயர்ந்த குணமாகப் போற்றப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று விருந்தோம்பலும் மனித நேயமும் குன்றி நிலவுடமை சார்ந்த கொங்கு மனிதர்கள் துரோகத்தின் சின்னமாக மாறியிருப்பதை ப.க.பொன்னுசாமியின் படுகளம்நாவல் விவரிக்கின்றது.

            இந்தியப் பண்பாடு சார்ந்த தொன்மை குணங்களாய் விளங்கும் இசை கை நழுவி மேற்கத்திய இசையாகிக் கொண்டிருக்கிறது. உணவும் நமக்கான பிரத்யேக மானதாக இல்லாமல் அவசர கதி உணவாகி நோயாளிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. தேசிய இனம் சார்ந்து செம்மொழியான நம்மொழி மீது தொடுக்கப்பட்டிருக்கும் கலாச்சார யுத்தம் அதை குற்றுயிரும் கொலையுயிரும் ஆக்கிவிட்டது. தொன்மையான மொழிக்கு ஏற்பட்டிருக்கும் அவலம்தான். கற்பு, ஒழுக்கம், தார்மீக நெறிகள், மனித நேயம் போன்ற கருத்தாங்களையும் உடைத் தெறிந்திருக்கிறது. அறிவு என்பது அனுபவம் சார்ந்த மனிதர்களின் வாழ்க்கை என்பதை மீறி கணிணி கொட்டும் செய்திகளை தெரிந்து கொள்வது என்றாகி விட்டது. கலாச்சார போலித்தனம் காரணமாக கட்டுண்டு கிடந்த சமுதாயம் விளிம்புநிலை மக்களின் சிதைந்த வாழ்வால் அம்பலமாகியிருப்பதை விளிம்பு நிலை மனிதர்களைப் பிரதானப்படுத்தி எழுதப்படும் பின் நவீனத்துவம் எழுத்து முறைகளால் வெளிப்பட்டிருக்கிறது. சோசலிச கனவுகளைத் தகர்த்து, விளிம்புநிலை மனிதர்களின், அவர்களின் குழுக்களின் விடுதலையைத் தனித்தனியே கோரும் படிப்பினையை பின்நவீனத்துவ வடிவ நேர்த்திகள் வெளிப்படுத்துகின்றன. எம்.ஜி.சுரேஷின் நாவல்களில் பின்நவீனத்துவ வடிவங்களும், வடிவ சிதைவும் நாவலுக்கு புது வடிவத்தைக் கொடுத்திருப்பதை போலவே, உள்ளடக்க அளவில் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை பண்பாட்டு கட்டுடைப்புகளையும் வெளிப்படுத்தியிருப்பது தமிழ் நாவல்களின் பலமாக இருக்கிறது.

            கடவுள் மறுப்பும், சூன்யவாதமும் பண்பாட்டுச் சீரழிவுக்குக் காரணம் என்றார்கள். தற்போது கடவுள் பெயரால் சமய மதபயங்கரவாதம் நிலை குலைய வைக்கிறது. இன்றைய அதிநவீன தொழில்நுட்பமும் அறிவும் வெறுமைக்குக் கொண்டு செல்கிறது. அதன் பாதிப்பான நிகழ்வுகளின் பாதிப்புகளை தமிழ் நாவல்கள் கைகொண்டு வருகின்றன. அறம் ஒற்றைத்தன்மையானதல்ல. பன்முகத்தன்மை கொண்டது. அதன் சிதைவுகளின் மறுவாசிப்பாய் இன்றைய சில தமிழ் நாவலின் கூறுகள் அமைந்துள்ளன.

(சாகித்ய அகாதமி பொள்ளாச்சியில் ஏப்ரல் 5,6,7 தேதிகளில் நடத்திய இந்திய மொழிகளில் அறவியல் நூல்கள்கருத்தரங்கில் படிக்கப்பட்டக் கட்டுரை)

Pin It