புதிய சாலைகளை அமைக்கும் போதும், இருக்கின்ற சாலைகளை அகலப்படுத்தும் போதும், மரங்களை வெட்ட நேரிடுவது உண்டு. ஆனால் 'மரங்களை வகை தொகை இல்லாமல் வெட்டுவதால் மழை வளம் குறைகிறது; அதனால் விவசாயம் நலிகிறது; குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுகிறது.' என்று சூழலியலாளர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். இப்பிரச்சினை 2010 ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதி மன்றத்தின் முன் வந்த போது, ‘ஒரு மரத்தை வெட்டினால் பத்து மரக் கன்றுகள் நட வேண்டும்’ என்று ஆணையிட்டது.

Tree Cutting
அண்மையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், தக்கோலம் - தண்டலம் சாலையை அகலப்படுத்தும் போது, சுமார் 1,000 மரங்கள் வெட்ட வேண்டி ஏற்பட்டு உள்ளது. அவற்றில் 700 மரங்களை நெடுஞ்சாலத் துறையினர் ஏற்கனவே வெட்டி விட்டனர். ஆனால் நீதி மன்ற ஆணையின் படி, மரக் கன்றுகளை நடவில்லை. நெடுஞ்சாலைத் துறையினரின் அக்கறை இல்லாத இப்போக்கை எதிர்த்து வி.பி.சீனிவாசன் (V.B.Srinivasan) என்ற ஒரு வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடுத்தார். இம்மனுவில், வெட்டப்படும் மரங்களில் பல புளிய மரங்கள் என்றும், அப்பகுதியில் உள்ள மக்கள், அவற்றில் விளையும் புளியம்பழங்களில் இருந்து புளியைத் தயாரித்து, அதன் மூலம் வாழ்க்கை நடத்தி வருவதாகவும், மரங்கள் வெட்டப் படுவதால், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் நசிந்து வருகிறது என்றும் குறிப்பிட்டு உள்ளார். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் 16.8.2014 அன்று 'ஒரு மரத்தை வெட்டினால் பத்து மரக்கன்றுகளை நட வேண்டும்' என்ற தனது 2010ஆம் ஆண்டின் ஆணையை 'மீண்டும்' பிறப்பித்து உள்ளது.

தனது 2010ஆம் ஆண்டு ஆணையைச் செயல் படுத்தாத நெடுஞ்சாலைத் துறையின் மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எடுக்கவில்லை. மரங்கள் வெட்டப் படுவதால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் அழிந்து போவது பற்றியும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது பற்றியும் கண்டு கொள்ளவே இல்லை.

நெடுஞ்சாலைத் துறைக்கு, உயர் நீதி மன்றத்தின் 2010 ஆம் ஆண்டு ஆணையைப் பற்றிக் கவலைப்படத் தேவை இல்லை என்ற மனநிலை எப்படி உண்டாயிற்று?

தன்னுடைய ஆணையை மதிக்காத நெடுஞ்சாலைத் துறையின் மீது, நீதி மன்ற அவமதிப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றத்திற்கு ஏன் தோன்றாமல் போயிற்று?

மரங்கள் வெட்டப்படுவதால் வாழ்வாதாரம் இழக்கும் மக்களைப் பற்றி நீதிமன்றம் ஏன் கவலைப் படவில்லை?

இம் மூன்று வினாக்களுக்கும் ஒரே விடை தான். இப்போதைய அரசு முதலாளித்துவ அரசு என்பது தான் அது. ஒரு முதலாளித்துவ அரசு மூலதனம் இலாபகரமாக ஈடுபடுத்தப் படுவதைத் தவிர வேறு எதைப் பற்றியும் அக்கறை கொள்ளாது.

மரங்களை வெட்டுவதால் மழை வளம் குறைந்து விவசாயம் நலியும்; குடிநீர்த் தட்டுப்பாடு வரும். இப்படி நடந்தால் பொதுவாக மக்கள் அனைரும் பாதிக்கப்படுவார்கள். ஆனால் மூலதனத்தை இலாபகர‌மாக ஈடுபடுத்தும் செயலுக்குத் தடங்கல் ஏற்படப் போவது இல்லை. ஆனால் மரங்களை வெட்டுவது தடுக்கப்பட்டால், மூலதனப் பயணத்தில் தடங்கல் ஏற்பட்டு விடும். ஒரு முதலாளித்துவ அரசு மூலதனத்தை ஈடுபடுத்துவதில் பாதிப்பு ஏற்படும் என்றால் ஒழிய வேறு எதைப் பற்றியும் கவலைப் படாது. [மழை வளம் குறைவதால் விவசாயம் நலிந்தாலும் குடிநீர்த் தட்டுப்பாடு வந்தாலும் அது முதலாளிகளுக்கும் துன்பம் ஆகுமே என்று நினைக்கிறீர்களா? முதலாளிகள் அப்படி நினைக்க மாட்டார்கள்; அச்சூழ்நிலையில் அதிக விலை கொடுத்து வேண்டிய பொருட்களை வாங்க முடியும் என்றும், இப்படி உருவாகும் பஞ்சத்தால் சந்தையில் (முதலாளிகள் உற்பத்தி செய்யும்) பண்டங்களை வாங்கும் திறன் அற்றவர்கள் மடிந்து போவதால் இலாபம் தராத அல்லது குறைந்த இலாபம் தரும் பண்டங்களை உற்பத்தி செய்ய வற்புறுத்தும் சமூக விசை இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்றும் தான் நினைப்பார்கள்.]

மரங்கள் வெட்டப்படுவதால் வரும் பேரழிவுகளைப் பற்றி உண்மையான அக்கறை இல்லாவிட்டாலும். சூழலியலாளர்களின் வாயை அடைப்பதற்காக, 'ஒரு மரம் வெட்டினால் பத்து மரக் கன்றுகளை நட வேண்டும்' என்று உயர் நீதி மன்றம் ஆணையிட்டு விட்டது. ஆனால் உண்மையில் அப்படி நடப்படுவது இல்லை. ஒரு வேளை மக்கள் போராடி மரக் கன்றுகளை நட வைத்தாலும், அவற்றைப் பராமரித்து வளர்க்க முடியாது. ஏனெனில் அவ்விதம் செய்ய மூலதனத்தை ஈடுபடுத்தினால் இலாபம் கிடைக்காது. ஆகவே முதலாளித்துவப் பொருளாதார உற்பத்தி முறைக்கு ஒவ்வாத தனது ஆணை மதிக்கப் படாதது குறித்து, உயர் நீதி மன்றம் எந்த விதமான அக்கறையும் கொள்ளவில்லை. இதை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றால், மீண்டும் இதே ஆணை பிறப்பிக்கப்படும். ஆணை மட்டுமே பிறப்பிக்கப்படும். ஆனால் அவ் ஆணை நடைமுறைப்படுத்தப் படுகிறதா என்று கவனிக்கும் தொடர் நடவடிக்கை எடுக்க எந்த முயற்சியும் எடுக்கப்பட மாட்டாது.

மரங்கள் வெட்டப்படுவதால், பல உழைக்கும் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழப்பது பற்றி இந்த முதலாளித்துவ அரசு அக்கறை கொள்ளாது. உழைக்கும் மக்கள் பாதிக்கப்பட்டால் அதன் தொடர்ச்சியாக மூலதனம் இலாபகரமாக ஈடு படுத்தப்படுவதும் பாதிக்கப்பட்டால், அப்பொழுது அரசு தலையிட்டு பிரச்சினையைத் தீர்க்க முற்படும். அப்பொழுதும் உழைக்கும் மக்களை ஒடுக்கி ஒரு தீர்வை அடைய முடியும் என்றால் அவ்வழியைத் தான் மேற்கொள்ளும். உழைக்கும் மக்களின் பிரச்சினை தீர்ந்தால் தான், மூலதனப் பயணத்திற்கு வழி கிடைக்கும் என்றால் மட்டுமே, பிரச்சினையைத் தீர்க்க முற்படும்.

எடுத்துக்காட்டாக, இச்சாலை விரிவாக்கத்தால் வாழ்வாதாரங்களை இழந்த மக்கள் தங்களுக்கு மறுவாழ்வு அளிக்கக் கோரி, சாலையை அமைக்க விடாது மறியல் செய்தால், அரசு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க முன்வராது; அடித்து விரட்டி, காவல் துறையின் பாதுகாப்புடன் சாலையை அமைக்கும். காவல் துறையை ஈடுபடுத்த ஆகும் செலவும், வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கத் தேவைப்படும் செலவும் சமமாக இருந்தாலும், அரசு அடக்குமுறையைத் தான் கையாளுமே ஒழிய, மறுவாழ்வு அளிக்க முன்வராது.

அதே நேரத்தில் அப்பகுதி மக்களை ஏதாவது ஒரு நோய் தாக்கி, அதனால் சாலை அமைக்கும் தொழிலாளர்கள் கிடைக்காமல் (அதாவது மூலதனப் பயணம் தொடர முடியாமல்) போனால், அப்பொழுது அரசு வரிந்து கட்டிக் கொண்டு மக்களின் நோயைக் குணப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்கும். ஏனெனில் அரசு முதலாளிகளின் வேலையாள்; முதலாளிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கு என்றே உள்ள ஒரு கருவி.

அப்படி என்றால் உழைக்கும் மக்கள் என்ன செய்ய வேண்டும்?

உழைக்கும் மக்களில் ஒவ்வவொரு தனி நபரும், ஒவ்வவொரு தனிக் குழுவும், தங்கள் பிரச்சினை தீர வேண்டும் என்று, கூட்டாகச் சேர்ந்து போராடாமல், தனித் தனியாகப் போராடும் வரை எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்காது. அவர்களுடைய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூல காரணம் முதலாளித்துவ அரசு தான் என்றும், முதலாளித்துவ அரசு உள்ள வரையிலும் தங்களுக்கு விடிவு இல்லை என்றும் புரிந்து கொண்டு, முதலாளித்துவ அரசைக் காவு கொடுத்து, சமதர்ம அரசசை அமைப்பது தான் உழைக்கும் மக்களின் விடுதலைக்கு ஒரே வழி ஆகும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

இராமியா

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 28.8.2014 இதழில் வெளி வந்துள்ளது)

Pin It