(தமிழ்த் தேச மக்கள் கட்சியின் ‘தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு’ செங்கல்பட்டு – இராதா அரங்கத்தில் 31.08.2014 அன்று நடைபெற்றது. மாநாட்டு அரங்கில் பெ.மணியரசன் (தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்) பேசியதன் விரிவுபடுத்தப்பட்ட எழுத்து வடிவம்)

எங்களது தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தோழமை இயக்கமான தமிழ்த் தேச மக்கள் கட்சி நடத்தும் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டிற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம்மிரு அமைப்புகளும் பல்வேறு சிக்கல்களில் ஒத்த கருத்துகள் கொண்டுள்ளன. அதனால் நெருக்கமாக நின்று பல்வேறு சிக்கல்களில் கூட்டுப் போராட்டங்கள் நடத்தி வருகிறோம். தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தில் நாம் பல்வேறு தோழமை அமைப்புகளுடன் இணைந்து போராட்டங்கள் நடத்தி வருகிறோம்.

தமிழ்த் தேசியக் கருத்தியல் வளர்ச்சி பெற்று வருகின்ற காலமிது! மேலும் அதை எழுச்சியுறச் செய்வதற்காக இந்த எழுச்சி மாநாடு!

தமிழ்த் தேசியம் – தமிழர்கள் அனைவர்க்கும் உரியது. சொல்லப்போனால் தமிழர்கள் அனைவரும் தமிழ்த் தேசியர்களே! பிரஞ்சு தேசத்தில் பிறந்தவர்கள் பிரஞ்சு தேசியர்களாகவும், செர்மனியில் பிறந்தவர்கள் செர்மானியத் தேசியர்களாகவும், சப்பானில் பிறந்தவர்கள் சப்பானியத் தேசியர்களாகவும் இருப்பது போல், தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் தமிழ்த் தேசியர்களாகப் பிறப்பு அடிப்படையில் இருக்கிறார்கள். ஒரு தேசம் என்பதற்குரிய எந்த இலக்கணமும் இல்லாத இந்தியத் துணைக் கண்டத்தில் பிறந்தவர்களை இந்தியர் என்றும் இந்தியத் தேசியர் என்றும் செயற்கையாக ஒரு சாரார் சொல்கிறார்கள்.

தேசங்களின் தொகுப்பாகத்தான் உலகம் அமைந்துள்ளது. தேசந்தான் மனித சமூகத்தின் அடிப்படை அரசியல் அலகு. ஒரு தேசிய இனத்தவர் என்பது அவர்கள் பின்பற்றும் கொள்கையால் வருவதன்று. அவர்கள் பிறந்த இனத்தால் வருவது. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் தமிழர்; கருணாவும் தமிழர்தான். கருணா இன இரண்டகர். எனவே அவரைத் தமிழினத் துரோகி என்கிறோம். பிரபாகரன் தமிழின விடுதலைத் தலைவர். இருவரும் பண்பால் – கொள்கையால் வேறுபட்டவர்கள். ஆனால் பிறப்பால் தமிழர்கள்தாம்.

எனவே, தமிழ்நாட்டில் தமிழராய்ப் பிறந்த அனைவரும் தமிழ்த் தேசியராக இருப்பது இயல்பானது; இயற்கையானது. இங்கு கருணாக்கள் வேண்டாம்.

இந்த இயற்கையான தேசியத்தை மறுத்துவிட்டு, அல்லது இதற்கு மாற்றாக வேறு சிலர் இந்தியத் தேசியம் பேசுகிறார்கள்; திராவிட தேசியம் பேசுகிறார்கள். இவ்வாறு அயல் தேசியம் பேசுவதற்கு அவர்களுக்குக் காரணங்கள் இருக்கின்றன. அவற்றால் அவர்கள் ஆதாயம் அடைகிறார்கள்.

பார்ப்பனர்களும் மார்வாடிகளும் குசராத்திகளும் இந்திக்காரர்களும் இந்தியத் தேசியத்தைப் புனைவு செய்தார்கள். இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் சமூக ஆதிக்கம் பார்ப்பனகளுக்கும், தொழில் – வணிக ஆதிக்கம் மார்வாடி குசராத்திகளுக்கும், பெருந்தேசிய இன ஆதிக்கம் இந்திக்காரர்களுக்கும், இந்தியத் தேசியத்தால் கிடைக்கிறது. ஒன்றுபட்ட பழைய சென்னை மாகாணத்தில் ஆந்திராவின் பெரும் பகுதி இருந்தது. ஆந்திரத் தெலுங்கர்கள் நீதிக்கட்சி தலைவர்களாகவும், தமிழக முதலமைச்சர்களாகவும் இருந்தனர். ஆந்திரப் பிரதேசத் தெலுங்கர்களின் ஆதிக்கத்திற்கு “திராவிட தேசியம்” துணை செய்தது.

சிலர் நம்மைப் பார்த்து, “இதற்குத் தமிழ்த் தேசியவாதிகள் என்ன சொல்கிறார்கள், அதற்குத் தமிழ்த் தேசியவாதிகள் என்ன சொல்கிறார்கள்” என்று கேட்கிறார்கள். நாம் அவர்களைப் பார்த்துக் கேட்கிறோம், “ஏன், நீங்கள் தமிழ்த் தேசியவாதிகள் இல்லையா? தமிழர்கள் இல்லையா? வேறு என்ன இனவாதிகள் நீங்கள்?”

நாம் எல்லோரும் தமிழ்த் தேசியவாதிகளே! நம்மில் பல பிரிவுகள் இருக்கின்றன. பலவகைத் தத்துவங்கள் இருக்கின்றன. பலவகைக் கொள்கைகள் இருக்கின்றன. தமிழ் இனமும் தமிழ்த் தேசியமும் நம் அனைவர்க்கும் பொதுவானவை! இந்த உணர்வு தமிழ்நாட்டில் அனைவர்க்கும் வர வேண்டும்.

தமிழ் மக்களைப் பங்கு போட்டுக் கொள்ள ஏராளமான போட்டிகள் நடக்கின்றன. வாக்கு அரசியலைச் சொல்லிப் பங்கு போட்டுக் கொள்கின்றனர்; மதத்தைச் சொல்லிப் பங்கு போட்டுக் கொள்கின்றனர். சாதியைச் சொல்லிப் பங்கு போட்டுக் கொள்கின்றனர். வெள்ளாமை நிலங்களுக்கு வேலிகட்டிக் கொள்வதைப் போன்று தமிழ் மக்களை வாக்கு அரசியல், மதம், சாதி என்று சொல்லி அவரவரும் வேலி போட்டுத் தடுத்து வைத்துள்ளனர்.

தமிழக மக்களிடையே ஒற்றுமை உணர்வு, ஓர்மை உணர்வு, எல்லாப் பிரிவினைகளுக்கும் அப்பால் நாம் அனைவரும் தமிழர்கள் – ஓரின மக்கள் என்ற உறவு உணர்வு வளர்ந்து விடாமல் தடுப்பதில் இந்த வாக்கு அரசியல், மத, சாதிக் கட்சிகள் மிகமிகக் கவனமாக இருக்கின்றன.

கட்சி அடிப்படையில் வேலி போட்டு அடைத்து வைத்துள்ள அந்த மக்களை இந்தத் தலைவர்கள் என்ன செய்கிறார்கள்? அப்படியே கொண்டு போய் வடநாட்டு ஏகாதிபத்தியக் கட்சிகளிடம் அடமானம் வைத்து விடுகிறார்கள். பதவி அரசியலுக்காக, ஊழல் அரசியலுக்காக, குடும்ப அரசியலுக்காக வடநாட்டு ஏகாதிபத்தியக் கட்சிகளான காங்கிரசு அல்லது பா.ச.க.வுடன் கூட்டணி சேர்கிறார்கள்.

தமிழ்நாட்டை அடிமைப்படுத்தி வைத்துள்ள இந்திய ஏகாதிபத்தியத்தின் கட்சிகள்தாம் காங்கிரசும், பா.ச.க.வும்! தமிழ்த் தேசியத்தை மறுத்துவிட்டு அல்லது மறந்துவிட்டு இந்த இரண்டு ஏகாதிபத்தியக் கட்சிகளுடன் கூட்டணி சேரும் தமிழகக் கட்சிகளை என்னவென்று சொல்வது?

ஆங்கிலேய ஏகாதிபத்தியம் இங்கு ஆட்சி செய்த போது, அந்த ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டு, அதற்குக் கீழ்ப்பட்டு நடந்து கொண்டு, அதே வேளை தங்கள் அரண்மனைக்குள் முடி சூட்டிக் கொண்டு சில சிற்றறரசுகள் இருந்தனவல்லவா! அந்த எட்டயபுரம் சமஸ்தானம் போல, புதுக்கோட்டை சமஸ்தானம் போல, ஆர்க்காடு சமஸ்தானம் போல இப்போது தில்லி ஏகாதிபத்தியத்திற்குக் கீழ் அதன் ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டு – அதன் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து கொள்கின்றன தமிழகக் கட்சிகள். இந்தக் கட்சிகள் இந்தக் காலத்து எட்டப்ப சமஸ்தானங்கள்! இவையெல்லாம் சாரத்தில் இந்திய ஏகாதிபத்தியத்தின் கங்காணிக் கட்சிகள்!

ஏகாதிபத்திய அரசியலும், கங்காணி அரசியலும் இங்கு சனநாயகம் என்ற பெயரில் கூட்டாக இயங்குகின்றன.

ஆனால், இங்கு என்ன வகை சனநாயகம் நடைபெறுகின்றது? இங்கு நடைபெறுவது மக்கள் நாயகம் அன்று; தலைவர் நாயகம்! தலைவர் நாயகம், தலைவி நாயகம் தான் இங்கு நடக்கின்றது. தலைவர்களோ குடும்ப நாயகம் நடத்துகின்றனர். சனநாயகம் பெற்றெடுத்த எதேச்சாதிகாரக் குழுந்தைதான் தலைவர் நாயகம்! இந்தத் தலைவர் ஆணாகவும் இருக்கலாம்; பெண்ணாகவும் இருக்கலாம்.

இலட்சியத்திற்காகக் கட்சி இல்லை; கொள்கைக்காகக் கட்சி இல்லை; மக்களுக்காக கட்சி இல்லை; தலைவருக்காகக் கட்சி என்று ஆக்கிவிட்டார்கள். மக்கள் என்போர் தலைவரின் “உண்மை விசுவாசிகள்”!

நடைமுறை அனுபவத்தில் பார்த்தால் மன்னர் நாயகத்தைவிடக் கொடியது தலைவர் நாயகம். மன்னர் நாயகத்தைவிட எதேச்சாதிகாரமானது தலைவர் நாயகம்! மன்னர் நாயகத்தை விடக் குடும்ப ஆதிக்கம் மிகுந்தது தலைவர் நாயகம்!

தலைவர் நாயகத்திற்குத் தகுந்த எடுத்துக்காட்டுகள் தி.மு.க.வும் அ.இ.அ.தி.மு.க.வும். மற்ற சில கட்சிகள், தங்களின் முன்மாதிரிக் கட்சிகளாக – தாங்கள் செயல்பட வேண்டிய – அடைய வேண்டிய வளர்ச்சியின் இலக்காக – தி.மு.க.வையும் அ.இ.அ.தி.மு.க.வையும் தாம் வைத்துள்ளன. அவையெல்லாம் குட்டி தி.மு.க.க்கள்; குட்டி அ.தி.மு.க.க்கள்!

உண்மையான தமிழ்த் தேசிய இயக்கங்களுக்குத் தி.மு.க.வோ, அ.இ.அ.தி.மு.க.வோ முன்மாதிரிகளாக இருக்கவே முடியாது.

அண்மையில் ஏழாவது முறையாக, செல்வி செயலலிதா அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று விழாக் கொண்டாடினார்கள். அ.இ.அ.தி.மு.க.வினர் செயலலிதாவை நிரந்தரப் பொதுச் செயலாளர் என்று கூறி ஆண்டு முழுவதும் கொண்டாடுகிறார்கள். ஆனாலும், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளைக் கடைபிடிப்பதற்காக, ஒருமனதாகத் தேர்வு செய்யும் சடங்கு ஒன்று நடந்தது.

அவ்வாறு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, நன்றி தெரிவிக்கும் உரையில் அம்மையார் சொன்னார், “அ.இ.அ.தி.மு.க.வில் 1 கோடியே 50 இலட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்” என்றார். அடுத்து கலைஞர் கருணாநிதி தி.மு.க.வில் ஒரு கோடி பேர் உறுப்பினர் உள்ளனர் என்று அறிவிக்கக் கூடும். இரு கழகங்களையும் சேர்த்தால் இரண்டரைக் கோடிப் பேர். விசயகாந்த் கட்சி இருக்கிறது. அவர் எத்தனை பேர் என்று சொல்வாரோ? இந்தக் கட்சிகளின் உறுப்பினர்கள் மூன்று கோடிப்பேர் இருப்பர் என்று வைத்துக் கொள்வோம். இந்த மூன்று கோடிப் பேரின் குடும்ப உறுப்பினர்கள் இருப்பர். ஆக, 7 கோடி மக்களில் நாலு கோடி மக்களை – உரிமைக்காக – உயர்ந்த இலட்சியங்களுக்காக வீதிக்கு வந்து போராடாமல் தடுத்து வைத்திருக்கும் சாதனை செயலலிதா, கருணாநிதி, விசயகாந்த் போன்ற தலைவர்களுடைய சாதனை!

ஈழத்தமிழர் சிக்கலா, இந்தி – சமற்கிருதத் திணிப்பா, ஏழு தமிழர் விடுதலையா, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவதா எதுவாக இருந்தாலும் இந்தத் தலைவர்கள் அறிக்கை வெளியிடுவார்கள். தில்லிக்குக் கடிதம் எழுதுவார்கள்; அத்தோடு சரி! வீதிக்குத் தங்கள் கட்சி மக்களை அழைக்க மாட்டார்கள்; ஆர்ப்பாட்டம், பேரணி எதுவும் நடத்தமாட்டார்கள்! அழிந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களைக் காக்கவோ, இழந்து விட்ட 28 இலட்சம் ஏக்கர் சாகுபடிக்குரிய காவிரி நீர் உரிமையை மீட்கவோ ஏன் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை, போராட்டம் நடத்தவில்லை என்று இந்தக் கட்சிகளில் உள்ள கோடிக்கணக்கான மக்களும் தங்கள் தலைவர்களைக் கேள்வி கேட்க மாட்டார்கள். சாடிக் கேற்ற மூடி போல, தலைவர்களுக்கேற்ற மக்கள், மக்களுக்கேற்ற தலைவர்கள்! இவர்களின் சனநாயகம் மக்களைக் கொண்டு மக்களால் மக்களுக்காக நடத்தப்படுதன்று! தலைவரால், தலைவருக்காக, மக்களைக் கொண்டு நடத்தப்படுவது!

இந்தத் தலைவர் நாயகம் ஆபிரகாம் லிங்கனுக்கும் தெரியாது; காரல் மார்க்சுக்கும் தெரியாது! இது சனநாயகம் பெற்றெடுத்த எதேச்சாதிகாரத் தலைவர் நாயகம்! சனநாயகப் பிரபுத்துவம்! இதற்கு மேலிருந்து கீழ்வரை அமைப்பு முறையில் அண்டிப்பிழைத்து ஆதாயம் அடையும் அடுத்தடுத்த ஒருங்கிணைப்பாளர்கள் உண்டு! அவர்களுக்குக் கீழே உள்ள மக்களுக்கு இலவசங்கள் உண்டு! கட்சிக் கட்டுப்பாடுகளும் உண்டு!

அ.இ.அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகள் தாம் தமிழ்நாட்டில் இந்திய ஏகாதிபத்தியத்தின் காவல் அரண்கள். இந்தத் தலைவர்களையும் இந்தக் கட்சிகளையும் நம்பித்தான் ஈழத்தில் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து தமிழினத்தை அழித்தன. ஏழு கோடித் தமிழர்களும் தங்கள் இன மக்களைப் பாதுகாக்கப் போர்க்கோலம் பூண்டு – உலக நாடுகளின் கவனத்தையும் தலையீட்டையும் ஈர்க்காமல் – அமைதி காத்திடச் செய்த பெருமை இந்தக் கட்சித் தலைவர்களுக்கே உண்டு. இந்த வகையில் இந்திய ஏகாதிபத்தியத்திற்கு மட்டுமல்ல, சிங்கள இனவெறியர்களுக்கு, காவிரியைத் தடுக்கும் கன்னட இன வெறியர்களுக்கு, முல்லைப் பெரியாறு அணையை உடைக்க முனையும் மலையாள இன வெறியர்களுக்குப் பாதுகாப்பு அரண்களாக – இந்தக் கட்சிகள் செயல்புரிகின்றன. இந்தத் தலைவர்களை நம்பித்தான் தமிழினத்திற்கெதிரான பகை ஆற்றல்கள் தங்களின் அட்டூழியங்களை அரங்கேற்றுகின்றன.

தங்களின் இன உரிமைகளுக்காகத், தங்களின் வாழ்வுரிமைகளுக்காகப் போராட விடாமல் மக்களைத் தடுத்து வைக்கும் பெரிய பெரிய கட்சிகள் பல தமிழ்நாட்டில் இருந்த போதிலும், இந்தியாவிலேயே மிக அதிக எண்ணிக்கையில் அடிக்கடி வீதிக்கு வந்து மக்கள் போராடிய மாநிலம் தமிழகம் என்று இந்திய உளவுத்துறை கூறுகிறது. அதன் கூற்றை இரண்டு ஆண்டுகளுக்கு முன் ‘இந்தியா டுடே’ கிழமை ஏடு வெளியிட்டிருந்தது.

இவ்வாண்டு சில நாட்களுக்கு முன் முடிந்த தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரில் பேசிய முதலமைச்சர் செயலலிதா, கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 23,500 மக்கள் போராட்டங்கள் நடந்துள்ளன; அவற்றிற்கு தமது அரசு அனுமதி அளித்தது என்று பெருமையாகக் கூறினார்.

தமிழ் இனத்தின் உயிர்த்துடிப்பே அதுதான்! போராட்டத் தடுப்பரண்கள் இத்தனை இருந்த போதிலும், தமிழ் மக்கள் ஈழத்தமிழர்களுக்காக, கூடங்குளம் அணுஉலையைத் தடுப்பதற்காக, மீத்தேன் திட்டத்தை முறியடிப்பதற்காக, காவிரி உரிமை மீட்பதற்காக, தமிழ்வழிக் கல்விக்காக, மணல் கொள்கை – தாது மணல் கொள்ளை ஆகியவற்றைத் தடுப்பதற்காக, கவுத்திமலை வேடியப்பன் மலை ஆகிவற்றை பாதுகாப்பதற்காக, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக, மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, மூன்று தமிழர் உயிரைப் பாதுகாப்பதற்காக, ஏழு தமிழர் விடுதலைக்காக, சாதிக் கொடுமையை – தீண்டாமையை முறியடிப்பதற்காக, சமத்துவத்திற்காக, பெண்ணுரிமைக்காக, மீனவர் பாதுகாப்பிற்காக, விலை உயர்வு – வேலையின்மை போன்றவற்றை எதிர்ப்பதற்காக, மின்வெட்டை நீக்குவதற்காக, இலஞ்ச ஊழலை ஒழிப்பதற்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் போராட்டங்கள் – தமிழ்த் தேசிய அச்சில் இணைக்கப்பட்டு – ஒருங்கிணைந்த போராட்டங்களாக நடந்தால் – விரைவில் தமிழ்த்தேசியம் இங்கு மலரும்! அந்த நோக்கில் தமிழ்த் தேசிய எழுச்சிக்குத் திசைகாட்டுவதாக இந்த மாநாடு அமைய வாழ்த்துகிறேன்.

- பெ.மணியரசன்

Pin It