மக்களின் நலன் கருதி,  காந்தி நினைவுநாளும் தியாகிகள் தினமுமான  30-1-2016க்குள் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் ! 

தமிழகத்தில் நடைபெறும் பெரும்பாலான சமூகக் குற்றங்கள், விபத்து மரணங்கள், பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள், இளம் விதவைகள் அதிகரிப்பு, ஆதரவற்ற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றிற்கெல்லாம் மதுவே காரணமாக இருப்பதால் மதுக் கடைகளை மூடுங்கள் என்று தமிழக அரசிடம் பல ஆண்டுகளாக அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப்பேரவை போராடி வருகிறது.

ஆனால், ஆண்ட அரசும் ஆளுகின்ற அரசும் மதுவிலக்கைப்பற்றி வாயைத் திறக்க மறுக்கிறது. மாறாக, தமிழக அரசு மது விற்பனைக்கு இலக்கு வைத்து ஆண்டுக்கு 30,000 கோடி வருமானம் ஈட்டுகிறது.  மேலும், தங்களது அரசு மக்கள் நல அரசு என்று கூறிக்கொள்கிறது.

காந்தியைப் பின்பற்ற விரும்பாத தமிழக அரசியல் தலைவர்கள் அவர்கள் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் பெரியார் அண்ணா போன்றவர்களையாவது பின்பற்ற வேண்டும். பெரியார் மது ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக தனது தோட்டத்திலிருந்த பயன்தரும் தென்னை மரங்களை வெட்டியதாக அறிகிறோம்.

அண்ணா மதுக்கடை வருமானத்தால்தான் ஆட்சி நடத்தமுடியும் என்றால் அப்படி ஒரு ஆட்சியே நடக்க வேண்டாமென்றும், எனது தமிழினம் மதுவால் அழிவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் - அதனால் மதுவைத் தமிழகத்தில் அனுமதிக்கமாட்டேன் என்று தான் சாகும் வரை மதுவைத் தமிழகத்தில் அனுமதிக்க வில்லை என்றும் அறிகிறோம்.

அதன்பிறகு தமிழகத்தையும் தமிழினத்தையும் பெரியார், அண்ணா வழியில் காப்பாற்ற வந்தவர்கள் ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இருந்து கடந்த நாற்பத்தாறு ஆண்டுகளில் தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரத்தையும் சீரழித்ததோடு தமிழகத்தையும் தமிழினத்தையும் வேரறுத்து விட்டார்கள்.

அதற்கு இங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் ஆதாயத்திற்காக தெரிந்தும் தெரியாமலும் உறுதுணையாக இருந்து வருகின்றன. இவையனைத்தையும் காந்தியச் சிந்தனையாளர்களும் சமூக ஆரவலர்களும் உண்மையான தமிழின உணரவாளர்களும் மனித இனத்தின்மீது பற்று கொண்டவர்களும் கவனித்துக் கொண்டும் காலத்தை எதிர்பார்த்துக்கொண்டும் காத்திருந்தனர்.

தற்போதைய ஆட்சியாளர்களிடத்தில் மக்களின் மீது கருணை காட்டி மதுக்கடைகளை மூடவலியுறுத்தி பல்வேறு இடங்களில் காந்தியச் சிந்தனையாளர்கள் காந்தி காட்டிய அறவழியில் தங்கள் கோரிக்கைகளை வைத்தும் அதை இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. நாங்கள் வைக்கும் கோரிக்கை அரசியலுக்காக அல்ல. ஒட்டுமொத்த மக்களுக்காக. எங்கள் கோரிக்கைகளிலும் எங்கள் செயல்பாடுகளிலும் எப்போதும் அரசியல் இருந்த தில்லை இருக்கப்போவதுமில்லை.

அரசுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடாது என்று கருதியும் இந்த அரசு மீது கொண்டுள்ள நல்லெண்ணத்தினடிப்படையிலும் காந்திப்பேரவை தமிழகத்தில் பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்தத் தமிழக முதல்வரை வலியுறுத்துகிறோம்.

எங்களது மக்கள் நலன் சார்ந்த, குறிப்பாக பெண்கள் நலன் சார்ந்த இந்தக் கோரிக்கையைத் தமிழக முதல்வரும் ஒரு பெண் என்பதால் பெண்களின் கண்ணீரைத் துடைக்கும் விதமாகத் தனது கரங்களால் பூரண மதுவிலக்கு அமல்படுத்த காந்தி நினைவுநாளான 30-1-2016க்குள் ஆணையிட்டுக் கையொப்பமிட வேண்டும். அவர் இடும் அந்த ஒரு கையெழுத்து ஒட்டு மொத்தத் தமிழக மக்களின் தலையெழுத்தையும் மாற்றி அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் கையெழுத் தாக அமையும்.

அதன்மூலம் நாற்பத்தாறு ஆண்டு களாக மதுவின் பிடியில் சிக்கத் தவித்த தமிழக மக்களைக் காத்த பெருமையும் காந்தியின் கொள்கையைப் பின்பற்றிய பெருமையும் பெரியார், அண்ணா கொள்கைகளைப் பின்பற்றிய ஒரே தலைவர் என்ற ஒட்டுமொத்த பெருமையும் தமிழக முதல்வருக்கு வந்து சேரும். அந்த வரலாற்றுச் சாதனையை ஏற்படுத்த  இப்போதைய அரசுக்குக்  கால அவகாசம் குறைவாகவே இருக்கிறது. காரணம் தேர்தல் அறிவிப்பு விரைவில் வர இருக்கறது.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு காந்தி நினைவுநாளும் தியாகிகள் தினமுமான  சனவரி 30க்குள் பூரண மதுவிலக்கை அமல்படுத்தத் தமிழக முதல்வர் உத்தரவிடவேண்டும்  என அகல இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை கேட்டுக்கொள்கிறது.

Pin It