ஊடகங்கள் கொண்டாடுகின்றன அவரது மகத்தான வெற்றியை. இதுவரையில்லாத அளவில் பெரும்பான்மையான வெற்றியை ஏற்படுத்தியிருக்கும் அவரது பிம்பம் பெரும் நிழலாய் அசைகிறது தேசத்தின் மீது. இந்திய தேசமே கொண்டாடிக் கொண்டிருக்கிறது என்பது போன்ற ஒரு தோற்றத்தைக் கட்டமைத்துக் கொண்டிருக்கின்றன ஊடகங்கள். முகநூல், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் பெருமளவில் குவிந்து கொண்டேயிருக்கிறது.

இதுதான் மோடி முன்வைக்கும் 21 ஆம் நூற்றாண்டின் புத்தம் புதிய அரசியல் சிந்தனை. ஆதரவாயினும் சரி, எதிர்ப்பாயினும் சரி மோடியைப் பற்றிய பேச்சுதான் தேசமெங்கும் நிறைந்திருக்க வேண்டும் என்று தேர்தலுக்கு முன்பிருந்தே நடைமுறைப்படுத்தும் உளவியல் பார்வை. இதுதான் மோடி உருவாக்கியிருக்கும் ஒப்புயர்வற்ற தற்கால அரசியல் தத்துவம். பா.ஜ.க. ஜெபிக்கும் தாரக மந்திரம்.

modi swearing inஆதரவு, எதிர்ப்பு, அவமதிப்பு, மரியாதை, கேலி, கருத்துக்கள், பிற அபிப்ராயங்கள், துணுக்குகள்... என்று எந்த வகையிலும் மோடியின் பெயர் தொடர்ந்து ஊடகங்களில், சமூக செயல்பாட்டு தளங்களில் ஒலித்துக் கொண்டேயிருக்க வேண்டும். அதன்மூலம் ஒவ்வொரு குடிமகனின் மனதிலும் உளவியல் பூர்வமாக மோடியின் பிம்பம் பதிந்துகொண்டேயிருக்க வேண்டும். அது எந்த ரூபத்தில் பதிந்தாலும் சரி. அந்த ரூபத்தை எதிர்வரும் காலங்களில் தனக்குத் தக்க வகையில் மாற்றிக்கொள்ள முடியுமென்ற தன்னம்பிக்கையுடன் உருவாகிறது அந்த தரிசனம்.

இந்த மோடியிஸத்திற்கு ஊடகங்களும் சமூக செயல்பாட்டு தளங்களும் மிக முனைப்புடன் செயல்படுத்திக் கொடுத்தன. தேசம் மோடியின் புத்துணர்ச்சியூட்டும் பானத்தை அருந்திக் களித்துக் கொண்டிருக்கிறது.

இந்த சிந்தனையோட்டத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி மிக அழகியலாக தனது அடுத்த காலடியை எடுத்து வைக்கிறார் மோடி. தனது ‘நாடாளுமன்றப் பிரவேச காண்டத்தை’ காவியத் தன்மையுடன் அரங்கேற்றுகிறார். நாடாளுமன்றக் கட்டிடத்தின் நுழைவாசல் படிக்கட்டுகளில் காலடி வைத்ததும் உணர்ச்சி வசப்பட்டு மண்டியிட்டு அமர்ந்து தலை தாழ்த்தி வணங்குகிறார். உடனே தேசமெங்கும் பற்றிக் கொள்கிறது தேசப்பற்று தீ .

இந்திய மனம் என்பது காலங்காலமாக தனது தொழிலை தெய்வமாக வழிபாடு செய்வது. தனது ஜீவிதமாய் விளங்கும் தொழிற்சாலைகளை கடவுளாக வணங்குவது. உயர் வர்க்க, மத்திய தரவர்க்க, பாட்டாளி வர்க்க உளவியல் என்பது ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்னும் சுலோகத்தின் அடிப்படையில் இயங்குவது. இங்கு ஆத்திகம், நாத்திகம் என்று எதுவுமே முன் வைக்கப்படாமல் தாங்கள் செயல்படும் துறையை ஆலயமாக வழிபடும் உளவியல் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிறது.

மத்திய தர வர்க்கம் அலுவலகத்தில் நுழைந்தவுடன் சாமி கும்பிடுவது, பாட்டாளி வர்க்கம் வேலையைத் துவங்கு முன் தனது வேலைக்கான கருவியை வழிபட்டு வேலையைத் துவக்குவது. இப்படிப் பல்வேறு விஷயங்களைச் சொல்லலாம். அந்த உயிர் நிலையைத்தான் சுண்டிவிட்டார் மோடி. அடுத்த கணம், தேசம் உணர்ச்சிப் பிழம்பாகிவிட்டது.

தலைகலைந்த அறிவுசீவிச் சிந்தனையாளர்கள், ‘இது ஒரு நாடகம், நடிப்பு’ என்றெல்லாம் விமர்சனங்களை வைக்கலாம். நல்லது; ஏன் இந்த நடிப்பை இதற்கு முன் வந்தவர்கள் நடிக்கவில்லை? நண்பர்களே, இது நடிப்பு, நாடகம் என்பதல்ல விஷயம். இதற்குப் பின்னால் வெடித்தெழும்பும் பலதரப்பட்ட மக்களின் மனநிலையைத் தூண்டிவிடும் உணர்ச்சிகரம் என்பது நிஜம்.

கடந்த பல வருடங்களாக இதுபோன்ற உணர்ச்சிகரம் மிக்க காட்சிகள் திரைப்படங்களில் கூட வரவில்லை. வெகுஜன மனவோட்டம் சார்ந்த சாந்தாராம், ராஜ்கபூர் போன்றவர்களின் தேசப்பற்று மிகுந்த திரைக் காட்சிகள் பெரும்பான்மையான மக்களை உணர்ச்சிப்பட வைத்ததை நாம் அறிவோம். இந்த தேசப்பற்று சார்ந்த திரைக் காட்சிகளில் எல்லாமொழிகளிலும் ஏதாவது ஒரு ஆளுமை கோலோச்சிக் கொண்டேயிருப்பார். தொடர்ச்சியான இந்தக் காட்சிகள் ஒரு கட்டத்தில் clicheவாகிப் போய் தற்காலங்களில் அந்த மனநிலையே கேலிக்குரியதாக ஆகிவிட்டது. குற்றவியல் சார்ந்த திரைக்காட்சிகளே எல்லா மொழிகளிலும் பெருமளவில் ஆக்கிரமித்து சலிப்பேற்படுத்திக் கொண்டிருக்கும் இச்சூழலில் இப்படியான சிந்தனைகளுக்கு ஏங்கும் மனநிலைகளை பூரண திருப்திகரமாக்குகிறார் மோடி.

இந்த ‘வழிபாடு’ பல்வேறு குறியீடுகள் கொண்டது. தேசத்தை ஆலயமாக வழிபடுதல், மற்றும் தொழிலுக்கு வந்தனை செய்தல். அதன் மூலம் தொழில்பற்றிய கரிசனத்தை முன் வைத்து தொழிற் புரட்சியை உருவாக்குதல், அதன் மேன்மையை அங்கீகரித்து தொழில் வளர்ச்சியைப் பெருக்குதல். பொருளாதார வளர்ச்சி, உலக மயமாக்கலின் பின்னணியில் எழும் தொழில் நுட்ப வளர்ச்சியைக் கைப் பற்றி சர்வதேச மதிப்பீடுகளில் உயரும் நிலை, தங்களுக்கான வளமானவாழ்நிலைக்கு அடிகோருதல்.. என்று பல்வேறு எண்ண அலைகளை மக்கள் மனதில் உருவாக்கிக் கொண்டே போகும் குறியீடு அது.

தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையும் உணர்ச்சிப் பிழம்புதான். ‘நாம் அனைவரும் நமக்குள்ள பொறுப்புகளை நிறைவேற்ற நம்மையே அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்’ என்று உணர்ச்சிகரமாகத் துவங்கி, சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும், நாட்டின் அரசியல் சாசனத்தை இயற்றியவர்களுக்கும் தலை வணங்குகிறார்.

‘அரசியல் சாசனத்தின் சக்தியால்தான் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஏழை இந்த இடத்தில் இப்போது நிற்க முடிகிறது. ஒரு சாதாரண நபர் பிரதமர் ஆகியிருப்பது ஜனநாயகத் தேர்தல் முறையின் அடையாளம்’ என்று பெருமையாய்க் கூறுகிறார். இந்த உரையில் அவர் மகாபாரதக் காவியத்தையே பல்வேறு பாவங்களில் அரங்கேற்றுகிறார்

ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கர்ணனை சத்ரியர்களின் சபையில் கலந்து கொள்ளக் கூடாது என்று ஒதுக்கிவைத்த போது எழுந்த தர்மாவேசம் அவன் தடைகளை உடைத்து உள்நுழைந்து முடிசூடும் தருணமாக மாறிய காட்சிகளை நமது மனத்திரையில் ஓட விடுகிறார்.

சட்டென வீராவேஷம் மிகுந்த அர்ச்சுனனாக மாறி ஒடுக்கப்பட்ட ஏழை மக்களுக்காகப் போராட வேண்டும் என்று வில்லை வளைக்கிறார். பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்யும் கிருஷ்ணபரமாத்மாவின் முகம் அழகாகப் பொருந்திப் போகிறது அவருக்கு. கூடவே அந்தக் கிருஷ்ண முகத்தை ‘பிரியதர்ஸினி’ கண்ணாடியில் (தனக்குப் பிரியமான நபரை அடையாளம் காட்டுவது) காணும்போது, ஆடியில் குரூரமாய்ச் சிரிக்கும் சகுனியின் பிம்பம் தரிசனமாகும் காட்சியையும் இங்கு தரிசிக்கலாம்.

‘இந்தக் கண்ணாடிக் கோப்பையைப் பாருங்கள்... இதைப் பார்ப்பவர்களில் சிலர், இதில் பாதியளவு தண்ணீர் இருக்கிறது என்பர் இன்னும் சிலர் பாதியளவு வெறும் கோப்பை என்பார்கள். ஆனால் நான் பாதியளவு தண்ணீரும் பாதியளவு காற்றும் இருக்கிறது என்பேன்...’ என்று ஒரு ஜென் தத்துவ ஞானியைப் போல பேசும்போது, தற்கால படித்த இளைஞர்கள் கிறங்கிப் போகின்றனர். ஆனால், அந்தக் கோப்பையில் பாதியளவு தண்ணீரும் பாதியளவு காற்றும் இருப்பதாக அவதானிக்கும் மோடி அவர்களே, அந்தக் கோப்பையில் மற்றொரு முக்கியமான அம்சம் இருக்கிறது. அதுதான் தாக சாந்தி. அதைத்தான் நீங்கள் அவதானித்திருக்க வேண்டும். ஸ்தூலமான பார்வையல்ல உங்களிடமிருந்து இந்தியா எதிர் பார்ப்பது; சூட்சுமமான பார்வையையே.

இந்தப் பார்வை உங்களுக்கு சித்தியடைந்திருந்தால், ‘ஒரு சாதாரண நபர் பிரதமர் ஆகியிருப்பது ஜனநாயகத் தேர்தல் முறையினால்தான் என்பதோடு நிறுத்தியிருக்கமாட்டீர்கள்.

இந்த அரசியல் சாசனம் எழுதிய டாக்டர் அம்பேத்கரை நினைவு கூர்ந்திருப்பீர்கள். மண்டல் கமிஷனை முன்வைத்து வி.பி.சிங்கையும். இன்னும் கொஞ்சம் விரிவான பார்வையில் தந்தை ஈவெ.ரா.பெரியாரையும் நினைவில் நிறுத்தியிருப்பீர்கள்.

ஆனால், திரு மோடி அவர்களே, நீங்கள் நினைவு கூர்ந்தது வேறொருவரை: திரு.பண்டிட் தீனதயாள் உபாத்யாயா அவர்களை. அவர், ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் முதல்நிலைத் தலைவர், ஆயுட்காலப் பிரசாரகர் மற்றும் ஹெட்கேவாரின் அத்யந்த சீடர்.

இந்திய சிந்தனையாளர், பொருளாதார வல்லுநர், சமூகவியல் அறிஞர், சரித்திர ஆய்வாளர் என்று பன்முக ஆளுமை கொண்ட இவர், ஆர்.எஸ்.எஸ்.கொள்கைகளை முன்னிறுத்தும் ’பாஞ்ச சன்யா’ என்ற வாரஇதழ் மற்றும் ’ஸ்வதேசி’ என்ற நாளிதளின் ஆசிரியர். ஹெட்கேவாரின் மராத்திய சுயசரிதையை இந்திக்கு மொழிபெயர்த்தவர்.

இந்த மஹானுபாவரின் பெயரில், அரசு மருத்துவக் கல்லூரி, பெட்ரோலியம் யுனிவர்சிட்டி என்று கல்லூரிகளை குஜராத்தில் ஏற்கனவே நிறுவியிருக்கிறீர்கள்.

மேலும் அவரது பெயர் இந்தியா முழுக்க ஒலிக்கப்படவேண்டும் என்ற பெரு விருப்பம்தான் உங்களது கன்னிப் பேச்சிலேயே அவரை நினைவு கூர வைத்திருக்கிறது. மேலும், அவர் உருவாக்கிய கடின உழைப்பும், தியாக மனப்பான்மையும், பலன் எதிர்பாராது கடமையை செய்யும் குணத்தையும் கொண்ட சிந்தனை முறையை, ரிக்வேதத்தில் சொல்லப்படும் முன்னோக்கிச் செல் என்கிற தத்துவார்த்தம் பொதிந்த கருத்துக்களை உள்ளடக்கிய ஸ்லோகமான, ஆர்.எஸ்.எஸ் கொள்கை கீதமாக விளங்கும், சரைவேதி மந்திரமாக இனங்காண்கிறீர்கள்.

Charaiveti Charaiveti Yahin to Mantra hai Apna,
Nahin Rukna , Nahi Thakna , Satat Chalana Satat Chalana
Yahin to Mantra hai Apnaa, Shubhankar Mantra hai apna

முதல் உரையிலேயே இதுபோன்ற பார்வைகளை முன்வைக்கும் கட்டாயம் என்ன? இந்தியா பல்வேறு மத, இன, மொழி சார்ந்த நிலப்பகுதிகளாலும், பண்பாட்டுச் சூழல்களாலும் சூழ்ந்திருப்பது. இதில் ஒற்றைத் தன்மை கொண்ட பிம்பத்தை, அதுவும் மதமாச்சரியங்களால் செயல்பட்டுவந்த ஒரு பிம்பத்தை முன்னிலைப்படுத்துவதன் கட்டாயத்தில் உங்களை ஆட்டுவிக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் அப்பட்டமான முகம் தெரிந்து போய்விடுகிறது.

குஜராத் முதல்வராக ஒரு எளிய பெண்மணியை நியமிப்பது, தான் ராஜினாமா செய்த அந்தக் கணம் வரை எவ்வித ஆவணங்களும் நிலுவையில் இல்லை என்ற அலுவலக மேலாண்மைத் திறன்.. என்று உங்களைப் பற்றி மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கும்போது சட்டென ஒரு ட்வீட் போடுகிறார் நிதின் கட்கரி, 'மோடி சம்ஸ்கிருத மொழியில் பதவிப் பிரமாணம் ஏற்பார். இது இந்துமதத்தின் எழுச்சி..'

ஆர் எஸ் எஸ் பரிவாரங்கள் கணிப்பது போல வெற்றி என்பது இந்து மதத்தின் எழுச்சி அல்ல. இந்திய மக்களின் எழுச்சி. சாமான்ய மக்களின் நன்னம்பிக்கை முனை. காலங்காலமாக ஊழலிலும் லஞ்ச லாவண்யங்களிலும் திளைத்துக் கொண்டிருக்கும் நாட்டை, ஏதாவது அற்புதம் செய்து ஊழலற்ற பாரதமாக உருவாக்கிவிட மாட்டாராவென ஏங்கும் பரிதாபமான ஆதரவு. இந்திய தேசத்திலேயே குஜராத்தை முதன்மை மாநிலமாகவும், முன்னோடி மாநிலமாகவும் உருவாக்கியிருப்பதாக, ஊடகங்கள் ஓயாது பேசிக் கொண்டேயிருப்பதை ஏற்றுக்கொண்டு அந்த அற்புதத்தை தங்களது லௌகீக வாழ்வியலிலும் நிகழ்த்த வேண்டி, உங்களுக்கு தங்களது மேலான ஆதரவை தந்திருக்கின்றனர்.

உங்களை, அவர்களது பார்வையில் இதுவரையில் தோன்றாத இலட்சிய அம்சமாக, அற்புதம் நிகழ்த்துபவராக இனங்காண்கின்றனர். அவர்களது எண்ணங்களுக்கான தன்மையைப் போலவே பல்வேறு அற்புதங்களை நிகழ்த்துகிறீர்கள். மேலும் மேலும் எதிர்பார்ப்பாக இலட்சிய புருஷராக உங்களது காலடியை முன்னெடுத்து வைக்கிறீர்கள். அப்படியான ஒரு செவ்வியல்(classical) நாடகக்காட்சியை மாய யதார்த்தவாதமாக (magical realism) மாற்றுகிறீர்கள். ஒரு காலடியை எடுத்து வைப்பதன் மூலம் 125 கோடி மக்களும் சேர்ந்து 125 கோடி அடிகள் முன்னேறிச் செல்லமுடியும் என்கிற மாய யதார்த்தவாதம் அது.

ஆனால், மாய யதார்த்தவாதத்தின் பின்புலம் யதார்த்தவாதம். இந்த யதார்த்தத்தை நமது தொன்மங்களிளிருந்துதான் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற பார்வையில்தான் முன்வைக்கிறீர்கள். அதனால்தான், சரைவேதி மந்திரத்தை முன்வைக்கும் நீங்கள் நமது பாரம்பரிய புராணங்களிலும், தொன்மங்களிலும் நம்பிக்கை வைக்கிறீர்கள். உங்களைப் போலவே நானும் நமது பண்டைய தொன்மங்களிலிருந்துதான் தற்கால யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளமுடியும் என்பதில் நம்பிக்கை கொண்டவன்.

ஒரு சிறு வித்தியாசம், நீங்கள் முன்வைப்பது நால் வர்ணக் கட்டமைப்பை முன் நிறுத்தி எளிய சாதிகளை ஒடுக்கும் ஆதிக்க அரசியலின் அதிகாரப் பார்வை கொண்ட பெருங்கதையாடல்களின் பகுதிகளை. நானோ, வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சிறு கதையாடல்களின் பகுதிகளை அவதானிக்கிறேன்.

சூத்திர வர்ணத்திலிருந்த சம்புகன், பார்ப்பன அந்தணர்களின் தொழிலான வேதம் கற்க முனைந்த போது அவனை வெட்டிக் கொள்கிறான் ஸ்ரீராமன். இச்செயல் நால்வர்ண அமைப்பில் முன் வைக்கும் அரச கடமையாக, அறமாக மாறுகிறது. இந்தச்செயலை ராம ராஜ்யத்தின் ‘குற்றவியல் தன்மை கொண்ட படிமமாக, விமர்சனம் செய்கிறார் அம்பேத்கர் தனது ‘சாதி ஒழிப்பு’ நூலில்.

இந்த சிறுகதையாடலின் தொன்மத்தில் முன்வைக்கப்படும் அறம் பற்றி. என்ன கருதுகிறீர்கள்?

அதேபோல பழங்குடி இனத்தவனான ஏகலைவன் சத்ரிய வித்தைகளைக் கற்றுக் கொண்ட காரணத்தினால் அவனது கட்டைவிரல் வெட்டப்பட்டு காவு வாங்கப்பட்ட நிகழ்வை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

தென்னிந்தியாவில் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த நந்தனை ஆலயப் பிரவேசம் செய்ய விடாது நெருப்பில் எரித்த காட்சி இன்றுவரையிலும் அரங்கேறிக் கொண்டிருக்கிறதே..

இப்படியான தொன்மங்களின் விடைகளிலிருந்துதான் நாம் தற்கால வளமான இந்தியாவின் யதார்த்தங்களை உருவாக்க வேண்டியிருக்கிறது. இந்த தொன்மங்களை மாய யதார்த்தங்களாக மாற்றும் வரலாற்றுப் போக்குகளே நம்முன் நீள்கின்றன. ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்திருக்கும் உங்கள் பார்வை இத்தருணத்தில் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது.

மேலும், உங்கள் முன் ஒரு காலிக் கோப்பை வைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒன்றும் இல்லை என்றோ, அல்லது ஜென பார்வையில் காற்றால் நிரம்பியுள்ளது என்றோ அவதானிக்க வேண்டாம். ஒருநூற்றாண்டு கால தாக வேட்கை கொண்ட கோப்பை அது.

- கௌதம சித்தார்த்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It