"பிழைப்புக்குப் போதிய ஆதாரமின்றியும், இந்துக்களுடன் ஒப்பிடும்போது சிறு எண்ணிக்கையிலும் ஓர் இந்து கிராமத்தின் புறச்சேரிகளில் ஷெட்யூல்டு வகுப்பினர் தொடர்ந்து வாழ்ந்து வரும்வரை, அவர்கள் தீண்டப்படாதார்களாகவே இருந்து வருவார்கள், இந்துக்களின் கொடிய அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாகி வருவார்கள், அவர்களால் சுதந்திரமான, முழுநிறைவான வாழ்க்கை வாழமுடியாது" - டாக்டர் அம்பேத்கர்

வடக்கு மாங்குடி கிராமத்து தலித் மக்கள் 24/4/2014 அன்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுக்குப் பிடித்தமான வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டு அவருக்கே வாக்களித்தனர் என்பதுதான் அவர்கள் செய்த மாபெரும் குற்றம். இந்திய ஜனநாயகத் தேர்தல் முறை வழங்கும் வாக்காளர் உரிமை என்னும் அடிப்படையின் பிரகாரம் பார்க்கப்போனால் இந்திய அரசியல் சட்டமும் தேர்தல் ஆணைய விதிமுறைகளும் வழங்கும் உரிமைகளுக்கு உட்பட்டுதான் அவர்கள் நடந்துகொண்டனர். ஆனால், அப்பகுதியில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர்கள் தங்களது ஆதரவு வேட்பாளரான சுதா மணிரத்தினத்துக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்குமாறு தலித்துகளை மறைமுகமாகவும், சில செய்கைகள் மூலம் நேரடியாகவும் வற்புறுத்தியுள்ளனர். இந்திய அரசியல் சட்டத்தின் நடைமுறைகள் மீதும் தேர்தல் ஆணைய நடவடிக்கைகள் மீதும் காவல்துறை மீதும் இவை எல்லாவற்றிற்கும் மேலாக விசிக அமைப்பாளர் தொல். திருமாவளவன் மீதும் நம்பிக்கைக் கொண்டிருந்த வடக்கு மாங்குடி தலித்துகள் வன்னியர்களின் அச்சுறுத்தல்களுக்கு பயந்துவிடாமல் துணிந்து விசிக அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு மோதிரம் சின்னத்தில் வாக்களித்துள்ளனர்.

dalit mangudi 600

தங்களது ஆதரவு வேட்பாளருக்கு வாக்களிக்கவில்லை என்கிற ஆத்திரத்தில் இரவு வேளைகளில் ஊருக்குள் புகுந்த 200க்கும் மேற்பட்ட வன்னியர்கள் அப்பாவி தலித்துகளை வீடுகள் புகுந்து தாக்கியதுடன் அவர்களது வீடுகளையும் அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளனர். அதாவது வடக்கு மாங்குடி வன்னியர்கள் தங்களது ஆதரவு வேட்பாளரான சுதா மணிரத்தினத்துக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்குமாறு தலித்துகளை கட்டாயப்படுத்தியுள்ளனர் என்பதும் தாங்கள் எவ்வளவு அச்சுறுத்தியும் வற்புறுத்தியும் கூட தலித்துகள் தங்கள் ஆதரவாளருக்கு வாக்களிக்கவில்லையே என்பதால் ஆத்திரம் கொண்டு அப்பாவி தலித்துகள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர் என்பதும் வெள்ளிடைமலை.

இது இந்திய அரசியல் சட்டம் மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல் என்பதும் ஊரறிந்த உண்மை. என்றாலும், இந்த தாக்குதலுக்குக் காரணமானவர்களை இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராக செயலாற்றியது, தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறும் விதமாக வாக்காளர்களை அச்சுறுத்தியது, தங்களது வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு மறைமுகமாக வற்புறுத்தியது, ஏழை தலித்துகள்மீதும் அவர்களது வாழ்விடங்கள் மீதும் தாக்குதல் தொடுத்தது என்கிற ரீதியில் அணுகியிருப்பதாகத் தெரியவில்லை காவல் துறையும் தேர்தல் ஆணையமும். நியாயமாகப் பார்க்கப்போனால் சுதா மணிரத்தினத்தின் ஆதரவாளர்கள் தலித்துகளை தங்களுக்கு வாக்களிக்குமாறு வற்புறுத்தினர்/ அச் சுறுத்தினர்/தாக்குதல் தொடுத்துள்ளனர் என்பதாகவும் சட்ட மீறல்கள் நடந்திருப்பதாகவும் கொண்டு வேட்பாளர் தகுதி இழப்பு செய்யும் விதமாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இவ்வகையில் பிரச்சினையை அணுகாமல் தலித்துகள் மீது சாதாரணமாக தொடுக்கப்படும் தாக்குதல்களுள் ஒன்றாகவே இப்பிரச்சினையைக் கையாள்கிறது காவல் துறையும் அரசு நிர்வாகமும் என்பதுதான் வேதனையிலும் வேதனையான செய்தி.

அடங்க மறு/ அத்து மீறு என்னும் வீர முழக்கங்கள் மூலம் தலித் இளைஞர்களை அரசியல்படுத்திய தொல். திருமாவளவனும் மேற்சொன்ன காரணங்களை அடிப்படையாகக் கொண்டு சுதா மணிரத்தினத்தின் வேட்பாளர் தகுதி இழப்புக் கோரி வழக்குத் தொடுக்காமலும், வலுவான போராட்டங்களை நடத்தி அரசு நிர்வாகத்தின் கவனத்தை பாதிக்கப்பட்ட தமது தலித் மக்கள் பக்கம் திருப்பாமல் இருப்பதுவும்/ மௌனம் காப்பதுவும்தான் நமக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறது. இப்பகுதி திருமாவின் சொந்தத் தொகுதியான சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்டது என்பதையும் மனதில் இருத்திக்கொண்டு இந்த செய்திக் கட்டுரைக்குள் நுழைவோமாக.

தலித் மக்கள் மீது தாக்குதல்:

120 குடும்பங்களும் 220 வாக்களர்களும் உள்ள வடக்கு மாங்குடி தலித் கிராமத்து மக்கள் தொல்.திருமாவளவனுக்கு மோதிரம் சின்னத்தில்தான் வாக்களிக்கப் போகிறார்கள் என்பதை முன் கூட்டியே யூகித்துவிட்ட வடக்கு மாங்குடி வன்னியர்கள் அப்பகுதி அதிமுக வன்னியர்களின் ஆதரவோடு மாம்பழம் சின்னத்தில் கள்ள ஓட்டுப் போட முயற்சிக்கின்றனர். விசிக இளைஞர்கள் (பெயர்கள் குறிப்பிட வேண்டாம் விசிக இளைஞர் ஒருவர் கேட்டுக்கொண்டதால் இங்கு பெயர்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன) இருவர் அதனைத் தடுக்கின்றனர். கள்ள ஓட்டுப் பதிவை தடுத்ததால் அங்கு இயல்பான வாக்குவாதங்கள் நடைபெற்றிருக்கின்றன. இந்த சிறிய காரணத்தை முன் வைத்துக்கொண்டு அன்று மாலை சரியாக 7.20 மணிக்கு மின்சாரத்தைத் துண்டித்துவிட்டு சவுக்கு, யூக்லிப்டசு உருட்டுக் கட்டைகளுடனும் கத்தி, கொடுவாள் உள்ளிட்ட கொலையாயுதங்களுடனும் 200 பேர் கொண்ட கும்பல் தலித் கிராமத்துக்குள் தலித் கிராமத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆண்களுள் பலர் காட்டுப்பக்கம் ஓடி ஒளிந்துகொள்ள ஊருக்குள் சிக்கிக் கொண்டவர்கள் கொடூரமாகத் தாக்கப்படுகின்றனர். 85 மேற்பட்ட வீடுகளில் புகுந்து கதவுகள், சன்னல், கிரைண்டர்கள், மிக்சிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் உடைத்து நொறுக்கப்படுகின்றன. டாடா ஏஸ் எனும் நான்கு சக்கர வாகனங்களும் 13 இரு சக்கர வாகனங்களும் சேதப்படுத்தப்படுகின்றன. பழனி, குருநாதன், ராணி, புரட்சிவிழி, புரட்சிதாசன், நாக்ராசன், ரவி, ஐயப்பன் மற்றும் பாப்பா என்னும் 65 வயது மூதாட்டி ஆகியோர் பலமாக தாக்கப்படுகின்றனர்.

தாக்குதல் நடந்து முடிந்த பத்து பதினைந்து நிமிடத்திற்குள் மாவட்டச் செயலாளர் செல்லப்பன் தலைமையில் விசிகவினர் அங்கு வந்து சேர்ந்து விட காவல் துறையின் உடனடி தலையீடு பதற்றத்தைத் தணித்து பாதுகாப்பு கொடுத்ததை ஒப்புக்கொள்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள். அதன் பிறகு தலித்துகள் காவல் துறையில்புகார் செய்கின்றனர். சுமார் 25 அப்பாவி வன்னியர்கள் மீது வழக்குப் பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். அதென்ன அப்பாவி வன்னியர்கள்? ஆம், தாக்குதல் தொடுத்தவர்கள் அதாவது உண்மையான குற்றவாளிகள் சுதந்திரமாய் நடமாடிக்கொண்டிருப்பதாகவும் தாக்குதலில் ஈடுபடாத அப்பாவிகள்தான் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் சொன்னவர்கள் அங்கிருந்து சற்றுத் தூரத்திலிருந்த ஒருவரை உதாரணத்துக்குச் சுட்டிக் காட்டவும் செய்தனர். உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் நடமாடிக்கொண்டிருப்பதுவே அவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.

மோசமாக தாக்கப்பட்டவர்களுள் பலர் சிதம்பரம், கடலூர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில் பழநி என்பவர் 20 நாட்கள் கழிந்து இறந்துபோகிறார். பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் பல நாட்கள் இருந்து சிகிச்சை பெற்று பின்பு கடலூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பாப்பா என்னும் மூதாட்டியும் 23/05/2014 அன்று இறந்துபோகிறார். இந்நிலையில் சிதம்பரம் அரசு மருத்துவமனைமுன் திரண்ட வடக்கு மாங்குடி தலித் மக்கள் பிரேதத்தை வாங்க மறுத்து மாற்று வசிப்பிடம், உண்மையான குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு, சாதி வெறியர்களிடமிருந்து பாதுகாப்பு என்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராடிய நிலையில் மாவட்ட நிர்வாகத்தால் தலித்துகளின் பத்தம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துப் பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

பாராமுகமாய் செயல்பட்ட ஊடகங்களும் அரசியல் கட்சிகளும்:

வனப் பகுதியொன்றில் ஒரு காட்டுப் பன்றிக்கு முள் குத்திவிட்டாலே அரை மணி நேரத்திற்கு ஒருமுறை சிறப்புச் செய்தி என்று நாள் முழுக்க ஒப்பாரி வைத்து மக்களின் கழுத்தறுக்கும் இன்றைய தொலைக்காட்சி ஊடகங்கள் ஒரு தலித் கிராமம் சாதி வெறியர்களால் இவ்வளவு மோசமாக தாக்கப்பட்டு, வீடுகள் சூறையாடப்பட்டு, வாகனங்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டு, பத்துப் பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று, இருவர் இறந்துபோன நிலையிலும் கூட பாதிக்கப்பட்டது தலித் மக்கள் என்பதாலேயே எப்போதும் போலவே வடக்கு மாங்குடி தலித் மக்கள் வன்னியர்களால் மோசமாக தாக்கப்பட்ட இந்த வன்முறையையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டன. குடும்பங்களில் ஊடாடும் சிறுசிறு மாமியார்/ மருமகள் சச்சரவுகளைக் கூட சிறப்பு விருந்தினர்களைக் கொண்டு சிறப்பு விவாத அரங்குகள் நடத்தி வியாபாரம் பண்ணும் தனியார் தொலைக்காட்சிகள் வடக்கு மாங்குடி தலித் மக்கள் வன்னியர்களின் தாக்குதலுக்கு ஆளான பிரச்சினையை செய்திகளுள் ஒரு செய்தியாக வாசிக்கவும் கூட மனமற்று ஆதிக்கச் சாதி ஆதரவு மனப்பான்மையை அப்பட்டமாய் வெளிப்படுத்தியுள்ளன. இதுவே ஆதிக்க சாதி இந்துக்களின் வீதிகளில் ஒரு பச்சைப் பாம்பு நுழைந்துவிட்டால் கூட அச்செய்தியை சம்பவம் நடந்த பகுதியில் பதற்றம்/பரபரப்பு என்று உலகத்துக்கு நொடிக்கொருதரம் தம்பட்டம் அடிப்பதில் கவனமாய் செயல்பட்டிருக்கும் மேற்படி ஊடகங்கள்.

ஊடகங்களின் பாராமுகம் இவ்வாறிருக்க இன்னும் ஒரு படி மேலே போய் நின்றுகொண்டு இப்பிரச்சினைக்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதுவாக வேடிக்கை பார்த்தன அரசியல் கட்சிகள். பெயரளவுக்கேயான கண்டன அறிக்கைகளும் கூட பெரிய/சிறிய அரசியல் கட்சி தலைவர்களின் வாய்களிலிருந்து வெளிப்படவில்லை என்பதுவும் கவனிக்கத்தக்கது. இந்திய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த கே.பாலகிருஷ்ணன் தவிர்த்து வேறு எந்த ஒரு அரசியல் கட்சி பிரமுகரும் ஆதரவு தெரிவிக்கவும் கூட அப்பகுதிக்குள் நுழையவில்லை இன்றுவரை. 144 தடையுத்தரவு நடைமுறையில் இருந்த சூழ்நிலையிலும் விசிக மாநில செயலாளர் வன்னியரசு வந்து பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து ஆதரவு சொல்லிவிட்டு சென்றுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு விசிகவின் சார்பில் நிவாரணமாக பணமும், அரிசியும், துணிமணிகளும் வழங்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் அமைப்பாளரான தொல்.திருமாவளவனை இப்பகுதிக்குள் நுழையவிடாமல் பார்த்துக்கொண்டது 144 தடையுத்தரவும் காவல் துறையும்.

புதிய கோடாங்கிக் குழுவினரும் கூட பாதிக்கப்பட்ட மக்களின் உறவினர்கள் என்று சொல்லிக்கொண்டும் புவனகிரி ஒடையூர் பகுதியிலிருந்து வருவதாகவும், அதற்கு அடையாளமாய் பூவும் பிஸ்கட் பாக்கெட்டுகளும் மிக்சர் பொட்டலங்களும் கைகளில் ஏந்திக்கொண்டும் அதுவும் போலீஸின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபின்தான் வடமாங்குடி தலித் கிராமத்துக்கு உள்ளே நுழைய முடிந்தது. அம்மக்களுடன் ஒரு கூரை வீட்டுக்குள் அமர்ந்து கலந்துரையாடிய பின்பு அவ்வூரை விட்டு வெளியேறும் வரை போலீஸால் புதிய கோடாங்கிக் குழு கண்காணிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. பத்தடிக்கு இரண்டு போலிஸ்கள், ஒரு தீயணைப்புத் துறை வாகனம், பெரிதும் சிறிதுமான போலீஸ் வாகனங்கள் என ஒட்டு மொத்தமாய் போலீஸின் கட்டுப்பாட்டின் கீழ் தாக்குதல் நடந்து முடிந்த ஒன்றரை மாதங்களுக்குப் பின்னும் கூட பதற்றமாய்க் காணப்படுகிறது அக்கிராமம். தலித் கிராமத்தின் நுழைவுப் பகுதியை ஒட்டியே இருக்கும் வடக்கு மாங்குடி வன்னியர் பகுதி இது போன்ற எவ்வித பதற்றமும் இல்லாமல் இயல்பாக காணப்படுவதையும் பார்க்க முடிந்தது.

வடக்கு மாங்குடியில் தலித்துகளின் வாழ்வியல் அமைவிடம்:

சிதம்பரம் தாலுகா, குமராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்கு மாங்குடி கிராமமானது வல்லம்படுகை, தீத்துக்குடி, பழைய நல்லூர், தெற்கு மாங்குடி ஆகிய பகுதிகளுக்கு மத்தியில் அமைநதுள்ளது. வடமாங்குடி உள்ளிட்டு மேற்காணும் அனைத்துப் பகுதிகளிலும் வன்னியர்களே பெரும்பான்மையாக வசிக்கின்றனர். 1500க்கும் மேற்பட்ட வன்னியர்கள் வசிக்கும் வடக்கு மாங்குடியை ஒட்டியபடி அமைந்துள்ளது சுமார் 120 வீடுகளில் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் 220 வாக்காளர்களையும் கொண்ட தலித் கிராமம். இக்கிராமத்து தலித் மக்கள் வசம் பொட்டளவு நிலமும் உடைமையாக இல்லாத நிலையில் தலித்துகளின் வீடுகளைச் சுற்றிலும் வன்னியர்களின் நிலங்களே அமைந்துள்ளன. இம்மக்கள் விவசாயக் கூலிகளாக அவ்வூர் வன்னியர்களின் தயவில் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர். ஆண்களும் பெண்களுமாய் தங்களது இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கும் கூட வன்னியர்களின் வயல் வரப்புகளையே பயன்படுத்தி வாழ்ந்தாக வேண்டிய சூழல். தலித்துகள் மட்டுமல்லாமல் அவர்களது கோழிகள் உள்ளிட்டு ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கும் கூட வன்னியர்களின் வயல் வரப்புகளையும், காடுகளையும் நம்பியே வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம்.

தாக்குததலுக்கு ஆளான மறுநாள் தங்களது கோழிகள் உட்பட ஆடு, மாடு போன்ற கால்நடைகள், குட்டியானை எனப்படும் சிறு சரக்குந்துகளில் உறவினர் வாழும் ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன; வன்னியர்கள் தொடர்ந்து தாக்கக் கூடும் என்ற அச்சம் காரணமாக ஆண்களும் பெண்களும் 'வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்' என்பார்களே அதுபோல ஒருமாத காலத்துக்கு ஊர்க்காவலில் வைக்கப்பட்டிருந்தனர்; வன்னியர் கிராமங்களைக் கடந்துதான் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் என்பதால் பயந்துபோன தலித் மாணவ/மாணவிகள் இவ்வாண்டு முழு ஆண்டுத் தேர்வும் எழுதவில்லை என்பதாக நிலவிய/நிலவுகிற கெடுபிடிகளிலிருந்து சாதி ஆதிக்கத்தால் சூழப்பட்டதொரு வாழ்விடத்தில் சூழ்நிலைக் கைதிகள் போல சிக்கிக்கொண்டு காலங்காலமாக கொத்தடிமைகள் போல வாழ்ந்து வருகின்றனர் வடக்கு மாங்குடி தலித்துகள் என்பதை நாம் புரிந்துகொண்டாக வேண்டும்.

பேருந்து நிறுத்தம், ரேசன் கடை, வாக்குச் சாவடி என்பது போன்ற பொது மக்கள் பயன்பாட்டுக்கான தமிழக அரசின் அலுவலகங்கள் வன்னியர்கள் வாழும் பகுதியிலேயே அமைந்துள்ள நிலையில், தலித்துகள் சவத்தைக்கூட வன்னியர்களின் நிலங்களின் வழியாகவே கொண்டு செல்லவேண்டிய இந்நிலையில் தலித் மக்கள் வன்னியர்களை சார்ந்து நின்றுதான் காலம் தள்ளவேண்டியிருக்கிறது. இவ்வாறாக தலித்துகளின் ஒவ்வொரு தினசரி வாழ்வியல் துணுக்குகளிலும் வன்னியர்களின் சாதி ஆதிக்கம் நீக்கமற நிறைந்துள்ள சூழ்நிலையில் தான் அப்பகுதியில் தங்களால் தொடர்ந்து வாழ முடியாது என்றும் தங்களுக்கு மாற்று வசிப்பிடம் வேண்டும் என்பதுமான கோரிக்கையை மாநில- மாவட்ட ஆட்சி நிர்வாகங்களிடம் முன்வைத்து அம்மக்கள் போராடினர். தலித் அரசியல் கட்சிகள் தங்களது இக்கோரிக்கைக்கு முக்கியத்துவம் வழங்கி போராட முன்வருவர் என்றும் எதிர்பார்த்தனர்.

"நம்ம பசங்க வண்டியில் போறப்ப, வறப்ப அவங்காளுங்க பேச்சுக் குடுக்குறாங்க தம்பி. இவங்க வண்டிய வுட்டு இறங்காம உட்காந்துனே பதில் குடுக்குறாங்களாம். மரியாதை குடுக்கிறதில்ல, திமிரா அலையுறானுங்கன்னு காதுபட பேசுனானுங்க. இதல்லாம் மனசுல வெச்சுக்கினுதான் அன்னக்கி அப்புடி பண்ணிட்டாங்க. நம்ம தெரு பூரா அவங்காளுங்கதான். ஊருக்குள்ள் நொழையறப்பவே கரண்ட கட் பண்ணிட்டாங்க. ஆம்பளைங்க பூராம் காட்டுப் பக்கம் ஓடிப்போய் ஒழிஞ்சிக்கிச்சுங்க. மாட்டுனவனங்களுக்கு சரியான அடி. வெறி வெறி புடிச்சிக்கின மனுசங்க மாதிரி நடந்துக்கிட்டானுங்கப்பா" என்றார் பெயர் குறிப்பிட விரும்பாத மூதாட்டி ஒருவர்.

பொருளாதார முன்னேற்றம் குறித்த சிந்தனை, நாகரிகத்தில் தோய்ந்த நவீன வாழ்க்கைமுறை மீதான் ஆர்வம், கல்வி தாகம் கொண்டு படுசுட்டியாய் இயங்குகிறது இளைய தலித் தலைமுறை. இளம் தலித்துகளின் இந்த ஆர்வம், அரசியல் ஈடுபாடு, பொருளாதர வளர்ச்சி, சுயமரியாதை சிந்தனை ஆகியவற்றைக் கண்டாலே இந்து சாதி ஆதிக்க வெறியர்களுக்கு எரிச்சல் உண்டாகிவிடுகிறது. இப்படித்தான் வடக்கு மாங்குடி தலித் இளைஞர்களுள் பலர் அருகாமையில் உள்ள சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு பட்டாதாரிகளாகவும் பொறியியல் பட்டம் பெற்றவர்களாகவும் காணப்படுகின்றனர். படித்து முடித்த கையுடன் சிதம்பரம், கோவை, திருப்பூர், சென்னை, கேரளா போன்ற பகுதிகளுக்கு திறமைக்குத் தக்க வேலைகள் தேடி விரைந்துவிடுகின்றனர். தாய் தந்தையரை, சகோதர சகோதரிகளைப் பிரிந்து வெளியூர்களுக்கு வேலைக்குச் சென்று அல்லும் பகலுமாய் பாடுபட்டு ஊர் திரும்பும் இளைஞர்கள் தங்களது குடிசை வீடுகளை திருத்தி காரை வீடுகளாய் மாற்றுவது, இரு சக்கர வாகனங்களை வாங்குவது, தூய்மையான நவ நாகரிக உடைகளை அணிந்துகொள்வது என்று கொஞ்சம் பசுமையாய் தலையெடுக்கின்றனர்.

இந்த வளர்ச்சியை அப்பகுதி வன்னியர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவ்விளைஞர்கள் அவர்களது முன்னோர்களைப் போல வன்னியர்களான தங்களுக்கு அடிமையூழியம் செய்ய மறுப்பதுவும், தங்கள் முன்னால் வெள்ளையும் சொல்லையுமாய் என்பார்களே அதுபோல அலைவதுவும் சாதி வெறியர்களின் மத்தியில் வஞ்சினத்தை தோற்றுவிக்கிறது. இவை எல்லாவற்றையும் விட மேலாக இன்னும் சாதி வெறியர்களின் ஆத்திரத்தைத் தூண்டும் செயலொன்று இருக்கிறது என்றால் அது தலித் இளைஞர்கள் அரசியல் ரீதியாக ஒருங்கிணைந்ததுதான். ஆம், வடக்கு மாங்குடி தலித் இளைஞர்களில் பெரும்பாலோர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்தவர்களாக இருப்பதை புதிய கோடாங்கிக் குழுவினால் உணர முடிந்தது. இது போன்ற காரணங்களினால் பொறாமை உணர்வும், ஆத்திரமும் மிகுந்துபோய் தலித் மக்கள் மீது தாக்குதல் தொடுக்க நேரம் பார்த்து காத்துக்கொண்டிருந்த வடக்கு மாங்குடி வன்னியர்களுக்கு சாதகமானதொரு களத்தை உருவக்கிக் கொடுத்தது சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளும‌ன்றத் தேர்தல்

தலித் மக்கள் வேண்டுவது வளமான வாழ்க்கையையல்ல; வாழ்வதற்கு ஒரு பாதுகாப்பான சூழலை:

தேர்தலைக் காரணமாகக்கொண்டு தலித் மக்கள் மீது சாதி வெறியர்கள் தாக்குதல் நடத்தி இரண்டு உயிர்கள் சாதிவெறிக்கு பலியிடப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அந்தப் பகுதியில் பதற்றமும் தலித் மக்கள் மத்தியில் பீதியும் சற்றும் தளர்ந்த பாடில்லை. காவல் துறையின் பாதுகாப்பு வளையத்துக்குள் தான் இருக்கிறது வடக்கு மாங்குடி தலித் கிராமம். பாப்பா என்ற மூதாட்டியின் இறப்பையொட்டி அம்மக்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக துணை ஆட்சியர் மற்றும் டி.எஸ்.பி. அடங்கிய மாவட்ட நிர்வாகம் விசிக மாவட்டச் செயலாளர் திரு.செல்லப்பன் முன்னிலையில் அம்மக்களிடமிருந்து கோரிக்கைகளை எழுத்துப் பூர்வமாக பெற்றுள்ளது. இந்த கண்துடைப்பு முயற்சியைத் தவிர்த்து அப்பகுதி தலித்துகளின் பிரச்சினைகளுக்கு அமைதிக்குழு அமைத்து தீர்வுகள் காண்பது என்ற ரீதியிலான அரசின் குறைந்தபட்ச சம்பிரதாயமான முயற்சிகள் உட்பட எந்த ஆக்கப் பூர்வமான முயற்சிகளும் மாநில/ மாவட்ட நிர்வாகங்களால் திட்டமிட்டு செயல்படுத்தப்பட‌வில்லை என்பதுவே நிதர்சனம். இன்றுவரைக்கும் கூட தாக்குதலுக்குக் காரணமான உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் ஊருக்குள் நடமாடுவது தலித் மக்கள் மத்தியிலான அச்சத்தை இரட்டிப்பாக்கி வைத்துள்ளது.

தலித் மக்கள் வேண்டுவது :

1) வடக்கு மாங்குடி தலித் கிராமம் பெரும்பான்மையினராக உள்ள வன்னியர்களென்னும் சாதி வெறியர்களின் நில/புல ஆதிக்கத்தால் சூழப்பட்டுள்ள நிலையில் தாங்கள் வாழ லாயக்கற்றதொரு பகுதியாக அப்பகுதியை கருதுகிறார்கள் தலித்துகள்; சாலை, போக்குவரத்து, இடுகாடு வசதி, மத்திய/மாநில அரசுகளின் மக்கள் சேவை அலுவலகங்கள் என்பது போன்ற வசதிகளுடன் கூடிய மாற்று வசிப்பிடம் அவர்களது முதன்மையான கோரிக்கையாகும்.

மாற்று வசிப்பிடத்திற்கு வாய்ப்பில்லாத சூழ்நிலையில்

2) தலித் கிராமத்தின் வழியாக பேருந்து இயக்கம்

3) ரேசன் கடை அரைநாள் தலித் பகுதிக்குள் இயங்க வேண்டும்

4) சாதி வெறி தாக்குதலில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை

5) தலித்துகளுக்கு தனிப் பாதையுடன் கூடிய சுடுகாடு வசதி (மாவட்ட ஆட்சி நிர்வாகம் தற்போது தனி சுடுகாடுக்கு நிலம் ஒதுக்கி அளவை கற்கள் நட்டு வைத்துள்ளதாக தெரிகிறது. அச்சுடுகாடுக்கு தனிப் பாதை கோருகின்றனர் தலித்துகள்)

6) தலித்துகளுக்கென்று பொட்டு நிலம்கூட சொந்தமாக இல்லாத நிலையில், தங்களது கால்நடைகளை மேய்ப்பதற்கு தனி மேய்ச்சல் இடம் ஒதுக்க வேண்டும்

7) வருங்காலத்தில் தலித்துகள் மீது சிறு தாக்குதலும் சாதி வெறியர்களால் நடத்தப்படமாட்டாது என்பதற்கு உத்தரவாதமளிக்கும் வகையில் எதிர் தரப்பினருள் முக்கியமானவர்களிடமிருந்து எழுத்துப் பூர்வமான உத்தரவாதம்

8) தலித் மக்கள் மீது முன்னின்று தாக்குதல் நடத்திய முக்கிய குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடிவரும் நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது சட்டப்பூர்வமான உரிய நடவடிக்கைகள் தேவை

"ஷெட்யூல்டு வகுப்பினரை இன்றைய அவர்களது உறைவிடங்களிலிருந்து மாற்றுவதற்கும், இந்துக் கிராமத்திலிருந்து விலகி தனியே ஷெட்யூல்டு வகுப்பினர் தங்களது சொந்த கிராமங்களை உருவாக்கிக் கொள்வதற்கும் அரசியல் சட்டம் வகை செய்ய வேண்டும்" என்று 1942 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாகபுரியில் நடைபெற்ற அகில இந்திய ஷெட்யூல்டு வகுப்பினர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானம் தீண்டப்படாதோரின் அரசியல் கோரிக்கைகள் என்னும் விவாதம், தீர்மானம் IVன் கீழ், தனிக் குடியேற்றங்கள் என்ற உபதலைப்பில் பிரிவு இ/1ல் இடம் பெற்றுள்ளது. டாக்டர் அம்பேத்கரின் முயற்சியால் இயற்றப்பட்ட இத்தீர்மானத்தின் குணாம்சம் சாதி இந்துக்களின் வன்கொடுமைகளிடமிருந்து தப்பித்து வாழ மாற்று வசிப்பிடம் வேண்டும் என்று கோரும் இன்றைய வடக்கு மாங்குடி தலித் மக்களிடமிருந்து இயல்பாக வெளிப்படுவதைக் காணமுடிகிறது. நிகழ்காலத்தில் தங்களுக்கும், வருங்காலத்தில் தங்களது சந்ததிகளுக்கும் சாதி வெறியர்கள் மூலம் எவ்வித சாதி வன்கொடுமைகளும் நடந்துவிடக்கூடாது என்ற நோக்கிலும் உயிர்ப்புடன் இருக்கும் அதற்கான காரணிகளை இப்போதே ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்ற எண்ணத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளன மேற்படி கோரிக்கைகள் என்பதை நாம் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மேற்காணும் எட்டு முக்கியக் கோரிக்கைகள் உள்ளிட்டு பத்தம்சக் கோரிக்கைகளை தலித்துகளிடமிருந்து கண் துடைப்பு நடவடிக்கையாக எழுத்துப் பூர்மாக பெற்றுள்ள மாவட்ட நிர்வாகம் காலம் கடந்து விட்ட நிலையிலும் இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக எவ்வித ஆக்கப்பூர்வமான செயலையும் மேற்கொள்ளவில்லை இன்று வரை. இந்த நிலையில் சாதி வெறியர்கள் தங்களுக்குள்ளாக "ஆனது ஆயிடுச்சி. இன்னும் பத்துப் பேரை வெட்டி சாய்த்துவிட்டு ஜெயிலுக்கு போவோம். இன்னும் எத்தனை நாளைக்கு இந்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும் அவங்களுக்கு. அதயும் பார்ப்போம் விடுங்கடா" என்று பேசிக்கொண்டு திரிகிறார்களாம். அப்படியொரு அநியாயம் நடந்தாலும் கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டு தான் நிற்கும் இந்த சாதி இந்துக்களுக்கு ஆதரவாக செயல்பட்டே பழகிப்போன மாநில/ மாவட்ட அரசு நிர்வாகமும், காவல் துறையும். கூடவே சில தலித் தலைமைகளும்.

(படம் நன்றி: இந்து நாளிதழ்)

- வெ.வெங்கடாசலம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It