ஒரு திரைப்படத்துக்கு ஒரு மாநில அரசு வரிவிலக்குச் சலுகை வழங்குவது புதிய செய்தி அன்று. ஆனால் ஒரே திரைப் படத்துக்குப் பல மாநில அரசுகள் வரிவிலக்குச் சலுகை வழங்கு கின்றன. கோவா, குசராத், அரியானா, கர்நா டகம், மத்தியப் பிரதேசம், திரிபுரா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், இமாசலப் பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் இவ்வாறு சலுகை வழங்குகின்றன. இவை அனைத்தும் பாரதிய சனதா கட்சி ஆளும் மாநிலங்கள். இந்த மாநி லங்களின் முதலமைச்சர்களும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது ஒவ் வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என்று விளம்பரமும் செய்கிறார்கள்.

அசாம், மத்தியப் பிரதேச மாநில அரசுகள் இந்தப் படத்தைப் பார்ப்பதற்கென்றே அரசு ஊழியர்களுக்கும் காவல் துறையினருக்கும் விடுமுறை கொடுத்து அனுப்புகின்றன. அசாம் அரசு சொல்கிறது: ஊழியர்கள் இந்தப் படத்தைப் பார்த்தமைக்குச் சான்றாக டிக் கெட்டைக் கொண்டுவந்து காட்ட வேண் டுமாம். அசாம், கர்நாடக, திரிபுரா மாநில அரசுகள் இந்தப் படத்துக்குச் சிறப்புக் காட்சிகள் ஒழுங்கு செய்கின்றன. பாசக அல்லாத கட்சிகள் ஆளும் மகாராட்டிரத் திலும் சத்தீஸ்கரிலும் மேற்கு வங்கத்திலும் இந்தப் படத்துக்கு வரிச் சலுகை வழங்கும் படி பாசக சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை எழுப்புகின்றனர்.

இந்திய நாட்டின் தலைமையமைச்சர் நரேந்திர மோதி இந்தத் திரைப்படத்தின் இயக்குநரை நேரில் அழைத்துப் பாராட்டு கின்றார். உண்மையை வெளிப்படுத்தும் இந்தப் படத்தைப் பார்த்துப் பயன்பெறும் படி நாட்டு மக்களுக்கெல்லாம் பரிந்துரைப் பதோடு, அதனைக் குற்றாய்வு செய்வோரைக் கடுமையாகச் சாடவும் செய்கிறார். இந்தப் படத்தின் பெயரைக் கெடுக்க சதி நடக்கிறதாம்!

திரையரங்குகளில் இந்தத் திரைப் படத் தைப் பார்த்து முடித்தவுடன் சிலர் பாரத் மாதா கி ஜே! போன்ற முழக்கங்கள் எழுப்பு கின்றனர். இவர்கள் யாராக இருப்பார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

kashmir files 630ஒரு திரைப்படத்தை இந்துத்துவ ஆற்ற ல்கள் இந்த அளவுக்குத் தலையில் தூக்கிக் கொண்டாடுகின்றன என்றால் அதற்குக் காரணம் இல்லாமற்போகாது. நாம் அந்தக் காரணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தப் படத்தின் பெயர்: காசுமீர் ஃபைல்ஸ் (THE KASHMIR FILES) எழுதி இயக்கியிருப்பவர்: விவேக் அக்னிஹோத்ரி. இவர் இதற்கு முன்பு இயக்கிய படம்: தாஷ்கண்ட் ஃபைல்ஸ் (THE TASHKENT FILES) அடுத்து இயக்கவிருக்கும் படம்: தில்லி ஃபைல்ஸ் (THE DELHI FILES).

காசுமீர் ஃபைல்ஸ் கதைப்படம்தான் என் றாலும் கதை காசுமீர் வரலாற்றில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றைக் கருவாகக் கொண்டு பின் னப்பட்டுள்ளது. பண்டிட்டுகள் எனப்படும் காசுமீர் பார்ப்பனர்கள் 1980களிலும் 90களி லும் காசுமீரை விட்டு வெளியேறிய நிகழ்வு பண்டிட் வெளியேற்றம் (PANDIT EXODUS) எனப்படுகிறது. இந்த வரலாற்று நிகழ்வை இது வெளி யேற்றம் அல்ல, இனவழிப்பு (GENOCIDE)” என்று நிறுவுவதுதான் விவேக் அக்னி ஹோத்ரியின் இந்தப் பட முயற்சி.

இதற்காக அவர் வரலாற்றில் 1990, 2016 ஆகிய இரு காலங்களையும் காசுமீரம், தில்லி ஆகிய இரு களங்களையும் எடுத்துக் கொள் கிறார். 1990ஆம் ஆண்டு காசுமீரில் பண்டிட் டுகள்மீது நிகழ்ந்த தாக்குதல்கள், கொலைகள் உள்ளிட்ட வன்முறையும் இதையடுத்து அவர்கள் அந்த மண்ணை விட்டுக் கூட்டமாக வெளியேறியதும் துயர நிகழ்வுகள் என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்த நிகழ்வுகளின் வரலாற்றுப் பகைப் புலத்தை இந்தப் படம் திரித்துச் சொல்கிறது.

காசுமீரத்தை இந்தியா தன்னோடு இணைத்துக் கொண்டது எப்படி? இது குறித்துப் பண்டித நேரு காசுமீர மக்களுக் கும் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கும் அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்றாமல் வஞ்சித்தது எப்படி? காசுமீர மக்களின் அன்புத் தலைவர் சேக் அப்துல்லாவின் ஆட்சியைக் கவிழ்த்து அவரை 11 ஆண்டுக் காலம் சிறையில் அடைத்தது எப்படி? காசுமீரத் தேசத்தின் தன்-தீர்வு ரிமையும் குடியாட்சிய உரிமைகளும் நேரு காலத்தில் மட்டுமல்ல, அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர்களின் காலத்திலும் மறுக்கப்பட்டதும் நசுக்கப்பட்டதும் எப்படி? காசுமீரத்தில் நடத்தப்பட்ட தேர்தல்களில் மோசடி செய் யப்பட்டது எப்படி? 1947 முதல் காசுமீர மக்கள் இந் திய வன் பறிப்பை எதிர்த்துப் போராடி வந்த போதிலும் 1987 வரையி லும் குறிப்பிடத்தக்க அளவில் ஆய்தப் போராட்டம் ஏதும் இல்லாமற் போனதும், அந்த ஆண்டு காசுமீரச் சட்டமன்றத் தேர்தலில் இந்தியத் தலைமையமைச்சர் இராசிவ் காந்தியின் ஆட்சிப் பொறுப்பில் பாரிய அள விலும் அப்பட்டமாகவும் நடந்த மோசடி களுக்குப் பிறகே இளைஞர்கள் ஆய்தமெ டுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதும் எப்படி? மறுக்கவே முடியாத இந்த வரலாற்று உண்மை களை அறவே மறைத்து விடுகிறது காசுமீர் ஃபைல்ஸ். இந்த உண் மைகளை காசு மீரம் பற்றிய புறஞ்சார் வர லாற்று ஆசிரியர் எவ ரும் மறுக்க மாட்டார். காசுமீரம் யாருக்கு? என்ற நூலில் நான் இந்த உண்மைகளைச் சுருக்க மாக எடுத்துக் காட்டியுள்ளேன்.

காசுமீரச் சிக்கல் தேசிய இனச் சிக்கல் என்பதை வேண்டுமென்றே மறைத்து, மதச் சிக்கலாகத் திரித்துக்காட்ட விவேக் அக்னி ஹோத்ரி தலைகீழாக நிற்கிறார். அவருக்கு எல்லாமே தலைகீழாகத் தெரிகின்றன.

காசுமீரப் போராட்டத்தின் குறிக்கோள் விடுதலையே. ஆசாதி! என்பதே உயிர் முழக்கம். காசுமீரத்தின் விடுதலைப் போராட் டம் இந்திய வல்லரசியத்துக்கு அச்சுறுத்தல் என்று காட்டினால் அதில் பிழையில்லை. ஆனால் இந்து மதத்துக்கும் இந்துக்களுக்கும் முஸ்லிம்களால் அச்சுறுத் தல் என்று நம்பச் செய்யும் முயற்சியில் காசுமீர் ஃபைல்ஸ் (காசுமீர் கோப்புகள்) காசுமீர் லைஸ் (காசுமீர் பொய்கள்) ஆகி விடுகிறது. முசுலீம்கள் இந்துக்களை அச்சுறுத்தி மதமாற்றம் செய்வ தற்காகவே பண்டிட் இனக் கொலையைச் செய்வதாக இந்தப் படம் கதை கட்டுகிறது, இசுலாமியர் மீதான வெறுப்பை வளர்க்க அவர் கள் அனைவரையும் பயங்கரவாதிகளாகவும் பாகிஸ்தானின் கைக்கூலிகளாகவும் காட்டு கிறது. காசுமீரத்து முசுலிம்களில் இந்தியா வுடன் ஒருமைப்படுவதை விரும்பக் கூடிய சிலர் இருப்பது போலவே பாகிஸ்தானுடன் இணைவதை விரும்பக் கூடிய சிலரும் இருப்பது மெய்தான். ஆனால் பெரும் பாலார் விரும்புவது விடுதலையைத்தான்! இந்தி யாவும் வேண்டாம்! பாகிஸ்தானும் வேண் டாம்! விடுதலைதான் வேண்டும்! இதுதான் அவர்களின் வேணவா, பெரு விருப்பம்! ஆசாதி என்ற உயிர்முழக்கத்தின் பொருள் இதுவே! காசுமீரிகளில் பெரும் பாலார் முசுலிம்களாக இருப்பினும் அன்று முதல் இன்று வரை அவர்கள் சமயச் சார்பின்மை யின் பக்கம் உறுதியாக நிற்பவர்கள்.

இந்து முஸ்லிம் கலவரங்களின் வர லாற்றை எடுத்துப் பார்த்தால் எவ்வளவு மோசமான மதவெறி வன்முறைக்கு நடுவிலும் இசு லாமியர்க்கு உதவிய இந்துக்களையும் இந்துக் களுக்கு உதவிய இசுலாமி யர்களையும் காண முடியும். ஆனால் இந்தப் படத்தின் இயக்கு நருக்கு ஒரே ஒரு நல்ல முசுலிம் கூட கிடைக்க வில்லை. உண்மைக் கதை என்ற தோற்றம் உண்டாக் குவதற்காகக் கூட முசுலிம்களில் ஓரிரு வரை மனிதநேயம் உள்ளவர்களாக் காட்ட வேண்டும் என்ற கவலை விவேக் அக்னி ஹோத்ரிக்கு இல்லை. குழந்தை யானாலும் முதியவரானாலும் முசுலிம் என்றால் மத வெறியன்தான்! இந்துக்களுக்கு எதிரான வன்முறையாளன்தான்! இதை நம்ப மறுத்தால் நீங்கள் தேச விரோதிதான்!

படத்தின் முதல் காட்சியிலேயே கிரிக்கெட் விளையாடும் சிறுவன் சிவா தன்னை சச்சின் டெண்டுல்கராகக் கற்பித்துக் கொள்கிறான். அவனைத் தாக்கும் முசுலிம் இளைஞன் இம்ரான்கானாகக் காட்டப்படுகிறான். பிறகு ஒரு காட்சியில் கணவனை இழந்த சாரதா என்ற இந்துப் பெண் தன் சிறு மகனோடு அகதி முகாமில் இருக்கிறார். அவளுக்கு உதவுவ தாகச் சொல்லும் இசுலாமிய முதியவர் அவளைத் திருமணம் செய்து கொள்வதாகச் சொல்கிறார்.

படம் முழுக்க முசுலிம்கள் பயங்கரவாதி களாகவும் பாகிஸ்தான் ஆதரவாளர்களாக வும் மதவெறியர்களாகவும் மட்டுமல்ல, கொடிய காமுகர்களாகவும் சித்திரிக்கப்படு கின்றார்கள். நல்லவராக, ஒழுக்கமுள்ளவராக, மனிதா பிமானம் உள்ளவராக ஒரே ஒரு முஸ்லிம் கூட காட்டப்படவில்லை. மோதி முதல் அண்ணா மலை வரை அனைவரும் இந்தப்படத்தை போற்றிப் புகழ்வதன் அடிப்படை இதுதான்!

இசுலாம் குறித்தும் முசுலிம்கள் குறித் தும் ஆர்எஸ்எஸ் பார்வையும் இதுவேதான்! இந்தப் படத்தின் நாயகன் கிருஷ்ணாபண்டிட் வெளி யேற்றக் காலத்தில் சிறுவனாக இருந்தவன். 2016ஆம் ஆண்டு அவன் தில்லியின் ஏஎன்யு பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக் கிறான். இது ஜெஎன்யு (ஜவகர்லால் நேரு யுனிவர்சிட்டி) பல்கலைக் கழகத்துக்கான குறியீடுதான்! இந்தப் பல்கலைக் கழகத்தின் குடியாட்சியச் சூழல் குறித்தும் அங்கு இடதுசாரிக் கருத்தியல் போக்குகளுக்குள்ள செல்வாக்கு குறித்தும் இந்துத்துவ ஆற்றல் களுக்குள்ள எரிச்சல் முழுவதும் இப் படத்தில் வெளிப்படையாகத் தெரிகிறது. முசுலிம்களும் கிறித்துவர்களும் பொது மையரும் (கம்யூ னிஸ்டுகள்) இந்து தேசத்தின் பகைவர்கள் என்று கோல்வால்கர் அறிவித்தார். ஜெஎன்யு-இல் ஓர் இடதுசாரிப் பேராசிரியர் கிருஷ் ணாவை காசுமீர விடுதலைக்கு ஆதரவாக மூளைச் சலவை செய்கிறார். பிறகு காசுமீ ருக்கே சென்று, பண்டிட் வெளியேற்றக் காலத்துப் பெரிசு களையெல்லாம் சந்தித்துப் பேசி, காசுமீர் செய்திக் கோப்புகளையும் பார்த்த பின் கிருஷ்ணாவிடம் மனமாற்றம் ஏற்படு கிறது. காசுமீரத்தில் அவர் சந்தித்துப் பேசுகிற பயங்கரவாதிகளில் ஒருவரே அவர் தந்தையைக் கொன்றவர் என்றும் தெரிந்து கொள்கிறார். தில்லிக்குத் திரும்பிப் பல் கலைக்கழக மாணவர்களிடையே காசுமீரத் தின் புனித வரலாறு பற்றிச் சொற் பொழி வாற்றுகிறார். ஆர்எஸ்எஸ்-க்கே உரித்தான வரலாற்றுப் புனைவுகளுக்கும் திரிபுகளுக்கும் அந்த உரையே சான்று.

இதை எழுதுகிற நான் தில்லியிலுள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இரு முறை இரவுநேரக் கூட்டங்களில் பேசி யுள்ளேன். இரண்டாவது முறை தில்லிப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கீலானியுடன் சென்றிருந்தேன். அவர் வருவதற்கு வித் யார்த்தி பரிசத் மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் இடதுசாரி மாணவர்களின் ஆதரவோடு அந்தக் கூட்டம் நடை பெற்றது. அந்தக் கூட்டத்தில் நான் காசுமீர விடுதலைப் போராட்டம் குறித்துப் பேசினேன். பெரும் பாலான இடதுசாரி மாணவர்கள் காசுமீரம் குறித்து இந்தியத் தேசியப் பார்வையுடன் இருக்கக் கண்டேன். காசுமீரத்தை இந்தி யாவின் பிரிக்கவியலாப் பகுதியாகக் கருதும் நாடாளுமன்ற இடதுசாரித் தலைமைகளின் பார்வை தான் அவர்களிடம் எதிரொலித்தது.

பிற்காலத்தில் அஃப்சல் குரு நினைவாக ஜெஎன்யு வளாகத் தில் நடைபெற்ற கூட் டத்தில் மாணவர் சங்கத் தலைவர் கண் ணையா குமார் நாங்கள் இந்தியாவுக்குள் சுதந்திரம் கேட்கிறோமே தவிர, இந்தியா விடமிருந்து சுதந்திரம் கேட்கவில்லை என்று பேசிய பேச்சு பரவலாக விவாதிக் கப்பட்டது. இந்தியாவிடமிருந்து சுதந்திரம் கோரும் உரிமை இல்லா விட்டால் இந்தி யாவுக்குள் சுதந்திரம் என்பதற்குப் பொரு ளுண்டா? என்று உமர் காலித், அனிர்பென் பட்டாச் சார்யா ஆகிய மற்ற மாணவர் தலைவர்கள் தொடுத்த வினாவிற்கு விடையில்லை.

பொதுவாக ஜெஎன்யு இடதுசாரிகளின் இந்தக் காசுமீர எதிர்ப்புப் பார்வை விவேக் அக்னிஹோத்ரிக்குத் தெரியாமலிருக்காது. ஆனால் இந்து தேசத்துக்கு எதிரான முசுலிம் சூழ்ச்சியில் இடதுசாரிகளும் உடந்தை என்ற கதையாடலுக்குப் பொருத் தமாக ஜேன்யு (அல்லது ஏஎன்யு) பற்றிய சித்திரம் தீட்டப் படுகிறது. முசுலிம்களும் கம்யூனிஸ்டுகளும் (கிறித்துவர்களும்) அழிக்கப்பட வேண்டிய பகைவர்கள் என்ற சித்திரிப்பு இந்துத்துவ வெறியூட்டலுக்குத் தேவைப்படுகிறது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் காசுமீரம் பற்றிய பார்வை வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியதாக மாறு கிறதாம்! படத்தில் வரும் இடதுசாரிப் பேராசிரியை துடிக்கிறார்! உண்மையில் அப்படியிருந்தால் மகிழ்ச்சி!

பண்டிட் வெளியேற்றத்தை இனக் கொலை என்று வகைப்படுத்துவது காசுமீர விடுதலைக்கு எதிரான அவதூறு மட்டு மல்ல! இந்த இனக்கொலையில் எத்தனைப் பேர் கொல்லப்பட்டனர்? இந்தக் கேள் வியையே கேட்கக் கூடாது என்கிறார் விவேக் அக்னி ஹோத்ரி! காசுமீர் ஃபைல்ஸ் படம் வருவதற்கு நெடுங்காலமுன்பே தகவல் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்ட விடை: 1990 வெளியேற்றத்தின் போது கொல்லப்பட்ட வர்கள் 30-32 பேர்! வேறொரு முறை 80 பேர் என்ற விடை தரப்பட்டது. ஆக 100 பேருக்கு மேல் இல்லை. இதுதான் இனக்கொலையா? மாநிலங்களவையில் உள்துறை அமைச் சகம் தந்த தகவலின் படி 1988-91 நான் காண்டு காலத்தில் 217 இந்துக்கள் கொல்லப்பட் டார்கள். கொல்லப்பட்டவர்களிலும் வெளி யேறியவர்களிலும் முசுலிம்களும் உண்டு. ஒருசிலரே கொல்லப்பட்டாலும் ஒருசிலரே வெளியேற நேர்ந்தாலும் அது துயரம்தான்! ஆனால் இனக்கொலை என்று வகைப் படுத்துவதற்குரிய தரவுகள் எங்கே?

வெளியேறிய பண்டிட்டுகளின் தொகை ஒரு இலட்சம், ஒன்றரை இலட்சம் என்று பலவாறாகச் சொல்லப்படுகிறது. ஒருசில பண்டிட்டுகளைப் போராளிகள் கொன்றது அவர்கள் பண்டிட்டுகள் எனபதாலோ இந் துக்கள் என்பதாலோ அல்ல, அவர்கள் காசுமீரிகள் மீது அரச பயங்கரவாதத்தை ஏவிய ஆட்சியில் உயரதிகாரிகளாக இருந் தார்கள் என்பதால்தான். இதைச் சாக்கிட்டு பண்டிட்டு களையெல்லாம் வெளியேறத் தூண்டியவர் ஆளுநர் ஜக்மோகன். முதலில் காங்கிரசிலும் பிறகு பாசகவிலும் இருந்த இந்துத்துவ வெறியர். வி.பி. சிங் நாட்டின் தலைமை யமைச்சரான போது அவரை ஆதரிக்க பாசக விதித்த நிபந்தனைகளில் ஒன்று: ஜக் மோகனை ஜம்மு காசுமீர் ஆளுநராக்க வேண் டும் என்பது. ஆளுநரின் அடாவடித்தனத்தால் ஒரு கட்டத்தில் முதல்வர் பரூக் அப்துல்லாவே பதவி விலகி விட்டார். அவர் விலகிய பிறகே ஜக்மோகன் தூண்டுதலால் பண்டிட் வெளி யேற்றம் பெருமளவில் நிகழ்ந்தது. ஜக் மோகனின் குற்றத்தை மறைத்து அப் போதைய உள் துறை அமைச்சர் முப்தி முகமது மீதும் பரூக் அப்துல்லா மீதும் முழுப் பழி சுமத்துகிறது காசுமீர் ஃபைல்ஸ். ஒரு முழுமையான விசா ரணை நடத்துங்கள், நான் குற்றவாளி யென்றால் என்னைத் தூக்கி லிடுங்கள் என்று இப்போது பரூக் அப்துல்லா அறை கூவல் விடுத்துள்ளார்.

அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 370தான் பண்டிட் இனக்கொலைக்குக் காரணம் என்றும் அதை நீக்கி விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்றும் பாதிப் புற்றவர்களின் குரலாகப் பேசுகிறது காசுமீர் ஃபைல்ஸ். இது நரேந்திர மோதி, அமித் சாவுக்கான மலிவுப் பரப்புரையே தவிர வேறல்ல. இந்திய நாடாளுமன்றத்தில் 370 நிறுத்தி வைக்கப்பட்டு இத்தனை ஆண்டு களுக்குப் பிறகும் ஒரே ஒரு பண்டிட் குடும்பம் கூட காசுமீரத்தில் மீள்குடிய மர்த்தம் செய்யப் படவில்லை என்பதே உண்மை! இத்தனைக் கும் காசுமீரத்து மக்கள் பண்டிட்டுகளை வரவேற்க அணிய மாய் உள்ளார்கள்!

காசுமீர் ஃபைல்ஸ் படம் காசுமீர விடு தலைக்கு எதிரானது மட்டுமன்று. காசு மீரத்தைக் காட்டி, பாகிஸ்தானைச் சொல்லி, முசுலிம்கள் மீது வெறுப்பைப் பரப்பி இந்து மத வெறியூட்டி நாட்டையே இந்து நாடாக்கும் ஆர்எஸ்எஸ் திட்டத்தில் ஒரு முகமைக் கருவியாக இந்தப் படத்தை இந்துத்துவ ஆற்றல்கள் பயன்படுத்த விரும்புகின்றன. இசுலாமியர்களை இனக் கொலை செய்ய வேண்டும் என்ற வெறிக் கூச்சல் இந்து சாதுக்களிடமிருந்தே எழுகிறது! இந்த இனக் கொலை உள்ளக் கிடக்கையை மறைக்கவே பண்டிட் இனக் கொலை என்ற பொய்யைத் திரைவிரிக் கிறது காசுமீர் ஃபைல்ஸ்!

இந்தப் படம் தமிழாக்கம் செய்யப்பட்டுத் தமிழ்நாட்டிலும் வெளியிடப்படுகிறது! தமிழர்களே, எச்சரிக்கை!

- தியாகு

Pin It