செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி ஒருவர், மாற்றுத்திறனாளிகளுக்கான "ஹெல்ப் லைன்" எண்ணில் (9944556168) குறுஞ்‍செய்தி மூலமாகத் தொடர்பு கொண்டு என்னைச் சந்தித்தார். கோவையின் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த அந்த மாற்றுத்திறனாளி "நான் பத்தாம் வகுப்பு முடித்து மூன்று ஆண்டுகள் ஆகின்றது. தற்பொழுது தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைககழகத்தில் இளங்கலை கணினி அறிவியல் படித்து வருகிறேன்" என்று கூறினார். நான் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கின்றீர்களா என்று கேட்டேன். "இல்லை தற்பொழுது பன்னிரெண்டாம் வகுப்பு தனித் தேர்வுக்கு விண்ணப்பிக்கவே வந்துள்ளேன்." என்றார்.

தனித் தேர்வுக்கு விண்ணப்பிக்க 19/11/2013 அன்று இறுதிநாள். எனவே இணையம் மூலமாக எனது விண்ணப்பத்தை அனுப்ப உதவுமாறு கேட்டுக் கொண்டார். பன்னிரெண்டாம் வகுப்பு படிக்காமல் நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் பட்டம் செல்லாது என்று கூறினேன். அவர் அதை நம்பவில்லை. "நான் இரண்டாண்டுகளுக்கு மேலாக தனியார் பயிற்சி மையத்தில் மாதம் ரூ.650 கட்டணமாகச் செலுத்திப் படித்து வருகிறேன். சேர்ப்புக் கட்டணமாக ரூ.2000 செலுத்தியுள்ளேன். தற்பொழுது மூன்றாம் ஆண்டில் படித்து வருகிறேன்" என்றார். மேலும் செவித்திறன் குறைபாடு உடையவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துத்தான் பட்டப்படிப்பில் சேரமுடியும் என்ற நிலை இல்லை. நேரடியாகவே பட்டப்படிப்பு படிக்கலாம் என்று கூறினார்.

தற்பொழுது வீட்டின் அருகில் இருக்கும் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் கூறியதால் தான் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க வந்ததாகவும், தனக்கு இதில் விருப்பமில்லை; இருந்தாலும் எனது பெற்றோர் என்னை பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்படி வற்புறுத்துகின்றனர். அவர்களுக்காகவே நான் படிக்க விண்ணப்பிக்கிறேன் என்று கூறினார்.

அந்த மாணவரின் நண்பர்கள் சிலரின் கைபேசி எண்களைப் பெற்று அவர்களிடம் குறுஞ்செய்தி அனுப்பி விசாரித்தேன். அவர்கள் அனைவருமே திறந்த நிலைப் பல்கலைக் கழக‌ங்களில் இளங்கலை ஆங்கில இலக்கியம், இளங்கலை வணிகவியல், இளங்கலை கணினி அறிவியல் போன்றவற்றைப் பயில்வதாகவும் கூறினர். மிகவும் அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது. அவர்கள் அனைவருமே பத்தாம் வகுப்பை தமிழ் வழியில் படித்துவிட்டு அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பதை அறியாது தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், வணிக நோக்கத்தோடு செயல்படும் சில தனியார் பயிற்சி நிறுவனங்கள் இவர்களது அறியாமையைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளை தங்களது வலையில் வீழ்த்தி ஏமாற்றி பணம் பறிக்கும் வேலையைச் செய்து வருகின்றனர். இந்தப் பணியில் சில செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளே ஈடுபடுகின்றனர் என்பது வேதனைக்குரியது.

மேலும் ஒரு செய்தி என்னை மிகவும் பாதித்தது. அந்த செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி பத்தாம் வகுப்புவரை தமிழ்வழியில் படித்து தேறியவர். ஆனால் தற்பொழுது அவர் என்னால் தமிழில் படிக்கவோ எழுதவோ இயலாது. தமிழ் எனக்குத் தெரியாது. இனி நான் ஆங்கிலத்தில் படிக்கவே விரும்புகிறேன் என்று கூறினார். மிகவும் அதிர்ச்சியடைந்தேன். செவித்திறன் குறைபாடு உடைய மாணவர்களுக்கு/மாணவிகளுக்கு ஒரு மொழி மட்டுமே பயிற்று மொழியாக இருக்கும். இரண்டாம் மொழி என்பதே கிடையாது. அனைத்துப் பாடங்களையும் அவர்களின் தாய் மொழியில் மட்டுமே பயில்கின்றனர். தாய்மொழி தவிர இரண்டாவது மொழியாக எதையும் எடுத்துப் படிக்க வேண்டியதில்லை. தமிழ்நாட்டில் தமிழ் மொழியை மட்டும் படித்தால் போதுமானது. இரண்டாம் மொழியாக ஆங்கிலம் படிப்பதிலிருந்து அவர்களுக்கு முற்றுமாக விலக்களிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கூடப் பயிலாத செவித்திறன் குறைபாடு உடைய மாற்றத்திறனாளிகள் சிலரின் தவறான வழிகாட்டுதலினால், தொடர்ந்து அவர்களிடம் மேற்கொள்ளும் மூளைச் சலவையினால் தமிழை மறந்து ஆங்கிலத்தை ஏற்கின்றனர். இதனால் தமிழையும் அவர்களால் ஏற்பதில்லை ஆங்கிலத்திலும் அடிப்படையைக் கூட கற்றுக் கொள்ள இயலுவதில்லை. சின்னச் சின்ன வார்த்தைகளை தப்பும் தவறுமாக ஆங்கிலத்தில் குறுஞ்செய்தியாக அனுப்புவதற்கு கற்றுக் கொண்டு முழுமையான ஆங்கில அறிவு பெற்றுவிட்டதாக தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர்.

செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளே உங்களுக்கு  கனிவான சில வேண்டுகோள்கள்...

1. பத்தாம் வகுப்பு தேறியவுடன் அருகில் உள்ள ஏதேனும் ஒரு அரசு மேனிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பில் சேர்ந்து உங்கள் படிப்பைத் தொடருங்கள். அனைத்து அரசு மேனிலைப் பள்ளியிலும் மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய கல்வி வழங்கப்படுகிறது. (inclusive education system) இந்த முறையில் ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு சிறப்பாசிரியர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் இவர்களது கல்விக்கு உதவுவார். மேலும் அரசு தொழிற் பயிற்சி (ITI), பல்தொழில்நுட்பப் பயிலகம் (Polytechnic) ஆகியவற்றிலும் சேர்ந்து படிக்கலாம். இதன் மூலமாக அரசு வேலைகளைப் பெறும் வாய்ப்பு அதிகரிக்கும்.

2. பன்னிரெண்டாம் வகுப்பு படிக்காமல் நேரடியாக திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தின் மூலமாகப் பெறும் பட்டம் பெயரளவில் மட்டுமே செல்லத் தக்கதாகம். இவ்வகையாகப் பெற்ற பட்டத்தைக் கொண்டு அரசுப் பணிகளுக்குச் செல்ல இயலாது. இதனை நன்கு உணர்ந்து பன்னிரெண்டாம் வகுப்பில் சேர்ந்து படியுங்கள்.

3. பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு கல்லூரியில் சேர்ந்தோ, தொலைநிலைக் கல்வி மூலமாகவோ பட்டம் பெறவும் முயற்சி செய்யுங்கள். தட்டச்சு, கணினி ஆகியவற்றையும் கற்றுத் தேர்ச்சி பெறுங்கள்.

4. இனிவரும் காலங்களில் சமூக ஆர்வலர்கள், மாற்றுத்திறனாளிகள் சங்கங்கள் ஆகியவற்றின் இடையறாத போராட்டங்களினாலும், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளாலும், வழங்கக் காத்திருக்கும் தீர்ப்புகளாலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய மாநில அரசுகளில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். அதில் செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது இடத்தை உறுதி செய்திட வேண்டும்.

5. செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளே உங்களுக்கு ஒரு மொழிக் கொள்கைதான் உதவும். இரண்டாம் மொழியை உங்கள் பட்டப்படிப்பிற்குப் பிறகு பயில்வதே சிறப்பாக இருக்கும். அடிப்படை ஆங்கில மொழி அறிவை நீங்கள் பெறுவது நல்லதே. இத்துடன் தமிழ் மொழியில் உள்ள சொற்களுக்கான பொருளை நன்கு புரிந்து கொள்ளவும் சைகைமொழியில் உங்கள் கருத்துக்களை நன்கு வெளிப்படுத்தவும் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். பேசுபவர்களின் உதட்டசைவைக் நன்கு ஊன்றிக் கவனித்து அதன் பொருளை உணர்ந்து கொள்ளுங்கள். உலகம் முழுவதும் உங்களது சைகை மொழியின் மூலம் உங்களது கருத்துகளை வெளிப்படுத்த முடியும் என்ற தன்னம்பிக்கை கொள்ளுங்கள். உலகத்தை உங்களால் வெற்றி கொள்ள இயலும்.

- சூர்ய.நாகப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It