"வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியா" எனப் பள்ளி நாட்களிலிருந்து படித்து வருகிறோம். ஆனால் தமிழ்த்தேசம், தமிழினம் என்றெல்லாம் பேசுவது இந்திய ஒற்றுமையைக் கெடுப்பதாகாதா?

ஒற்றுமை காண்பதில் ஒன்றும் பிழையில்லை. இருக்கும் வேற்றுமைகளை வேற்றுமை என ஏற்று, நாம் நாம் தமிழர்களாகவும் மலையாளிகளாகவும் வங்காளிகளாகவும் குசராத்திகளாகவும் ஒற்றுமை காண்பதே நியாயம். ஆனால் பாரத ஒற்றுமை என்ற பேரில் இயற்கை இன அடையாளங்களை அழித்துக் கொண்டு இந்தியர் என்னும் ஒற்றை அடையாளத்துக்குள் கரையச் சொல்வது அநியாயம், அராஜகம்.

ஒற்றுமைதானே வலிமை. நாம் ஒற்றுமை கெட்டுப் பிரிந்து கிடந்ததால்தானே இசுலாமியர்களும் பிரித்தானியர்களும் நம்மை எளிதாக அடிமைகளாக்க முடிந்தது. இப்போது மீண்டும் பிரிந்து சென்றால் நம்மை எவரும் எளிதில் ஆக்கிரமித்து விட மாட்டார்களா?

ஒற்றுமையாக இருந்த மாடுகள் தமக்குள் மூண்ட பகையால் சிங்கத்துக்கு இரையாகிப் போன கதைக்கு வேண்டுமானால் இது பொருந்தும். ஏதோ ஒரு காலத்தில் இந்தியா என்னும் நாடு இருந்ததாகவும் அங்கு ஒற்றுமையோடு கொஞ்சிக் குலாவி வந்த பாரதப் புதல்வர்கள் திடீரென்று அடித்துக் கொள்ள, அவர்களை எளிதில் இசுலாமியர்களும் ஆங்கிலேயர்களும் அடிமைப்படுத்தி விட்டதாகவும் சொல்வதெல்லாம் வெறும் சரடுகளே. தமிழர் வரலாற்றில் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு இந்தியாவுக்கோ இந்தியர்களுக்கோ கிஞ்சிற்றும் இடமிருந்ததில்லை. தொல்காப்பியம், சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம் எனப் பல பல தமிழ் இலக்கியங்களும் தமிழ்த் தேசம், தமிழர்கள் என்றெல்லாம் பேசுகின்றன. ஆனால் இந்தியத் தேசம், இந்தியர்கள் எனப் பேசும் ஒரே ஒரு வரியையாவது தமிழிலக்கியத்தில் எந்த இந்திய பக்தரும் புரட்டிக் காட்டட்டுமே!

சரி! இந்த ஒற்றுமையை யார் ஏற்படுத்தினால் என்ன? ஏற்பட்ட ஒற்றுமையைக் கெடுத்துக் கொள்வானேன்?

தில்லியின் கீழ் இன்றைய இந்தியப் பேரரசின் ஒற்றுமையை விடுங்கள். லண்டனின் கீழ் பர்மா, சிங்கப்பூர், ஆங்காங், பூட்டான், பிலிப்பைன்ஸ், நேபாளம், மியான்மர், பாண்டா தீவுகள் எனப் பெரும் பரப்பில் விரிந்து கிடந்த பிரித்தானியப் பேரரசின் ஒற்றுமை இன்னும் சிறப்பானதல்லவா? அதைக் கெடுத்துக் கொள்ளாது இருந்திருக்கலாம்தானே?

அன்று லண்டன் நம்மை அடிமைப்படுத்தியது. இன்று தில்லி நம்மை அடிமைப்படுத்துகிறதா என்ன?

நாம் வாக்களித்துச் சட்டமன்றத்துக்கு ஆட்களை அனுப்புகிறோம், அவர்கள் பார்த்து நமக்குத் தேவைப்படும் சட்டங்களை இயற்றித் தருவார்கள், எனவே நம் தலைவிதியை நாமே தீர்மானித்துக் கொள்ளும் சுதந்திரத் தமிழர்கள் நாம் என்றெல்லாம் கற்பனை செய்து கொள்ள வேண்டாம். இன்றைய சட்டமன்றம் லண்டன்காரனே நமக்குக் கொடுத்ததுதான். இந்த மன்றத்தை அன்று லண்டன்காரன் நினைத்தால் கலைத்தான், இன்று தில்லிக்காரன் நினைத்தால் கலைக்கிறான்! அன்றும் இன்றும் இந்த மன்றத்தின் வேலை மசோதா எழுதுவதே! அது சட்டமாக அன்று லண்டன்காரன் தேவைப்பட்டான், இன்று தில்லிக்காரன் தேவைப்படுகிறான், அவ்வளவுதான்! சட்டமியற்றும் வக்கில்லாத மன்றம் என்பதால்தான் காந்தியடிகள் இந்த மன்றத்தை 'மாண்புமிகு மாநகராட்சி' என்றார். இந்த லண்டன் மன்றத்தில் நமக்கு சாதிக்க ஒன்றுமில்லை என்றார் இந்தியரின் மகாத்மா! இந்த தில்லி மன்றத்தில் பிடுங்க ஒன்றுமில்லை என்றார் தமிழரின் பெரியார்!

நம் இந்திய எல்லை பாதுகாப்பாக இருந்தால்தானே நாம் பாதுகாப்பாக இருக்க முடியும். இம்மாம் பெரிய இந்தியாவுக்குள்ளேயே பாகிஸ்தான்காரன் சமயம் கிடைக்கும் போதெல்லாம் நுழைந்து விடுகிறான். பிறகு நாம் எம்மாத்திரம்? இதற்காகவாவது ஒற்றுமை வேண்டாமா?

முதலில் இந்திய எல்லை என்ற ஒன்றே வேடிக்கையானது. பிற தேசிய இனங்களின் எல்லைகளை விருப்பத்துக்குக் கபளீகரம் செய்வதை ஓர் அடிப்படை உரிமையாகக் கருதும் ஒரு நாடு உண்டென்றால் அது இந்தியாதான்!

விடுதலைக்கு முன்பே பாகிஸ்தானை இழந்து விட்டோமே என்கிற ஒப்பாரி மழையில்தான் நாம் இதுவரை நனைந்து வருகிறோம். ஆனால் இரத்தம் சொட்டச் சொட்ட இந்தியம் ஒட்ட வைத்துக் கொண்ட எல்லைகள் கொஞ்சமா? நஞ்சமா? 1947 ஆகஸ்டு 15 அன்று காஷ்மீரமும் தெலங்கானாவும் நாகலாந்தும் மணிப்பூரும் கோவாவும் சிக்கிமும் இந்தியத் தொடர்பற்று சுதந்தரமாக இருந்தனவே! அவற்றை வன்சூதில் கைப்பற்றி பாரத மாதா கூந்தலில் முடிந்து வைத்துக் கொண்டாளே? இந்தச் சிக்குக்குள் இந்திய எல்லையை எப்படிக் குறிப்பதாம்? எல்லைவெறி பிடித்த பாரத மாதா காலடியில் தமிழ்த் தாயின் எல்லைப் பாதுகாப்பை ஒப்புவித்துத் தமிழர் நன்மை கண்டனரா?

ஆளரவமற்ற இமய முகடுகளில் பனிப் பாலைவனமாய்க் கிடக்கும் கார்கிலை பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டதாகக் கூறி இந்தியத் தேசியர்கள் கூப்பாடு போட்டார்களே! தமிழர்களையும் இந்திய எல்லையைக் காப்பாற்றச் சொல்லி உசுப்பி விட்டார்களே! ஆனால் தமிழகத்தின் வடக்கெல்லையாகத் தொல்காப்பியரே குறித்துக் காட்டிய வடவேங்கடம் (இன்றைய திருப்பதி) என்னும் பெரும்பரப்பை ஆந்திராவுக்குப் பட்டா போட்டுக் கொடுத்தார் நேரு பெருமான்! இத்துடன் விட்டாரா இந்த சனநாயகப் புலி? இன்று நமக்குப் பெருஞ்சிக்கலாய்த் திகழும் முல்லை-பெரியாறு அணையை உள்ளடக்கிய தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் தமிழத்துக்கா? கேரளத்துக்கா? என முடிவு செய்ய பணிக்கர் என்னும் மலையாளியை நடுநிலையோடு முடிவு செய்யச் சொன்னதும் இதே நேரு பெருமகன்தான்! நேருவின் இந்தியம் செய்த இந்தச் சதியால்தான் தமிழன் இன்று மலையாளியிடம் நீர்ப் பிச்சை கேட்டு நிற்கிறான். தமிழகத்தின் வரலாற்று வடக்கெல்லையாம் திருவேங்கடத்தைக் காக்காத இந்த இந்தியத்தின் ஆக்கிரமிப்பு வடக்கெல்லையாம் காஷ்மீரம் காக்கத் தமிழன் குரல் கொடுக்க வேண்டுமாம்! நல்லது, கதை இத்துடன் முடிந்ததா!

அடுத்து வந்தார் நேருவின் தவப் புதல்வி இந்திரா! தமிழர்களுக்கு வரலாற்றுவழிச் சொந்தமான கச்சத்தீவைத் தமது பாட்டன் வீட்டுச் சொத்து போல் இலங்கைக்குத் தாரை வார்த்தார் அவர். கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதையல்லவா இது? தமிழன் சொத்தை சிங்களவனுக்குக் கொடுக்கத் தரகு வேலை பார்த்த இந்தியா தமிழகத்துக்குப் பாதுகாப்பா?

தமிழகத்தின் எல்லை பறிக்கும் தெனாவட்டை இந்திப் பரம்பரைக்கு வழங்கியது யார்? பாரதம் போற்றும் இந்திய அரசமைப்புச் சட்டமே அது! ஒற்றுமை என்னும் பேரில் நடக்கும் ஒற்றையாட்சியைக் காக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதற்பக்கமே கக்குகிற நஞ்சொன்று போதும், இந்தியத்தின் சனநாயக முகத்திரை கிழிக்க! அது வழங்கும் நீதியைக் கேளுங்கள்: இந்திய அரசு நினைத்தால் எந்த ஒரு மாநிலத்தின் எல்லையையும் வெட்டலாமாம், வெட்டுண்ட எல்லையை வேறெந்த மாநிலத்தின் எல்லையுடனும் ஒட்டலாமாம்! நம் எல்லை உரிமையனைத்தையும் இந்திக்காரனிடம் தந்து விட்டு அவன் நம் எல்லையை வெட்டுகிறான், நம் பரப்பை அயலானுக்கு தானம் செய்கிறான் என அழுவதில் என்ன பயன்? இதே இந்தியச் சட்டத் தருக்கத்தை நீட்டித்தால் என்னாகும்? அது மொத்தத் தமிழகத்தையே பிட்டுத் தெலுங்கனுக்கோ சிங்களவனுக்கோ தானம் செய்தாலும் கேட்க நாதியில்லை! நம் தமிழ் மாணவர்களுக்கு அப்பத்தைப் பிட்டுப் பங்கிட்ட சாமர்த்தியக் குரங்கின் நீதிக்கதை இனியும் தேவையா என்ன? இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதற்பக்கம் கூறும் 'நீதி' கதை ஒன்று போதுமே!

அது மேலும் சொல்கிறது, நம் தமிழ்நாடு மாநிலத்துக்குப் பெயர் வைக்கும் உரிமை கூட தமிழர்களுக்குக் கிடையாதாம். இந்தியா நினைத்தால் தமிழ்நாட்டை ஆரிய வர்த்தம் என்றுங்கூட அழைக்கலாம்! ஒன்றும் வேண்டாம், ஒருத்திக்குச் சொந்தமான வீட்டின் எல்லையை நான்தான் குறிப்பேன், வீட்டுக்கு நான்தான் பெயர் வைப்பேன் எனக் கூறினால் அவள் கொதித்துப் போக மாட்டாளா என்ன? ஆனால் உன் நாட்டு எல்லைகளையே தூக்கி நான் எவருக்கும் கொடுப்பேன், உன் நாட்டுக்கு நான்தான் பெயர் சூட்டுவேன், நீ மூச்சு விடக் கூடாது எனக் கொக்கரிக்கும் ஓர் அரசமைப்புச் சட்டம் தமிழர்களின் வேலியாகுமா?

நாம் அனைவரும் இந்தியர்கள் என்று ஒற்றுமையாக இருக்கும் போதே கர்னாடகமும் கேரளமும் ஆற்று நீர் தர மறுக்கின்றன. இது போதாதென்று நாம் தனித்து வேறு சென்று விட்டால் நம் நிலைமை இன்னும் மோசமாகி விடாதா?

ஆங்கில ஆண்டைகளின் கீழ் தமிழகமும் கர்னாடகமும் அடிமைகளாக இருந்த போது காவிரித்தாய் தங்கு தடையின்றித் தமிழகத்தில் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தாள். அவர்கள் 1924இல் ஓர் ஒப்பந்தம் கண்டு தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையே காவிரியை ஞாயமான வகையில் பங்கிட்டளித்தனர். அவர்கள் ஆண்ட வரை கன்னடர்களால் தமிழகத்துக்குப் புறம்பாக அணை எதையும் கட்ட முடியவில்லை.

ஆனால் இப்போது இந்தி ஆண்டைகளின் கீழ்தான் கர்னாடகம் ஆட்டம் போடுகிறது. அனைத்து உலக நீர்ப் பங்கீட்டு அறங்களையும் காலில் போட்டு மிதித்து கபினி, ஏரங்கி, ஏமாவதி என அணைகளுக்கு மேல் அணைகளைக் கட்டி, இவை போதாதென்று விரும்பிய போதெல்லாம் தடுப்பணைகளுக்கு மேல் தடுப்பணைகளைக் கட்டி தமிழனுக்கு ஒரு சொட்டுக் காவிரியும் வழங்காது அடாவடி செய்கிறது. அனைத்து அணைகளும் நிரம்பி வழியும் போது மட்டும் தமிழகத்தைத் தன் வடிகாலாக்கிக் கொள்கிறது. காவிரித் தீர்ப்பாயத்தின் ஓர் இடைக்காலத் தீர்ப்பையும் பொறுக்க மாட்டாது தமிழனையும் தமிழச்சியையும் வெட்டிச் சாய்த்து அகதிகளாகத் தமிழகத்துக்குத் துரத்தியடித்தது. இந்தக் கன்னட இனவெறிச் செயல்களைக் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது இந்தியம்.

கர்னாடகத்தின் காங்கிரஸ், பாஜக, சிபிஐ (எம்), சிபிஐ ஆகிய அனைத்து பாரதக் கட்சிகளும் ஒரே குரலில் தமிழகத்துக்கு ஒரு சொட்டுக் காவிரியும் கிடையாது என்கின்றன. ஆனால் தமிழகத்திலோ காங்கிரஸ், பாஜக, சிபிஐ (எம்), சிபிஐ கட்சிகள் தமிழகத்தைக் கர்னாடகம் வஞ்சிப்பதாகக் கூறுகின்றன. மூச்சுக்கு முந்நூறு தடவை இந்திய ஒற்றுமை பேசும் இந்தக் கட்சிகளின் தலைமைகள் எதுவும் யார் பக்கம் ஞாயம்? எனப் பேசாது கள்ள மௌனம் காக்கின்றன.

ஜென்மப் பகைவன் எனக் காட்டப்படும் பாகிஸ்தானுடன் சிந்து நதியையும் வங்கத் தேசத்துடன் கங்கையையும் இந்தியாவால் பகிர்ந்து கொள்ள முடிகிறது. ஆனால் பாரதத் தாயின் ஒரே புதல்வர்களுக்கு இடையே காவிரியை இந்தியாவால் பகிர்ந்தளிக்க முடியாதாம். இருந்தும் பாரதம் நமக்குக் கற்றுத் தருகிறது: பாகிஸ்தானியன் நம் பகைவனாம்! கன்னடன் நம் இந்தியச் சகோதரனாம்!

சுதந்தர நாடுகளாகிய பாகிஸ்தானையும் வங்கத்தேசத்தையும் இந்தியா வஞ்சித்தால் தட்டிக் கேட்க உலக ஆற்றுநீர் நீதி உண்டு. ஆனால் கன்னடத் தேசத்தால் வஞ்சிக்கப்படும் தமிழனுக்கு நீதி கேட்க யாருமில்லையே, ஏன்? தமிழன் தில்லியின் அடிமை என்பதால்தானே?

இந்திய ஒற்றுமைக்குப் பலியானது காவிரி மட்டுமா? அன்று பிரித்தானிய ஆண்டை கட்டிக் கொடுத்த பெரியாற்று அணை உடைக்கக் கேரளக் கோடலி பதம் பார்த்து நிற்கிறது. அதைச் சுவைத்துப் பார்க்க பாரத மாதா தருணம் பார்த்து நிற்கிறாள்! அவள் கண்களுக்கு இனவெறிக் கூத்தாடும் கன்னடனும் மலையாளியும் 'அக்மார்க்' இந்தியர்கள்! "என்னய்யா! அநீதி இது" எனச் சற்றே சிணுங்கும் தமிழர்கள் இனவெறியர்கள்! வாழ்க பாரத ஒற்றுமை!

இப்போது கூறுங்கள்! ஒற்றுமை வேண்டி பாரத மாதா பலிபீடத்தில் காவிரியையும் பெரியாற்றையும் காவு கொடுப்பதா? அல்லது தமிழ்த்தேச உரிமை முழங்கி கர்னாடக, கேரளத்தின் ஆற்று நீர் முற்றுகையை முறியடிப்பதா?

தமிழ்நாட்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருந்தால் நமது வேலைவாய்ப்புகள் பறிபோகாதா?

உள்ளபடியே, இந்திய ஒற்றுமை என்ற பேரில் நம் மீது திணிக்கப்படும் ஆங்கிலமும் இந்தியுமே நமது வேலைவாய்ப்பைப் பறிக்க வந்த கூற்றுவன்கள் என்பதை மனத்தில் நிறுத்த வேண்டும். தமிழ்த்தேசத்தின் தற்சார்பு வளர்ச்சியே தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் பாமரத் தமிழனையும் கொண்டு போய் உட்கார வைக்கும். கல்வி, சட்டம், தொழில் என அனைத்துத் துறைகளிலும் ஆங்கில, இந்தி ஆதிக்கங்களைத் துரத்தியடித்து அங்கு தமிழின் ஆட்சியை நிறுவுவதே அனைத்துத் தமிழர்களுக்குமான வேலைவாய்ப்பைப் பெருக்கிக் கொடுக்கும். இந்தியை ஓரளவுக்கேனும் நாம் அடக்கி வைத்திருப்பதால்தான் திரைப்படம், தொலைக்காட்சி என ஊடகத் தமிழ் உலா வருகிறது. இன்னும் துறைதோறும் துறைதோறும் தமிழ் வளர்ப்பின் தமிழர்தம் வே¬வாய்ப்பு பல்கிப் பெருகும் என்பதற்கு இதுவே சான்று!

இப்போது கூறுங்கள்! எல்லை, இயற்கைவளம், மொழி எதுவானாலும் தமிழர்தம் பாதுகாப்பு எதில் அடங்கியுள்ளது? இந்திய ஒற்றுமையிலா? தமிழ்த்தேசிய ஓர்மையிலா?

(ஆழம் திசம்பர் 2013 இதழில் வெளியான கட்டுரை)

Pin It