ஹிட்லரின் ஆக்கிரமிப்பில் இருந்த ஐரோப்பாவில் ஆறு ஆண்டுகளில் (1939-1945) 60 லட்சம் யூதர்கள் கொத்து கொத்தாக வதை முகாம்களில் எரியூட்டப்பட்டும், நச்சு வாயு செலுத்தியும் கொல்லப்பட்ட நிகழ்வை HOLOCAUST என்று குறிப்பிடுகிறது உலக வரலாறு. அதேபோல் ஒன்பது மாதங்களில் (செப் 2008 முதல் மே 2009 வரை) சிங்கள பேரினவாத இலங்கை அரசு, இந்தியா உட்பட, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஆதிக்க சக்திகளின் துணைக் கொண்டு, ”பயங்கரவாதத்திற்கு எதிரானப் போர்” என்னும் போர்வையில் ஈழத்தமிழரை இனப்படுகொலை செய்த கொடூர அவலத்தை குறிப்பதுதான் “முள்ளிவாய்க்கால்”. இனி, உலக வரலாற்றில் பேரழிவு என்னும் அர்த்தத்தில் பயன்படுத்தப்படும் ஹாலோகாஸ்ட் என்னும் ஆங்கிலச் சொல்லிற்கு இணையாக “முள்ளிவாய்க்கால்” என்னும் சொல் இனப்படுகொலை, GENOCIDE என்னும் ஆங்கில சொல்லிற்கு இணையாக பயன்படுத்தப்படும். அவ்வகையில், தமிழீழ வரலாற்றிலும், உலக வரலாற்றிலும் முள்ளிவாய்க்கால் என்பது இன அழிப்புப் போரின் நீங்கா அடையாளமாக என்றும் நிற்கும்.

’முள்ளிவாய்க்கால்’ என்று கூறும்போது நம் கண் முன்னே தோன்றுவது... பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரோடு புதைக்கப்பட்டது; பாதுகாப்பு வளையங்கள் என்று நம்ப வைத்து, அங்கு வந்து குவிந்த மக்கள் மீது கொத்து குண்டுகள் போட்டு அழித்தது; உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட இராசயன குண்டுகள் வீசப்பட்டு பல்லாயிரக்கணக்கானவர்கள் உடல் கருகி இறந்தது; பொதுமக்கள் மீதும் போராளிகள் மீதும் பாலியல் வன்முறையை ஒரு போர் நடவடிக்கையாக தொடுத்தது. குறிப்பாக, தமிழ் இளைஞர்கள் சித்திரவதைச் செய்யப்பட்டு நிர்வாணப் படுத்தப்பட்டு கண், கைகால்கள் கட்டப்பட்டு கொல்லப்பட்டது; 89,000 இளம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டது. ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்கள் ”காணாமல் போனது”; ஒரு லட்சம் ஈழத்தமிழர்கள் போரின் இறுதி நாட்களில் படுகொலை செய்யப்பட்டது; பல்லாயிரக் கணக்கான குழந்தைகள் ஏதிலிகளாக்கப்பட்டது; லட்சக் கணக்கானவர்கள் போதிய உணவின்றி, குறிப்பாக குழந்தைகள் ஊட்டச்சத்தின்றியும், மருத்துவ வசதியின்றியும் கொல்லப்பட்டது; மருத்துவ முகாம்கள் மீதும், குழந்தைகள் காப்பகங்கள் மீதும் குண்டு மழை பொழியப்பட்டது. ஐ.நா உள்ளிட்ட சர்வதேச சமூகம் தம் கடமையை செய்யாமல் இனப்படுகொலைக்கு துணைபோனது; இப்படி ”சாட்சிகளற்றப் போர்” என்று அழைக்கப்பட்ட அநீதியான இன அழிப்புப் போரின் சாட்சியங்களாக தொடர்கின்றது முள்ளிவாய்க்கால். முள்ளிவாய்க்கால் என்பது இனப்படுகொலைப் போரை மட்டுமின்றி அதற்குப் பிறகும் தொடருகின்ற சிங்கள மயமாக்கம், இராணுவ மயமாக்கம், பௌத்தமயமாக்கம், என்னும் கட்டமைப்பு இன அழிப்பையும் (STRUCTURAL GENOCIDE) அடையாளப் படுத்துகிறது.

இந்த இன அழிப்புப்போரின் எல்லா தடயங்களையும் முற்றாக அழிக்க இலங்கை அரசு முற்பட்டுள்ளது. மாவீரர்கள் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டுள்ளன.. இறந்தவர்களை தம் குடும்பங்களில் நினைவு கூறுவதுகூட தடை செய்யப்பட்டுள்ளது. போரினால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கவுன்சிலிங் என்று அழைக்கப்படும் மனநல வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன. இனப்படுகொலைக்கான, போர் குற்றத்திற்கான நீதியான சர்வதேச விசாரணையோ, உலகத் தமிழர்களின் பொது வாக்கெடுப்பு என்னும் தீர்வை நோக்கியோ சர்வ தேச சமூகம் நகராத நிலையில், வட இலங்கையில் தேர்தல் நாடகம் நடந்தேறியிருக்கிறது.

இந்த பின்னணியில்தான் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை உலகத் தமிழர்களின் துணையோடு தஞ்சையில் நிறுவுவதற்கான முயற்சி எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நினைவு முற்றம் தமிழீழ விடுதலைக்கான வரலாற்றுத் தடயங்களை சிற்ப ஓவியங்களாக பதிவு செய்திருக்கிறது. தமிழீழத்தில் மட்டுமின்றி தாய் தமிழகத்தில் உயிராயிதம் ஏந்திய தமிழ் நெஞ்சங்களையும் பதிவு செய்திருக்கிறது இந்த முற்றம். அதுமட்டுமின்றி தமிழ் மொழிக்காகவும் தமிழ் நாட்டுரிமைக்காகவும் தம்மை அர்பணித்துக் கொண்ட தமிழ் மறவர்கள், தலைவர்கள் மற்றும் அறிஞர்களின் நினைவு ஓவியங்கள் ஒரே அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்கில் தமிழர் ஒற்றுமைக்கு தடையாக உள்ள சாதியத்தையும் அதற்குப் பின்னணியான வைதீக மரபையும் சாடி, சமூக நீதிக்காகவும், இந்தி ஆதிக்கத்திற்கு எதிராகவும் போராடிய தந்தை பெரியாரின் படம் இடம்பெறவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது. கல்விக் கண் தந்த காமராசரின் நினைவு இந்த அரங்கின் பதிவில் இல்லை என்பதும் சர்ச்சைக்குரியதுதான். இவை தீவிர விமர்சனத்திற்குரியன. திருத்தப்பட வேண்டியன.

சர்ச்சைகள் இருப்பினும், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தமிழர்களின் அடையாளம்; இன அழிப்பிற்கு எதிரான அசலான அடையாளம்; போரே குற்றம் என்பதையும், அநீதியான போர் குற்றங்களின் அருங்கலைச் சாட்சியம்; எந்த சூழலிலும் மாந்த உரிமை பேணப்படவேண்டும் என்பதற்கான அறைகூவல்.

அமெரிக்காவில் வாஷிங்டன்னில் ஹாலொகாஸ்டிற்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள நினைவு அருங்காட்சியகம் United States Holocaust Memorial Museum http://www.ushmm.org/ போன்று தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இனப் படுகொலைக்கு எதிரான உலகளாவிய நினைவு அரங்கமாக அமைய வேண்டும். அமெரிக்காவில் நிறுவப்பட்டுள்ள நினைவு அரங்கத்திற்கு உலக மக்களும் தலைவர்களும் பார்க்கச் செல்வதைப் போல் இனிவரும் காலங்களில் தமிழ் தேசிய அரசியலை முன் வைக்கும் எந்த அரசியல் இயக்கமும், இனப்படுகொலைக்கு எதிரானவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கட்டாயம் பார்த்து ஊக்கம் பெற்று பண்பாட்டு எழுச்சிப் பெற வேண்டிய ஒரு கலைக் கூடமாக தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமையும் என்று நம்பலாம்.

ஆனால், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வீரத்தையும் துரோகத்தையும் பறைசாற்றும் கலைக் கோவிலை, தமிழ் இன எழுச்சியின், ஓர்மையின் அடையாளமாக திகழும் நினைவு முற்றத்தை. அழிக்க எத்தனிக்கும் தமிழினப் பகைவர்களின் செயல்களை முறியடிப்பது தன்மானமுள்ள தமிழர்களின் கடமையாகும்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பதை தடுக்கத் தொடுக்கப்பட்ட தடைகளை உடைத்து, நினைவு முற்றம் நீதிமன்றத்தின் ஒத்துழைப்போடும் உலகத் தமிழர்களின் துணையோடும் வெற்றிகரமாக திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாநில நெடுஞ்சாலைத்துறை நிலமீட்பு என்ற பெயரில், முறையாக அனுமதிப் பெற்று கட்டப்பட்டுள்ள, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவரையும் பூங்காவையும், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, இடித்ததன் மூலம் அரச அதிகாரத்தின் தமிழினப் பகையின் சூழ்ச்சி அம்பலப்பட்டுள்ளது.

ஆகவே, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை காப்பாற்றுவது என்பது இன அழிப்பிற்கு எதிரான, மனித மாண்பினை உயர்த்திப் பிடிக்க விழையும் அனைத்து தமிழ் உணர்வாளர்களின், மனித உரிமை ஆர்வலர்களின் வரலாற்றுக் கடமையாகும். இந்த முற்றத்தை நிறுவிய உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் முற்றத்தின் திறப்பு நிகழ்வில் அறிவித்ததுபோல், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தமிழ் மக்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அதனுடைய பாதுகாப்பும் மேம்பாடும் இனி நம் கையில். இது வெறும் ஒரு கட்டுமான நடவடிக்கையல்ல, ஓர் அரசியல் பண்பாட்டு நடவடிக்கை.

- பொன்.சந்திரன்

Pin It