மேட்டுக்குடி மற்றும் ஆளும் கும்பலால் திட்டமிட்டு திணிக்கப்பட்டு இந்திய மக்களை பீடித்திருக்கும் நோயும் அடிமைத்தனத்தின் சின்னமுமான மட்டைப் பந்து விளையாட்டிலிருந்து சச்சின் டெண்டுல்கர் முழுமையாக ஓய்வு பெற்று விட்டாராம். நாடே கண்ணீர் மல்க அழுது தவித்து அவருக்கு பிரியா விடை கொடுப்பது போலவும் அவர் மிக சிறந்த நாட்டுப் பற்றாளர் போலவும் ஒரு மாயத் தோற்றத்தை ஊடகங்கள் கட்டி எழுப்புகின்றன. ஏற்கனவே அவரை ஒரு மாபெரும் விளையாட்டு வீரராக அவர் திறமையை விட கூடுதலான படிமத்தில் மக்களின் மூளையில் ஏற்றி வைத்திருக்கும் இந்த ஊடகங்களுக்கு பெரு வணிக தொழில் நிறுவனங்களின் ஏவலாள் ஆன சச்சினை வைத்து கதறி கண்ணீர் விடுவது நல்லதொரு வணிக மேம்பாட்டு செயலாக இருக்கிறது.

இந்திய தலைமை அமைச்சர் அலுவலகம் உடனடியாக அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என அறிவித்து கௌரவிக்கிறது. காசு கொழுப்பெடுத்த மேட்டுக்குடி ஊதாரிகள் சச்சினுக்கு பிரியா விடை கொடுக்கவும் அவர் இறுதியாக விளையாடுவதை நேரில் காணவும் மும்பைக்கு வானூர்தியில் பறப்பது நாளிதழ்களில் முதல் பக்க செய்தியாகிறது.

மட்டைப்பந்து வீரர்கள் புகழ் பெற்றவர்களாக திகழ காரணம் அவர்களது விளையாட்டு திறமை மட்டுமல்ல. அவர்களை வைத்து மக்களிடம் அவர்கள் பெற்றுள்ள அறிமுகத்தை வைத்து பெரு வணிக தொழில் நிறுவனங்கள் மக்களை ஏமாற்றி தங்கள் உற்பத்தி பொருட்களை அவர்கள் தலையில் கட்ட ஊடகங்களை வைத்து திட்டமிட்டு உருவாக்குவதுதான் இந்த பெரும் புகழ்.

தாங்கள் விளையாடுவதன் மூலம் பெற்ற புகழை பொய்யும் புரட்டும் சொல்லி வணிக பொருட்களை விற்க பயன்படுத்துவது குறித்து இந்த நேர்மையாளர்கள் கொஞ்சமும் வெட்கப்படுவதில்லை. ஒரு துறையில் பெற்ற புகழை வேறொரு துறையில் ஆதாய நோக்கில் முதலீடு செய்வதே ஒரு மோசடி. அதிலும் மக்களை கொள்ளையிட துணை போவது கேடு கெட்ட மோசடி. இந்த வகையில் சச்சினின் மோசடியான ஒரு விளம்பர படத்தை எடுத்துக்காட்டாக பார்க்கலாம்.

"Boost is the secret of my energy" என்று கடந்த இருபது ஆண்டுகளாக தொலைக்காட்சிகளில் கூவுகிறார் சச்சின். அவரது உடல் திறனுக்கு அந்த சத்து பானம்தான் காரணமா என்று பார்த்தால் நிச்சயம் இல்லை என்றே விடை கிடைக்கும். காசுக்கு பஞ்சமில்லாத மேட்டுக்குடி வாழ்க்கையில் அவர் உண்ணும் உயர் ரக சத்தான உணவுகளும் இலட்சங்களில் கட்டணம் வாங்கும் மருத்துவர்களின் கவனிப்பும், இடையறாத உடற் பயிற்சியுமே அதற்கு காரணம் என்பதை அவரும் அறிவார், நாமும் அறிவோம். ஆனாலும் பூசுட் குடிப்பதே அவரது ஆற்றலுக்கான கமுக்கம் என சிறுவர்கள், அப்பாவி பெற்றோர்கள் மனதில் ஆழப் பதிய வைத்து மக்களை ஏய்த்து கொள்ளையிடுகிறது கிளாக்சோ நிறுவனம். கோடிகளில் கட்டணம் வாங்கிக் கொண்டு இந்த மோசடிக்கு துணை போகிறார் சச்சின். கடைசியில் அந்த கோடிகளும் மக்கள் தலையில்தான் விடியும்.

இன்னொரு விளம்பரம். அதில் வேறொரு மட்டைப்பந்து வீரர் [பெயர் தெரியவில்லை, இந்த கண்றாவி விளையாட்டு மீது ஆர்வம் இன்றி இருப்பதால் பெரும்பாலானவர்கள் பெயர் தெரிவதில்லை] தோன்றி விக்சு உறிஞ்சுகுழலை [Vicks inhaler] ஒரு முறை உறிஞ்சுகிறார். அவரை பீடித்திருந்த தடுமன் [ஜலதோஷம்] பஞ்சாய் பறந்து விடுகிறது. என்ன ஒரு மோசடி. தடுமன் நோய் மருந்து எடுத்துக் கொண்டாலும் எடுத்துக் கொள்ளாவிட்டாலும் ஓரிரு நாட்கள் இருந்துதான் போகும். விக்சு உறிஞ்சுகுழலை ஒரு மணி நேரம் வைத்து நாகசுரம் வாசித்தாலும் போகாது. 

இயல்பிலேயே இந்த மட்டைப்பந்து விளையாட்டு பரந்து பட்ட மக்களுக்கு எதிரானது. இந்தியாவில் இந்த விளையாட்டின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் சற்றே சுருக்கமாக பார்த்து விடலாம். 

இங்கிலாந்தில் தோன்றிய மட்டைபந்து விளையாட்டை பிரித்தானிய "துரைமார்கள்" குடியேற்ற நாடுகளிலும் விளையாடி பிரபலப்படுத்தினர். வெள்ளை நாய்களுக்கு நாட்டை காட்டி கொடுத்து கூட்டி கொடுத்த இந்திய மன்னர்கள் என்ற பெயரில் வாழ்ந்த இழிபிறவிகள் அவர்களோடு சேர்ந்து இந்த மட்டைப்பந்தை விளையாடி வந்தனர். பகல் பொழுதில் வெள்ளையனின் ஊரை அடித்து உலையில் போடும் திட்டங்களுக்கு ஒத்தூதி விட்டு மாலை நேரத்தில் அவர்களுடன் சேர்ந்து விளையாடியும் குடித்து கும்மாளமிட்டும் பொழுதை கழித்த இந்த இழிபிறவிகள் தூக்கி பிடித்த விளையாட்டுதான் இந்த மட்டைப்பந்து விளையாட்டு. இவர்களோடு சேர்ந்து அன்றைய ஆட்சி இயந்திரத்தில் பங்கு வகித்த பார்ப்பன மேல்சாதியினரும் இந்த விளையாட்டை தூக்கி பிடித்து வந்தனர்.
 
ஆக வெள்ளை ஏகாதிபத்தியத்தின் அடிமைகளும் அடிமைத்தனத்தை நேசிப்பவர்களும் மட்டுமே மட்டைபந்தை விரும்பி விளையாடலாம். மான உணர்ச்சி கொண்டோர் விரும்ப முடியாது. 

மட்டைப்பந்து கண்டுபிடிக்கப்பட்ட இங்கிலாந்து ஒரு குளிர் நாடு. ஆண்டின் ஆகப் பெரும்பான்மையான நாட்களில் சூரியனின் கதிர்கள் சாய்வாக விழும் வகையில் உலக உருண்டையின் ஓரத்தில் அமைந்த நாடு. குளிர் மிகுந்த அந்நாட்டில் வெயில் என்பதே அபூர்வமானது. இதமானது. அங்கு நீண்ட நேரம் வெயிலில் காய்வது உடலுக்கு நன்மை பயப்பதாக இருக்கிறது. ஆகவே அந்த நாட்டில் நாள் முழுவதும் வெயிலில் நின்று விளையாடும் மட்டைப்பந்து அவர்களுக்கு பொருத்தமான விளையாட்டு. அப்படியிருந்தும் அந்நாட்டில் பெரும்பாலான மக்கள் விரும்பி விளையாடுவதும் ரசிப்பதும் கால்பந்து விளையாட்டைத்தான். அங்கும் கூட மட்டைப்பந்து மேட்டுக்குடி சோம்பேறிகளின் விளையாட்டாகவே இருக்கிறது. கால்பந்தே உழைக்கும் மக்களின் விளையாட்டாக இருக்கிறது.

இந்திய துணைக்கண்டத்தில் நிலவும் தட்ப வெப்ப சூழ்நிலைகளுக்கு சற்றும் பொருத்தமில்லாத விளையாட்டு மட்டைப்பந்து. நில நடுக்கோட்டிற்கு அருகில் அமைந்துள்ளதால் ஆண்டின் பெரும்பாலான நாட்களில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழும் வெப்பமண்டல பகுதி இது. இங்கு வெயில் என்பதே சுட்டெரிப்பது. கொடுமையானது. இந்த நாடுகளில் நாள் முழுவதும் வெயிலில் நின்று விளையாடுவது என்பது உடலுக்கு தீங்கிழைப்பதாகவே இருக்குமேயன்றி நலன் பயப்பதாக இருக்காது. இங்கு இதமான மாலை வெயிலில் ஓரிரு மணிநேரம் கால்பந்து, கூடைப்பந்து, கபடி போன்ற விளையாட்டுகளை விளையாடுவதே உடல்நலனுக்கு நன்மை சேர்ப்பதாக இருக்கும்.

இப்படிப்பட்ட மட்டைப்பந்து விளையாட்டை பெரும்பான்மையான மக்களின் மூளையில் திணிப்பதில் மேட்டுக்குடி கும்பல் பெரும் வெற்றி அடைந்திருக்கிறது. தொழில் நுட்ப வளர்ச்சியால் கடந்த மூன்று பத்தாண்டுகளில் தொலைக்காட்சிகளும் நேரடி ஒளிபரப்புகளும் பல்கி பெருகியதால் இதனை எளிதாக சாதித்து விட்டார்கள். மட்டைப்பந்து மீதான மோகத்தை வளர்ப்பதற்கு அவர்களுக்கு ஒரு தேவகுமாரன் தேவைப்பட்டான். அந்த இடத்தை கடந்த கால் நூற்றாண்டு காலமாக நிரப்பியவர்தான் சச்சின்.

நம் இளைஞர்களிடம் சமூக அக்கறையும் சமூக பிரச்னைகளுக்கு போராடும் குணமும் வளர விடாமல் தடுப்பதில் திரைப்படங்களும் மட்டைப்பந்தும் சம பங்காற்றுகின்றன. இந்த தீமைகள் மேலும் மக்களை சீரழிக்காமல் இருக்க சச்சினின் ஓய்வு ஓரளவுக்கு உதவும் என்பதால் அவரது ஓய்வை வரவேற்போம்.

மட்டைப்பந்து விளையாட்டை அது தோன்றிய நாட்டிலேயே இப்படி காரி உமிழ்ந்தான் அறிஞன் பெர்னாட் சா.

"பதினோரு முட்டாள்கள் மற்றொரு பதினோரு முட்டாள்களுடன் விளையாடுவதை பதினோராயிரம் முட்டாள்கள் பார்த்து ரசிக்கிறார்கள்"

நாமும் காரி உமிழ்வோம்.

ஒழியட்டும் சச்சின் மாயை. தெளியட்டும் கிரிக்கெட் கிறுக்கு.

- திப்பு

(படம் நன்றி: தி இந்து)

Pin It