தீபாவளி நாளன்று மக்கள் தீபாவளி கொண்டாடும் காலை நேரத்தில் தீபாவளியைப் புறக்கணிக்கக் கோரும் ஊர்வலம் கழகம் மற்றும் இனஉணர்வு அமைப்புகளின் சார்பில் சென்னையில் நடத்தப்பட்டது. ஈழத்தில் இனப்படுகொலை நடக்கும்போது, தமிழர்களே, மத்தாப்பு கொளுத்தி மகிழாதீர்கள் என்ற வேண்டுகோள் முழக்கங்களுடன் மாபெரும் கருஞ்சட்டைப் படையின் அணிவகுப்பு எழுச்சியான அக்.27 ஆம் தேதி காலை 7 மணியளவில் மயிலை திருவள்ளுவர் சிலையி லிருந்து புறப்பட்டது.

தென் சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்கள். விடுதலை சிறுத்தைகள், மக்கள் எழுச்சி இயக்கம், புரட்சி பாரதம், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் ஆகிய அமைப்புகளோடு திருவொற்றியூர் திராவிடர் கழகத்தைச் சார்ந்த தோழர்கள் சிலரும் இதில் பங்கேற்றனர். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

“அங்கே ரத்தத்தில் வெடிகுண்டு; இங்கே சத்தத்தில் பட்டாசா? தமிழர்களே! தமிழர்களே! மத்தாப்புகளை கொளுத்தாதீர்; தீபாவளியை கொண்டாடாதீர். நாளும் மடியும் ஈழத் தமிழருக்காக குரல் கொடுப்பீர்; தமிழராய் இணைவோம்; தமிழராய் குரல் கொடுப்போம்; துரோகமிழைக்கும் இந்தியப் பார்ப்பன அரசே, இனப்படுகொலைக்கு துணை போகாதே” என்ற முழக்கங்களுடன் 300க்கும் மேற்பட்ட தோழர்கள் தீபாவளி கொண்டாட்டங்கள் நடக்கும் வேளையில் வீதி வீதியாக முழக்கமிட்டு சென்ற காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளுவர் சிலையிலிருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம், மயிலாப்பூர் அப்பர்சாமி கோயில் தெரு, கணேசபுரம், அம்பேத்கர் பாலம், ரோட்டரி நகர், அனுமந்தாபுரம், செல்லம்மாள் தோட்டம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்து காலை 10.30 மணியளவில் வி.எம்.தெரு பெரியார் சிலை அருகே வந்தடைந்தது.

இனப் படுகொலையை சித்தரிக்கும் படங்களை இளைஞர்கள் கரங்களில் ஏந்தி வந்தனர். ஒவ்வொரு வீதியிலும் ஈழத் தமிழர் படுகொலைகளையும் இந்திய அரசின் துரோகத்தையும் விளக்கி, தமிழர்கள் ஈழத் தமிழர் துயரில் பங்கேற்கும் வகையில் தீபாவளியைப் புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுத்து உரையாற்றப்பட்டது.

ஆண்களும், பெண்களும் திரளாக கருத்துகளைக் கேட்டனர். தீபாவளிப் புரட்டுகளை விளக்கிடும் துண்டறிக்கைகளும் திருவல்லிக்கேணி பகுதி பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அச்சிடப் பட்டு வழிநெடுக வழங்கப்பட்டது. ஒவ்வொரு பகுதியிலும் ஊர்வலம் சென்றபோது உணர்ச்சி பெற்ற இளைஞர்கள் ஊர்வலத்தில் இணைந்து கொண்டனர். ஊர்வலத்தினர் எண்ணிக்கை விரிவடைந்து கொண்டே போனது.

தோழர்கள் வேலுமணி (தமிழக மக்கள் எழுச்சி இயக்கம்), வழக்கறிஞர் வடிவம்மாள் (தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்), இசை மொழி (தமிழக பெண்கள் செயல் களம்), வழக்கறிஞர் கயல், பெரியார் திராவிடர் கழக செயல் வீரர்கள் கேசவன், உமாபதி, டிங்கர் குமரன், தமிழ், வேழவேந்தன், மயிலை சுகுமார், விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சார்ந்த பகலவன், பெரியார் பித்தன், புரட்சி பாரதத்தைச் சார்ந்த மதன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முதல் நாள் இரவு 9 மணிக்கு திட்டமிடப்பட்டு இரவுக்குள் செல்பேசி தகவல் வழியாக தோழர்கள் திரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதுமையான இந்த பரப்புரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘மக்கள் தொலைக்காட்சி’, ‘சன் நியூஸ்’ தொலை காட்சிகள் இந்த ஊர்வலத்தை காட்சிகளுடன் ஒளிபரப்பின.

Pin It