அக்டோபர் 18, 2013

 

அனுப்புநர்

இடிந்தகரை ஊர் மக்கள்

இடிந்தகரை

திருநெல்வேலி மாவட்டம்

 

பெறுநர்

ஆணையத் தலைவர்: கனிம மணல் ஆய்வுக் குழு

செயலர்: வருவாய்த்துறை

தமிழக அரசு

சென்னை 600 009

 

மதிப்பிற்குரிய அய்யா:

 

              பொருள்: திருநெல்வேலி மாவட்டத்தில் மணல் மற்றும் கனிமக் கொள்ளையில்

              ஈடுபடும் வி.வி. மினரல்ஸ், B.M.C., I.M.C., I.O.G.S., Transworld போன்ற தனியார்

              மணல் நிறுவனங்களின் சட்ட விரோத செயல்கள் மீது கீழ்க்காணும்

              நடவடிக்கைகள் எடுக்கக் கோரி.

 வணக்கம். எங்கள் ஊரான இடிந்தகரையை அடுத்துள்ள பகுதிகளில் பல்வேறு மணல் மற்றும் கனிமக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள் அரசு விதிமுறைகளை மீறியும், அரசு அளித்துள்ள உரிமத்திற்கு அதிகமாகவும், கனரக இயந்திரங்களை பயன்படுத்தியும் சட்ட விரோதமாக மணல் அள்ளி வருகின்றனர். கடலிலிருந்து குழாய்கள் வழி அனுமதியின்றி தண்ணீர் எடுத்து, சட்டத்திற்கு விரோதமாக மாபெரும் இயந்திரங்களை பயன்படுத்தி தாங்கள் திருடும் மணலை அவர்கள் சுத்தம் செய்கிறார்கள். அந்த இரசாயனங்கள் கலந்த கழிவு நீரை கடலில் மீண்டும் கலக்கிறார்கள். இது எங்கள் கடல் நீரை சிகப்பு நிறத்தில் விஷத் தன்மையுடையதாக மாற்றி, எங்கள் மீன் வளத்தை அழிக்கிறது. கடலில் வேலை செய்யும் எங்கள் ஆண்கள், மற்றும் கடலில் குளிக்கும் எங்கள் குழந்தைகள் பல்வேறு தோல் நோய்களுக்கும், உபாதைகளுக்கும் ஆளாகிறார்கள். எங்கள் பகுதி நிலத்தடி நீரும் அமிலத் தன்மை உடையதாக மாறி, எங்கள் கிணறுகள் அனைத்தும் பாழாகி விட்டன. பாதுகாப்பான குடிநீருக்காக நாங்கள் பெருந்துன்பம் அடைகிறோம். 

மணல் ஆலை கழிவுகளாலும், அமிலங்களாலும் எங்கள் கடலில் வாழும் மீன்கள், இறால்கள், நண்டுகள் மற்றும் பிற உயிர்கள் விஷத்தன்மை உடையனவாக மாறிவிட்டன. இதனால் எங்கள் வாழ்வாதாரமாகிய கடல் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் மீனுக்கும் விலை குறைந்து எங்கள் மக்கள் ஏழ்மையிலும், வறுமையிலும் வாடுகிறார்கள். அதே போல மணல் ஆலைக் கழிவுகளும், அமிலங்களும் கலப்பதால் எங்கள் பகுதி மக்கள் சிறுநீரக பாதிப்புகளாலும், தோல் வியாதிகளாலும், இனம்புரியாத பல்வேறு நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். நீண்ட நாட்களாக மோனோசைட் கலந்த மணலை அள்ளுவதால் எங்கள் பகுதியில் இயற்கைக் கதிர்வீச்சு அதிகரித்து, ஏராளமான மக்கள் பல்வேறு புற்றுநோய்களால் இளம் வயதிலேயே இறந்து போகின்றனர். இன்னோரன்ன பிரச்சினைகளோடு எங்கள் ஊரின் நெடுகிலும் கடலரிப்பு ஏற்பட்டு, பல வீடுகள், தேவாலயங்களின் சுவர்கள் கடலால் அரிக்கப்பட்டு இடிந்து விழுகின்றன. எங்களூரில் இருந்த மிகப் பெரிய மணல் திட்டுக்கள் எல்லாம் தனியார் மணல் நிறுவனங்களால் சூறையாடப்பட்டு, பெரும் பள்ளங்களாகக் காட்சியளிக்கின்றன. அந்தப் பகுதிகளிலிருந்த பனை மற்றும் பிற மரங்கள் மொத்தமாக அழிக்கப்பட்டு, ஊரே பாலைவனமாகக் காட்சியளிக்கிறது. 

மக்களுக்கும், நாட்டுக்கும் சொந்தமான கடற்கரையையும், கடலையும், கனிம வளங்களையும் தங்கள் லாபத்துக்காகவும், பணவெறிக்காகவும் கொள்ளையடிக்கும் தனியார் மணல் நிறுவனங்கள் பல்வேறு சமூக விரோதக் குற்றங்களையும் செய்து வருகிறார்கள். கடலோர ஊர்களுக்குள் தங்கள் கைக்கூலிகளை ஏவிவிட்டு ஊரின் அமைதியைக் கெடுப்பது, வன்முறை வெறியாட்டம் நடத்துவது, கொலை செய்வது, சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்று பெரும் பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள். அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுப்பது, நேர்மையான அதிகாரிகளைத் தங்கள் கடமையைச் செய்ய விடாமல் தடுப்பது என்பன போன்ற குற்றங்களிலும் இந்த தனியார் மணல் ஆலை அதிபர்களும், நிர்வாகிகளும் ஈடுபடுகின்றனர். 

தமிழக அரசு நியமித்துள்ள சிறப்புக் குழுவின் விசாரணையிலிருந்து தப்பிக்க இம்மணல் நிறுவனங்கள் தாங்கள் ஏற்கெனவே தோண்டியுள்ள படுபாதாளக் குழிகளை அவசரம் அவசரமாக மூடி, கற்றாழை போன்ற செடிகளை நட்டுத் தங்கள் குற்றங்களை மறைக்க முயற்சிக்கின்றனர். அதைப்போன்று வெளியூர்காரர்களை காசு கொடுத்து மீனவர்கள் போல நடிக்க வைத்து, மணல் ஆலைகளும், அவர்களின் மணற்கொள்ளைத் தொழிலும் முக்கியமென பேச வைத்தும், போராட வைத்தும் ஒரு கபட நாடகத்தையும் நடத்துகின்றனர். 

பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் எங்கள் ஊர் மக்களின் உடல்நலம், நல்வாழ்வு பற்றிய முறையான ஆய்வுகள் செய்து, அவர்களுக்கு தக்க மருத்துவ உதவிகளும், முறையான இழப்பீடும் கிடைக்க மாநில அரசு உதவ வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

எங்கள் ஊரைச் சுற்றியும், அருகாமையிலும் நடந்திருக்கும் நில அபகரிப்பு மற்றும் பல்வேறு நில மோசடிகள் குறித்தும் முறையான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

மக்களுக்குச் சொந்தமான நாட்டின் கனிம வளங்களை சட்ட விரோதமாகத் திருடவும், வெளிநாடுகளுக்குக் கடத்தவும் உதவிய பல்வேறு மத்திய, மாநில அரசுத் துறைகளைச் சார்ந்த அரசு அதிகாரிகள், தூத்துக்குடி துறைமுக அதிகாரிகள், சுங்க வரித் துறையினர் போன்றோர் மீது தக்க விசாரணை நடத்தவும், நடவடிக்கைகள் எடுக்கவும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். 

தங்கள் சுயலாபத்துக்காகவும், பண வெறிக்காகவும் நாட்டின் கனிம வளங்களையும், கடற்கரையையும், கடலையும், கடல் வளத்தையும், மக்கள் உணவையும் திட்டமிட்டு அழித்துவரும் தனியார் மணல் நிறுவனங்களின் அதிபர்கள், நிர்வாகிகள், நில வணிகர்கள், தரகர்கள் போன்றோர் மீது முறையான வழக்குகள் பதிவு செய்து, உடனடியாக அவர்களை கைது செய்து, தக்க மேல் நடவடிக்கைகள் எடுத்து, இந்த சமூக விரோதிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க ஆவண செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 

மேலும் இந்த சமூக விரோதிகள் நடத்தும் பிற தொழில் நிறுவனங்களையும், கல்வி நிலையங்களையும் அந்தந்தத் துறை அதிகாரிகளின் மூலம் ஆய்வு செய்து, அவற்றின் சட்டபூர்வ நிலையைக் கண்டுணர்ந்து, மேல்நடவடிக்கைகள் எடுக்கவும் கேட்டுக் கொள்கிறோம். 

நாட்டின் வளங்களையும், மக்கள் நலன்களையும் சுரண்டி, திருடி தனி நபர்கள் தங்கள் பேர்களிலும், பினாமி பேர்களிலும் சேர்த்திருக்கும் மொத்த சொத்துக்களின், வருமானங்களின் விபரங்களை சேகரித்து, அவற்றை நாட்டுடமையாக்க உரிய நடவடிக்கைகள் உடனே எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம். 

மணல் மற்றும் கனிமக் கொள்ளையில் ஈடுபட்டு மக்களுக்கு பெரும் சேதங்களையும், நாட்டுக்கு பெரும் இழப்புக்களையும் உருவாக்கும் இந்த தனியார் மற்றும் அரசு மணல் நிறுவனங்களின் உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், இனிமேல் யாருக்கும் இந்த உரிமங்கள் தரப்படக் கூடாது என்றும் வேண்டுகிறோம். 

தமிழக அரசு நியமித்துள்ள சிறப்புக் குழு எங்கள் ஊரான இடிந்தகரைக்கு வரவேண்டும் என்றும், பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்திக்க வேண்டும் என்றும், உண்மையான முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

தங்கள் உண்மையுள்ள,

இடிந்தகரை ஊர் மக்கள்

Pin It