இன்று தமிழ்நாட்டில் தங்களை தமிழ்த் தேசிய‌வாதிகள் என்று கூறிக்கொள்ளும் சிலர் திராவிடத்திற்கு எதிராகவும் திராவிட அரசியலுக்கு எதிராகவும் பல அவதூறுகளை பரப்பி வருகின்றனர். தமிழ்நாட்டின் பூர்வகுடிமக்கள் என்பவர்கள் யார்? திராவிடர்கள் என்பவர்கள் யார்? என்பது பற்றி தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இன்று நம்முன் எழுந்திருக்கின்றது.

பூர்வகுடிகளும் திராவிடர்களும்

மரபியல் ஆய்வுகளும், தொல்வியல் ஆய்வுகளும் ஆதிமனிதன் தோன்றியது ஆப்பிரிக்கா என்பதை உறுதி செய்கின்றன. எனவே அக்கண்டமே மானுடத்தின் தொட்டிலாகக் கருதப்படுகிறது. ஆப்பிரிக்காவில் வாழ்ந்த ஹோமோ செபியன் இனக்கூட்டத்திலிருந்து தற்கால மனிதன் தோன்றினான் என்பது ஆய்வுகளிலிருந்து தெரியவருகின்றது. இவ்வாறு உருவான மனித இனம் பல்வேறு நாடுகளுக்கு பல்வேறு காலங்களில் இடப்பெயர்ச்சி அடைந்தது. கி.மு. 85000-75000 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் இருந்து கிளம்பிய மனித இனம் தென்னிந்தியா, இலங்கை, இந்தோனேஷிய, போர்னியா மற்றும் சீனப் பகுதிகளில் குடியேறுகின்றது. இவர்களே இந்த மண்ணின் ஆதி மனிதர்கள் ஆவார்கள்.

பழங்காலம் (பலியோலிதிக்) மற்றும் இடைக்கற்காலத்திற்கு (மெசோலிதிக்) பின்பு உருவான புதிய கற்காலத்தில் (நியோலிதிக்) திராவிட மொழி பேசும் மக்களின் வருகை தமிழ் நாட்டில் நடந்தேறுகிறது. இந்த திராவிடர்கள் மத்திய தரைக்கடல் நாடுகளை சார்ந்தவர்கள் என்றும் மெசபடோமியா நாகரிகம் மற்றும் பெர்சிய நாகரிகத்துடன் தொடர்புடைவர்கள் என்றும் அறியப்படுகின்றது. ஆதிச்ச‌நல்லூரில் நடந்த அகழாய்வில் கிடைத்த மண்டையோட்டை 1927-இல் ஆராய்ந்த எலியட் ஸ்மித் அந்த மண்டையோடுகளில் ஒன்று ஆஸ்திரேலியப் பழங்குடி இனத்தை ஒத்ததாகவும் மற்றொன்று மத்திய தரைக் கடற் பகுதியில் வாழும் இனங்களுடன் ஒத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் மேலும் மொகஞ்சதாரோ ஆய்வை முன்னின்று நடத்திய பானர்ஜி (1927) சிந்து – பலுசிஸ்தான் அகழாய்வில் திருநெல்வேலி தொடங்கி மத்தியதரைக் கடற்பகுதி வரை இருந்த கலாச்சாரங்களில் திராவிடக் கலாசாரத்தின் இயல்புகளைக் காணலாம் என்று கூறுகிறார்.

மேலும் கார்டன் சைல்ட் என்பவர் இந்த திராவிடர்கள் பிராமி மொழி பேசுபவர்கள் என்றும் பலூச் பகுதியில் பிராமி மொழி பேசுபவர்கள் இன்றும் உள்ளதாக தெரிவிக்கிறார். அரிக்கமேட்டில் கிடைத்த தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் இதை உறுதிபடுத்துகின்றன. ஆதிச்ச நல்லூர் மற்றும் அரிக்கமேட்டில் கிடைத்த கறுப்பு, சிவப்பு மண்பாண்டங்கள் திராவிடர்கள் பயன்படுத்தியவை என்றும் இவை ரோமர் பாவித்த மட்பாண்டங்கள் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த மட்பாண்டங்கள் என்பது பொருளாதார வாழ்வில் மிக முக்கிய அம்சம் ஆகும். கால்நடை மற்றும் விவசாயத்தில் கிடைத்த உபரியை சேமிக்க அவை பயன்படுத்தப்பட்டன. இவ்வாறாக திராவிட இனத்தினர் மேய்ச்சல் நிலப்பகுதிகளில் குடியேறி நீர்ப்பாசனம் செய்து உபரியாக உற்பத்தி செய்து நாகரிகத்துடன் வாழ்ந்தனர். அப்படியென்றால் திராவிடர்கள் என்பவர்கள் இந்த நாட்டிற்கு வெளியில் இருந்து வந்தவர்கள் என்பது முடிவாகின்றது. சரி, இனி பிரச்சனைக்கு வருவோம், இந்த மண்ணின் பூர்வ குடிகள் என்பவர்கள் யார்?

பாலியோலிதிக் காலத்திலும், நியோலிதிக் காலத்திலும் சங்க இலக்கியங்களில் கூறப்படும் குறிஞ்சி, முல்லை, பாலை, நெய்தல் நிலமக்கள் வாழ்ந்தனர். இவர்களே தமிழ் நாட்டின் பூர்வகுடிகள் ஆவார்கள். இன்று நீலகிரி மலைப்பகுதிகளில் ஒதுங்கிவாழும் இருளர், தொதுவர், படுகர் போன்றோரும் வேடர், மீனவர், குறவர், பறையர் போன்றோரும் பூர்வகுடிகள் ஆவார்கள். பின்னாளில் வந்த திராவிட மொழி பேசும் மக்கள் இவர்களைத் தம்மோடு இணைத்துக் கொள்ளாமையினால் இவர்கள் தமிழ்ச் சமூகத்தின் வெளித்தள்ளப்பட்ட சாதியினராகிவிட்டனர். இன்று தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் பழங்குடியின மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களே இந்நாட்டின் பூர்வ குடிமக்கள் ஆவார்கள். இந்த மக்களை அடக்கி ஒடுக்கி அவர்களை கீழ்த்தரமாக நடத்தும் இங்குள்ள சாதி இந்துக்களே திராவிடர்கள் ஆவார்கள். இவர்கள் தான் இன்று தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டு திரிகிறார்கள். அனைத்து சாதிக்கலவரங்களுக்கும் மூலையாக செயல்படும் மேட்டுக்குடி ஜாதிகளைச் சேர்ந்த இவர்கள் தான் தமிழனின் ஒற்றுமை பற்றியும் தமிழ்நாட்டை தமிழனே ஆளவேண்டும் என்றும் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது பற்றி பின்பு பார்ப்போம்.

திராவிட மொழியே தமிழ்

தொல்காப்பியம் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் ஆகும். சிலர் 1500 ஆண்டுகள் என்றும் கணிக்கின்றனர். இலக்கண நூல் என்பது எழுத்தை விளக்க எழுந்ததால் தொல்காப்பியத்திற்கு முன்பே இலக்கியங்கள் இருந்திருக்க வேண்டும். எனவே எழுத்தும் நீண்ட காலத்திற்கு முன் உருவாகியிருக்க வேண்டும். வரலாற்று ஆய்வாளர்கள் கி.மு. 1000 இல் பிராமி போன்ற தமிழ் எழுத்துகள் உருவானதாக கூறுகிறார்கள். கொற்கை, கொடுமணல், கரூர் வல்லம், அழகரை, உறையூர் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் தமிழ் - பிராமி எழுத்துக்கள் கிடைத்துள்ளன. நாம் ஏற்கனவே பார்த்தது போல் இந்த பிராமி எழுத்துக்கள் என்பவை திராவிடர்கள் பயன்படுத்தியவை ஆகும். இதுவே தமிழ் எழுத்துக்களுக்கு முன்னோடி. இது தெரியாமல் சீமன் அவர்கள் தம் கட்சி ஆவணத்தில் …” வந்தேறிகளின் மினுக்கத்தில் மயக்கமுற்றள இரண்டகத் தமிழர்கள் தம்மொழியை மனுவாளர்களின் சமற்கிருதக் கலப்பிற்கு இடம் தந்ததால் பிறந்தவையே திராவிட மொழிகள் (தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, மராட்டியம், முதலியன) அதனால் உண்டானவர்கள் திராவிடர்கள்…..” என்று தவறான கருத்தை தன்னுடைய அரசியல் பிழைப்பு வாதத்திற்காக கூறியுள்ளார். தமிழை திட்டமிட்டே திராவிட மொழி இல்லை என்கிறார் இந்தத் திராவிடர்.

1856 -இல் ராபர்ட் கால்டுவெல் தனது புகழ்பெற்ற “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்னும் நூலில் “எனது கருத்தின்படி, தமிழிலிருந்து முதலில் தோன்றிது மலையாளம் ஆகும். டாக்டர் குண்டர்ட் மூலம் நான் அறிந்தபடி மலையாளத்தின் மிகப் பழமையான கவிதை  தமிழைப் போன்று இருந்ததே தவிர, சமஸ்கிருதம் போன்று இல்லை. அந்த மொழியையும் இலக்கியத்தையும் பிராமணியப்படுத்துவது என்பது இவ்வளவு முழுமை அடைந்திருப்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். கடந்த இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளிலேயே இந்தப்பணி திட்டமிட்டுச் செயல்பட்டதாகத் தோன்றுகிறது.” என்று கூறுகிறார்.

ஏறக்குறைய பதினாறாம் நூற்றாண்டிலேயே மலையாளமானது சமஸ்கிருத மயமாக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பெல்லாம் தமிழின் சாயலிலேயே இருந்திருக்கிறது. எனவே தமிழில் இருந்தே மலையாளம் உருவானது. சீமான் கூறுவது போல வந்தேறிகளின் மினுக்கத்தில் மயக்கமுற்ற இரண்டகத் தமிழர்கள் சமஸ்கிருத கலப்பிற்கு இடம் தந்ததால் மலையாளம் பிறக்கவில்லை.

சீமான் அவர்கள் சமஸ்கிருத மொழிக்கு இடம்கொடுத்த மொழிகளை திராவிட மொழிகள் என்று சொல்வாரேயானால் பதினோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த சீமானின் முன்னோர்கள் மணிப்பிரவாள நடை என வழங்கப்பட்ட புதிய நடைப்போக்கை தமிழகத்தில் தோற்றுவித்து தமிழ் மற்றும் சமஸ்கிருதத் தொடர்களை மாற்றி மாற்றி எழுதி, தமிழ் மொழியை சிதைதார்களே அவர்களை திராவிடர்கள் என்றும் அதற்கு பயன்பட்ட தமிழ்மொழியை திராவிட மொழி என்றும் சொல்லத் தயாரா? மொழி அறிஞ‌ர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் அவர்கள் திராவிடர்கள் கி.மு.பத்தாம் நூற்றாண்டில் தென்னகத்திற்கு வந்ததாகக் குறிப்பிடுகிறார். ஆரியர்களின் வருகைக்குப் பின்தான் திராவிட மொழியும் திராவிடர்களும் உருவானதாக ஒரு இட்டுக்கட்டிய பொய்யை சீமான் பரப்பிவருகிறார்.

திராவிடம் தமிழுக்குப் புதிதா?

கி.பி முதல் நூற்றாண்டில் குந்த குந்தாச்சாரியார் என்ற சமணர் திருப்பாதிரிப்புலியூரில் (பாடலிபுரத்தில்) திராவிடர் சங்கம் ஒன்றை அமைத்ததாகக் கல்வெட்டுச் செய்தி உள்ளதாகவும் அதையே கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் வச்சிரநந்தி மதுரையில் மறுமலர்ச்சி செய்வித்தார் என்றும் டி.எஸ்._பால் கூறுவதாக மு.வரதராசனார் கூறுகிறார்.

கே.கே.பிள்ளை அவர்கள் “பூச்சிய பாதர் என்பவரின் மாணவரான வச்சிர நந்தி என்பவர் மதுரையில் திராவிடச் சங்கம் ஒன்றை நிறுவினார் (கி.பி-470) நீலகேசி, குண்டலகேசி, யசோதர காபியம், சீவக சிந்தாமணி ஆகிய காவியங்கள் தமிழில் தோன்றுவதற்கு இந்த திராவிடச் சங்கத்தின் தொண்டே காரணமாகும்" என்று கூறுகிறார். மயிலை சீனி வேங்கடசாமியும் வச்சிர நந்தி கி.பி. 470 –ல் தக்கிண மதுரையில் (பாண்டிய நாட்டு மதுரையில்) திரமிள சங்கத்தை (திராவிடச்சங்கத்தை) நிறுவினார் என்றே அறுதியிடுகின்றார். எனவே திராவிடம் என்ற சொல்லாட்சி தமிழுக்கு புதிதன்று. இங்கே திராவிடம் என்ற சொல்லாட்சி விளிம்புநிலை தமிழ் மக்களைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் இச்சங்கங்கள் அமைக்கப்பட்ட காலத்தில் தமிழகத்தில் களப்பிரர் ஆட்சி எனப்படும் சமண சமயத்தாரின் ஆட்சி நடைபெற்றது. திராவிடர்களின் ஒரு பிரிவினர் தங்களை நிலவுடைமையாளர்களாகவும் பார்ப்பனர்களின் துணையுடன் சாதி மேல்நிலையாக்கமும் செய்து கொண்டனர். இவர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த சிறு சாகுபடி செய்யும் மக்களே களப்பிரர்கள் ஆவார்கள். அவர்கள் பின்பற்றிய சமயம் சமணம் ஆகும். ஏனெனில் சமண பௌத்த சமயங்களே அன்று நால்வருண பாகுபாடுகளுக்கு எதிராக கடுமையாக போராடியவை.

அயோத்தி தாசரின் திராவிடச் சிந்தனை

ஏறக்குறைய 19-ஆம் நூற்றாண்டில் களப்பிரர்களின் ஆட்சிக்குப் பிறகு அயோத்தி தாசரால் திராவிடச் சிந்தனைகளுக்கு புத்துயிர் ஊட்டப்படுகின்றது. அயோத்திதாசர் 1886-ல் வெளியிட்ட ஓர் அறிக்கையில் பழங்குடியின மக்களும் தாழ்த்தப்பட்டவர்களுமான ஆதித் தமிழர்களே இந்நாட்டின் முதல் குடிமக்கள், அதாவது பூர்வகுடிகள் என்றார். மேலும் அவர்கள் இந்துக்கள் அல்லர் என்றார். இங்கே திராவிடம் என்ற சொல் சாதி இந்துக்கள் தவிர்த்து அவர்களால் ஒடுக்கு முறைக்கு ஆளாகும் தலித் மற்றும் பழங்குடியின மக்களை குறிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

1891 ஆம் ஆண்டு அயோத்திதாசரின் பெருமுயற்சியால் ‘திராவிட மகாஜன சபை' என்ற அமைப்பு துவங்கப்பெற்றது. நீலகிரியில் துவங்கப்பெற்ற இவ்வமைப்பின் தலைவராக அயோத்தி தாசரே பணியாற்றினார். இந்நாட்டின் பூர்வீக குடிகளாகவும், மண்ணின் மைந்தர்களாகவும் ஆதித் தமிழர்களாகவும் விளங்கிய பழங்குடிகளும் தாழ்த்தப்பட்ட மக்களுமே ‘திராவிடன்’ என்ற சொல்லால் அடையாளப்படுத்தப்பட்டனர்.

திராவிடம் பெரும் சமூக இயக்கமாக மாறுதல்

20 –ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த சீர்த்திருத்தவாதியான பெரியார் திராவிடர் என்ற சொல்லை ஆரியர் அல்லாத மற்ற அனைவரையும் குறிக்க பயன்படுத்தினார். அது பற்றி கூறும் பொழுது “பிராமணர், பிராமணர் மகாசபை வைத்துக் கொள்கிறார்கள். அதனால் அவர்களுக்குப் பெருமையும், உரிமையும் கிடைக்கின்றன. நாம் நம்மைச் சூத்திரன் என்று கூறிக்கொண்டால் உயர்சாதியானுக்கு அடிமையாயிருக்கும் உரிமைதான் கிடைக்கும். பார்ப்பானின் தாசிமக்கள் என்ற பட்டம்தாம் கிடைக்கும். அந்தச் சூத்திரத் தன்மையை ஒழிப்பதையே நமது முக்கிய வேலையாகக் கொண்டிருப்பதால் தான், அப்பெயரால் எவ்வித சலுகையோ உரிமையோ கிடைக்காததால் தான் அப்பெயரில் உள்ள இழிவு காரணமாகத்தான் அத்தலைப்பில் அதே இழிதன்மையுள்ள திராவிடராகிய முஸ்லிம்கள், நாயுடு, கம்மவார், ஆந்திரர், கன்னடியர், மலையாளிகள் எல்லாம் ஒன்றுசேர மறுத்து வருகிறார்கள். அதனால்தான் நம்மைச் சூத்திரர் என்று கூறிக்கொள்ளாமல் திராவிடர் என்று கூறிக்கொள்கிறோம். சூத்திரர் என்பவர்களுக்கு ‘திராவிடர்’ என்பது தவிர்த்து வேறு பொருத்தமான பெயர் வேறு யாராவது கூறுவார்களானால் அதை நன்றியறிதலுடன் ஏற்றுக்கொண்டு எனது அறியாமைக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக்கொள்ளவும் தயாராயிருக்கிறேன்.” மேலும் “நீங்கள் கொடுக்கும் பெயரில், நான் மேலே கூறிய அத்தனை பேரும் ஒன்று சேர வசதியிருக்க வேண்டும் அதில் சூத்திரனல்லாத ஒரு தூசி கூடப் புகுந்து கொள்ள வசதியிருக்கக் கூடாது. அயலார் புகுந்து கொள்ளாமல் தடுக்க ஏதாவது தடையிருக்க வேண்டும். திராவிடர் என்று கூறினால் திராவிடர் அல்லாத பார்ப்பான் அதில் வந்து புகுந்து கொள்ளமுடியாது.  நாம் ஒழிக்கப் பாடுபடும் ‘பிறவி’ காரணமாக இழிதன்மையும் அவர்களுக்கு இல்லை. ஆகவே அவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கும் காரணம் இல்லை" என்றார்.

பெரியார் அவர்களே முதன்முதலில் திராவிடம் என்ற சொல்லை பார்ப்பனரல்லாத ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் பயன்படுத்தினார். முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் என்று அனைவரையும் திராவிடர் என்றே அழைத்தார். தன் வாழ்நாள் முழுவதும் திராவிட இனத்தில் இருந்த சாதி இந்துக்கள் தீண்டாமையை கடைபிடிப்பதை எதிர்த்து வந்தார். அதன் தொடர்ச்சியாகவே 27.08.1944 அன்று சேலம் விக்டோரியா மார்க்கெட் மைதானத்தில் நடைபெற்ற நீதிக் கட்சியின் 16-வது மாநில மாநாட்டில் ‘திராவிடர் கழகம்’ என்று பெயர் மாற்றத்தை அண்ணாவின் பெயரில் கொண்டு வந்தார்.

திராவிடர் பற்றி அண்ணாவின் நிலைப்பாடு

பெரியார் அவர்கள் திராவிடர் என்ற சொல்லை பார்ப்பனரல்லாத ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் பயன்படுத்தினார். ஆனால் அண்ணாதுரை அவர்கள் திராவிடர் என்றால் பார்பனரல்லாத தமிழர் என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தினார். திராவிடர் நிலை என்ற தனது தடைசெய்யப்பட்ட புத்தகத்தில் புலியிடம் மான் மாற்றாடி, மனம் வைத்து உயிர்ப்பிச்சையளிக்கும் படி வேண்டுவது இயற்கை, நடக்கூடியது. ஆனால் புலி மானிடம் பயந்து அடங்கி ஒடுங்கி, நடுங்கி உயிர்ப்பிச்சை கேட்கிறது என்றால் இது விவேகமுள்ள பேச்சா? வெகு விசித்திரமானது அல்லவா? அது போலத்தான் அன்று பார்ப்பனரல்லாதார் பார்ப்பனரிடம் தம்மை நல்ல முறையிலே வகுப்புக்கு நீதி வழங்கி நடத்தும்படி கேட்பது இது விசித்திரமான காரியம். ஏன்? பெரும்பான்மையோர் சிறுபான்மையோரிடம் உரிமை வேண்டி நின்றது விசித்திரம். எனவே வழங்கவில்லை நீதி. ஏன் இன்னும் அந்த இழிநிலை நம்மிடம்? இந்த நாட்டுக்கு உரிமையானரான இனம், நாடாண்ட இனம், நாடாளப் போகும் இனம், வாணிபத்திலே சிறந்த இனம், வகையாக வாழ்ந்த இனம், நாகரிகம் மிகுந்த இனம், சரித்திரப் பிரசித்த பெற்ற தமிழர் (திராவிடர்) இனம், இலக்கியத்திலே இன்பம் கண்ட இனம், வீரமிக்க இனம், வீணர்களிடம் வாதுபுரிந்து ஏன் நீதி கேட்கவேண்டும்? கேட்டும் ஏன் நீதி கிடைக்கவில்லை? என்று துருவித்துருவி ஆராய்ந்தோம். நாம் திராவிடர் இனம்- திராவிட இனம். நம்முடைய நாடு- திராவிட நாடு என்று கண்டோம். நாம் யார் என்று கண்டோம். நம்மை நமக்காக உழைக்கும் கட்சியை நம் இனப் பெயரால் குழு உக்குறிச் சொல்லாய் அழைக்கலானோம். அது தான் நீதிக் கட்சி யெனும் திராவிடர் கழகம்."

எனவே திராவிடம் என்ற சொல் பூர்வகுடிகளான தலித் மற்றும் பழங்குடி இனம் அல்லாதவர்கள், நிலவுடைமைக்கு எதிராக போராடிய விளிம்புநிலை மக்கள், சாதி இந்துக்கள் தவிர்த்த தலித் மற்றும் பழங்குடி இன தமிழ் மக்கள், பார்ப்பனர‌ல்லாத அனைத்து சூத்திரமக்கள், பார்ப்பனரல்லாத தமிழ் மக்கள் என நூற்றாண்டு தோறும் வெவ்வேறு பொருளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. நாம் இங்கு கவனிக்கவேண்டியது எந்த வேறு இடத்திலும் அது பார்ப்பனரையும், பார்ப்பனியத்தையும் குறிக்க பயன்படுத்தப்படவில்லை என்பதே.

ஆனால் இங்குள்ள தமிழ்த் தேசிய வாதிகள் அதிலும் குறிப்பாக சீமான் போன்றவர்கள் திராவிடத்தால்தான் நாம் வீழ்ந்தோம் என்று சொல்வது பார்ப்பனியத்தையும் இந்துத்துவ அரசியலையும் ஏற்றுக்கொண்ட அவர்களது மனப்போக்கையே காட்டுகிறது. இல்லை என்றால் சீமான் அவர்கள் நம்முடைய கட்சி ஆவணத்தில் “தமிழ்நாட்டு ஆட்சியை திராவிடர்களிடம் இழந்தோம். தொடர்ந்து இன்றுவரை திராவிடர்களிடம் அடிமையாக இருந்து வருகிறோம் என்ற அறிவும் மானமும் அற்றவர்களாக இருக்கிறோம். மேலும் நம்முடைய முந்தைய ஆண்டைகளான முகமதியர்கள், விசயநகர நாயக்கர்கள், மராட்டியர்கள், ஆங்கிலேயர்கள் முதலியோருடைய அரசியல் சின்னங்கள் அகற்றப்படவில்லை. அவர்களுடைய பொருள் ஆளுமைகளும் (நிலவுடைமை, தொழிலுடைமை நீக்கப்படவில்லை, கட்டுபடுத்தப்படவில்லை என்ற புரிதல் அற்றவர்களாக இருக்கிறோம்" என்று விஷத்தை கக்கி இருக்க மாட்டார். இவரது எதிரிகள் பட்டியலில் முதலில் இருப்பவர்கள் முகமதியர்கள். மோடியைப் புகழ்ந்து புளகிதம் அடைந்த சீமானால் இப்படித்தான் யோசிக்க முடியும்; திராவிடத்தை எதிர்க்க முடியும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பார்ப்பன ஜெயாவுக்கு வால்பிடித்த தமிழ்த் தேசியவாதிகள், தேவர் ஜெயந்திக்கு நேரில் சென்று மாலை போட்டு சாதியத்தின் முன் மண்டியிட்ட தமிழ்த் தேசியவாதிகள் பார்ப்பனியத்தை எதிர்ப்பேன், சாதியத்தை ஒழிப்பேன் என்று சொல்வதெல்லாம் வெகுஜனங்கள் மத்தியில் தங்கள் கள்ளக்கூட்டணி அம்பலமாகாமல் இருப்பதற்காகவே.

இந்த நாட்டின் பூர்வகுடி மக்களான தலித்துகளும் பழங்குடிகளும் இந்த நாட்டை ஆளவேண்டும் என்று சொல்லத் துப்பில்லாத இந்தத் தமிழ்த் தேசியவாதிகள் பொத்தாம் பொதுவாக தமிழன் ஆளவேண்டும் என்று சொல்வது அவர்களுக்குள் ஒளிந்துள்ள சாதிய மேலாண்மையையே காட்டுகின்றது. நாளை இந்த தமிழ்த் தேசியவாதிகள் ஆட்சிக்கு வந்தால் தலித் சேரிகளை ஒழித்துவிடுவார்களா? பன்னாட்டு ஏகபோக கம்பெனிகளை அடித்து விரட்டி விடுவார்களா? ஒரு வெங்காயமும் கிடையாது. இந்தியாவில் உள்ள அனைத்து இன மக்களும் இந்திய தரகு முதலாளிகளாலும், பன்னாட்டு கம்பெனிகளாலும் சுரண்டப்படுகின்றனர். இதில் எந்த வேறுபாடும் கிடையாது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநில தொழிலாளர்களும், ஒரே விதமான நலன்களையும், ஒரே விதமான எதிரியையும் கொண்டுள்ளனர். எனவே அவர்கள் ஒரே விதமான போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. இந்தியப் பாட்டாளி வர்க்கம் தன்மீது திணிக்கப்பட்டுள்ள பார்ப்பனிய சாதியத்திற்கு எதிராகவும் சுரண்டலுக்கு எதிராகவும் போராட இன ஐக்கியம் மிக முக்கியமாகும். பார்ப்பனியத்திற்கு எதிரான போராட்டத்திற்கு திராவிடச் சிந்தனைகளும், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திற்கு மார்க்சிய சிந்தனைகளும் அடிப்படையாகும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் இது போன்ற இனவெறி பிடித்த கும்பல்கள் இயங்கவே செய்கின்றன. இவர்களது நோக்கம் அந்தந்த மாநில பெரு முதலாளிகளின் நலன்களை கட்டிக்காப்பதாகும். இந்த இனவெறியர்களுக்கு புரவலர்களாக இருப்பவர்களும் அந்த பெருமுதலாளிகளே. இதைப் புரிந்து கொண்டு பாட்டாளிவர்க்கம் இனப் பகைமையை தூண்டும் சத்திகளை வேரறுக்க வேண்டும். முற்போக்கு மார்க்சிய, திராவிட சிந்தனைகளை வரித்துக்கொள்ள வேண்டும்.

பார்ப்பனர்களைத் தவிர மற்ற அனைவரையும் திராவிடர்கள் என்று அழைக்கலாம். அதுவே சரியானதாக இருக்கும். திராவிட அரசியல் கட்சிகளின் பார்ப்பனிய சரணாகதியையும் ஏகாதிபத்திய அடிவருடிதனத்தையும் வைத்துக் கொண்டு ஒட்டு மொத்தமாக திராவிடத்தை எதிர்ப்தென்பது தற்கொலைக்குச் சமமாகும்.

துணை நின்ற நூல்கள்

1) பண்டைய தமிழர் வரலாறும் இலக்கியமும்- சி.மௌனகுரு

2) களப்பிரர் ஆட்சியில் தமிழகம் - மயிலை சீனி வேங்கடசாமி

3) தமிழ் நிலமும் இனமும்? - இல. வின்சென்ட்

4) நான் பூர்வ பௌத்தன்- டி.தருமராஜன்

5) தமிழ் மொழி வரலாறு- தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

6) தமிழரின் தத்துவ மரபு - அருணன்

7) தமிழ்ச் சமூகவியல் ஆய்வுகள் - சி. இளங்கோ

8) கோவில் நிலம் சாதி- பொ.வேல்சாமி

9) மூதாதையரைத் தேடி – ச.சி.ஜெயகரன்

10) பெரியார் வாழ்க்கை வரலாறு பாகம் 2 – கி.வீரமணி

11) திராவிடர் நிலை- அறிஞ‌ர் அண்ணா

12) நாம் தமிழர் கட்சி ஆவணம் - சீமான்

13) பண்பாட்டு மானுடவியல் - பத்தவச்சல பாரதி

- செ.கார்கி

Pin It