‘‘ ஓடி விளையாடு பாப்பா & நீ

ஓய்ந்திருக்கலாகாது பாப்பா

கூடி விளையாடு பாப்பா....’’

என்றான் பாரதி.  விளையாட்டு என்பது மனிதர்கள் இயல்பாக  விரும்பி ஈடுபடும் ஒரு செயற்பாடு. விளையாட்டு என்பது பொழுது போக்கிற்காகவும், மகிழ்ச்சிக்காகவும், கற்பித்தல் நோக்கத்திற்காகவும் நடத்தப்படும் கட்டமைப்பு கொண்ட ஒரு செயல். விளையாட்டு என்பது ஒரு விதமான கலை. விளையாட்டு, மனிதன் தனது உடல் திறன்களை திடமாக்கி கொள்ளும், பரிசோதித்துக் கொள்ளும் களங்களில் முக்கியமானது. விளையாட்டில் உடலை முதன்மையாக ஈடுபடுத்தினாலும் சிறப்பாக ஆட உள ஒழுக்கமும், ஒரு முனைப்படுத்தலும் இன்றியமையாதது.

1971ம் ஆண்டு அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் போர் மூளும் அபாயம் இருந்த காலகட்டம் அது. மூன்றாம் உலக போருக்கு வழி வகுக்கும் என அச்சத்துடன் உலகத்தால் எதிர்பார்க்கப்பட்ட நிலை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அமெரிக்க&சீனா நாடுகளுக்கு இடையே நடந்த ஒரு டேபிள் டென்னிஸ் விளையாட்டு போட்டி, நடக்க இருந்த போரை தடுத்து நிறுத்தியது என்பது வரலாறு.

இப்படி பன்னெடுங்காலமாக விளையாட்டு மனிதனின் உடல் மற்றும் மன உறுதிக்கும், மக்களுக்குள் ஏற்படும் ஒற்றுமைக்குமான நல்ல களமாக இருந்து வந்துள்ளது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் விளையாட்டு பன்னாட்டு நிறுவனங்களின் பணம் சம்பாதிக்கும் தொழிலாகவும், மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தி அவர்கள் அறியாமல் அவர்களின் உணர்வுகளை உறிஞ்சி, உணர்ச்சிகளை தூண்டும் ஒரு காரணியாக மாற்றப்பட்டுவிட்டது.

ஆதி முதல் விளையாடப்பட்டு வந்த சிலம்பம், கில்லி, சில்லாக்கு, சடுகுடு போன்ற வாழ்வியல் சார்ந்த, வாழ்க்கையோடு ஒன்றிய விளையாட்டுகள் அனைத்தும் தற்கால சர்வதேச விளையாட்டுகளான கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து, கைப்பந்து போன்ற விளையாட்டுகளின் ஆதிக்கத்தால் இருந்த தடம் தெரியாமல் போனது.

இதனிடையே சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து நாட்டில் தோன்றி மற்ற அனைத்து சர்வதேச விளையாட்டுகள் எதையும் வளரவிடாமல் செய்த பெருமை கிரிக்கெட்டையே சேரும். ஆரம்ப காலத்தில் பிரபுக்கள் என்று அழைக்கப்பட்ட மேட்டுக்குடி மக்கள் தங்கள் மீது சூரிய ஒளிபடும் விதமாக காலார நடந்து சிறிய அளவிலான உடற்பயிற்சி செய்யும் விதமாகவும் உருவாக்கப்பட்டது தான் கிரிக்கெட். இதை ஆங்கிலேயர்கள் தாங்கள் ஆட்சி செய்த காலனி நாடுகளுக்கும் பரப்பினர். இன்றும் காலனி ஆட்சி நாடுகளான காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளில் மட்டுமே கிரிக்கெட் பெரிய அளவில் விளையாடப்படுகிறது என்பதே உண்மை. ஆனால் அன்று கூட இங்கிலாந்து நாட்டில் உழைத்து வாழும் மக்கள் கிரிக்கெட் விளையாடியதில்லை என்பது கண்கூடு.

இதன் அடிப்படையில் கிரிக்கெட் இந்தியாவிற்கு வந்த மேட்டுகுடி ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதை ரஞ்சித் சிங் போன்ற அரசர்களும் பட்டோடி நவாப் போன்ற ஆங்கிலேயர்களுக்கு சாமரம் வீசிய மேட்டுக்குடியினரும் விளையாடி வந்தனர். தமிழ்நாட்டில் மேல்சாதி ஓரிருவர் மட்டுமே பிற்காலத்தில் இதில் கலந்து கொண்டனர். இப்படியாக வளர்ச்சி பெற்ற கிரிக்கெட் இன்று நமது பாரம்பரியமான விளையாட்டுகளை அழித்து, நமது கலாச்சாரத்தையும் கெடுத்து வருகிறது என்பது மறுக்க முடியாதது.

காலையில் எழுந்தவுடன் மக்களின் முதல் தேர்வு தொலைக்காட்சியாகி விட்டது. அதில் ஒரு சாரார் சினிமா, மற்றொரு சாரார் கிரிக்கெட் பார்க்கின்றனர். சொல்லப்போனால் சினிமாவுக்கும் கிரிக்கெட்டுக்கும் அடிப்படை குணங்கள் ஒன்றுதான். கவர்ச்சியான தொடக்கம், அதிரடியான வளர்ச்சி, சஸ்பென்ஸான முடிவு என்று பல விசயங்களில் சினிமாவை விட கிரிக்கெட்டில் அதிகம் இருக்கிறது. அதனால்தான் என்னவோ? கிரிக்கெட் வீரர்களுக்கும் சினிமா நடிகைகளுக்கும் அப்படி ஒரு பந்தம் உள்ளது போல.

கிரிக்கெட்டில் விளையாட்டாக மட்டுமல்லாமல் நல்ல வருமானம் வரும் தொழிலாகவும் மாறிவிட்டது. அப்படி என்னதான் வருமானம் வரும் என்பவர்கள் ஒரு சிறிய மனக்கணக்கு போட்டு பாருங்களேன். கொல்கத்தாவில் இருக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் ஒரே நேரத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் போட்டிகளை கண்டுகளிக்க முடியுமாம். ஆக ஒரு லட்சம் பேருக்கு ரூபாய் ஆயிரம் வீதம் பார்த்தாலும் பத்து கோடி கிடைக்கிறது. உலகில் எந்த தொழிலில் குறைந்த உழைப்பில் ஒருநாளில் பத்துகோடி வருமானம் கிடைக்கிறது. இதுமட்டுமல்ல வர்த்தக நிறுவனங்களின் விளம்பர வருமானம் வேறு.  நாம் சிறிது அசந்தாலும் சீனாக்காரன் நமது முதுகில் ‘‘மேட் இன் சீனா’’ என்று முத்திரை குத்திவிடுவான் என வேடிக்கையாக செல்வார்கள். ஆம் அது உண்மையாகிவிட்டது. ஆனால் வேறுவிதமாக பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள்  மைதானம் மட்டும் இல்லாமல் வீரர்களின் முதுகிலும், ஏன்! முகத்திலும் கூட தங்களின் முத்திரையை குத்திவிட்டனர். அனைத்துக்கும் ஒரு விலை அவ்வளவுதான். இப்படி கிரிக்கெட்டில் தொட்ட இடம் எல்லாம் பணம் கொழிக்கிறது.

இப்படி இந்தியாவில் தொழிலாக மாறிவிட்ட கிரிக்கெட்டை வளர்ப்பதும், கட்டுப்படுத்துவதும் உலகின் பணக்கார அமைப்புகளுள் ஒன்றான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆகும். இந்த அமைப்பின் உறுப்பினர்கள் யார்? நிர்வாகிகள் யார்? அதன் நிர்வாக உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்து எடுக்கப்படுகின்றனர்? அதன் தேர்தல் முறை என்ன? அதன் செயல்பாடு என்ன? அதன் வருமானம் எவ்வளவு? செலவு எவ்வளவு? என அனைத்து நடவடிக்கைகளும் மர்மமாகவே இருக்கும். வெளிப்படையாக எதுவும் நடக்காது. இந்த ‘‘பிசிசிஐ’’ இன்று பில்லியர்ன்ஸ் (கோடீஸ்வரர்கள்) கட்டுப்படுத்தும் இந்திய கிரிக்கெட் என்றாகிவிட்டது. முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்களும் வர்த்தக நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கையின் சொத்துக்களாக சுருங்கிவிட்டனர்.

இப்படிப்பட்ட வணிக நிறுவனங்களின் வருமானத்திற்காக பிசிசிஐ&யால் அறிமுகப்படுத்தப்பட்டது தான் இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்). விளம்பரதாரர்களால் இயக்கப்பட்டு, ஊடகங்களால் வழி நடத்தப்பட்டு, பரபரப்பை மட்டும் குறியாக செயல்படுவது தான் இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள். இப்படி பரபரப்பை பயன்படுத்தி கோடிகளை குவிப்பதுதான் ஐபிஎல்லில் பங்கெடுக்கும் நிறுவனங்களின் நோக்கம், லட்சியம் அனைத்தும் அதுவே. இந்தியாவை ஆளும் அரசுகளோ தன் மக்களை கெடுக்க கூடிய, முட்டாள்களாவே வைத்திருக்க கூடிய எந்த ஒரு சக்திக்கும் ஆதரவு அளிக்க கூடியதாகவே இருக்கிறது. அரசு, பணம் வரக்கூடிய எதையும் ஏற்றக்கொள்ள கூடியது என்பதால், கிரிக்கெட்டை தவிர மற்ற விளையாட்டுகள் அனைத்தையும் கைவிட்டுவிட்டது வேதனைக்குரியது.

ஐபிஎல்லில் வீரர்களுக்கு பணம், பானம் (மது), பாவை (மாது) என அனைத்து சமாச்சாரங்களும் தேவைகளை காட்டிலும் அதிகம் பூர்த்தி செய்யப்படுகிறது.  வீரர்களும்  நாட்டிற்காக விளையாடுவதைவிட இத்தனையையும் கொட்டிக் கொடுக்கும் நிறுவன முதலாளிகளுக்காக விளையாடுவதையே விரும்புகின்றனர். கை உடைந்திருக்கிறது, கால் உடைந்திருக்கிறது, தசை கிழிந்திருக்கிறது என நாட்டிற்காக விளையாட மறுக்கும் இவர்கள் ஐபிஎல் என்றால் எல்லாம் பறந்துவிட்டது நான் விளையாடுகிறேன் என்கிறார்கள்.  அதுவும் அங்கே விளையாட்டா நடக்கிறது? இல்லை. இப்பொழுது கூட பாருங்கள் மூன்று வீரர்கள் இவ்வளவு பணம் வந்தும் அது பத்தாது என்று மேட்ச் பிக்சிங் என்ற சூதாட்டத்தில் சிக்கி, பிடிப்பட்டுள்ளனர். இப்படி எவ்வளவு புது புது வார்த்தைகளால் வர்ணிக்கப்படும் சூதாட்டங்கள் (சட்டப்படி!) நடக்கிறது. சரி கோடிகளில் புரளும் வீரர்களும், நிறுவனங்களும் விளையாட்டை பார்க்கும் கோடிகணக்கான ரசிகர்களுக்காக ஒரு சதவீதமாவது செலவு செய்கிறார்கள் என்றால் அதுவும் ஒன்றும் இல்லை. வீரர்களுக்கும், நிறுவனகளுக்கும் பணத்தை தவிர வேறு ஒன்றும் பெரிதாக தெரிவதில்லை. இதனால் ஐபிஎல்லில் நிறுவனங்களுக்கிடையே போட்டி, பொறாமை, சட்டத்திற்கு புறம்பான செயல்கள் அனைத்து நடவடிக்கைகளும் அளவுக்கு மீறி வெட்ட வெளிச்சமாக நடந்து வருகிறது.

இப்படி பட்ட ஐபிஎல்லில் மயங்கி, மக்களும் விளக்கில் கருகும் விட்டில் பூச்சிகளாக இருக்கிறார்கள். இப்போட்டியில் பெட் கட்டியதற்காக இரு தினங்களுக்கு முன் ஒரு கொலையும் நடந்துவிட்டது. அதுவும் சென்னையில். பள்ளி சிறுவனை கல்லூரியில் படிக்கும் மாணவன் ஒருவன் கொலை செய்துவிட்டான். இந்த போட்டி இளைஞர்களை எங்கே கூட்டி செல்கிறது? சிந்திக்கும் நேரமிது சிந்தியுங்கள். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் பணம் விளையாடும் கொலைகளம் ஆகிவிட்டது. எவ்வளவு நாட்களுக்கு இப்படி நடக்கும். இனி கிரிக்கெட் தன்னைத் தானே கொன்று மெல்ல மெல்ல சாகத்தான் போகிறது.

கிரிக்கெட் தொழில் செய்பவர்களே... நீங்கள் வினையை விதைத்து விட்டீர்கள், கண்டிப்பாக அறுவடை செய்துதான் ஆகவேண்டும். எங்கே தர்மம் மீறப்படுகிறதோ, அங்கே அழிவு நிச்சயம் என்பது கீதை வாக்கு. அழியும் என்பதுக்கு ஆதாரம் கேட்பவர்களே நீங்கள் புத்திசாலிகள். ஆனால் ஆதாரங்களை ஆராய்வதற்குள் ஆறடி நிலம் மூடிவிடும். மக்கள் மயக்கம் விரைவில் தெளியும், கிரிக்கெட் இனி மெல்ல அழியும், விரைவில் அது நடக்கும் என்ற நம்பிக்கையுடன்.

- சு.கோபிநாத், மதுரை.

Pin It