வணக்கம், டாக்டர் பி.வரதராசுலு நாயுடு குடும்பத்தினர் நடத்தும் ‘குருகுலம்' அறக்கட்டளையின் செயற்பாடு பற்றியும், அவர்கள் நடத்தும் இணையதளத்தைத் தாங்கள் தொடங்கி வைத்து ஆற்றிய உரையின் சுருக்கத்தையும் 12. 05. 2013 நாளிட்ட ‘தினமணி' இதழில் படித்து அறிந்தேன்.

டாக்டர் பி.வரதராசுலு நாயுடு அவர்கள் பெரியாரின் நண்பராக இல்லை, இருக்க முடியாது என்ற ஆணித்தரமான முடிவையும் படித்தேன். வ.உ.சி, திரு.வி.க. போன்றோரே அவருக்கு நண்பராக முடியும் என்றும் பேசியிருந்தீர்கள். உங்களுடைய பேச்சின் மூலம் உங்களுக்குப் பெரியார் மீது இருந்த பெரும் வன்மத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளீர்கள். அது மட்டுமல்ல, உண்மைக்கு மாறாக இப்படி உரை நிகழ்த்தியதின் மூலம் உங்களது வரலாற்று அறிவும் வெளிச்சத்திற்கு வந்து விட்டது. அத்துடன் நட்பு, அரசியல் தோழமை, நட்பு முரண், பகை முரண் இவை எதுவுமே அறியாதவர் என்பதனையும் நீங்களே வெளிப்படுத்தி விட்டீர்கள்.

நாத்திகம் என்பது தனிப்பட்ட ஒருவரின கடவுள் பற்றிய் கொள்கை. அத்தகைய கொள்கையைக் கொள்வதினால், ஆத்திகர் எவருடனும் நட்பும் தோழமையும் பாராட்டுவதற்கு எந்தத் தடையும் ஏற்படாது. நாத்திக-ஆத்தீக முரண் மட்டுமன்றி, ஏறத்தாழ எல்லாவற்றிலும் எதிர்நிலையின் உச்சத்தில் நின்ற இராசாசி -பெரியார் இடையிலான நட்பும் அன்பும் உங்கள் கண்களில் படாமல் போனதில் வியப்பில்லை. இந்த நிலைக்கு நீங்கள் சென்றதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று சிந்தித்துப் பார்த்தேன்.

பழ.அதியமான் எழுதி வெளிவந்துள்ள 'பெரியாரின் நண்பர் : டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு' என்னும் நூலின் தலைப்பே காரணமாக இருக்க முடியும் என்ற முடிவிற்கு வந்தேன். இதற்குக் கூடுதலாகச் வேறு சில காரணங்களும் இருக்கலாம். அவை உங்களுக்கு மட்டுமே தெரியும். ஆனாலும் உங்கள் வன்மத்திற்கு வரலாறு துணை வராது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

 'நாயுடு – நாயக்கர் - முதலியார்' கூட்டில் வளர்ந்த கட்சி தமிழ்நாடு காங்கிரஸ். இந்தக் கட்சியில் இருந்த போதே சமூக நீதிக்காக முட்டி மோதிப் போராடினார், பெரியார். ஒருவழியாக செங்கல்பட்டில் நடந்த மாநாட்டில் திரு.வி.க.உள்ளிட்டோர் தந்த நெருக்கடியின் விளைவாக 1925இல் பெரியார், காங்கிரசு கட்சியை விட்டே வெளியேறினார். ஆனாலும் டாக்டர் பி.வரதராசுலு நாயுடு, திரு.வி.க., வ.உ.சி. ஆகியோரிடம் கொண்ட நட்பு தொடர்ந்தது. டாக்டர் பி.வரதராசுலு நாயுடு அவர்கள் காங்கிரசை விட்டு விலகி, இந்து மகாசபையில் சேர்ந்து அகில இந்தியத் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றதும், அதிலிருந்து விலகி மீண்டும் காங்கிரசிற்கே திரும்பியதும் வரலாற்றின் தொடர் நிகழ்ச்சிகள். இவை எதுவுமே அவர்கள் நட்பைப் பாதிக்கவில்லை.

அது தனிப்பட்ட நட்பாக மட்டுமாக இருக்கவில்லை. தமிழ்நாட்டை, தமிழ் மக்களை மேம்படுத்துவதற்கான உயரிய நட்பு. அதனால் தான் 1925ல் காங்கிரசை விட்டு விலகிய பெரியாரைத் துணைக்கு அழைக்கிறார் , 1954ல். இராசாசி அவர்கள் அறிமுகம் செய்திட்ட குலக்கல்வித் திட்டத்தை ஒழித்திடவும், அவர் அதிகாரத்தை முடிவு கட்டிடவும் டாக்டர் பி.வரதராசுலு நாயுடு காங்கிரசுக் கட்சிக்குள் ஆள் சேர்க்கவில்லை; படை திரட்டவில்லை. முதன்மையாகவும் முழுதாகவும் சந்தித்த ஒருவர் பெரியார் மட்டுமே. பாண்டிச்சேரியில் தங்கியிருந்த பெரியாரை அவசரமாக அழைத்து, அன்று நடைபெறவிருந்த பொதுக்கூட்டத்தை நிறுத்தி விட்டுத் தனது வீட்டில் காமராசரை சந்திக்க வைக்கிறார். அதன் தொடர்ச்சியையும் விளைவையும் தமிழ்நாடே அறியும்.

குத்தூசி குருசாமி, வே.ஆனைமுத்து, திரு.வீரபாண்டியன் (ஆகட்டும் பார்க்கலாம் நூலில்) இதனை விரிவாகப் பதிவு செய்துள்ளனர். இன்று நீங்கள் வகித்து வரும் 'தினமணி' இதழின் ஆசிரியராகப் பெருமையுடன் பணிபுரிந்த டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களிடம் பயிற்சி பெற்றவரும், அவருக்குப்பின் 'ஜனயுகம்' இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றவருமான எ.மயிலை நாதன், 1984இல் 'போர் வாள்' இதழில் தனது பட்டறிவினை ஒரு தொடராக எழுதினார். 'பெரியார் ஒரு நடைச்சித்திரம்' எனும் இத்தொடர் வெளிவரக் காரணமாக அமைந்தவர் முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. பெரியார் – டாக்டர் பி.வரதராசுலு நாயுடு; இடையே விளங்கிய மாறாத நட்பை – குறையாத அன்பை விவரித்துள்ளார். இது நூலாகவும் அதே தலைப்பில் 1984 மற்றும் 1988ல் வெளிவந்துள்ளது. பல்வேறு தளங்களில் பெரியார் அவர்களின் கருத்துக்களில் மாறுபடும் எ.மயிலைநாதன் ஒரு காங்கிரசுக்காரர் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

 'தமிழால் இணைவோம்' என்ற முழக்கத்தோடு ஒரு முயற்சியில் ஈடுபட்டுள்ள நீங்கள் இவ்வாறு பேசியதும் சிந்திப்பதும் முறையா என்று கேட்கிறேன். சமூகநீதியில் நம்பிக்கை கொண்டவர்களும் நாத்திகர்களும் பிறமதத்தவர்களும் உங்களின் வரையறைக்குள் தமிழர்கள் இல்லையா? டெல்லிப்பட்டணம் தாண்டி இப்பொழுது கடல் கடந்து தமிழர்கள் வாழுமிடங்களெல்லாம் செயல்படப் புறப்பட்டுள்ள நீங்கள், உங்களது குறுகலான – வன்மம் கொண்ட மனநிலையை விட்டொழியுங்கள் என முடிப்பதற்கு முன் இரண்டு கருத்துகளைக் கூற விரும்புகிறேன்.

1. “கடவுள் நம்பிக்கை இல்லாதவர், தத்துவ தரிசனம் இல்லாதவர். மதப்பிரிவுகள் எதையும் சாராதவர். எந்தக் கோயில்களுக்கும் போகாதவர் என்றெல்லாம் இருந்தாலும் கூட ஒருவர் உயர்ந்த நிலையை அடைய முடியும்...”- புத்தரைப் பற்றி விவேகானந்தரின் கருத்து

2. பெரியாரிடம் பெரும் அன்பும் நட்பும் பாராட்டியவர்கள்... டாக்டர் அம்பேத்கர் மட்டுமல்ல – புத்த அறிஞர் டாக்டர் மல்லல சேகரா அவர்களும்; காயிதே மில்லத் இஸ்மாயில் மட்டுமல்ல – அலி சகோதரர்களும்; டி.கே. சண்முகம் மட்டுமல்ல – சங்கரதாஸ் சுவாமிகளும்; குன்றக்குடி அடிகளார் மட்டுமல்ல – நாராயண குரு அவர்களும். கூடுதலாக மதுரையில் ஒரு கிறித்தவத் துறவி, பரட்டை சாமியார் (உண்மைப் பெயர் :தியோபிலஸ் அப்பாவு) பெரியாரை ஒரு அப்போஸ்தலர் என்று அடிக்கடி போற்றிப் பாராட்டுவதை மதுரைப் பகுதியினர் அறிவார்கள்.

- வி.மாறன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It