வீடு கட்டுவதற்கு தேவையான சிமெண்ட், இரும்புக்கம்பி, மணல், ஜல்லி, செங்கல் போன்ற மூலப் பொருட்களின் விலை கடந்த சில ஆண்டுகளாகவே தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது.

 வீட்டுமனை விற்பனையாளர்கள் மக்களிடம் குருவிக்கு கூடு உண்டு ! எலிக்கு பொந்து உண்டு! உங்களுக்கு குடியிருக்க வீடு உண்டா? எனவே, எங்களிடம் வீட்டுமனை வாங்கி ‘கனவு இல்லம்’ கட்டுங்கள் என்று கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்து வீட்டுமனையை மக்களிடம் பல லட்சங்களுக்கு விற்று கோடீஸ்வரர்களாகின்றனர். ஆனால், வீட்டுமனை வாங்கியவர்கள், கட்டுமானப் பொருட்களின் விலை விண்ணைமுட்டும் அளவிற்கு உயர்ந்துவிட்டதால், ‘கனவில் வீடு கட்டிக்’ கொண்டிருக்கின்றனர்.

 சிமெண்ட் உற்பத்தியில் இந்திய ஏகபோக நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் கிராமப்புற விவசாய மக்களிடம் இடைத்தரர்கள் மூலம் குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி குவிக்கின்றனர். அந்த நிலத்தில் பலநூறு அடி சுரங்கம் வெட்டுகின்றனர். சிமெண்ட் சுரங்கத்திலிருந்து சுண்ணாம்புக்கல், ஜிப்சம் முதலியவற்றை வெட்டி எடுத்து சரக்குந்துகள் மூலம் தொழிற்சாலைகளுக்கு கொண்டு சென்று சிமெண்ட் உற்பத்தி செய்கின்றனர். மேலும் அரசிடமிருந்து சிமெண்ட் தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருட்களை மானிய விலையில் பெற்றுக் கொண்டு, சிமெண்ட் விலையை தங்கள் விருப்பம் போல் ஏற்றிவிடுகிறார்கள். ஒரு மூட்டை சிமெண்ட் விலை 2010-ஆம் ஆண்டு ரூ. 240-க்கு விற்பனை செய்தனர், 2012-ஆம் ஆண்டில் ரூ. 340/-க்கு விற்பனை செய்து பொதுமக்களை கொள்ளையடித்தனர்.

 சிமெண்ட் உற்பத்தி செய்திட தங்கள் நிலங்களை இழந்த மக்கள் சிமெண்டை வாங்கி வீடு கட்ட முடியாமல் தவிக்கின்றனர். நிலத்தை வாங்கிய முதலாளிகள் பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாகிவிட்டார்கள். நிலத்தை விற்றவர்கள் கோவணாண்டிகளாகி வறுமையில் உழன்று கொண்டிருக்கின்றனர். நிலத்தை விற்ற விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தரப்படும் என்னும் வாக்குறுதியும், அரசியல்வாதிகளின் தேர்தல் கால வாக்குறுதி போலாகிவிட்டது.

 சிமெண்ட் தயாரிப்பாளர்கள் சங்கம், சிமெண்ட் விலையை தங்கள் விருப்பம் போல் நிர்ணயம் செய்து நினைத்தபோதெல்லாம் விலையை உயர்த்தி கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர். மேலும், சிமெண்ட் தயாரிப்பாளர்கள் நடத்தி வரும் விலையேற்ற மோசடியை நீதிமன்ற உதவியுடன் மத்திய அரசின் நிறுவனமான CCI அம்பலப்படுத்தி, சிமெண்ட் தயாரிப்பாளர்களுக்கு 6300 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது என்பது நாடறிந்த செய்தி, ஆனால், நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் வரி ஏய்ப்பு செய்து வருகின்றனர். சிமெண்ட் தயாரிப்பாளர்கள்.

 மேலும், சிமெண்ட் தயாரிப்பு முதலாளிகள் மாநில அரசுக்கு செலுத்த வேண்டிய விற்பனை வரியை முறையாக செலுத்தாமல் பல்லாயிரம் கோடி ரூபாய் ஏமாற்றுகின்றனர். நடுவண் அரசுக்கும் முறையாக வருமானவரி செலுத்துவதில்லை. அதிலும் மோசடி செய்து ஏமாற்றுகிறார்கள்.

 மத்திய, மாநில அரசுகள் சிமெண்ட் விலையை கட்டுப்படுத்திட உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. கடந்த ஆட்சியில் சிமெண்ட் விலையை குறைத்திட, தமிழக முதல்வர் சிமெண்ட் தயாரிப்பாளர்கள் சங்கத்தினரை அழைத்துப் பேசினார். சிமெண்ட் தொழிற்சாலைகளை அரசு நாட்டுடமையாக்கிட நடவடிக்கை எடுக்கும் என மிரட்டல் விடுத்தார். அது மிரட்டலோடு போய்விட்டது. அரசு கூறியதற்காக சிமெண்ட் மூட்டை ஒன்றுக்கு ரூ. 50/- ரூபாய் குறைத்துவிட்டு மீண்டும் 100 ரூபாய் உயர்த்திவிட்டார்கள். அரசு கண்டு கொள்ளவில்லை.

 வீடுகள், பாலங்கள் முதலியவைகள், கட்டிடங்கள் கட்டுவதற்கு முக்கிய தேவை இரும்புக் கம்பிகள், இரும்புக் கம்பியின் விலை 2009-ஆம் ஆண்டு 35/- ரூபாய் விற்றது. தற்போது ஒரு கிலோ இரும்புக் கம்பியின் விலை ரூ. 60/-க்கு விற்கிறது. இரண்டு மடங்கு விலை உயர்ந்துவிட்டது. மத்திய, மாநில அரசுகள் இரும்புக் கம்பிகளின் விலையைக் குறைப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கல்லை. இரும்புக் கம்பியின் விலை உயர்வினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இரும்புக் கம்பி உற்பத்தியாளர்கள் கொள்ளை லாபம் சம்பாதித்து கொழுக்கின்றனர்.

 மலைக் குவாரிகளை ஏலம் எடுப்பவர்கள் அரசியல்வாதிகளின், ஆளும் அமைச்சர்களின் பினாமிகள், இயற்கை வளங்களை சூறையாடி வருகின்றனர். கட்டுக்கல், ஜல்லி முதலியவைகளின் விலையை தாறுமாறாக உயர்த்தி மக்களைச் சுரண்டுகின்றனர். அரசு விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு சட்டவிரோதமாக கற்களை வெட்டி எடுத்து விற்று கோடிகளை குவிக்கிறார்கள். கற்கள், ஜல்லி முதலியவற்றின் விலை உயர்வினால் மக்கள் வீடுகட்ட முடியாமல் தவிக்கிறார்கள்.

 தமிழகத்தில் உள்ள ஆற்று மணலை சுரண்டி எடுத்து வெளிமாநிலங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கும் அனுப்பி கொள்ளையடிக்கும் மணல் மாஃபியா கும்பல், ஆளும் அரசியல்வாதிகளின் பாதுகாப்பில் உள்ளனர். அரசு மணல் விற்பனையை பொதுப்பணித் துறையின் மூலம் நடத்துகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் ஆதரவோடு அனுமதியில்லாமல் மணலை கடத்துவது தொடர்கதையாகிவிட்டது. அரசு மணலுக்கு விலை நிர்ணயம் செய்தாலும் மணல் மாஃபியாக்கள் நிர்ணயிக்கும் விலைக்குத்தான் மணல் கிடைக்கிறது.

 2009-ம் ஆண்டு ஒரு யூனிட் மணல் ரூ.3500/-க்கு விற்பனை செய்யப்பட்டது. 2012-ஆம் ஆண்டு ஒரு யூனிட் மணல் ரூ.7000/-க்கு விற்கப்படுகிறது. இதனால் மக்கள் மணல் வாங்கி வீடுகட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 கிரானைட் கற்கள் விற்பனையும், ஏற்றுமதியும் தமிழகத்தில் கொடிகட்டிப் பறக்கிறது. தமிழகத்தில் உள்ள மலைகள் எல்லாம் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. கிரானைட் கற்கள் வெட்டியெடுப்பதற்காக மலைகள், விளை நிலங்கள், கண்மாய்கள், ஏரிகள் அனைத்தும் நாசமாக்கப்பட்டு சுரங்கம் தோண்டப்படுகிறது. அரசியல்வாதிகள், ஒப்பந்தக்காரர்கள், அதிகாரிகள் ஆகியோர் முக்கூட்டு அமைத்து கிரானைட் கொள்ளையை தீவிரமாக நடத்தி வருகின்றனர். நமது இயற்கை வளங்கள் நித்தமும் கொள்ளையடிக்கப்படுகிறது. கிரானைட் கற்களை மக்கள் வாங்கி பயன்படுத்த முடியாத அளவிற்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது.

 செங்கல் விலை 2009-ம் ஆண்டு ரூ.3/-க்கு விற்றது தற்போது ரூ.6/-க்கு விற்கப்படுகிறது. செங்கல் விலை இரண்டு மடங்கு உயர்ந்துவிட்டது. இதனால் செங்கல் வாங்கி வீடு கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 தமிழகத்தில் கட்டுமானத் தொழிலில் சுமார் 60 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வினால், கட்டுமானத் தொழிலாளர்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் வேலை இழப்பிற்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் வேலையின்மையால் வறுமையிலும், பட்டினியிலும் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களின் குழந்தைகளின் படிப்பு பாழாகிறது.

 தமிழகத்தில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் செயல்படுத்தப்படும் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டம் முதலிய குடியிருப்பு திட்டப் பயனாளிகள் , கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வினால் வீடு கட்ட முடியாமல் தவிக்கின்றனர். மேலும் அரசு திட்ட பணிகளில் கட்டிடப் பணிகளை செய்வதற்கு ஒப்பந்தக்காரர்கள் முன்வருவதில்லை. இதனால் பள்ளி, கல்லூரி கட்டிடங்கள், அங்கன்வாடி, சத்துணவு மைய கட்டிடங்கள் கட்டும் பணி தேக்கமடைந்துள்ளது.

 கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்திட மத்திய, மாநில அரசுகள் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுத்திட வேண்டும்.

1. தமிழகத்தில் உள்ள அனைத்து சிமெண்ட் தொழிற்சாலைகளையும் அரசுடைமையாக்கி அரசே ஏற்று நடத்திட வேண்டும். சிமெண்ட் விற்பனையை அரசே ஏற்க வேண்டும். சிமெண்ட் விற்பனைக்கென ஒழுங்குமுறை ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும்.

2. கல் குவாரிகளை ஏலம் விடுவதற்கு மாறாக கனிம வளத்துறை மூலம் ஏற்று நடத்திட வேண்டும்.

3. கிரானைட் குவாரிகளை தனியாருக்கு ஏலம் விடுவதற்கு மாறாக அரசே ஏற்று நடத்திட வேண்டும்.

4. மணல் குவாரிகளில் சட்ட விரோதமாக அரசு விதிமுறைகளுக்கு மாறாக மணல் அள்ளப்படுவதையும், மணல் கடத்தப்படுவதையும் தடுத்த நிறுத்தி, குறைந்த விலைக்கு மணல் கிடைக்க ஏற்பாடு செய்திட வேண்டும்.

தமிழகத்தில் அரசு மதுபானக்கடைகளில் மது விற்பனை செய்வதன் மூலம் ஒரு ஆண்டுக்கு சுமார் இருபதாயிரம் கோடி அரசுக்கு வருமானம் கிடைக்கிறது என அரசு அறிவித்துள்ளது. சிமெண்ட் தொழிற்சாலைகளை அரசுடைமையாக்குவது, கல்குவாரி, மணல் குவாரி, கிரானைட் குவாரி முதலியவற்றை அரசே ஏற்று நடத்துவதன் மூலம் ஒரு ஆண்டுக்கு சுமார் இரண்டு லட்சம் கோடி தமிழக அரசுக்கு வருமானம் வரும். மேலும், சிமெண்ட் உற்பத்தி, விற்பனை, கல்குவாரி, மணல்குவாரி, கிரானைட் குவாரி முதலியவற்றை அரசு ஏற்று நடத்துவதன் மூலம் பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். எனவே, மத்திய, மாநில அரசுகள் மேற்கண்ட நடவடிக்கைகளை விரைவாக மேற்கொண்டு மக்களையும், கட்டுமானத் தொழிலாளர்களையும் பாதுகாத்திட வேண்டும்.

Pin It