ஜெனிவாவின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடக்கும் நாளான மார்ச் 21யை தான் இங்கிருக்கும் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். காரணம், மாணவர் போராட்டம் ஒரு முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்புடன். அது போலவே ‘நாளை கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன’, ‘அடுத்த வாரம் கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன’, ‘தேர்வு அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன’ ‘மாணவர்கள் தங்களது எதிர்காலத்தினைப் பற்றி சிந்திக்க வேண்டும்’ போன்ற செய்திகளும் வெளியாகிக் கொண்டேதான் இருக்கின்றன.

வெகு காலத்திற்குப்பின் ஈழப்பிரச்சனை சரியானவர்களின் கைகளுக்குப் போய்ச் சேர்ந்துள்ளது. இதையும் மழுங்கடிக்கச் செய்யும் வேலைகள் அனைத்து முனைகளிலிருந்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதையே மேற்கண்ட செய்திகள் காட்டுகின்றன. ஆனால் இதையும் மீறி மாணவர்கள் அடுத்த கட்டதிற்கு நகர்ந்திருப்பது நம்பிக்கையைத் தருகின்றது. மேலும் ஈழப் பிரச்சனையானது இன்று போராடி நாளை தீர்வு காணக் கூடிய பிரச்சனையல்ல என்பதையும், நிரந்தரமான தீர்வினை எட்ட நீண்ட நெடிய தொடர்ச்சியான போராட்டம் தேவை என்பதையும் மாணவர்கள் நன்கு உணர்ந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது.

தங்களது அடுத்த கட்ட நடவடிக்கையாக தெற்கு சூடானிற்கு நடத்தப்பட்டதைப் போல ஈழத்திலும் பொது வாக்கெடுப்பு நடத்திட இந்திய அரசை அல்ல, அதனை ஆட்டுவிக்கும் அமெரிக்க அரசை நிர்பந்தித்து தீர்மானம் கொண்டு வரச் செய்வது; அது வரையிலும் அமெரிக்க நிறுவனங்களான கின்லே, அக்குவாபினா, ஸ்ப்ரைட், பெப்சி, கோக்கோ-கோலா, லேஸ் சிப்ஸ், ஃபோர்ட், செவர்லே கார்கள், வால்மார்ட் போன்றவற்றைப் புறக்கணிப்பது என்ற நிலைப்பாட்டை முன்வைத்திருப்பது என்பது, சிங்கள புத்த பிக்கு என்ற காரணத்திற்காக கையில் சிக்கியவர்களை எல்லாம் அடித்து துவைக்கும் அரசியல் இயக்கங்களை விட மாணவர்களின் அரசியல் புரிதல் ஆழமானது என்பதனையே காட்டுகின்றது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக பேசப்பட்ட பொது வாக்கெடுப்புக் கோரிக்கை இன்று பிரதான கோரிக்கையாக மாணவர்களால் முன்வைக்கப்படுவது மாணவர்கள் சரியான பாதையில் தங்களது பயணத்தினை தொடர்ந்துள்ளனர் என்பதற்கு சான்று. அறவழிப் போரட்டமும் ஆயுத வழிப் போராட்டமும் செல்லுபடியாகாத ஈழத்திற்கு இன்று இருக்கும் ஒரே சனநாயக வழி கோரிக்கையாக பொது வாக்கெடுப்பே இருக்க முடியும். இது யாராலும் எளிதில் புறந்தள்ளிவிட முடியாத கோரிக்கையுமாகும். இக்கோரிக்கையை இங்கிருக்கும் அரசியல் கட்சிகளோ தன்முனைப்புடன் முன்னெடுத்து செல்லப் போவதே இல்லை. ஆக எந்த வித எதிர்பார்ப்புமின்றி மிகத் தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் இக்கோரிக்கையை கொண்டு செல்லும் திராணி மாணவர்களுக்குத் தானுண்டு. இதன் ஆரம்பம்தான் அமெரிக்க நிறுவனங்களைப் புறக்கணிப்பது. இதற்கான காரணமாக "இந்தியாவைக் கட்டிப் போட்டுள்ள அணு சக்தி ஒப்பந்தம், பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள், வர்த்தக நிறுவனங்களினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஆகியவற்றை நாம் எதிர்க்கும் பட்சத்தில் அமெரிக்காவிற்கு அது இழப்புகளை – அதாவது சந்தை இழப்புகளை – கொண்டு வருவதாக அமையும்” எனக் கூறி இருப்பது ஈண்டு கவனிக்கத்தக்கது. அதாவது பொருளாதாரத்தினை சீண்டினால் மட்டுமே இது போன்ற நாடுகளின் கவனத்தினை தம் பக்கம் திருப்ப முடியும் என்பதனை மாணவர்கள் அறிந்தே உள்ளனர். இதனூடாக, இதே அலை வரிசையில் உள்ள வேறு சில திட்டங்களையும் மாணவர்கள் கவனத்தில் கொள்வது நலம்.

முதல் நடவடிக்கையாக தமிழக தேர்தல் களத்தின் வெற்றியினைத் தீர்மானிக்கும் காரணிகளில் பிரதானமான காரணியாக ஈழப் பிரச்சனை வடிவெடுக்க வேண்டும். இங்குள்ள அரசியல் கட்சிகளின் குறிக்கோளே தேர்தலில் வெற்றி பெற்று பதவியைப் பிடிப்பதுதான். ஈழப் பிரச்சனையை புறந்தள்ளும் அல்லது இதில் சந்தர்ப்பவாத நாடகமாடும் கட்சிகள் தங்களின் தோல்விக்கு ஈழப் பிரச்சனையில் உண்மையாக இல்லாததே காரணம் என உணர வேண்டும்.

தங்களது தேர்தல் அறிக்கையில் ஈழப் பொது வாக்கெடுப்புக் கோரிக்கையையும் அதற்கான நடைமுறை செயல் திட்டங்களையும் அறிவிக்காத கட்சிகளை புறந்தள்ள வேண்டும். அவை பிராந்தியக் கட்சியாயினும் சரி, தேசிய கட்சியாயினும் சரி.

காங்கிரசையும், அதனை தூக்கி சுமந்து கொண்டு திரியும் பிராந்தியக் கட்சிகளையும் எந்தவித தயவு தாட்சண்யமும் இன்றி தேர்தல் களத்திலிருந்து துடைத்தெரிய வேண்டும். "காங்கிரசை ஒழித்துக் கட்டுவதே எனது முதல் வேலை" எனக் கூறிய தந்தை பெரியாரின் வழி வந்தவர்கள் வேண்டுமானால் பெரியாரின் கூற்றினை மறந்து போயிருக்கலாம். ஆனால் தமிழர்களின் நலன்களை எல்லாம் குழி தோண்டிப் புதைக்கும் காங்கிரசை தமிழகத்திலிருந்து ஒழித்துக் கட்டுவதே மாணவர்களின் பிரதான பணியாக இருக்க முடியும்.

ஈழ இறுதிக் கட்டப் போரில் தமிழர்களின் அனாதைப் பிணங்களாக தெருவெங்கும் சிதறடிக்கப்பட்டிருக்கும் காட்சியையும், பெண்களின் குழந்தைகளின் அவல ஓலங்களின் காட்சியையும் பெரும்பாலான ஊடகங்கள் காண்பித்துக் கொண்டிருந்த அதே வேளையில் காங்கிரஸ்காரரான வசந்தின் 'வசந்த்' தொலைகாட்சி ராஜிவ் கொல்லப்பட்ட காட்சிகளை ஒளிபரப்பி நடந்த இனப்படுகொலையை நியாயப்படுத்தியது. அமெரிக்க நிறுவனங்களான கின்லே, அக்குவாபினா, ஸ்ப்ரைட், பெப்சி, கோக்கோ-கோலா, லேஸ் சிப்ஸ், ஃபோர்ட், செவர்லே கார்கள், வால்மார்ட் போன்றவற்றைப் புறக்கணிப்பது போலவே 'வசந்த்' தொலைக்காட்சியையும், 'வசந்த் & கோ' என்ற தரகு வியாபார நிறுவனத்தினையும் மாணவர்களும் அவர்களின் மூலமாக பொது மக்களும் புறக்கணிக்கச் செய்ய வேண்டும். அமெரிக்க நிறுவனங்களையும் மத்திய அரசு நிறுவனங்களையும் முற்றுகையிடும் போது, வசந்த் & கோ போன்ற காங்கிரசாரின் வணிக நிறுவனங்களையும் முற்றுகையிடுவதும் சரியானதே.

தனி ஈழக் கோரிக்கையின் நியாய‌த்தினையும் ஈழத் தமிழ் மக்களின் கையறு நிலையினையும் இந்தியாவின் மற்ற மாநில மக்களுக்கு கொண்டு செல்லும்பட்சத்தில்தான் இந்திய அளவில் மாணவர்களின் கோரிக்கைக்கு வலு சேர்க்க முடியும். ஏனென்றால் தமிழகத்தில் சாதாரண மக்களின் பார்வையில் காஷ்மீர் பிரச்சனை எப்படி முஸ்லிம் தீவிரவாதமாகப் பார்க்கப்படுகின்றதோ அது போலவேதான் மற்ற மாநிலங்களில் ஈழப்பிரச்சனையும் இனப்படுகொலையாக பார்க்கப்படாமல் விடுதலைப் புலிகளின் தீவிரவாதமாகப் பார்க்கப்படுகின்றது. அதனால்தான் மத்திய அரசு இன்னும் நிலையாக உள்ளது. முதலில் இத்தகைய தட்டையான பார்வையை அண்டை மாநிலங்களிடமிருந்து நீக்கி, நமது நியாயமான போராட்டங்களையும் கோரிக்கைகளையும் அங்குள்ள சனநாயக சக்திகளிடம் கொண்டு செல்லும் போதுதான் அவர்களைப் பற்றிய புரிதல் நமக்கும், நம்மைப் பற்றிய புரிதல் அவர்களுக்கும் ஏற்படும். இதுவே தொலைநோக்கில் நமது போராடங்களையும் கோரிக்கைகளையும் இந்திய அளவில் எடுத்துச் செல்ல ஏதுவாகும்.

இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர அமெரிக்காவை நிர்பந்திப்பதற்கு அமெரிக்க நிறுவனங்களைப் புறக்கணிப்பது போல இலங்கையை ஆதரிக்கும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளையும் புறக்கணிக்க வேண்டும். இம்முழக்கத்தின் தொடக்கமாக, கூடங்குளத்தில் அமையவிருக்கும் ரஷ்ய அணு உலைக்கு எதிராக கடந்த ஓராண்டிற்கும் மேலாக அமைதி வழியில் போராடிக் கொண்டிருக்கும் இடிந்தகரை மக்களுடன் இணைந்து, இலங்கைக்கு ஆதரவாக நிற்கும் ரஷ்யாவின் அணு உலையை செயல்பட விடாமல் தங்களது போராட்டத்தை தொடர வேண்டும். அணு உலைக்கு எதிரான போராட்டத்தினை முன்னெடுத்தாலே மாணவர்களின் மீது பாய்ந்து கடித்துக் குதறுவதற்கு நாலா புறத்திலிருந்தும் பலர் தயாராக இருப்பார்கள். இதில் சாதாரண வெகுசனங்களும் அடங்குவர்.

சாதாரண வெகுசனங்களைப் பொருத்தவரை இன்று நிலவிக் கொண்டிருக்கும் மின் பற்றாக்குறையின் தீர்வாகத்தான் அணு உலையைப் பார்க்கிறார்கள். அப்படித்தான் ஆளுபவர்களால் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அணு உலை என்பது நமது உயிருக்கு வைக்கப்பட்டிருக்கும் உலை எனும் எதிர்கால அபாயத்தையும், அணு உலை நிறுவப்பட்டாலும் அதிலிருந்து வெளியேறும் கதிர் வீச்சும் அணுக்கழிவும் தான் தமிழகத்திற்கு அதிலிருந்து கிடைக்கும் மிகக் குறைந்த மின்சாரமோ மற்ற மாநிலங்களுக்குத்தான் என்ற உண்மையையும், அன்றாடம் அறிவியலைப் பயிலும் மாணவர்களால்தான் எளிதில் கொண்டு செல்ல முடியும். மேலும், தமிழகத்தின் எதிர்கால சந்ததியை தீவிர கதிர்வீச்சுத் தீண்டலிலிருந்து காக்கும் மனிதகுல கடமையும் மாணவர்களுக்கு உண்டு.

கூடங்குளம் அணு உலைப் பிரச்சனை என்பது அப்பகுதி மக்களின் பிரச்சனை மாத்திரமல்ல, இது ஒட்டு மொத்த மனித குலத்திற்கான பிரச்சனையுமாகும். வேறு ஒரு கோணத்தில் பார்த்தாலும் கூட, கூடங்குளத்தில் அணு உலை நிறுவுவதென்பது ரஷ்யாவிற்கு கவுரவ பிரச்சனை. மாணவர்கள் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் இணைவதென்பது மத்திய அரசிற்கு உச்சந்தலையில் விழும் அடியல்ல, இடி. இதைவிட தீர்க்கமான நெருக்கடியை மத்திய அரசிற்கு வேறு எந்த வகையிலும் தந்துவிட முடியுமா என்பது தெரியவில்லை.

மேலும், மாணவர்கள் தங்களது போராட்டத்தின் வாயிலாக சரியான படிப்பினைகளை கற்றுக் கொண்டு சரியான பாதையில் முன்னேறுவார்களாயின் தங்களது போராட்டத்தின் நட்பு சக்திகளாக கூடங்குளம் போன்ற இன்னோரன்ன போராடும் மக்கள் சக்திகளையே அடையாளம் காண்பர். இதுவே இந்த இயங்கு முறையின் சரியான போக்காகவும் அமையுமென்பதில் அய்யமில்லை. சிலர் அறிவுறை கூறுவதைப் போன்று தங்களுக்கு ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகளுடனோ, அரசியல் இயக்கங்களுடனோ மாணவர்கள் இணைந்து செயல்படலாம் என்பதெல்லாம் தூய்மையான மாணவர் போராட்டத்தின் மீது அந்தந்த அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் முத்திரையைக் குத்துவதில் சென்றுதான் முடியும்.

அரசியல் கட்சிகளின் ஆதரவில்லாமல் மாணவர் போராட்டம் வெற்றியடையாது என்கிற கருத்தும் உலவ விடப்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசியல் கட்சிகளின் ஆதரவிருந்தால்தான் மக்கள் போராட்டம் சாத்தியமா என்ன? மாணவர்களையும் மக்களையும் நம்பித்தான் கட்சிகளும் இயக்கங்களுமே தவிர கட்சிகளையும் மக்களையும் நம்பி மாணவர்களும் மக்களும் இல்லை என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு.

இவை போன்ற தொடர்ச்சியான போராட்டங்களை தமிழக அளவில் எடுக்கும் பொழுதுதான் மாணவர் போராட்டம் அர்த்தமுடையதாகவும் ஆக்கப்பூர்வமானதாகவும் அமையும் என்பது எமது கருத்து. மாணவர் போராட்டப் பயணங்கள் தொட‌ரட்டும்.

- சமரன்

Pin It