டெல்லியில் மாணவி ஒருவர் மிகக்கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பின்பு தலைநகர் டெல்லியிலும், இந்தியாவின் இதர பகுதிகளிலும் கடுமையான எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்தன. அதன்பின்தான் நமது அரசியல் அமைப்பு எத்தனை பெண்கள் விரோதமானதென்பது வெட்டவெளிச்சமாகத் தெரிய ஆரம்பித்தது.

varma_commission_640

இந்திய ஜனாதிபதியின் மகனும், காங்கிரஸ் எம்பியுமான ஒரு நபர் போராட்டம் நடத்தும் பெண்களைப் பற்றி பாலியல் கருத்துரை அளித்து பின்பு மன்னிப்பு கோரினார். அனேகமாக அனைத்து கட்சிகளின் தலைவர்களும் உளறிக்கொட்டி, கிளறி மூடி தாங்கள் எவ்வளவு கேடுகெட்ட பெண் விரோதிகள் என்பதைக் காட்டிக்கொண்டனர். மத அல்லது கடவுள் தொழில் நடத்தும் மனிதர்களின் பெண்கள் பற்றிய பார்வை அம்பலமானது. ‘சகோதரா’ என்று கெஞ்சியிருந்தால், லட்சுமி மந்திரம் சொல்லியிருந்தால் அந்தப் பெண் தப்பித்திருப்பாள் என்று ஒரு ‘சாமி’ திருவாய் மலர்ந்தது. சட்டை கூட போடாத, நித்தியானந்தாவை இளவரசராக்க முனைந்த மதுரை ஆதீனம் பெண்கள் பர்தா போட்டால் பிரச்சனை வராது என்று கண்டுபிடிப்பு செய்தது. பெண்களின் ஆடைதான் காரணம் என்று பெட்டிக்கடையில் சிகெரெட் வாங்கும்போது பேசிக்கொண்டனர். முகநூலில் பிளந்து கட்டினர்.

இந்த அனைத்தையும் மறுத்து, சுதந்திரமாக இருக்க பெண்களுக்கு உரிமை வேண்டும் என்று கோரி பெண்கள் அமைப்புகள், மாணவர்கள், இளைஞர்கள் போரடினர். சோனியா போராட்டக்காரர்களைச் சந்திதித்து விட்டார், அப்புறம் எதற்குப் போராட்டம் என்று காங்கிரஸ் சீறியது. டெல்லி வன்முறைக்குப் பலியான மாணவியை சிங்கப்பூருக்கு அனுப்பி போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய அரசு முயன்றது. இறந்துபோன மாணவி உடலை பொதுமக்கள் பார்வைக்குத் தராமல் இறுதி காரியங்களை மறைவாக, உடனடியாக நடத்தி முடித்தது. இதற்கிடையில் டெல்லியில் இந்தியா கேட்டை இழுத்து மூடியது. இரயில் நிலையங்களை இழுத்து மூடியது. ஆனாலும் பேராட்டங்கள் ஓயவில்லை.

அந்தப் போராட்டங்களின் விளைவாக நீதிபதி வர்மா தலைமையில் ஆணைய‌ ஒன்றை இந்திய அரசு நியமித்தது. பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பான குற்றவியல் சட்டங்களைத் திருத்துவது குறித்த பரிந்துரைகளை அளிப்பதுதான் அந்தக் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட பணி. தற்போது வர்மா ஆணையம் தனது பரிந்துரைகளை அளித்துள்ளது. குற்றவியல் சட்டங்கள் என்ற எல்லையைச் சுருக்கி நோக்காமல், அரசியல் சமூக வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக ஆணையத்தின் பரிந்துரை அமைந்துள்ளது.

பெண்களின் உரிமைக்கான போராட்டங்களில் ஒரு மைல்கல் என்றே வர்மா ஆணைய‌ அறிக்கையைச் சொல்ல வேண்டும். மக்கள் போராட்டங்கள் வலுவாக நடக்கும் போது அவற்றை மட்டுப்படுத்தி மறக்கடிக்கச் செய்வதற்காகவே ஆணையங்கள் போடப்படும். அவையும் இழுத்தடித்து பிரச்சனையை ஆறி அவலான பின்னரே வெளியாகும். வர்மா ஆணைய‌ அறிக்கை, நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு மாத காலத்துக்குள் தயார் செய்யப்பட்டிருப்பது மிக முக்கியமான செய்தியாகும். மேலும், அறிக்கையைத் தயார் செய்யும்போது இந்தப் பிரச்சனை தொடர்பான கல்வியாளர்கள், செயல்வீரர்கள் உள்ளிட்டவர்கள் முறையாகக் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளனர். கமிஷனின் அறிக்கை இதுவரை பலரும் தொடத் துணியாத அம்சங்களைத் தொட்டு புதிய பாதை அமைத்திருக்கிறது.

ஆணையம் அளித்த அறிக்கையின் முக்கியமான அம்சங்களைத் தொகுத்துத் தருகிறேன். பெண்ணின் சுதந்திரம் என்ற கோணத்திலிருந்தே இப்பிரச்சனையை ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோட்பாட்டை அறிக்கை அடிப்படையாகக் கொண்டுள்ளது. பெண்ணின் உடல் மீது அந்தப் பெண்ணைத் தவிர வேறு யாருக்கும் உரிமையில்லை என்ற உன்னதமான, மிக அடிப்படையான கோட்பாட்டை அறிக்கை உயர்த்திப் பிடித்துள்ளது. பெண்ணின் சுயகௌவரத்திற்கு மதிப்பளித்து அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. ஆணாதிக்க சிந்தனையின் அடிப்படையில் எழும் பெண்ணின் கௌரவம்- இழிவு போன்ற கற்பிதங்களை அறிக்கையின் அடிப்படையாகக் கொள்ளவில்லை.

பெண்ணின் சுதந்திரம், உடல் மீதான பெண்ணின் உரிமை, பெண்ணின் சுயகௌரவம் என்ற அடிப்படையில் பிரச்சனையை அணுகும் அறிக்கை, தற்போது நடப்பில் இருக்கும் சட்டங்களில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் பற்றி மட்டுமல்லாமல், புலனாய்வு, தண்டனை நடவடிக்கை, குற்றம் பற்றிய விசாரணை போன்றவற்றிலும் என்னென்ன மாறுதல்கள் செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.

பெண்ணிற்குப் பாதுகாப்பு தரப்படவிலை என்றால், அதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று ஆணையம் சொல்கிறது. முதல் தகவல் அறிக்கை பதிய மறுக்கும் காவல்துறை அதிகாரிக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் அது பரிந்துரைக்கிறது.

பயமுறுத்தும் வகையில் பின்தொடர்வது (stalking), பெண்ணின் உடல் உறுப்புகளை வெறிப்பது அல்லது பாலியல் நடவடிக்கைகளைப் பார்ப்பது (voyeurism), துகிலிரிவது (stripping), பாலியல் துன்புறுத்தல் ஆகியவை குற்றங்கள் எனக் ஆணையம் குறிப்பிடுகிறது. அவற்றுக்கான பொருத்தமான தண்டனைகளையும் வரையறுத்துள்ளது. பல்வேறு வகைப்பட்ட பாலியல் வன்முறைகளுக்குக் கடுமையான தண்டனைகளை அறிக்கை பரிந்துரைக்கிறது. பல்வேறு பாலியல் குற்றங்களுக்கு படிப்படியாக அதிகரிக்கும் தண்டனைகளைப் பட்டியலிடுகிறது.

பெண்ணை இழிவுபடுத்துவதான ‘இரட்டை விரல்’(1) சோதனையைக் கைவிட வேண்டும் என்று அறிக்கை முன்வைக்கிறது. அதுமட்டுமல்ல, வன்புணர்ச்சிக்கு ஆளான பெண்ணிற்கு மருத்துவ சோதனை நடத்தப்படும் முறையைப் பற்றியும் அப்பெண்ணை எப்படி அரவணைப்புடன் பராமரிப்ப‌து என்பது பற்றியும் ஆணையம் தெளிவான வரையறைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

மனைவி ஆணின் சொத்து என்பதால், திருமண உறவுக்குள் நிகழும் வன்புணர்ச்சி என்பதை வன்புணர்ச்சி என்ற குற்ற நடவடிக்கையாகப் பார்க்கக் கூடாது என்ற ஆணாதிக்க கருத்துநிலையை வர்மா மறுக்கிறார். இது மிகவும் குறிப்பிடப்பட வேண்டிய முன்னேற்றமாகும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உட்பட இதர குற்றங்களை இழைத்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படாதிருக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் திருத்தப்படுவதற்கான பரிந்துரைகளையும் வர்மா ஆணையம் அளித்திருக்கிறது.

ஒரு காவல்துறை அதிகாரி, தனது அதிகார வரம்புக்குள் ‘காவலில் வன்புணர்ச்சி’ நிகழ அனுமதிப்பார் என்றால், அவர் தனது பொறுப்பை நிறைவேற்றத் தவறியமைக்காக, 7 முதல் 10 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் தண்டனைக்கு உள்ளாக வேண்டும் என்று வர்மா பரிந்துரைக்கிறார்.

மேலும், வன்புணர்ச்சி செய்த இராணுவத்தினரை சிவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அறிக்கை பரிந்துரைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல், மோதல் நடக்கும் அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்புக்கான சிறப்பு ஆணையர்களை நியமிக்க வேண்டும் என்று அறிக்கை சொல்கிறது.

பாலினச் சிறுபான்மையினரின்(2) (sexual minorities) உரிமைகளையும், கௌரவத்தையும் பாதுகாப்பது பற்றியும் கூட வர்மா ஆணைய‌ அறிக்கை விரிவாகப் பேசுகிறது.

மேலும் குடும்பம் என்ற சமூக நிறுவனத்துக்குள் நடக்கும் குற்றங்கள் குறித்தும், தனது துணையைத் தேர்ந்தெடுப்பதற்கான பெண்ணின் உரிமையைப் பலவந்தமாகத் தடுப்பது குறித்தும் அறிக்கை விவாதிக்கிறது.

பாலின நுண்ணுணர்வுடன் காவல்துறை நடந்துகொள்ளும் வகையில் காவல்துறை அமைப்பு சீர்செய்யப்படுவது குறித்தும், நீதித்துறை பாலின நுண்ணர்வுள்ளதாகவும், பாலின நியாயம் தெரிந்திருப்பதாகவும் இருக்க வேண்டியது குறித்தும் கூட வர்மா ஆணைய‌ அறிக்கை பேசுகிறது. பாலியன் குற்றங்கள் விரைவாக விசாரிக்கப்படுவதற்கு ஏதுவாக நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிக்கை கூறுகிறது.

பெண்களின் உரிமைகள் குறித்த சாசனம் ஒன்றையும் வர்மா ஆணையம் வரையறுத்தளித்துள்ளது. இவ்வாறாக, பெண்கள் மீதான குற்றங்களை எதிர்கொள்வதற்கான சட்ட வரையறையை வர்மாக ஆணையம் பரிந்துரைத்துள்ளது, இந்தியப் பெண்கள் இயக்கத்துக்கும், குறிப்பாக டெல்லி பாலியல் கொடுமைக் கண்டித்து நடைபெற்ற இயக்கத்துக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட மறுநாளே (24, ஜனவரி) அறிக்கையின் முழுவடிவம் உள்துறை அமைச்சகத்தின் வலைமனையில் (www.mha.nic.in) வெளியிடப்பட்டது. ஆனால், எந்தக் காரணமும் காட்டப்படாமல் அந்த அறிக்கை அகற்றப்பட்டுவிட்டது. இதுபற்றி கேட்டபோது ஊடகங்கள் மற்றும் செய்தித் தொடர்பு கூடுதல் தலைமை இயக்குநர் குல்தீப் சிங் தாத்வாலியா, ‘அப்படியா.. அதனை வலைமனையில் வெளியிடப்படவில்லை என்று நினைக்கிறேன். எதற்கும் வரும் திங்கள் கிழமை மீண்டும் பாருங்கள்’, என்று சமாளித்திருக்கிறார். (வெள்ளி முதல் ஞாயிறு வரை அரசு விடுமுறை)

வர்மா ஆணைய‌ அறிக்கை மத்திய அரசை குலைநடுங்க வைத்துள்ளது. ஆயுதப்படைகள் தொடர்பான சட்டத்தை மாற்றுவது மிகச் சிரமம் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் அஸ்வின் குமார் குறிப்பிட்டுள்ளார். ‘என்ன நடக்கும் என்று தெரியாத கடமையை நிறைவேற்றும் இடத்தில் (line of Duty) எடுக்கப்பட்ட நடவடிக்கையை எப்படி நீங்கள் பிரித்துப் பார்ப்பீர்கள்?’, என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

பெண்கள் மேலான பாலியல் தாக்குதல்களுக்கு எதிரான வெடிப்பு தீயாகப் பற்றி எரிந்தபோது, ‘தமிழர்’கள் சிலர் டெல்லிக்கு ஒரு நீதி; தமிழகத்துக்கு ஒரு நீதியா என்று வழக்கம் போல சோக கீதம் பாடினர். ஆனால், தற்போது வர்மா ஆணையத்தின் அறிக்கை தமிழ் பெண்களுக்குமான பாதுகாப்பை நோக்கிய ஒரு முன்னேற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. வெற்றுப் புலம்பல்களை கைவிட்டு இந்த முன்னேற்றத்தை யதார்த்தமாக நாம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் காவல்துறையின் பாலியல் வன்முறைகளை நியாயப்படுத்தி வந்த ஜெ., பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை என்று வெற்று வீரம் பேசினார். ஆனால், இந்தக் கட்டுரை எழுதும் வரை வர்மா ஆணையத்தின் பரிந்துரை பற்றி எந்தக் கருத்தும் சொல்லவில்லை.

பாரதீய ஜனதா கட்சியின் பெண்கள் விரோத அரசியலை அனைவரும் அறிவோம். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயிக்கப் போவதாகச் சொல்லிக் கொள்ளும் அந்தக் கட்சியும் கூட வர்மா ஆணையத்தின் அறிக்கையால் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை இன்னமும் சட்டமாக்குவதை தடுத்து நிறுத்தியுள்ள பெண்கள் விரோத, ஆணாதிக்கவாதிகளின், அதிகாரவெறியர்களின், கோடீஸ்வரர்களின் நாடாளுமன்றம் இந்தப் பரிந்துரைகளை வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் எடுத்துக் கொண்டு அதனை நிறைவேற்றும் என்று நாம் எதிர்பார்க்க முடியுமா? ஆணையத்தின் அறிக்கையை உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்து தன் பரிந்துரைகளை நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருக்கும் நிலைமையைப் பார்த்தால், கடும் போராட்டங்கள் காரணமாக வர்மா ஆணையம் அமைக்கப்பட்டு பரிந்துரைகள் வந்தது போல, ஆணையத்தின் அறிக்கையை நடைமுறையாக்க மிகக் கடுமையான போராட்டங்களை நடத்த வேண்டிவரும் என்று தோன்றுகிறது. அந்தப் போராட்டம் வெகு நீண்ட காலத்துக்குக்கூட நீடிக்கலாம்.

எப்படியானாலும், ஆணாதிக்க வெறி கட்சிகளைத் தோற்கடித்து பெண்கள் போராட்டம் வெற்றிகளைக் குவிக்க வேண்டும். அதற்காக, அவர்களுடன் அனைவரும் கரம் கோர்க்க வேண்டிய நேரமிது.

அடிக்குறிப்புகள்:

1). பெண்ணின் பிறப்புறுப்பில் இரண்டு விரல்களை நுழைத்து அவளின் கன்னித் தன்மையைத் தீர்மானிக்கும் அல்லது, வன்புணர்வின்போது அவளின் பிறப்புறுப்பு காயமடைந்துள்ளதா என்று சோதிக்கும் அறிவியல் பூர்வமற்ற, பெண்ணை இழிவுபடுத்தும் சோதனை முறை. இதனை பல ஆண்டுகளாகப் பெண்கள் அமைப்புகள் எதிர்த்து வந்தன.

2) sexual minorities: பெண்ணும் பெண்ணும் உறவு கொள்வது, ஆணும் ஆணும் உறவு கொள்வது அல்லது இருபாலாரிடத்தும் உறவு கொள்வது, மூன்றாம் பாலினத்துடன் உறவு கொள்வது போன்ற ‘இயல்புக்கு’ மாறான உடலுறவுப் பழக்கம் உள்ளவர்களை இவ்வாறு குறிப்பிடுகின்றனர்.

- சி.மதிவாணன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It