பெரியார், அம்பேத்கர், காரல் மார்க்ஸ் ஆகியோரின் கருத்துக்களை போதித்தவர்கள், ஹிந்துதுவ சக்திகளை வேரறுப்போம் என்று நேரடியாக களமாடி, இஸ்லாமியர்களின் போர்வாள் பழனி பாபா அவர்களோடு கை கோர்த்து தங்கள் கட்சியை தமிழ்நாடு முழுவதும் வளர்த்தவர்கள், மேடைதோறும் பார்ப்பனிய எதிர்ப்பு, வேதங்கள் எதிர்ப்பு பேசியவர்கள், இசுலாமியர்களின் சின்னம் மாம்பழம், ஒடுக்கப்பட்டவர்களின் சின்னம் மாம்பழம் என்று பரப்புரை செய்தவர்கள், தமிழகத்தில் முதல்வராக ஒரு தாழ்த்தப்பட்டவர் வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம் என்று வன்னியர் சங்கக் கூட்டங்களில் தீர்மானம் போட்டவர்கள், இன்று நாடகக் காதலை எதிர்க்கின்றோம் என்ற பெயரில் 'தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள உயர்சாதிப் பெண்களை ஜீன்ஸ், கண்ணாடி போட்டு, மயக்கி, திருமணம் செய்து கொள்கின்றார்கள், இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் நாடு முழுவதும் திட்டம் வகுத்துத் தருகின்றார்கள்' என்றும், கட்சி மேடைகளில் புராணக் கதைகளை நாடகம் போட்டு நடிப்பதை 'புதிய அரசியல் புதிய நம்பிக்கை' என்ற பெயரில் பரப்புரை செய்து வருகின்றார்கள் பாட்டாளி மக்கள் கட்சியினர்.

anbumani_ramadoss_650

ஜூலை மாதம் 2010 ஆம் ஆண்டு பூம்புகாரில் நடைபெற்ற வன்னியர் சங்க மகளிர் மாநாட்டில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாசு, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்டவர்களை விட வன்னியர்கள்தான் அதிக அளவில் குடிசைகளில் வாழ்கின்றார்கள் என்று பேசினார். ஆனால் தருமபுரியில் நடந்த மனிதத் தன்மை இல்லாத கொடூர செயலுக்குப் பிறகு கடலூர், விழுப்புரம் பகுதிகளில் சுமார் இரண்டாயிரம் காதல் நாடகங்கள் நடந்துள்ளதாகவும், அவை அனைத்தும் பெண் வீட்டாரிடம் பணம் பறிக்கும் நோக்கோடு நடந்து உள்ளதாகவும், அந்தப் பட்டியல் விவரங்கள் எங்களிடம் உள்ளது என்று கூறுவது முரண்பாட்டை மட்டுமே வெளிப்படுத்துகின்றது. 'சாதி மறுப்புத் திருமணத்தை எதிர்க்கவில்லை, காதல் திருமணத்தை எதிர்க்கவில்லை, ஆனால் பெற்றோர் சம்மதத்தோடு அவை நடக்கவேண்டும்' என்று மட்டுமே கூறுவதாக தங்கள் நிலையை அவர்கள் விளக்கினாலும் பல பெற்றோர்கள் பிள்ளைகள் மீது வைக்கும் பாசத்தை விட சாதி மீது அதிகம் பாசம் கொண்டவர்கள் என்பதை நன்றாகவே அறிந்து வைத்து இருப்பதால் இப்படிப்பட்ட கருத்துக்களைத் தொடர்ந்து பா.ம.க நிர்வாகிகள் மக்கள் மத்தியில் துணிச்சலாகப் பதிவு செய்து வருகின்றார்கள்.

திராவிடக் கட்சிகளோடு கூட்டணி இல்லை, தேசியக் கட்சிகளோடு கூட்டணி இல்லை என்று சொல்லி வந்தவர்கள் பிறகு சாதியக் கட்சிகளோடு மட்டுமே இனி கூட்டணி, வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தினைத் திருத்த வேண்டும், நாடகக் காதலை எதிர்ப்போம் என்பதோடு நின்றுவிடாமல் தாழ்த்தப்பட்டவர்கள் பற்றி அவதூறுகளைப் பேசி வருவது பா.ம.கவின் தினசரி நடவடிக்கைகளாக மாறி உள்ளது. இந்த மாற்றங்கள் நவம்பர் மாதம் 7 ஆம் தேதி அன்று நடந்த தருமபுரி நிகழ்விற்குப் பிறகு ஏற்பட்டு இருப்பது என்பதை நாம் உற்று கவனிக்க வேண்டி உள்ளது. அதே வேளையில் மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் சங்க மாநாட்டில் சாதி மறுப்புத் திருமணத்திற்கு எதிரான கருத்துக்கள் பேசப்பட்ட பின்பு தான் தர்மபுரி சம்பவம் நடந்துள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.

கட்சியின் வாக்குவங்கியை விஜயகாந்த் பிரித்துக் கொண்டதை உணர்ந்தவர்கள் அவரையும் தருமபுரி சம்பவத்தில் சேர்த்து விட எண்ணி இறந்த நாகராஜன் (திவ்யாவின் தந்தை) தே.மு.தி.க கட்சியின் உறுப்பினர் என்று ஊடக சந்திப்பில் பதிவு செய்தார்கள். ஆனால் வழக்கம் போல விஜய்காந்த் தர்மபுரி நிகழ்வைப் பற்றி வாய் திறக்கவில்லை. மேலும் திராவிட கட்சித் தலைவர் ஒருவரே திருமாவளவனைத் தூண்டி கலவரத்தை ஏற்படுத்தி விட்டார் என்று பேசி வருவதின் மூலம் மறைமுகமாக தமிழக அரசின் ஆதரவைப் பெற்றுவிட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. இப்படிப்பட்ட முயற்சிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற உதவும் என்றும், தங்கள் கட்சிக்கு இழந்த செல்வாக்கை மீட்டுத் தரும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் எண்ணுவது தவறாகத் தான் போகுமே தவிர எந்த வகையிலும் அவர்களுக்குப் பலன் தரப் போவது இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் தான் அவர்களுக்கு உணர்த்தும். சமுகத்தில் பிளவை ஏற்படுத்தும் பேச்சுகளால், பரப்புரைகளால் தலைவர்களுக்கு அரசியல் பலனைத் தராமல் போனாலும் உழைக்கும் வர்க்கத்திடம் பகைமையையும், வளரும் தலைமுறைகளிடையே சாதிய எண்ணத்தையும் விதைக்கச் செய்யும் என்பதை வசதியாக அந்த கட்சி மறந்து விடுகின்றது. நாம் சாதி ரீதியாக பிளவுபடுத்தப்பட்டு இருப்பது ஆரியத்தின் சூழ்ச்சி என்பதை அம்பேத்கர் வழியில், பெரியார் வழியில் பிரசாரம் செய்து சமுக மாற்றத்திற்காக களப்பணியாற்ற இளையவர்களை தயார்ப்படுத்த வேண்டிய பணியை விட்டு, புராணங்களை முன்னிலைப்படுத்துவது வேதனையின் உச்சம்.

பா.ம.க மற்றும் வன்னியர் சங்கத்தின் பயிற்சி வகுப்புகளில் மட்டுமே திரையிடப்படும் வன்னிய புராணம் சமீப காலமாக (2011 தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு) பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்கூட்ட மேடைகளிலும் வன்னிய புராண நாடகமாக நடித்து காட்டப்படுகிறது. அந்தப் புராணம் சொல்லுவது என்ன? அசுர குலத்து (திராவிட) பெண்ணான அஜமுகி, துர்வாச முனிவரோடு கலந்து வாதவி என்ற ஆண் பிள்ளையை பெற்று எடுக்கின்றாள். அவன் மிகப் பெரிய தவம் இருந்து சிவபெருமானிடம் இருந்து ஒரு வரம் ஒன்றைப் பெறுகின்றான். அந்த வரம் அவனை யாரும் அழிக்கமுடியாது என்பதேயாகும். வரம் பெற்றவன் தேவ முனிவர்களை வாட்டி வதைத்து வந்தான். இதை பொறுத்துக் கொள்ள முடியாத முனிவர்கள், உங்களால் வரம் பெற்றவன் எங்களை இப்படி சித்திரவதை செய்கின்றான் என்று சிவபெருமானிடம் முறையிட்டார்கள். அவர்களின் நலன் கருதி சிவபெருமான் சம்புமா ரிஷி என்ற வட நாட்டில் இருந்த முனிவர் ஒருவரை யாகம் செய்யும்படி பணித்தார். அதன்படி வன்னி மரத்தின் கிளைகளைக் கொண்டு தீமூட்டி யாகத்தைத் தொடங்கினார் அந்த வட நாட்டு ரிஷி. யாகத்தின்போது சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஒரு துளி நீர் விழ அப்போது நெருப்பு உருவாகி, அந்த நெருப்பில் இருந்து ஒரு மாவீரன் தோன்றினான். அந்த மாவீரன் வீர வன்னிய மகராசன் என்றும் ருத்ர வன்னிய மகராசன் என்றும் அழைக்கப்பட்டான். பின்னர் அந்த ருத்துரன், சிவன் பெருமானின் சிறப்பு ஆசி பெற்று, அசுரன் (திராவிடன்) வாதாவியை வீழ்த்தினான். இந்த வெற்றிக்குப் பரிசாக இந்திரன் தன் மகளை ருத்ரனுக்கு மண‌ம் முடித்துத் தந்தான். இவர்கள் வழியாகத் தோன்றியவர்களே வன்னியர்கள் என்று அழைக்கப்படுவதாக அந்த வன்னிய புராணம் சொல்கிறது.

இந்தப் புராணங்களை ஊர் தோறும் எடுத்துச் செல்பவர்கள், ருத்துர வன்னியன் திருமணம் செய்தது இந்திரனின் பெண்ணைத் தான் என்றும், இந்திரன் வன்னியர் அல்ல என்பதையும் ஏனோ சொல்ல மறுக்கின்றார்கள். புராணம் என்பது கட்டுக் கதைதான் என்றாலும் அதில் மறைந்து இருக்கும் சாதி மறுப்பை (புராணத்தை எழுதியவர்களுக்குத் தெரியுமா என்பது சந்தேகமே) எடுத்துச் சொல்லாமல் வன்னியர்கள் எப்படி உருவானார்கள் என்று சாதியைப் பற்றி மட்டுமே 'புதிய அரசியல், புதிய நம்பிக்கை' என்ற பெயரில் பழைய புராணங்களையும் பிற்போக்கு சிந்தனைகளையும் மக்களிடம், பெரியார், அம்பேத்கர், காரல் மார்க்ஸ் ஆகிய தலைவர்களின் படங்களை துணைக்கு வைத்துக் கொண்டு பா.ம.கவினர் பதிவு செய்து வருகின்றார்கள்.

தமிழர்களின் நலன், சாதி ஒழிப்பு, சிறுபான்மையினர் பாதுகாப்பு என தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வதே தமிழகத்துக்குத் தேவையான புதிய அரசியலாகவும் அதுவே இளைஞர்களுக்குத் தேவையான புதிய நம்பிக்கையாகவும் இருக்கும் என்பதை மறந்து, பாதை மாறிச் செல்லும் பா.ம.க.வின் பயணம் புதிய பாதைக்குத் திரும்புமா??

- அ.அசோக்

Pin It