முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையின் உள்ளார்ந்த விதிகளை வெளிக் கொணர்வது தமது நோக்கம் என்று மார்க்சு அறிவிக்கின்றார். முதலாளித்துவப் பொருள் உற்பத்தி முறையினை ஆராய்ந்து அறிவதற்கு மார்க்சு கையாண்ட வழிமுறைகளை ஆராய்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

முதலாளித்துவ உற்பத்தியில் சரக்கு எங்கும் நிறைந்ததாகக் காணப்படுகின்றது. இன்றியமையாத தேவையாக இருக்கின்றது. சரக்கு என்பது அனைத்து தனித்தனி சரக்குகளின் ஆகப் பொதுவான தன்மையைக் குறிப்பதாகும். மார்க்சு அவரது சமகாலத்திய பொருளாதார நிபுணர்கள் மத்தியில் முக்கிய விவாதக் கருப்பொருளாக இருந்த சரக்கு என்ற தத்துவக் கூற்றை - அன்று தத்துவ உலகில் நிலைபெற்றிருந்த சரக்கு என்ற கருத்துக்கோப்பை தனது ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டார். முதலாளித்துவ சமூகத்தின் மையமாக விளங்குகின்ற சரக்கு உற்பத்தியின் அனைத்து அம்சங்களும் முழுமையாக‌ வளர்ச்சிபெற்று இருந்த நிலையில்தான் மார்க்சு அதை ஆராயப் புகுந்தார்.

பகுப்பாய்வு முறை

பகுப்பாய்வு முறை என்பது பொதுமைப் படுத்தப்பட்ட கருத்தாக்கத்தைப் பகுத்து அதில் உள்ளார்ந்திருக்கும் பல்வேறு கூறுகளை வெளிக்கொணர்ந்து, அவற்றிற்குள் இருக்கும் உறவை ஆராய்வதாகும். இது பல படிநிலைகளைக் கொண்டது. இந்த ஆராய்ச்சி வழிமுறையில் பல கட்டங்களை நாம் எதிர்கொள்கின்றோம். பல வகையினங்களை நாம் காண்கின்றோம்.

வேறொரு வகையில் சொன்னால், முழுவளர்ச்சியடைந்த, முழுமையான ஒன்றைப் பகுதி பகுதியாகப் பிரித்து, இவை ஒவ்வொன்றையும் ஒரே முழுமையின் அம்சங்களாக ஆராய்வதுதான் பகுப்பாய்வு எனப்படும். பகுதி பகுதிகளாகப் பிரித்துப் பகுப்பாய்விற்கு உட்படுத்தியப்பின்பு தொகுக்கப்படுகிறது. பகுப்பாய்வு செய்யப்பட்ட அம்சங்கள் யாவும் அங்ககரீதியாக இணைந்த ஒரே முழுமையாக ஒருங்கிணைக்கப்படுகின்றது.

தான் பயன்படுத்தியுள்ள பகுப்பாய்வு முறை பொருளாதாரப் பாடப் பிரிவுகளுக்கு இதற்கு முன்னர் யாராலும் பயன்படுத்தப்படவில்லை என மார்க்சு தனது ஆய்வுமுறையை அறிமுகப்படுத்துகிறார். மூலதனம் பெரும் அளவில் பகுப்பாய்வு முறையால் வார்த்தெடுக்கப்பட்டது.

அவர் பருண்மையான விவரங்களிலிருந்தோ அல்லது பருண்மையான பொருட்களிலிருந்தோ தனது திறனாய்வை ஆரம்பிக்கவில்லை. மாறாக கருத்துக் கோப்பிலிருந்து தனது ஆய்வை ஆரம்பித்திருக்கின்றார். அதாவது அனைத்து உற்பத்திப் பொருட்களுக்கும் பொதுமைப்படுத்தப்பட்ட அருவமாக‌ காணப்படும் சரக்கு என்பதிலிருந்து ஆரம்பித்து பகுத்தாராய்கின்றார்.

பகுப்பாய்வு முறை என்பது பொதுவானதிலிருந்து குறிப்பானவற்றை நோக்கி பயணம் செய்வது போன்றதாகும். ஒரு அருவமான‌ கோட்பாட்டிலிருந்து பருண்மையான பொருண்மைகளைத் தேடிச் செல்வதாகும் என்றும் விளக்கம் கூறமுடியும். இதற்கு எதிரான இன்னொரு வகையான ஆய்வு முறை ஒன்று உள்ளது. அது தொகுப்பாய்வு முறையாகும். இது பகுப்பாய்வு முறைக்கு எதிரான திசையில் செல்வதாகும். அதாவது குறிப்பானவற்றிலிருந்து பொதுவானதை நோக்கி பயணிப்பதாகும். இது நடைமுறையிலிருந்து கோட்பாட்டை நோக்கி செல்லும் தன்மையுடையது.

தொகுத்தாராய்தலில் பொதுவான‌ அம்ச‌ங்க‌ளே சேக‌ரிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. வேறுப‌ட்ட‌ அம்ச‌ங்க‌ள் விட‌ப்ப‌டுகின்ற‌ன‌. இத‌ற்கு எதிர்ம‌றையாக‌, ப‌குத்தாராய்த‌லில் வேறுப‌ட்ட‌ அம்ச‌ங்க‌ள் சேக‌ரிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. பொதுவான‌ அம்சங்க‌ள் விட‌ப்ப‌டுகின்ற‌ன‌. இது அந்த‌ந்த‌ முறைக்குள் இருக்கும் த‌னித்த‌ன்மைக‌ளாகும். நாம் தொகுத்தாராய்த‌லில் ஈடுப‌டும்போது வேறுப‌ட்ட‌ அம்சங்க‌ளை விட்டு விடுகின்றோம். ப‌குத்தாராய்த‌லில் ஈடுப‌டும்போது பொதுவான‌ அம்ச‌ங்க‌ளை விட்டுவிடுகின்றோம். இர‌ண்டையும் கையாளும்போது அனைத்தையும் க‌வ‌ன‌த்தில் எடுத்துக் கொள்கின்றோம் என்ப‌தை ம‌ன‌தில் நிறுத்த‌வேண்டும்.

சமூக அறிவியலை ஆராயும் முறையைப் பற்றி மார்க்சு கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டுவது இங்கு பொருத்தமாக இருக்கும். 'அறிவியல்ரீதியான புரிதலுக்கு சூட்சுமபடுத்தும் ஆய்வு ஆற்றலைப் பயன்படுத்தவேண்டும்; அதாவது சூட்சுமத்தில் இருந்து ஆராய்ச்சியைத் துவக்குவதாகும். ஆனால் இது பொதுவிஞ்ஞான ஆராய்ச்சியிலிருந்து வேறுபடுத்துவதாக கருதலாம்; பொதுவிஞ்ஞான ஆராய்ச்சியில் ஒன்றை தனிமைப் படுத்திக் கட்டுப்படுத்தப்பட்ட பரிசோதனைகளை நடத்துவதாகும்.’

மார்க்சு பகுத்தாராய்வது என்ற வழிமுறையை அதிகம் கையாண்டிருந்தாலும் தேவையான இடங்களில் தொகுத்தாராய்தலிலும் ஈடுபடுகின்றார் என்பதை மறுக்கவியலாது. ஆராய்ச்சி முறையில் இரண்டு முறைமைகளையும் இயங்கியல் ரீதியில் இணைக்கின்றார். பொதுவாகப் பார்த்தால், இரண்டு முறைமைகளும் அறிவு சம்பந்தப்பட்ட முறைகளாகும்.

தொகுத்தாராய்தல் என்பது ஆராய்ச்சி முறைமையில் ஒரு பக்கம் என்றால் பகுத்தாராய்தல் இன்னொரு பக்கம். இரண்டையும் பிரித்து நிறுத்த முடியாது. தொகுத்தாராய்தலில் உள்ள குறைகளை பகுத்தாராய்தல் நிறைவு செய்கின்றது. பகுத்தாராய்தலின் குறைகளை தொகுத்தாராய்தல் நிறைவு செய்கின்றது. இவ்வாறு இரண்டும் முரண்பட்டிருந்தாலும் ஒன்றை ஒன்று நிறைவுசெய்வதாக இருக்கின்றது. இரண்டையும் தக்கவாறு இயங்கியல் ரீதியாக இணைப்பது மிக முக்கியமாகும். ஒன்றை மட்டும் கையாள்வது எந்திரத்தனமானதாகும். நமது முக்கியப் பணியாக இருப்பது நமது முன்னோர்கள் தொகுத்தளித்தக் கருத்தாக்கங்களைப் பகுத்தாராய்வவதும் தரவுகளையும் சேகரித்துத் தொகுத்தாராய்வதும் ஆகும்.

இவ்வாறாக, பகுப்பாய்வும் தொகுப்பும் இடையறாத ஒற்றுமையில் உள்ளன, மனிதர்களின் உற்பத்தி உறவுகளை அறிவதன் இரண்டு பக்கங்களைப் போலத் திகழுகின்றன. பொருளாதார உறவுகளின் சாரத்தைப் பற்றிய ஆராய்ச்சி பகுப்பாய்விலிருந்து துவங்கி தொகுப்பாய்வதோடு முடிகிறது. பகுப்பாய்வும் தொகுப்பாய்வும் உற்பத்தி உறவுகளின் ஆராய்ச்சியில் பயன்மிகு சாதனங்களாகும். இவை பொருளாதாரப் புலப்பாடுகளைப் பகுதி பகுதியாகப் பிரித்து, இவற்றின் சாரத்தை ஆராய்ந்து கண்டுபிடிக்க உதவுவதோடு கூட உற்பத்தி உறவுகளின் எல்லா அம்சங்களுக்கும் இடையிலான உள்தொடர்பைக் கண்டுபிடிக்கவும், பொருளாதார கருத்தினங்கள், குறிப்பிட்ட உற்பத்தி முறையின் உற்பத்தி உறவுகளின் தனிப்பட்ட அம்சங்கள் மற்றும் மொத்த அமைப்பின் வளர்ச்சி விதிகள் ஆகியவற்றை அறியவும் உதவுகின்றன.

பொருளாதார வாழ்வில் எல்லாம் நெருக்கமான பரஸ்பரத் தொடர்பைக் கொண்டுள்ளன, இயக்கத்தில் இருக்கின்றன. எனவே எந்த ஒரு பொருளாதார விதி அல்லது கருத்தினத்தையும் விஞ்ஞான ரீதியாகப் பகுப்பாய்வு செய்யும் போது இவற்றை வளர்ச்சியில், மற்ற பொருளாதார விதிகள், கருத்தினங்களுடனான பரஸ்பரத் தொடர்பில் அணுக வேண்டும். விஞ்ஞான சூக்கும முறை, பகுப்பாய்வு மற்றும் தொகுப்பு முறை, இவற்றுடன் நெருக்கமாக, அங்கக ரீதியாகப் பரஸ்பரத் தொடர்பு கொண்டுள்ள மற்ற தனிப்பட்ட முறைகள் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டுமென இயக்கவியல் பொருள்முதல்வாத முறை முன்னனுமானிக்கிறது. (அரசியல் பொருளாதாரத்தின் ஆராய்ச்சி முறை, தேச‌த்தின் குர‌ல்)

தர்க்கம் என்பது ஒரு சிந்தனை முறை

தர்க்கம் என்பது சிந்தனை முறையாகும். சிந்தனைமுறையைக் கொண்டு புறநிலைமையை அறியலாம். ஒற்றையாய் தோன்றும் அதில் உள்ளார்ந்து இருக்கும் மற்றொன்றை கண்டறிவதும் அவை இரண்டின் இணைவில் மூன்றாவதொன்றை அடைந்து, அந்த ஒற்றையிலிருந்து மீண்டும் இரண்டு கூறுகள் பிரிவதும் அவற்றின் அவற்றிற்கு இடையே நிலவும் முரண்பாட்டின் விளைவாக, ஒரு புதிய அம்சம் தோன்றுவதும் தொடர்கதையாக நிகழ்ந்து கொண்டே போகின்றன. இது ஹெகலியத்தின் தர்க்கம். இதைக் கொண்டு எல்லாவற்றையும் கண்டறிய முடியும் என்றார். இதை சமூகத்துக்கு பொருத்திக் காட்டியவர் மார்க்சு. இத்தகைய முறையை தர்க்கமுறை என்று சொல்லலாமா அல்லது படிப்படியாக வளரும் முறை என்று சொல்லலாமா? இவ்வாறு சிந்தனையின் தளத்தில் செயல்படும் தர்க்கவிதிகளைக் கொண்டு புறநிலையை அறிய இயலுமா? என்ற கேள்விகள் அடுத்தடுத்து எழுகின்றன.

சரக்கிற்குள் உள்ளீடாகத் தொழில்படும் எதிரெதிர் போக்குகளாகப் பகுத்து அவற்றிற் கிடையிலான உறவுகளை மட்டும் கண்டறிய வில்லை; அத்துடன் இரண்டுக்கும் இடையிலான உறவை ஆராயும் இயக்கப் போக்கில் இன்னொரு ஒற்றை உருவாவதை நம்மால் காணவியலும். ஒற்றையாகத் தோற்றமளிக்கும் ஒன்றை இரண்டாகப் பகுத்து அவற்றிற்கு இடையில் உள்ள உறவை ஆராயும் போக்கில் மூன்றாவதான ஒன்று தோன்றுகின்றது. ஆனால் அது தோற்றத்தில் ஒற்றையாகத் தோற்றமளிக்கின்றது. மீண்டும் அது இரண்டு எதிர்வுகளாகப் பகுக்கப்படுகின்றது என்ற‌ ஹெகல் கூறும் தர்க்கமுறைகளைக் கருவிகளாகக் கொண்டுதான் மார்க்சு சரக்கை ஆராய்ந்தார். ‘ஒற்றையாகத் தோற்றமளிக்கும் ஒரு சமூக நிகழ்வை இரண்டாகப் பகுத்து அவ்விரண்டு பக்கங்களுக்கிடையிலான உறவுகளைப் பயிலுவதே இயங்கியல்’ என்று லெனின் வரையறுப்பார்.

தர்க்க வகையினங்கள் (Logical Categories)

தர்க்கவழிமுறையின் பகுத்தாராய்வு முறையினை முதன்மையாக எடுத்தாண்ட மார்க்சு, தர்க்கமுறையின் வகையினங்களை விரித்துரைக்கின்றார். சார‌ப்பொருளும் தோற்றமும், த‌‌னித்த‌ன்மையானதும் ச‌ர்வாம்சம் த‌ழுவியதும், அருவ‌மானதும் பருண்மையானதும் போன்ற தர்க்க வகையினங்களைப் பயன்படுத்தி உள்ளார்ந்த அம்சங்களை வெளிக்கொணர்கின்றார். அதேபோன்று குணமும் அளவும், உள்ள‌ட‌க்கமும் உருவமும், உள்ளார்ந்தவையும் வெளியார்ந்தவையும், கார‌ணமும் விளைவும், அவ‌சிய‌மும் த‌ற்செய‌ல் நிக‌ழ்ச்சியும், சாத்திய‌ப்பாடும் ம‌ற்றும் உண்மை நிலையும் போன்ற வகையினங்களை பயன்படுத்துகின்றார்.

பொதுவானதும், குறிப்பானதும், தனிசிறப்பானதும்

உற்பத்திமுறையின் ஒரு குறிப்பிட்ட வடிவம்தான் முதலாளித்துவம் ஆகும். இந்த முதலாளித்துவ சமூகத்தின் அடிப்படையான அலகு சரக்கு என்பதாகும். அதே சமயம் முதலாளித்துவ சமூகத்தின் அனைத்தும் தழுவிய ஒன்றாகவும் இருக்கின்றது. அதுமட்டுமின்றி சரக்குதான் முதலாளித்துவ சமூகத்தின் அனைத்து உற்பத்தி உறவுகளின் மையமாக விளங்குகின்றது. மேலும் அனைத்து முரண்களின் குவிமையமாகவும் இது திகழ்கின்றது.

முதலாளித்துவம் என்பது மனித சமூக வளர்ச்சிப்போக்கில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் குறிப்பதாகும். அதே சமயம் எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டில் இருந்த முதலாளித்துவத்தையும் அது குறிப்பிடவில்லை. ஆகவே இவர் எடுத்துக் கொண்ட முதலாளித்துவம் என்பது மனித சமூகத்தைப் பொருத்தவரை ஒரு குறிப்பான சமூகத்தைக் குறித்து நின்றாலும் அது எந்த நாட்டின் குறிப்பான முதலாளித்துவ உற்பத்திமுறையைக் குறிப்பிடவில்லை. அந்தளவில் அது பொதுப்பண்பையும் வெளிப்படுத்துகின்றது.

பொதுப்பண்புகள் அடங்கிய சரக்கிலிருந்து உழைப்பு என்ற தனிச்சிறப்புவாய்ந்த ஒரு சரக்கை வந்தடைகின்றார். பொதுவானதுக்கும் சிறப்பானதுக்கும் உள்ள உறவையும் முரணையும் ஆராய்ந்து விளக்குகின்றார். பொதுவானதுக்கும் சிறப்பானதுக்கும் உள்ள உறவை கண்டறிவதும் இவ்வழிமுறையின் தனிச்சிறப்பாகும். சரக்கும் பணமும் என்ற தலைப்பே பொதுவானதிற்கும் சிறப்பானவற்றிற்கும் உள்ள உறவைப் பற்றிப் பேசுவதாகும்.

உழைப்பு நிகழ்முறையில் சரக்கு உற்பத்திச் செய்யப்படுகின்றது; உழைப்பே சரக்காக மாற்றப்படுகின்றது. உழைப்பு என்பது தனிச்சிறப்புவாய்ந்த சரக்காகும். அதே போல பரிவர்த்தனை நிகழ்முறையில் பணம் உருவாகின்றது. பணம் ஒரு தனிவகைச் சரக்காக மாற்றம் பெறுகின்றது. பரிவர்த்தனை அதிகளவில் பெருகும்போதும் பொதுமைப் படுத்தும்போதும், பணம் என்ற தனிவகை சரக்கு உருவாகின்றது. பொதுவானதிலிருந்து சிறப்பானதற்கும் முழுமையிலிருந்து குறிப்பானதற்கும் செல்வதுதான் மார்க்சின் வழிமுறையாகும் என்பதை மூலதனம் நமக்கு உணர்த்துகின்றது.

பருண்மையானதும் அருவமானதும்

நுண்பொருள் என்பது அறிவின் துணைக் கொண்டு உய்த்துணரக் கூடியவற்றைக் குறிக்கும். சான்றாக ஒவ்வொரு சரக்கிலும் வேறுபட்ட பயனைக் கொண்டிருக்கலாம். ஆனால் அதில் அடங்கியுள்ள மதிப்பு பொதுவானதாகும். அருவமாக்கல் என்பது தன்னளவில் சுருக்குதல் அல்லது பொதுவாக்குதல் அல்லது தொகுத்தல் அல்லது எளிமையாக்கல் என்ற பணியை ஆற்றுகின்றது. இது இந்த முறையில் அமைந்திருக்கும் ஒரு யுக்தி என்று கூறலாம். அதாவது இந்த முறையானது வேறுபாடுகளை புறக்கணித்து விடுகின்றது. பருண்மையானவற்றையும் கூட‌ ஒதுக்கிவைத்து விடுகின்றது.

அருவமாக்கல் என்பது ஒரு சிந்தனை முறையாகும். இதில் பொருட்களின் பொதுவானப் பண்புகளை மட்டும் எடுத்துக் கொள்ளும். வேறுபட்ட பருண்மையான விசயங்களை இது கணக்கில் எடுத்துக் கொள்ளாது. ஒரு கருத்தையோ, பொருளைப் பற்றிய அறிவையோ, விளைவையோ பொதுமைப்படுத்தி அல்லது அவற்றின் பொது பண்புகளை பிழித்து மேல் நிலைத் தளத்தில் வைத்து விவ‌ரிப்பதை, விளக்குவதைக் குறிக்கும்.

மார்க்சு தனது ஆய்வு முறைக் குறித்து கூறுகின்றார். மார்க்சின் ஆய்வின் அருவமான முறையைப் பற்றி 'அரசியல் பொருளாதாரத்திற்கான திறனாய்வுக்கான முன்னுரை'யில் கூறுகின்றார். அதாவது அருவமானதிலிருந்து பருண்மையை நோக்கி செல்லும் முறையானது, பருண்மையானதை சிந்தனை உள்வாங்கும் ஒரு வழிமுறை மட்டுமே. ஆனால் உண்மையில் அதுவே பருண்மையான நிகழ்வ‌ல்ல என்று கூறுகின்றார்.

சாரமும் தோற்றமும்

சமூகத்தின் தோற்றத்திலிருந்தோ அல்லது மேல்தளத்திலிருந்தோ அவர் ஆரம்பிக்கவில்லை. மாறாக அதன் சமூகத்தின் சாரமாக விளங்கும் சரக்கிலிருந்து ஆரம்பிக்கின்றார். தத்துவார்த்த ஆராய்ச்சி எனும் நிகழ்ச்சிப் போக்கு இங்கே புலப்பாடுகளின் மேற்போக்கான அம்சங்களிலிருந்து இவற்றின் ஆழமான சாரத்திற்கும், ஸ்தூலமானதிலிருந்து சூக்குமமானதிற்கும் பயணிப்பதை நாம் அறிந்து கொள்ளமுடியும்.

அருவப்படுத்துவ‌தன் மூலம் உற்பத்தி உறவுகளின் முக்கிய அம்சங்களை கண்டறிந்த பிறகு சாரத்திலிருந்து புலப்பாட்டை நோக்கித் திரும்பி வரலாம். சமுதாயப் பொருளாதார வாழ்க்கையின் எந்த திட்டவட்டமான புலப்பாடுகள் அருவப்படுத்திய பின்பு ஸ்தூலமானவற்றிற்கு திரும்பி வரலாம். அதாவது ஸ்தூலமற்றதிலிருந்து ஸ்தூலமானதை நோக்கித் திரும்பி வரலாம்.

இந்த இரட்டை நிகழ்ச்சிப் போக்கின் அதாவது ஸ்தூலமானதிலிருந்து ஸ்தூலனமற்றதை நோக்கி, ஸ்தூலமற்றத்திலிருந்து ஸ்தூலமானதை நோக்கி செல்வதன் மூலம் பன்முகத் தன்மைவாய்ந்த பொருளாதார உறவுகளை முழுமையாக கண்டறிய இயலும். மேலும் உட்சாரத்திற்கும் அதிலிருந்து வெளிப்படும் பன்முக வடிவங்களுக்கும் இடையிலான உறவை ஆராய்ந்தறிய வியலும்.

வரலாற்று அணுகுமுறை

வரலாற்று வழியிலான அணுகுமுறையில் இரண்டு முறைகள் உண்டு. வரலாறு படிப்படியாக வளர்ச்சிப் பெறுகின்றது என்பது முதலாவதாகும். சமூக வாழ்வின் முரண்களின் வழியாக புதிய சமூகம் தோன்றுகின்றது; அதாவது சமூக முரண்களின் வழியாக சமூகம் அடுத்தக் கட்டத்தை நோக்கி வளர்கின்றது; மாறுகின்றது. இது முன்னோக்கிய முறையாகும். இதற்கு எதிரிடையாக வரலாற்றைப் பின்னோக்கிப் பார்ப்பது இரண்டாவது முறையாகும். அதாவது இன்றைய வாழ்நிலைமைகளின் வரலாற்றுக் காரணிகளைக் கண்டறிவதாகும். இன்றைய நிலைமைகளின் வரலாற்றுக் காரணிகளை தேடிக் கண்டடைந்து வரலாற்றின் இடைவெளிகளை பூர்த்திச் செய்யவேண்டும். இதன்மூலம் வரலாற்றை முழுமைபடுத்த வியலும். இன்றைய நிலைமைகளிலிருந்து வரலாற்றுக் காரணிகளை தேடுவதுதான் மார்க்சு கையாண்ட வழிமுறை என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். இதைத் தான் மார்க்சு மூலதனத்தில் கையாண்டார் என்பதை நினைவில் நிறுத்தவேண்டும். வரலாற்று பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் என்பதைத்தான் அவர் வரையறுத்தார்.

முந்தைய சமூகம் என்பது கடந்த காலத்தைச் சார்ந்தது. இன்றைய சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார நிலைமைகள் நிகழ்காலத்தவை; பருண்மையானவை; உயிரோட்டமானவை; புறநிலையானவை. நமது ஆராய்ச்சியை இன்றைய நிலைமைகளிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்; இன்றைய நிலைமைகளுக்கான காரணிகளை முந்தைய வரலாற்றில் தேடவேண்டும். அது மட்டுமல்லாமல் இன்றைய நிலைமைகளுக்குள்ளே ஊடுருவி இயக்கும் உறவுகளின் மூலமாக‌ உண்மையைக் கண்ட‌றிய‌‌ வேண்டும்.

முதலாவது அணுகுமுறையைக் கடைப்பிடிப்பவர்கள் வரலாற்று தொடர்புகளையும் உறவுகளையும் அதன் தோற்றுவாயிலிருந்து தேடுகின்றனர். வரலாற்றின் ஒரு கட்டத்தின் தொடர்ச்சியை அதன் பிந்தைய‌ கட்டத்தில் தேடுகின்றனர். வரலாற்றை அதன் தோற்றுவாயிலிருந்து ஒவ்வொரு கட்டத்திற்கும் உள்ள உறவுகளை வலிந்து வரலாற்றில் திணிக்கின்றனர். சமூக அரசிய பொருளாதார கலாச்சார‌ வரலாறு என்பது ஒரு கட்டத்திலிருந்து மற்றொரு கட்டத்திற்கு வளர்ச்சி பெறும்போது அவற்றில் தொடர்ச்சியுடனும் தொடர்ச்சியின்மையுடனும் சேர்ந்தே வளர்கின்றது என்பதை மறந்துவிடுகின்றனர். இன்றைய வாழ்நிலைக்கான வரலாற்றுக் காரணிகளைத் தேடி உண்மையைக் கண்டடைவதைதான் மார்க்சு கையாண்டிருக்கின்றார். சமூக வரலாறுகளும் அனைத்தும் தொடர்ச்சியான வரலாற்று தொடர்ச்சி இருப்பதில்லை. பெரும்பாலான சமூகங்கள் தங்கள் வரலாற்றை தொடர்ச்சியற்ற வகையில் பெற்றிருக்கின்றன என்பதுதான் உண்மை.

இரண்டாவது அணுகுமுறையின்படி, சமகால வாழ்வின் தேவைகளைக் கொண்டு மார்க்சு கடந்த காலத்தை அணுகினார். அவரது காலத்திய ஐரோப்பிய முதலாளியத்தை மிகத் தீவிரமாக விமரிச‌த்த நூல் மூலதனம் ஆகும். எனில் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் தோற்றம் வளர்ச்சி அவருக்கு முக்கியமாயிற்று. ஐரோப்பிய முதலாளித்துவத்தின் அமைப்பியல் கூறுகளை அவர் ஐரோப்பாவின் முந்தைய வரலாறு முழுவதும் தேடினார். மூலதனம் என்ற நவீன முதலாளித்துவ நிகழ்வை அவர் வேலைப் பகிர்வு, தனி உடைமை, பண்ட உற்பத்தி, பண்டப் பரிமாற்றம், பணம் என வரலாற்றின் உள்ளோடிச் சென்று கண்டறிந்தார். இவை ஒவ்வொன்றின் பூர்வ வடிவங்களை தனியுடைமை தோன்றிய அந்த பண்டைக் காலத்திலேயே தேடி அடைந்தார். முதலாளிய அமைப்பில் தெளிவாக வெளிப்படும் பொருளாதார நிகழ்வுகளை அவற்றின் பூர்வீக வடிவில் முந்தைய வரலாற்றில் தேடி அடையும் அணுகுமுறை இது. (தமிழ் அடையாளத்தின் இயங்கியல், ந.முத்துமோகன்)

வரலாற்று பொருள்முதல்வாதம் என்ற கருத்துருவாக்கத்தில் வர்க்கப் போராட்டம் என்பது அடிப்படையாகும். சமூக மாற்றங்கள் அனைத்தும் வர்க்கப் போராட்டத்தின்வழி நடைபறுகின்ற‌து. வர்க்கப் போராட்டம் என்பது வரலாற்றின் அனைத்துக் கட்டங்களிலும் தொடர்ச்சியாக ஊடுருவி பாய்ந்துவரும் இயக்கம். ஆனால் இதைத் தாண்டி சில‌ சமூகங்களிலும் வேறுவகையான சமூக முரண்பாடுகள் வர்க்க முரண்களுக்கு இணையாகவும் துணையாகவும் வளர்ந்திருப்பதை மார்க்சு தெளிவுப‌டுத்தி யிருக்கின்றார்.

இவ்வகைப்பட்ட சமூக முரண்களை வர்க்க முரண்பாட்டில் அடக்கிவிடும் அபாயம் வரலாற்றுவாத அணுகுமுறையில் இருக்கின்றது. அனைத்தையும் வர்க்கப் போராட்டத்திற்குள் குறுக்கிவிடுவது என்பது வரலாற்றுவாதத்தில் உள்ள முக்கியப் பிரச்சனையாக இருக்கின்றது. வர்க்கங்களும், சாதிகளும், தேசிய இனங்களும் சமூகத்தின் பகுதிகளாக அக்கம்பக்கமாக இயங்கி வருகின்றன. ஒவ்வொன்றும் தனித்தன்மைகளுடன், ஒப்பீட்டு ரீதியில் தனித்துவத்துடனும் இயங்குகின்றன. இவ்வாறு வரலாற்றின் அனைத்தும் தழுவிய முரண்களுடன் ஆராய்வதுதான் வரலாறு பற்றிய பொருள்முதல்வாத கண்ணோட்டமாகும்.

அவையாவும் ஒன்றொடொன்று செல்வாக்கு செலுத்தியும், ஒன்றோடொன்று பாதிப்பை ஏற்படுத்தியும், ஒன்றோடொன்று உறவாடியும், ஒன்றோடொன்று ஒரு கட்டத்தில் தீர்மானிக்கச் செய்தும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஒன்று இன்னொன்றில் இரண்டறக் கலந்து விடுவதோ, ஒன்று இன்னொன்றின் நிழலில் வாழ்க்கை நடத்துவதோ, ஒன்று மட்டும் மற்றதின் மீது செல்வாக்கு செலுத்தவோ, ஒன்று மட்டும் இன்னொன்றின் மீது பாதிப்பை ஏற்படுத்தவோ இயலாத வகையில் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.

தர்க்க வழிமுறையும் வரலாற்று வழிமுறையும்

அரசியல் பொருளாதாரத்தில் இரண்டு விதமான விளக்க முறைகள் - பகுப்பாய்வு மற்றும் வரலாற்று முறைகள் - உள்ளன. ஒரு வளர்ச்சியடைந்த சமூக பொருளாதார அமைப்பில் பொருளாதாரக் கருத்தினங்கள் (பண்டம், பணம், உபரி மதிப்பு, லாபம் போன்றவை) எந்த தர்க்கரீதியான தொடர்ச்சியில் நிலவி, ஒன்றிலிருந்து ஒன்றாக வருகின்றனவோ அதே தொடர்ச்சியில் இக்கருத்தினங்களை ஆராய்வதுதான் பகுப்பாய்வு முறையின் அடிப்படையாகும். வரலாற்று முறை, சமுதாய வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களில் பொருளாதாரப் புலப்பாடுகளும் கருத்தினங்களும் எத்தகைய வரலாற்று தொடர்ச்சியில் தோன்றினவோ அதே வரிசையில் இவற்றை ஆராய்கிறது.

வரலாற்று வழிமுறை என்பது புறநிலையானது; ஆனால் தர்க்க வழிமுறை என்பது அகவயப்பட்டது. மார்க்சு தனது மூலதன ஆராய்ச்சியில் இரண்டையும் இணைக்கின்றார். அதாவது புறவயப்பட்ட வரலாற்றுவழியையும் அகவயப்பட்ட தர்க்கமுறைமையையும் இணைக்கின்றார். இதுதான் அறிவியல் பூர்வமான மார்க்சிய ஆய்வுமுறையாகும். தர்க்க வழிமுறைக்குள் இரண்டு அணுகுமுறைகள் உள்ளன. அவை பகுப்பாய்வு முறை தொகுப்பாய்வு முறை ஆகும். இவற்றில் பகுப்பாய்வு முறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றார். வரலாற்று வழிமுறைக்குள் இரண்டு அணுகுமுறை உண்டு. அவை நிலவுகின்ற வாழ்நிலைமைகளின் வரலாற்று மூலங்களைக் கண்டடைவது. வளர்ச்சியின் வழி இன்றைய நிலைமைகளை அறிவது. இவற்றில் நிலவுகின்ற வாழ்நிலைமைகளுக்கான காரணிகளை தேடிக் கண்டுபிடிப்பது என்பதை அதிகம் சார்ந்திருக்கின்றார்.

தனக்கு முந்தைய பொருளியல் அறிஞர்களான ஆடம் ஸ்மித் மற்றும் டேவிட் ரிக்கார்டோ போன்றோர் வளர்த்தெடுத்த பொருளாதாரத் தத்துவங்களையும் வகையினங்களையும் மார்க்சு தர்க்கமுறைகளைப் பயன்படுத்தி தனது திறனாய்வையும் விமரிசனத்தையும் முன்வைத்தார். வரலாற்றுவழிமுறையை சில இடங்களில் மட்டும் பயன்படுத்திக் கொண்டார் என்று இலியன்கோ கூறுவார். (On the Difference Between the Logical and the Historical Methods of Inquiry, Ilyenkov)

மார்க்சின் வழிமுறைகளின் சிறப்பு, வரலாற்றுவழியையும் தர்க்கவழியையும் இணைப்பதில்தான் இருக்கின்றது. ஆனால் மார்க்சு ‘மூலதன’த்தைப் பொருத்தவரை முதலாளித்துவத்தின் இயங்குவிதிகளைக் கணடறிவதில் வரலாற்று வழிமுறைகளைவிட தர்க்க வழிமுறைகளையே அதிகம் சார்ந்திருந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க்சு முத‌லாளித்துவ‌ உற்ப‌த்தி முறையை ஆராய்வதற்கு பொருள்முதல்வாத தர்க்கவியல் கூறுகளைப் பயன்படுத்தி ஆராய்ந்தார். அதன்மூலம் ஓர் ஆராய்ச்சி வழிமுறையையும் உருவாக்கியளித்தார். அதாவது தர்க்கவியலை புலனறிதலின் தர்க்கவாதம் மற்றும் தத்துவம் என்னும் வகையில் ஆராயும் வழிமுறையையும் செய்து கொண்டிருந்தார். புலனறிவதலுக்கான விவரங்களின் மீது மார்க்சு ஆதாரப் பட்டிருந்தார். இதை ஹெகலிடமிருந்து பாரம்பரியாமாக பெற்றிருந்தார். ஹெகல் உருவாக்கி வளர்த்திருந்த தர்க்கவியலின் எல்லா விதிமுறைகளையும் கருத்தமைவு வகைகளையும் பொருள்முதல்வாத அடிப்படையில் திரும்பவும் பாடுபட்டு உருவாக்கினார். இதன் மூலம் ஆராய்ச்சி வழிமுறையின் சர்வாம்சத் தன்மையைக் கண்டுபிடித்தார். இதை விஞ்ஞான ரீதியாக மெய்ப்பித்தார். மிகவும் சிக்கல் நிறைந்த உண்மை நிலையைப் பகுத்தாய்வதற்கு தர்க்கவியல் முறை ஒன்றுதான் சரியான வழிமுறையாகும். (கார்ல் மார்க்ஸ் வரலாறு)

- அண்ணா.நாகரத்தினம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It