arakonam dalitsஅரக்கோணம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சோகனூரில் 08.04.2021 அன்று சாதிவெறியர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் தலித் இளைஞர்கள் அர்ஜுனன், சூரியா ஆகிய இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சட்டமன்றத் தேர்தலை ஒட்டிய பரப்புரையில் நடந்த தகராறுகளைக் காரணம் காட்டியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளரை ஆதரித்த காரணத்திற்காகவும் பாமக மற்றும் அதிமுகவினர் இணைந்து தலித் இளைஞர்கள் மீது நடத்திய இந்த கொடூரத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

தலித் மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்று தங்களுக்கான அதிகாரத்தை நோக்கி பயணிப்பதை சகிக்க முடியாத ஆதிக்க மனநிலை கொண்ட ஜாதி வெறியர்கள் சனாதன ஜாதி அமைப்பின் கொடூர வன்ம மனநிலையுடன் இக் கொலையை செய்துள்ளார்கள்.

இது தாக்குதல் மட்டுமல்லாமல் அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூரில் விசிக முகாம் செயலாளர் அன்பழகன், திருப்போரூர் தொகுதியில் பெருமாள்ஏரி என்னும் கிராமத்தில் கதிரவன் ஆகிய தலித் இளைஞர்களும் ஜாதி வெறியர்களின் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

கொலை செய்தவர்கள், கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இதுவரை முழுவதுமாக கைது செய்யப் படவில்லை. அரசின் மெத்தனப் போக்கு வன்மையாக கண்டிக்கத் தக்கது.

அரசு ஜாதி வெறியர்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பது மட்டுமல்லாமல், இவ்விடங்களில் ஆளும் கட்சியான அதிமுகவினரும் பாமகவினருடன் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலின் மற்றொரு முகமாக, தேர்தல் ஆதாயம் கருதி, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற, பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி, ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை தனித்து அணிதிரட்டி, அவர்கள் வாக்குகளை எல்லாம் ஒட்டுமொத்தமாகப் பெற்று விடலாம் என்கிற அதிமுகவின் செயல்பாடுகளும் ஜாதிய வெறியர்கள் ஒன்றிணைந்து கூர்மைப்பட ஒரு காரணமாக மாறிவிடுகிறது. 

அரசியல் அதிகாரம், பொருளாதார லாபம் அடையும் நோக்கமுடைய ஆதிக்க ஜாதித் தலைவர்களால், ஆதிக்க ஜாதி வெறி ஏற்றப்பட்ட விழிப்புணர்வு இல்லாத ஏழை எளிய இளைஞர்கள் ஆதிக்க ஜாதி அரசியல் பகடைக்காய்களாக்கப்பட்டு எதிர்காலத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

தற்பொழுது நடந்த இந்த ஜாதிவெறிப் படுகொலையில் ஈடுபட்ட ஜாதிவெறியர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு முறையாக வழக்கு நடத்தப்பட்டு கடும் தண்டனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவற்றை வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தமிழகமெங்கும் வாய்ப்புள்ள இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

இப் படுகொலைகளை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள், தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற அமைப்புகள் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் திராவிடர் விடுதலைக் கழகம் பங்கேற்கும்.

- கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

Pin It