குமரி மாவட்டத்தின் நிலப்பரப்பு, தொன்மையான தொல்காப்பியரின் (வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்க்கூறும் நல்லுலகு) காலந்தொட்டு, கி.பி. 1766-ஆம் ஆண்டு வரைத் தமிழர்களின் கட்டுப்பாட்டில் அதாவது பாண்டியப் பேரரசின் கீழ் இருந்து வந்தது. இத்தமிழர்களுக்கு, கி.பி. 1766-ஆம் ஆண்டு மிகப்பெரியச் சோதனை ஆர்க்காட்டு நவாப் வடிவில் வந்தது. ஆம்! ஆர்க்காட்டு நவாப் இந்நிலப்பரப்பை, பாண்டியப் பேரரசனிடமிருந்துக் கைப்பற்றி, மலையாளத்தை அரசமொழியாகக் கொண்ட திருவிதாங்கூர் அரசுக்கு, நன்கொடையாக வழங்கினான். அன்றிலிருந்து குமரித் தமிழர்களும் தமிழகத்தின் ஒரு பகுதி நிலப்பரப்பும் தாய்த்தமிழகத்திலிருந்து பிரித்து வைக்கப்பட்டது. அன்றிலிருந்து குமரித்தமிழர்களுக்கு பிரச்சினைகள் ஆரம்பமானது.

நம்பூதிரி-நாயர் கூட்டணியில் அமைந்த திருவிதாங்கூர் அரசு (இன்றைய கேரள அரசு), இத்தமிழர் நிலப்பரப்பை மலையாளமயமாக்கியது. இங்கு வாழ்ந்த தமிழர்கள் மேல் 108 விதமான வரிகளைத் திணித்தது. அவற்றில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட மார்பு வரி உலகமே இதுவரையிலும் கேள்விப்பட்டிராத கொடுமையாகும். பெண்கள் மேலாடை அணியத் தடைவிதிக்கப்பட்டனர். காணாமை, தொடாமை மற்றும் நடவாமை போன்ற சமுதாயக் கொடுமைகள் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டன. ஆலயப்பிரவேச உரிமை வழங்கப்படவில்லை. ஒரு தமிழன் மலையாளியைப்(நாயர்) பார்த்தால் 36 அடி தூரம் தள்ளி நிற்க வேண்டும். தமிழர்கள் இக்கொடுமைகளிலிருந்து மீள வழிதேடிக் கொண்டிருந்தனர். ஏனென்றால், அவர்களுடைய உறவு முறைகள், தாய்த்தமிழகத்தில் பெரும்பான்மையாக,சகல உரிமைகளுடன் வாழ்வதைப் பார்த்து, தாங்களும் அவ்வாறு வாழ வேண்டும் என்று பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் தான், அய்யா வைகுண்டர், 1809 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய வாழ்நாள் கி.பி.1809-இல் தொடங்கி 1851-இல் முடிகிறது. இவர் ஒரு சிறந்த விடுதலைப் போராளி. கி.பி.1823-இல் தோள்சீலைப் போராட்டத்துடன் தொடங்கிய குமரித் தமிழர் விடுதலைப் போராட்டத்தை 1836-இல் உயிர்ப்பித்தார். திருவிதாங்கூர் மன்னன் சுவாதித் திருநாளை அனந்த நீசன் என்றும் ஆங்கிலேயர்களை வெண்நீசன் என்றும் கடிந்து கொண்டார். இதனால் 110 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இவருடைய வரலாற்றை, நாட்டுப்புற வடிவில்(அம்மானை) அவருடைய சீடர் அரிகோபாலர், அகிலத்திரட்டில் 1841-இல் பதிவு செய்துள்ளார். அதில், குமரித்தமிழர்கள் மலையாள அரசால் அனுபவித்தக் கொடுமைகள் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாக, சில வரிகளை இங்கு குறிப்பிடுகிறேன். 

உய்கொண்ட சான்றோர் உடம்புருகும் தேட்டையெல்லாம்

நொய்கொண்ட நீசன் நோகப்பறித்தானே

உப்பால் உவரால் உபயமெடுத்தவரை

ஒப்பமுள்ள சான்றோரை ஊழியங்கள் கொண்டடிப்பான்.

முக்காலி கட்டி முதுகிலே அடித்துமிக

மிக்கான பொன்பணங்கள் வேண்டினான் மாபாவி.

ஈப்புலிபோல் நீசன் ஈயைப்போல் சான்றோர்கள்

நாய்ப்புலிபோல் நீசன் நல்லாடுபோல் சான்றோர்.”

(அகிலத்திரட்டு, ப. 113)

மேலும், குமரித் தமிழர்கள் அனுபவித்தக் கொடுமைகளை, 1860-இல் தொகுக்கப்பட்ட அருள்நூலும் பதிவுச் செய்துள்ளது.

காலதிலே மிகவும் தூசி இருக்குதென்று

காலைநான் கழுவினேன் சிவனே ஐயா

காலைக் கழுவுறாயே காலை வளைத்துஉந்தன்

தோள்மேல் போடென்றானே சிவனே ஐயா.” (அருள்நூல், ப.12)

 

"பூமக்கள் நீதமுடன் போட்டதோள் சீலைதன்னைப்

போடாதே என்றடித்தானே சிவனே ஐயா.”

என் மக்கள் சான்றோர்கள் இடுப்பில் எடுத்தகுடம்

ஏண்டி இறக்கு என்றானே சிவனே ஐயா.” (அருள்நூல், ப.17)

ஆனால், அவருடைய சமூக விடுதலைப் போராட்டமும், வரலாறும், அவர் தோற்றுவித்தத் தமிழர் மதமும் திட்டமிட்டுத் திராவிட அரசுகளால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி பாடநூல்களில் எழுதப்படாமல் மறைக்கப்பட்டுள்ளது. ஆனால், கேரளாவிலுள்ள திரு. நாராயணகுரு அவர்களின் வரலாறு அருமையாக தமிழ்நாட்டு பள்ளி மற்றும் கல்லூரிப் பாடநூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அய்யா வைகுண்டரின் வரலாறு பதிவு செய்யப்படவில்லை. எனவே, தமிழ்நாட்டு அரசு, பள்ளி மற்றும் கல்லூரி பாடநூல்களில் அய்யா வைகுண்டரின் வரலாற்றைப் பதிவு செய்து, தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தமிழர் வரலாற்றைப் பயிற்றுவிக்க வேண்டும்.

வரும் 2013-14 கல்வி ஆண்டிலேயே பள்ளி மற்றும் கல்லூரிப் பாடநூல்களில் குமரித் தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கையான இதனை நிறைவேற்ற வேண்டும்.

Pin It