விடுதலைக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலும், அதற்கு முன்பும் இந்தியாவில் மொழி, இனம், சாதி, சமயம், கலாச்சாரம் போன்றவற்றின் அடிப்படையில் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நிலவி வந்த சூழலில் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட மக்களின்  வாழ்வு மேம்பட முன்மொழியப்பட்ட தீர்வுகளில் ஒன்றே  இட ஒதுக்கீடு.  குறிப்பிட்ட விழுக்காடு இடங்களை குறிப்பிட்ட பிரிவைச்சேர்ந்த தகுதியான மக்களுக்கு ஒதுக்கீடு செய்தலே இட ஒதுக்கீடு ஆகும்.

இந்தியச் சமூகம் அடிப்படையிலேயே சாதியச்சமூகம் ஆகும். சாதியத்தை மையமாகக்கொண்டே இந்திய சமூகம் கட்டமைக்கப்பட்டுள்ளது.  சாதி  அமைப்பானது எதேச்சதிகாரம் கொண்டவர்களின் சதி. மேல் கீழ் என உருவாக்கி ஒரு சாரார் மட்டும் சுரண்டுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு ஏற்பாடு. மனரீதியாக என்றைக்கும் உடைத்து வெளியேவர இயலாவண்ணம் மிகஉச்சகட்ட சூழ்ச்சியாக உருவாக்கப்பட்ட ஒரு நயவஞ்சக வலை. சாதியச்சமூகம் என அறியப்பட்ட இந்திய சமூகத்தை இடஒதுக்கீட்டுச் சமூகம் என மாற்றம் பெறச்செய்தவர் அயோத்திதாச பண்டிதர் ஆவார்.  “கிராமஅலுவலர் உட்பட பலஅரசாங்க பணிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு செய்வதன் மூலமாக அவர்களின் பொருளாதார வாழ்வை உயர்த்துவது” என டிசம்பர் 1, 1891-ல் திராவிட மகா ஜன சங்க மாநாட்டில் பல்வேறு தீர்மானங்களுக்கு மத்தியில் ஒரு தீர்மானமாக அயோத்திதாசர் முன்மொழிந்தார்.  இதனை தொடர்ந்து 1916-ல் தமிழகத்தில் நீதிக்கட்சி துவங்கப்பட்டபோது அக்கட்சியின் செயல்திட்டங்களில் ஒன்றாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டு கொள்கை இடம்பெற்றது.  இதனை தொடர்ந்து டாக்டர் அம்பேத்கரின் கோரிக்கை, போராட்டம் வாயிலாக 1934-ம் ஆண்டில் ஆங்கிலேய அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சிறிது இடஒதுக்கீடு வழங்கியது.  தொடர்ந்து சாதியத்தின் தாக்கமும், அழுத்தமும் மிகவும் கடுமையாக தொடர்ந்திட்ட  காரணத்தால் டாக்டர் அம்பேத்கரால் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீடு அங்கீகாரம் செய்யப்பட்டது.

சுதந்திரத்திற்கு பின் 1947-ம் ஆண்டு நவம்பர் 21-ல் ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டது.  அவ்வாணை கீழ்க்கண்டவாறு ஒதுக்கீடு செய்தது.

                                                                     ஒதுக்கீடு  மக்கள் தொகையில்

                                                                  விழுக்காடு     விழுக்காடு

1. இந்து பிராமணர் அல்லாதார்                    42.86       22

2. பிற்படுத்தப்பட்ட இந்துக்கள்                     14.29       50

3. பிராமணர்கள்                                               14.29       3

4. தாழ்த்தப்பட்டவர்கள்                                 14.29       14

5. ஆங்கிலோ இந்தியர்கள்

இந்திய கிறித்தவர்கள்                                     7.14        4

6. இசுலாமியர்கள்                                            7.14        7

(G.O.No.3437, Public (Services) dated 21st November 1947 [Confidential])

முதன்முதலில் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று தனிப்பிரிவு இப்போதுதான் ஏற்படுத்தப்பட்டது.

இந்தியாவின் சுதந்திர காலகட்டத்தில் நாட்டில் பிறப்பின் அடிப்படையில் மிகுந்த ஏற்றத்தாழ்வுகள், ஏமாற்றுதல், மோசடிகள் நிலவிய காரணத்தால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இட ஒதுக்கீட்டு கொள்கையை இணைத்து அதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் பெறவைத்தார் டாக்டர் அம்பேத்கர்.   நாட்டில் சமத்துவம்நிலவிட சிறந்த ஒன்றாக அவர் இடஒதுக்கீட்டினை முன்மொழிந்தார்.  கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் ஆகிய துறைகளில் இடஒதுக்கீடு சட்டப்பூர்வ மாக்கப்பட்டது.  திட்டமிட்டு பின்தள்ளப்பட்டுவிட்ட ஒருகுறிப்பிட்ட இன மக்களை முன்னுக்கு கொண்டுவர, அவர்களை மேம்படுத்தி சமதளத்தில் வாழவைக்க மேற்படி மூன்று துறைகளிலும் வாய்ப்பளித்தல்தான் அடிப்படை என அவர்கூறினார். இவ்வாறு உறுதிசெய்யப்பட்ட சிறப்புரிமையின் காரணமாக நாட்டில் அனைத்து பொதுத்துறைகளிலும் இடஒதுக்கீடு கொள்கை அமல்படுத்தப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

பொதுத்துறையில் பணியிலும்,நியமனத்திலும் அனைவருக்கும் வாய்ப்பில் சமத்துவம் அளிக்கப்பட வேண்டும் என இந்திய அரசியலமைப்பு சட்டம் வலியுறுத்துகிறது.  பட்டியல் இனம் மற்றும் பழங்குடியினர்; மேம்பாட்டிற்காக சமூக பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினரினருக்கும், அரசு சிறப்பு நடைமுறைகளை இயற்றலாம் என இந்தியஅரசியலமைப்பு சட்டம் முதல் முறையாக திருத்தப்பட்டு இடஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்டது.

சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் கடந்த பின்னரும் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களில் இடஒதுக்கீடு முழுமையாக பூர்த்தி செய்யப்படாத அவல நிலையே நீடிக்கிறது. நாட்டின் சுதந்திரத்திற்கு பின் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இதுநாள் வரையிலும் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவு மிகுதியாக பூர்த்திசெய்யப்பட்டு வந்துள்ள ஒரே துறை துப்புரவுத்துறை மட்டுமே. குறிப்பாக மலம் அள்ளும் பணியில் மட்டுமே. இங்கே அசுத்தத்தை சுத்தம் ஆக்குபவர்கள் அசுத்தமானவர்கள் எனவும், சுத்தத்தை அசுத்தமாக்குபவர்கள் சுத்தமானவர்கள் என கருதப்படும் இழிநிலையே காணப்படுகிறது. துப்புரவுத்தொழிலை மட்டும் நாடுமுழுக்க ஒரே இன மக்களே தொடர்ந்து திட்டமிட்டு செய்யவைக்கப்பட்டு வருகின்றனர்.  அதுவும் பிறப்பின் அடிப்படையில் தொடர்ந்து நிர்ப்பந்திக்கப்பட்டு வருகிறது.  இங்கே பணியின்பொருட்டு ஒருவன் அடையாளப்படுத்தப்படாமல் பிறப்பின் தன்மையைக்கொண்டே ஒருவன் அடையாளம் காணப்பெறுகிறான் என்பதே நடைமுறை உண்மையாகும்.

நாட்டின் பொதுத்துறைகளில் இன்னமும் பட்டியல் இன மக்கள் பங்கேற்பே செய்திடாத மிகுதியான துறைகள் உள்ள நிலையில் இங்கே அனைத்தும் விரைவாய் தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது.  பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும்  போட்டிபோட்டுக்கொண்டு தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது. தனியார் துறைகளின் வளர்ச்சியின் காரணமாக இடஒதுக்கீட்டு கொள்கை இங்கே நீர்த்துப்போய்வருகிறது. இதுகாறும் இடஒதுக்கீட்டினை அமுல்படுத்தக்கோரி போராடிவந்த மக்கள் இன்று தனியார் துறையில் இட ஒதுக்கீடு எனும் குறுகிய பகுதிக்காக சோளப்பொறிக்காக போராடவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர்.  போராட்டமானது இங்கே திட்டமிட்டு திசை திருப்பப்பட்டுள்ளது.

இங்கே அனைத்திற்கும் தகுதி திறமையெனும் செல்லரித்துப்போன வாதம் முன்வைக்கப்படுகிறது. “வல்லான் வகுத்ததே வாய்க்கால்” இதுதான் நடைமுறை. அப்படியிருக்க தகுதி திறமை என்பதற்கான அளவுகோல் எது?  அதை மதிப்பிடுவது யார்?  இடஒதுக்கீட்டின் காரணமாக கல்வி தரம் நிர்வாக திறன் குறைந்து வருவதாக விசமப்பிரச்சாரம் இங்கே முன்னெடுக்கப்படுகிறது. 'திறமை அடிப்படையில் மட்டுமே ஊழியர்களை தேர்ந்தெடுப்போம்.  எந்தவொரு இடஒதுக்கீட்டிற்கும் இங்கே இடமில்லை" எனக்குறிப்பிட்டு தனியார்த்துறையில் இடஒதுக்கீட்டினை ஏற்கமறுக்கிறார் விப்ரோ டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவர் அசின்பிரேம்ஜி. தனியார் நிறுவனங்களின் ஒட்டுமொத்த பிரதிபளிப்பே இக்கூற்று.

தகுதி,திறமை,தொழில் போன்றவைகள் சாதியோடு இணைத்தே பார்க்கப்படுகிறது. இதன் காரணமாய் தொடர்ந்து ஒரு சாரார் மட்டும் ஒதுக்கப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற உண்மைக்கு புறம்பான வாதங்கள் மூலமாக குறிப்பிட்ட இனமக்களிடையே தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இடஒதுக்கீட்டை வெளிநாட்டு நிறுவனங்கள் எப்படி ஒப்புக்கொள்ளும்? அதனை அவர்களிடம் நாம் எப்படி வலியுறுத்திட முடியும்? அப்படிச்செய்தால் நமது அன்னியச்செலவானி குறைந்துவிடாதா? என்பது போன்ற அர்ப்ப வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. எப்போது வெளிநாட்டு நிறுவனம் ஒருநாட்டிற்குள் நுழைகிறதோ அப்போதே அன்நாட்டின் அனைத்து சட்ட திட்ட விதிகளுக்கு உட்பட்டு அந்நாட்டு மக்களின் வாழ்வினை மையப்படுத்தி அவர்களின்பால் அக்கறைகொண்டே அது அமைந்திட வேண்டும்.  அதை விடுத்து இந்நாட்டிற்கு எதிராக அது காணப்படுதல் கூடாது என்பதே அடிப்படை நியதியாகும்.  ஒதுக்கீடானது தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறதே தவிர அனைவருக்கும் அல்ல எனும் பேருண்மை இங்கே மறைக்கப்பட்டு அதற்கு புறம்பாக ஒதுக்கீடு என்பது திறமையற்றவர்களையும் சேர்த்துக்கொள்ளுதல் என்னும் தவறான கருத்து இங்கே விதைக்கப்பட்டு வருகிறது.  பன்னாட்டு வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு 2மூ கூடஇல்லை. இதுநாள் வரையிலும் தகுதியும் திறமையும் கொண்டவர்களால் இவ்வளவுதான் சாதிக்கமுடிந்ததா?

ஒரு நாட்டிற்கு சொந்தமான நிலம், நீர், மின்சாரம், சாலைகள் மற்றும் இதர வளங்கள் உட்பட ஏதேனும் ஒன்றினை உதவியாக  பெற்றே ஒரு தனியார் நிறுவனமானது உள்நாட்டிலே உருவாக்கம் செய்யப்படுகிறது. மேற்படிவளங்கள் அனைத்தும் குடிமக்களுக்கு சொந்தமானது.  எனவே அவைகளை ஒருதனியார் நிறுவனம் பயன்படுத்திக்கொள்ளும்போது அதன் நோக்கம் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மையப்படுத்தியே அமைகிறது. இந்த பொதுநோக்கம் நிறைவுபெற நாட்டின் தகுதியுடைய மக்கள் அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்திட வேண்டியது அப்படை கடமையாகிறது.  குடிமக்களின் சேமிப்பில் உருவான பணத்தை வங்கிகளில் கடனாகப்பெற்று அதனை முதலீடாக கொண்டு உருவாக்கப்படும் தனியார் நிறுவனங்கள் நாட்டின் அனைத்து தரப்பினர்களையும் மேம்படுத்தும் வகையில் செயல்பட வேண்டுமேயன்றி திட்டமிட்டு ஒருசாரருக்காக மட்டும் செயல்படுத்துதல் கூடாது.  தனியாருக்கு, தனியார் நிறுவனத்திற்கு நாட்டிற்கு சொந்தமானவைகளை கொடுப்பது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கேயொழிய தனிநபர்களின் மேம்பாட்டிற்காக அல்ல.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது சாமான்ய மனிதர்களின் வளர்ச்சியையும் உள்ளடக்கியது ஆகுமேயன்றி தனிகுழுக்களின் வளர்ச்சியை மட்டும் உள்ளடக்கியது அல்ல.  அரசின் நிதிமானியங்களை பெற்றுஉருவாக்கப்படும் தனியார் நிறுவனங்களுக்கு மிகுந்த சமூகப்பொறுப்பு உள்ளது. நாட்டின் சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டு உருவாக்கப்படும் தனியார் நிறுவனங்கள் இடஒதுக்கீட்டு கொள்கையை அமலாக்கம் செய்ய வேண்டியது சட்ட கடமையே ஆகும். இங்கே சாதி, சட்டரீதியாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.  உள்நாட்டு உற்பத்தியில் தாழ்த்தப்பட்டவர்களின் பங்கு ஒருவிழுக்காட்டிற்கும் குறைவாகவே உள்ளது. சுதந்திரத்திற்கு முன் சமூகநீதிக்காக குரல் கொடுத்தவர்கள்தான் இன்று அதிகாரத்திற்கு வந்தபின்னர் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநீதியை மறுப்பவர்களாக இருக்கிறார்கள்.  சாதிய  சமூகத்தில் கண்டிப்பாக சமத்துவம் இருக்காது.  சமூகம் சார்ந்த ஏற்றத்தாழ்வுகள் கலையப்பட வேண்டியது காலத்தின் அவசியம்.

கல்வித்துறையில் மேல்நிலைப்படிப்பிலேயே இடஒதுக்கீடானது அமுல்படுத்தப்பட வேண்டுமென 15 ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டில் ஆணை பிறப்பிக்கப்பட்டு விட்ட நிலையிலும்கூட, இன்றளவும் அந்த ஆணை முழுமையாக பூர்த்தி ஆக்கப்படவில்லை.  மேல்நிலைப்படிப்பிலேயே சரியாக முழுமையாக ஒதுக்கீடு பின்பற்றப்படுமாயின் தகுதியும், திறமையும் அனைத்து பிரிவினர்களிடத்தும் வெளிப்படும். சரியான போதுமான வாய்ப்புகளும் முறையான பயிற்சிகளும் அளிக்கப்படுமாயின் திறமை தானாக வெளிப்படும்.

 இ;டஒதுக்கீட்டுக் கோரிக்கையானது வெற்றுக்கூச்சல் அல்ல. விளிம்பு நிலையிலிருந்து வெளிவரும் குரலாகும். இது மேம்போக்கான கோரிக்கை அல்ல. யாசித்துப்பெற பிச்சையும் அல்ல. இது பிறப்புரிமை.  நாட்டின் மொத்தமக்கள் தொகையில் 25மூ மக்களை பிறப்பின் அடிப்படையில் கூறுபோட்டு இழிந்தவர்கள், தீண்டத்தகாதவர்களென ஒதுக்கி ஊருக்கு ஒதுக்குப்புறத்திலேயே முடக்கிவைத்துள்ள நாடு இது. சகமனிதனை மனிதனாக பார்க்க மறுக்கும் சமூகம் இது. இப்படிப்பட்ட இழிநிலைகளைக்கொண்ட குரூர சமூகம் உள்ளவரையிலும் இடஒதுக்கீடானது இங்கே சலுகையாகவும், இழிவாகவும் பார்க்கப்படும் மனநிலையே நீடிக்கிறது.  ஆதலால் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்களுடன் சமூகம் நீதி கருத்தியலைக்கொண்ட இதர சமூக அறிஞர்களையும் இணைத்துக்கொண்டு போராடி அரசை நிர்ப்பந்தித்து ஆட்சியாளர்களின் மன நிலைக்கு இடஒதுக்கீட்டின் பின் உள்ள அடிப்படை தர்க்கத்தை உணர்த்திட வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும்.

 வறுமையை மட்டும் அடிப்படையாகக்கொண்டு உருவானதல்ல இட ஒதுக்கீடு. தீண்டாமை, வன்கொடுமைகள், சாதிய ஏற்றத்தாழ்வுகள், தொடர்ந்து சுரண்டப்படுதல் சமூக கொடுமைகள் சமூக இழிநிலைகள், உடைமை, கல்வி, அங்கீகாரம் போன்றவைகள் மறுப்பு, ஆகியவற்றின் காரணமாக வடிவமைக்கப்பட்டதே இடஒதுக்கீடு. இங்கே இன்னமும் இடஒதுக்கீட்டு கொள்கை கொண்டுவரப்பட்டதின் அடிப்படை காரணிகளில் எவ்வித மாறுதல்களும் நிகழவில்லை.  எனவே இடஒதுக்கீடானது; அனைத்து தரப்பிலும் நீட்டிப்பு செய்யப்பட வேண்டியது இன்றியமையா தேவையாகும்.

 இருப்பினும் இடஒதுக்கீடு மட்டுமே அனைத்து தேவைகளுக்கும் முழுமையான தீர்வு அல்ல. ஒடுக்கப்பட்ட மக்கள் மேம்பாடு அடைய அது ஒருவழிமுறை, யுத்தி அவ்வளவே. நாட்டின் வளங்கள் அனைத்தும் சாமானிய மனிதன் உட்பட அனைவருக்கும் பொதுவாக்கப்பட்டு சமப்பங்கீடு அளிக்கப்பட வேணடியதே நிலையான இறுதியான தீர்வாகும்.

Pin It