இந்தியாவில் ஒரே மய்ய ஆட்சி என்பது 1801க்குப் பின்னர் வெள்ளையராலேயே நிலைக்க வைக்கப்பட்டது. ஆயினும் சாதிய வாழ்க்கை முறைக்கு ஆட்பட்ட எல்லோர் பேரிலும் - பார்ப்பான் முதல் தீண்டப்படாதவர் வரையில் - ஒருவரைவிட ஒருவர் உயர்ந்த சாதி - ஒருவரைவிட மற்றொருவர் தாழ்ந்த சாதி என்கிற நம்பிக்கையும் வழக்கமும் பழக்கமும் - குறைந்தது, கி.பி. 8ஆம் நூற்றாண்டு முதலே ‘இந்து மதம்’ என்பதன்  பேரால் - அரசர்களால் சமூகத்தின் பேரில் திணிக்கப்பட்டுவிட்டன.

இதனால், இந்தியரில் வெகு பேராக உள்ளவர்களுக்கு முதலில் சமுதாயத்தில் சம உரிமை மறுக்கப்பட்டது; அடுத்து கல்வி பெறும் உரிமை மறுக்கப்பட்டது; அடுத்து உiழைப்பே உருவான இவர்கள் சொத்து வைத்துக்கொள்ளும் உரிமை மறுக்கப்பட்டது. அத்துடன் ஆட்சி அதிகாரத்தில் பங்குபெறும் உரிமையும் மறுக்கப்பட்டது. இத்தனை உரிமை மறுப்புகளையும் “இது நம் கலாசாரம்” - “நமக்கு ஏற்பட்ட வாழ்க்கை முறை” என்றே நம்பி வெகு மக்கள் ஏற்றுக்கொண்டனர். நாம் அறிந்த வரலாற்றுக் காலத்தில், இதை உடைத்திட முதலில் குரல் எழுப்பியவர் மகாத்மா சோதிராவ் புலேயே ஆவார். இவருடைய வழியில் நின்றே பண்டித அயோத்திதாசர், தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் முதலானோர் 1890 முதல் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டனர்.

பிரிட்டிஷ் இந்தியாவில் இவ்வகையில், “பார்ப்பனர் அல்லாதார்,” “தீண்டப்படாதார்” என்கிற பெரும் பிரிவினருக்கு அரசியல் பதவிகளிலும், உயர் கல்வியிலும் பங்கு பெற்றுத்தரும் பணிகளை ஆற்றும் இயக்கங்கள் சென்னை மாகாணம், பம்பாய் மாகாணம், அய்க்கிய மாகாணம், பீரார் மாகாணங்களில் 1890க்கும் 1916க்கும் இடையில் உருவாயின.  அப்படி 1916இல் உருவான அமைப்புகளுள் ஒன்று தான், தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் இதுவே நீதிக்கட்சி.

நீதிக் கட்சியின் முதலாவது சாதனை சென்னை மாகாணச் சட்டப் பேரவை என்பதில் “பார்ப்பனர் அல்லாதார்” என்பவர்களுக்கு 1919இல், தனித்தொகுதி” ஒதுக்கீடு செய்து பெற்றதாகும். இத்தொகுதிகள், “முகமதியர் அல்லாதார் தொகுதிகள்” என அழைக்கப்பட்டன. ஏனெனில், இதற்கு முன்னரே, 1909 இலேயே, இந்தியா முழுவதிலும் இஸ்லாமியர்கள் “தனித் தொகுதி” பெற்றிருந்தனர். அப்படிப்பட்ட “தனித்தொகுதியைத் தீண்டப்படாத மக்களுக்கு” 1932இல் பெற்றளித்தவர் டாக்டர் அம்பேத்கர்.

இதற்கு இடையில், 1928 முதல், சென்னை மாகாணத்தில், மாகாண அரசு வேலைகளில் 100 இடங்களையும் பார்ப்பனர். பார்ப்பனர் அல்லாத இந்துக்கள், தீண்டப்படாதார், இஸ்லாமியர், கிறித்துவர் ஆகிய 5 வகுப்பினருக்கும் குறிப்பிட்ட விகிதாசாரத்தில் பிரித்து அளிக்கும் நடைமுறையை, சுயேச்சை அமைச்சரவையானது, நீதிக் கட்சியின் ஆதரவோடும் சுய மரியாதை இயக்கத்தின் ஆதரவோடும் நடைமுறைப்படுத்தியது. அப்படிப்பட்ட ஒரு ஏற்பாடு வேறு எந்த வட மாகாணத்திலும் ஒருபோதும் நடப்புக்கு வரவில்லை.

அத்துடன், 1935இல் இஸ்லாமியர், சீக்கியர், பார்சி முதலான சிறுபான்மை மதத்தினருக்கு மத்திய அரசுத் துறைப் பணிகளில் அவரவர் விகிதாசாரத்துக்குச் சமமான இடஒதுக்கீடு வெள்ளையரால் தரப்பட்டது. அதே போன்ற தன்மையில், சென்னை மாகாண எல்லைக்குள் இயங்கும் எல்லா மத்திய அரசுத்துறை வேலைகளிலும் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாத இந்துக்கள், தீண்டப்படாதார் ஆகிய மூன்று வகுப்பினருக்கும் - அப்போதைய சென்னை மாகாண முதலாவது அமைச்சர் பொப்பிலி அரசர், ஈ.வெ. இராமசாமி, சர்.ஏ. இராமசாமி ஆகியோரால் தனித்தனி இடஒதுக்கீடு பெற்றுத்தரப்பட்டது. வேறு எந்த மாகாணத்திலும் அப்படிப்பட்ட ஏற்பாட்டை அன்றைய அரசு செய்யவில்லை. அதற்கான  முனைப்பு அங்கெல்லாம் இல்லை.

அந்த இடஒதுக்கீடு, வெள்ளையன் வெளியேறியவுடன் அடுத்த மாதத்திலேயே அரவமில்லாமல், நேரு அரசால், அகற்றப்பட்டுவிட்டது. இந்தியாவில் இரண்டாவது உலகப்போரின்போது 1942இல் அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் அமைச்சராகும் வாய்ப்பைப் பெற்ற டாக்டர் அம்பேத்கர் - இந்தியா முழுவதிலும் உள்ள மத்திய அரசுத்துறை வேலைகளில் மட்டும், தீண்டப்படாதாருக்கு, 1943 ஆகஸ்டில் 8.33% இட ஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்தார். மகாத்மா புலேவும், அயோத்திதாசரும், ஈ.வெ.ராவும் “பிற்படுத்தப்பட்ட வகுப்பு இந்துக்களுக்கு” என்று தனி இட ஒதுக்கீடு கோரி வந்தாலும் - 1947 நவம்பரில் தான், முதன் முதலாக, சென்னை மாகாண அரசில், காங்கிரசு முதலமைச்சர் ஓ.பி. இராமசாமி ரெட்டியாரால், 14% தனி இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. தென்னாட்டுப் பார்ப்பனர் எல்லோரும் அந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்தனர். அது பற்றிக் காந்தியாரிடம் காவடி தூக்கிச் சென்றனர்.

அதுபற்றிய உண்மையான நோக்கத்தை ஓமந்தூரார் காந்தியாருக்கு விளக்கினார். அப்போது தான், முதன் முதலாக, தென்னாட்டுப்பார்ப்பனரின் சாதி ஆணவம் பற்றிக் காந்தியார் உணர முடிந்தது. காந்தியாரே பார்ப்பனரைக் கடிந்து கொண்டார். டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், 1947 ஆகஸ்டில் இந்திய அரசமைப்புச் சட்டட வரைவுக்குழுவின் தலைவராகப் பொறுப்பு ஏற்றார். 1948 பிப்பிரவரியில் அவருடைய முதலாவது சட்ட வரைவு) உருவாக்கப்பட்டது.

அதற்கு முன்னரே, 1947 அக்டோபரிலேயே, சர்.பி.என். ராவ் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதலாவது வரைவை முழுமையாக உருவாக்கியிருந்தார். டாக்டர் அம்பேத்கர் அச்சட்டத்தை ஆய்வு செய்தார். பி.என்.ராவ் எழுதிய சட்டத்தில், அரசு வேலையில் இட ஒதுக்கீடு தருவது பற்றி என்ன கூறி இருந்தது? விதி 12(3) : “அரசுப் பணிகளில் எந்தக் குறிப்பிட்ட வகுப்புக் குடிமக்களுக்கு வேண்டுமானாலும் அரசு இட ஒதுக்கீடு செய்யலாம்” என்றே அதில் இருந்தது. அது, பார்ப்பனரின் உள்நோக்கம் என்ன என்பதை வெளிப்படுத்தியது.

அந்தச் சொற்கோவையை மாற்றி, “எந்தப் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்குடிமக்களுக்கு வேண்டுமானலும்” என்னும் சொல்லை இட்டு, அதை அப்படியே அரசமைப்பு விதி 16(4) இல் இணைத்த பெருஞ் சாதனையைச் செய்தவர் டாக்டர் அம்பேத்கர்தான். விதி 16(4) என்ன கூறுகிறது? “எந்தப் பிற்படுத்தப்பட்ட வகுப்புக் குடிமக்களுக்கு அரசு வேலைகளிலும் பதவிகளிலும் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று அரசு கருதினாலும் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்தச் சிறப்பு ஏற்பாட்டை அரசு செய்வதையும் இந்த விதியில் உள்ள எதுவும் தடுக்காது” என்றே கூறுகிறது. “எந்தப் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்குடிமக்கள்” என்கிற சொற்கோவை எந்தெந்த வகுப்புகளைக் குறிக்கிறது என்பதை, விதி 338(3) என்பதில், 1950 இலேயே பின்வருமாறு அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார்.

1.     பட்டியலிடப்பட்ட சாதியினர் -

2.     பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் 

3.     மற்றும் இவ்வகுப்பினரை யொத்த இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்

இது, இப்போது விதி 338(10) என உள்ளது. இந்த விதி 16(4) இன்படி, இந்தியா முழுவதிலும் உள்ள மேலே கண்ட மூன்று வகுப்பினருக்கும் மத்திய அரசுப் பணிகளிலும் மாநில அரசுகளின் பணிகளிலும் போதிய பிரதிநிதித்துவம் தரப்படுவதற்கு எந்தச் சிறப்பு ஏற்பாட்டையும் அரசு செய்யலாம். அது அவ்வாறு செய்யப்பட்டதா? இல்லை.

1.     நிர்வாக ஆணை மூலம் பட்டியல் சாதியினருக்கு மய்ய அரசுப் பணிகளில் மட்டும் 1943இல் 8.33% ஒதுக்கீடு வழங்கப்பட்டது; 1947இல் அது 12.5% ஆக அம்பேத்கரால் உயர்த்திப் பெறப்பட்டது. மாகாண அரசில், சென்னை, தவிர்த்த மற்ற மாகாணங்களில் 1950 முதல்தான் இவர்களுக்கு 12.50% தரப்பட்டது. இது 1970இல் 15% ஆக உயர்த்தப்பட்டது.

2. பட்டியல் பழங்குடியினருக்கு முதன் முதலாக 1950இல் 5% மட்டும் தரப்பட்டது. 1970இல் இது 7.5% ஆக உயர்த்தப்பட்டது.

3.     இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு - சென்னை மாகாணம், பம்பாய் மாகாணம் தவிர்த்த வேறு மாகாணங்களில் 1978 வரையில் மாகாண அரசுப் பணிகளிலேயே கூட இட ஒதுக்கீடு தரப்படவில்லை. அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள, 1944இலேயே ஈ.வெ.ரா. அவர்களை அங்கெல்லாம் அழைத்து, ஆவன செய்ய உ.பி. மக்கள் முயன்றனர்.

ஆயினும் 1978 வரையில் - வே. ஆனைமுத்துவும் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களும் முயற்சிக்கிற வரையில் அது கை கூடவில்லை, நிற்க!

மத்திய அரசுப் பணிகளில், “இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு” இட ஒதுக்கீடு தரப்பட்டிருக்க வேண்டும், அப்படித் தருவதற்குப் பிற்படுத்தப்பட்டவர்களின் சாதிகள் விவரம் அடங்கிய பட்டியல்வேண்டும். பட்டியலிடப்பட்ட சாதியினருக்கு, 1935 முதல் -அப்படி ஒரு பட்டியல் உண்டு. அதை அம்பேத்கரே செய்திருந்தார். அதனால்தான் பட்டியல் வகுப்பார் எனப்பட்ட எல்லா உள் சாதியினருக்கும் 1950 முதலே இட ஒதுக்கீடு  தர முடிந்தது.

அதேபோல், பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியல் ஒன்றை இந்திய அரசு உருவாக்க வேண்டும் என்று கருதி, டாக்டர் அம்பேத்கர் அதற்கும் வகை செய்தார். அதாவது, அரசமைப்புச் சட்டத்தில் 340(1), (2), (3) என்னும் விதியை 1950 இலயே அவர் உருவாக்கித் தந்தார். இது பிற்படுத்தப்பட்டோர் பற்றியது. ஆயினும், 1953இல் தான், பிரதமர் நேரு அதற்கான முயற்சியை மேற்கொண்டார். பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியலை உருவாக்கவேண்டி, காகா கலேல்கர் தலைமையில் முதலாவது பிற்படுத்தப்பட்டோர் குழுவை 1953இல் நேரு அமைத்தார். அக்குழு, இந்தியா முழுவதிலும் பயணித்து, ஆய்வு செய்து, பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியலை உருவாக்கியது; அவர்களுக்கு மத்திய அரசுக் கல்வியிலும், மாகாண அரசுக்கல்வியிலும், மத்திய அரசு வேலையிலும், மாகாண அரசு வேலைகளிலும் எத்தனை எத்தனை விழுக்காடு இட ஒதுக்கீடு தரப்படவேண்டும் எனவும்; மற்ற துறைகளிலும் எப்படியெப்படி உதவி செய்யப்படவேண்டும் என்றும் விவரமான அறிக்கையை 1955இல் அளித்தது.

இந்தியப் பிரதமர் நேரு அந்த அறிக்கையை என்ன செய்திருக்க வேண்டும்? அந்த அறிக்கையில் தரப்பட்டிருந்த சாதிப்பட்டியலையும், பரிந்துரைகளையும் ஆய்வு செய்து - அவற்றுள் எதை எதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்கிற செயல்திட்ட அறிக்கையுடன் 1956இல் இந்திய நாடாளுமன்றத்தில் வெளியிட்டிருக்க வேண்டும்; அத்திட்டத்தை மத்திய அரசிலும், மாகாண அரசுகளிலும் 1956இலேயே அமல்படுத்தியிருக்க வேண்டும்.

அதற்கு மாறாக, நேரு என்ன செய்தார்? 1961 மே மாதம் இந்திய அமைச்சரவையைக் கூட்டி, “இந்திய தேச அளவிலான பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் என்பதாக ஒன்றை ஏற்பதில்லை” என்று நேரு முடிவு செய்தார். (உள் துறை - 1962 ய : 38). அத்துடன், “சாதி அடிப்படை என்பதை ஒதுக்கிவிட்டுப் பொருளாதார அடிப்படையைக் கொள்ள வேண்டும்” என்று மாகாண அரசுகளுக்கு நேரு அறிவித்தார். இந்தியா முழுவதிலும் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்குப் பண்டித நேரு செய்த முதலாவது தீமை துரோகம் இதுவாகும்.

அடுத்து நேரு அரசு என்ன செய்தது? எல்லா மாகாண அரசுகளுக்கும் இந்திய அமைச்சரவையின் மேலே கண்ட முடிவை 1961 ஆகஸ்டில், இந்திய அரசின் உள்துறை வழியாக அறிவிக்கை செய்தது. அதில், “பிற்படுத்தப்பட்டோர் குழு உருவாக்கித் தந்துள்ள நீளமான சாதிப்பட்டியல், அந்த வகுப்பினரின் முன்னேற்றத்திற்கே எதிரானதாக அமையும். நாட்டின் மிகப் பெரிய எண்ணிக்கை  கொண்டவர்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என வகைப்படுத்திவிட்டால், அப்படி அவர்களைத் தனிப் பட்டியலில் வைப்பதால் எந்த நன்மையும் ஏற்படாது. மேலும், சாதியை அடிப்படையாகக் கொள்ளுவது ஆட்சேபனைக்கு உரியது. சாதி அடிப்படையில் தீர்வுகளைக் காண்பது சாதியால் விளைந்த தீமையை விடவும் கேடானதாகும்.........”

“அரசமைப்புச் சட்டவிதி 340 இன்படி இப்படிப்பட்ட ஒரு பட்டியலை உருவாக்க வேண்டும் என்று இந்திய அரசின் உள்துறை 1956இல் முடிவு செய்திருந்த போதிலும், அச்சட்டப்படியே அப்படி ஒரு பட்டியலை உருவாக்க வேண்டியதில்லை என்று இப்போது அரசு குறிப்பிட விரும்புகிறது.” (இந்திய அரசுக் கல்வித்துறை முடிவு). இவ்வாறு இந்திய அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள ஓர் உரிமையை அடியோடு பறித்துக் கொண்டதும் அன்னியில், மூன்றாவது அய்ந்தாண்டுத் திட்டம் முதற்கொண்டு பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டம் எதையும் திட்டப் பணிகளில் சேர்ப்பதில்லை என்றும் நேரு அரசு முடிவு செய்து.

எந்த நேரு - அரசமைப்புச் சட்டத்தில், தந்தை பெரியார் கோரியபடி, விதி 15(4) சேர்க்கப்பட 2-6-1951இல் எல்லாம் செய்தாரோ - எந்த நேரு “பொருளாதார அடிப்படையை ஏற்க முடியாது” என்று 29-5-1951இல் மக்களவையில் மறுத்தாரோ - அதே நேரு, 1955-56க்குள் “சாதி அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோரை வகைப்படுத்த முடியாது” என்றும்; “பிற்படுத்தப்பட்டோர் குழு அளித்த சாதிப்பட்டியலை ஏற்க முடியாது” என்றும் அதிகாரபூர்வமாக 1961இல் முடிவெடுத்தார். அதையே நடைமுறைப்படுத்தினார். அதனால், 1956 முதல் பிற்படுத்தப்பட்டோர் அடைந்திருக்க வேண்டிய இட ஒதுக்கீட்டு உரிமை, 1994 வரை தாமதப்படுத்தப்பட்டு நாசப்படுத்தப்பட்டது.

இந்தியா முழுவதிலும் உள்ள 60% பிற்படுத்தப்பட்டோருக்கு, 1973க்குப் பிறகு - தந்தை பெரியார் மறைவுக்குக்குப் பிறகு நாதி இருக்கிறது என்று கருதிய நானும் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் மற்றும் ஒடுக்கப்பட்டோர் பேரவையின் தோழர்களும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் ஆதரவைத் திரட்டி, ஆகப் பெரிய பார்ப்பனர் பண்டித நேருவின் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான தீமையைக் கொள்கை அளவில் களைந்து விட்டோம்.

ஆயினும், பிற்படுத்தப்பட்டோருக்கு, இது அரைக்கிணறு தாண்டியவனின் நிலையே ஆகும். இது அவலமானது; அவமானமானது. இந்த அவலத்தைக் களைவோம்! அவமானத்தைத் துடைப்போம்! வாருங்கள்! போராடுங்கள்!

- வே. ஆனைமுத்து

Pin It