தெய்வத் திருத்தலங்களில் இறைப்பணி புரிவதற்காகவும், ஆடல் பாடல்கள் வழி இறைவனை மகிழ்விப்பதற்காகவும் இளம் பெண் களை இறைவனுக்கே அர்ப்பணித்த, இறைவனுக்கே மண முடித்து இறைச்சேவை செய்ய வைத்த முறையே தேவதாசி முறை எனப்படுகிறது.

இது ஏதோ இந்து சமூகத்தில் இந்துக் கோயில்களில் மட்டுமே பின்பற்றப்பட்டு வந்த மரபாக இருக்கவில்லை. மாறாக எல்லா மதங்களிலுமே இவ்வழக்கம் நிலவி வந்ததாக அறியப்படுகிறது. கிறித்துவ மதத்தில் கன்னிமேரியாகச் சித்தரிக்கப்படும் மேரி மாதா, தேவதாசி மரபில் வந்தவரே என்றும் ஒரு கருத்து நிலை நாட்டப் படுகிறது.

இப்படி உலகு தழுவி நிலவி வந்துள்ள இத்தேவதாசி மரபில் இந்து சமூகத்தில் இதற்காகத் தெரிந்தெடுக்கப்படும் பெண்களுக்கு இளம் வயது முதலே ஆடல் பாடல்களில் நன்கு பயிற்சியளிக்கப்படும். சில பகுதிகளில் கூடவே பாலுறவு சார்ந்த காமக் கலைகளிலும், பயிற்சியளிக்கப் பட்டு, இப்படிப் பயிற்சியளிக்கப்படும் தேர்ச்சி பெற்ற பெண்களை முறைப்படியான சடங்குகளை நிறைவேற்றி அப் பெண்ணை இறைவனுக்கு அதாவது, இறைவன் குடிகொண் டுள்ளதாகக் கருதப்படும் கோயிலுக்கு அர்ப்பணிப்பர். இவர்கள் தன் வாழ்நாள் முழுக்கவும் அக்கோயில் சார்ந்தும் அதன் இறைப்பணி சார்ந்தும் சேவைகள் செய்து தங்கள் நாள்களைக் கழிக்க வேண் டியதுதான்.

இந்த வழக்கம் பேரரசுகளின் நிலவுடைமைக் காலத்தில், பெருந்தெய்வ, பெருங்கோயில் வழிபாட்டுடன் தொடர்புடையதாகக் கோலோச்சியிருந்தது என்ற போதிலும், புராண இதிகாச காலம் தொட்டே இம்முறை வழக்கில் இருந்து வருவதாகவும், இந்திர அவையில் இந்திரனை மகிழ்விக்க இரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை போன்ற ஆடல் மகளிர் இருந்தது போலவே அந்த மரபையொட்டியே, இறைவன் குடி கொண்டுள்ளதாகக் கொள்ளப் படும் கோயில்களிலும் அவ்விறைவனை மகிழ்விக்கும் நோக்கில் இப்பழக்கம் தொடர்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்திய இந்து சமூகத்தில் வட இந்தியப் பேரரசுகள் காலத் திலிருந்தே இதற்கு நிறைய சான்றுகள் தரப்படுகின்றன. காளிதாசனின் மேகதூதம் காப்பியத்தில் உஜ்ஜயினி கோயிலில் ஆடல் மகளிர் இருந்ததாகத் தெரிவிக்கப்படும் தகவல்களிலிருந்தும், தமிழகத்தில் சோழப் பேரரசுகள் காலத்தில் பெருங்கோயில்களில் ஆடல் மகளிர் இருந்தது முதலான சான்றுகளை வைத்தும் இதை உணரலாம்.

எனினும் இந்த ஆடல் மகளிர் எல்லா இடத்தும் ஒரே மாதிரியான, பழக்க வழக்கங்களை, நடைமுறைகளைக் கொண்டு நிலவியதாகத் தகவல்கள் இல்லை. காரணம் இவ்வழக்கம் அவரவர் மொழி, இனம் சார்ந்தும் வழிபடும் முறை சார்ந்தும், சமூகக் கட்டமைப்பு சார்ந்தும் பல வேறுபட்ட வகைகளிலேயே நிலவி வந்திருக்கின்றன. நிலவியிருக்கவும் முடியும்.

அந்த வகையில் தமிழகத்தில் பேரரசுகள் காலத்தில் வாழ்ந்த தேவதாசிகள் சமூகத்தில் மிகப் பெரும் செல்வாக்கோடும், உயர் நிலைத் தகுதியோடும், மக்களால் மதித்துப் போற்றப்படும் நிலையிலும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தப் பணிக்காகத் தேர்ந் தெடுக்கப் படும் பெண்கள், நல்ல வசீகரத் தோற்றமும், நுண்ணறிவும் மிக்கவர்களாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது. இப்படித் தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள் ஒரு நல்ல நாள் பார்த்துத் தொடக்க சடங்குகள் செய்ய ஆடல் பாடல் பயிற்சியை, அதற்குரிய தேர்ச்சி பெற்ற பாடகர் மற்றும் நட்டுவனாரை வைத்துத் தொடங்குவார்கள்.

சில ஆண்டுக்காலம் பயிற்சி முடிய எந்தக் கோயிலுக்கு அவர் இறைச்சேவை புரியப் போகிறாரோ அந்தக் கோயிலுக்கு அவர் மனு செய்வார். கோவில் நிர்வாகம் அந்தந்தக் கோயிலுக்கும் உள்ள மரபுக் கேற்பவும் விதி முறைகளுக்கு ஏற்பவும் அவர் இப்பணிக்குப் பொருத்த மானவர்தானா என்பதைப் பரிசீலித்து, அவரை ஏற்கவோ நிராகரிக்கவோ செய்யும்.

ஏற்றுக் கொள்ளப்படுவதானால் அவரைத் தேவதாசியாகப் பணி யேற்பதற்கான நாள் குறிக்கப்படும். அந்நன்னாளில் அவருடைய ஆடல் பாடல் கலைகளுடன் அரங்கேற்றம் நிகழ - சிலருக்கு இந்த அரங் கேற்றம் முன்னமேயே நடைபெற்றிருக்கலாம், சிலருக்குத் தேவ தாசியாகப் பொறுப்பேற்கும் நாளிலேயே சேர்ந்தும் நிகழலாம் - நிகழ்வு, பெரிய விழாவாக, செல்வந்தர்கள் வீட்டுத் திருமண நிகழ்வு போலவோ, அல்லது கோயில் திருவிழா போலவோ கோலா கலமாகவும் விமரிசையாகவும் நிகழும்.

இறை மறையோதும் கோயில் தீட்சிதர், இறைவன் பெயரால் அவர் கழுத்தில் மங்கல நாண் அணிவிப்பார். இதற்கு அந்த நாணை இறைவனே அணிவித்ததாகப் பொருள். ஆகவே அன்று முதல் அவர் இறைவனுக்குச் சொந்தமாய் ஆக்கப்பட்டதாகக் கொள்ளப்படுவார். அன்றிலிருந்து காலா காலத்துக்கும் அவர் இறைச் சேவை புரிய வேண்டியதுதான்.

கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்த்துதல், கோயில் நிர்வாகத்துக்கும், திருப்பணிகளுக்கும் ஒத்துழைத்தல், மன்னன் இறைவனுக்குச் சமம் என்பதால் இறைவனுக்குச் செய்யும் சேவையை மன்னனுக்கும் செய்தல் என அவரது சேவைகள் தொடரும்.

இந்தச் சேவைக்கு அவருக்கு அரசரிடமிருந்து நிலம் மற்றும் பொருள் மான்யம் என, அவர் எந்த வகையிலும் தாழ்வுபடாது நிறை வோடு மிகுந்த செல்வந்தர் வீட்டுக் குடும்பம் போல் வாழ எல்லா வசதிகளும் கோயில் நிர்வாகம் செய்து தரும். இதனால் இத்தேவ தாசிகள் மிகுந்த செல்வாக்கோடு வாழ்ந்ததோடு அரசதிகார கட் டமைப்பின் ஓர் அங்கம் போலவே அவர் மதிக்கவும் பட்டார். இதற்கேற்ப சமூகத்தில் அதற்குரிய தகு நிலையும் அவருக்கு வழங்கப்பட்டது.

மக்களது வாழ்வில் நடைபெறும் நற்காரியங்களுக்கு அவர் கட்டாயம் அழைக்கப்படுவார். பெண்கள் பூப்பெய்தல், மணமுடித்தல் முதலான நிகழ்வுகளுக்கு அவர் வந்திருந்து ஆசி வழங்குவார். அவர் கழுத்தில் அணிந்திருக்கும் அணிகலனிலிருந்து ஒரு மணியைத் தனிப் பிரித்தெடுத்து மணமகளின் மங்கள நாணில் கோர்க்கப்பட அதன்வழி இறைவனது மங்கல நாணின் அருள் மணமகளுக்குக் கிட்டியதாகக் கொள்ளப்படும். இம்மாதிரி நிகழ்வுகளுக்கு அவர் பல்லக்கிலோ, அல்லது குதிரை பூட்டிய இரதத்திலோ உரிய மெய்க் காவலர்களுடன் வருவார். மணமக்களின் இல்லத்தார் அவரை நன்கு வரவேற்று உபசரித்து உரிய மரியாதைகள் செய்து நன்றியோடு வழியனுப்பி வைப்பார்கள்.

ஆக, இப்படிச் சமூகத்தில் நல்ல செல்வாக்கோடு வாழ்ந்து வந்தவர்கள் இந்தத் தேவதாசிகள். தவிரவும் இவர்களில் பலர் தங்களுடைய வருவாயில் பெரும் பகுதியை மக்கள் நல நோக்கில், ஏழை, எளிய மக்களுக்கு உதவவும் ஏரி குளங்கள் வெட்டவும், வேறு சில சிறு கோயில்களுக்குத் திருப்பணி செய்யவும், இதுபோன்ற சமூகப் பணிகளுக்குப் பல்வேறு வகையிலும் தாராளமாய் உதவியிருக் கிறார்கள். இதன் பொருட்டும் இவர்களுக்கு மக்களிடம் இயல்பான ஈடுபாடு, அபிமானம், நன்மதிப்பும் இருந் திருக்கிறது.

இப்படிப் பல வகையிலும் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வந்த தேவதாசிகள்தான் பின்னாளில் தாழ் நிலைக்குள்ளாக்கப்பட்டு தேவடியாள் என்றும் வேசி என்றும் விபச்சாரி என்றும் கேவலப்படுத்தப் பட்டனர் என்பதோடு மட்டுமல்ல, இன்றும் இச்சொல் இழி சொல் லாகவும், வசைச் சொல்லாகவுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டு, இறைவனின் திருமாங்கல் யத்தை ஏற்று ஆடல் பாடல்கள் வழி இறைப்பணி புரிந்து வந்த இவர்கள் கன்னியாகவே வாழ்ந்து தொலைத்தார்கள் என்று யாரும் சொல்ல வரவில்லை. இவர்களின் இறைப்பணியோடு மன்னர் பணி, பெருநிலக்கிழார்கள் பணி, இன்னும் பல அரசவைப் பணி எனப் பல்வேறு பணிகள் இத்துடன் நிகழ்ந்திருக்கலாம். அதை யாரும் மறுப்பதற்கில்லை.

ஆனால் அதையும் தாண்டி இவர்கள் சமூகத்தில் நல்ல தகுநிலை யோடு இருந்தார்கள், மக்களால் மதிக்கப்பட்டார்கள், போற்றப் பட்டார்கள் என்பது உண்மை. ஆனால் அந்நியப் படையெடுப்பும், ஆங்கிலேயப் படையெடுப்பும் அவர்கள் ஆட்சிக்காலத்தில் மேற் கொண்ட நடவடிக்கைகளுமே பின்னாளில் இவர்களை இழி நிலைக்குள்ளாக்கியது.

முதலாவதாக, மேற்கு ஆசியாவிலிருந்து வந்த அராபிய, பாரசீகப் படையெடுப்பு வடக்கே இருந்த கோயில்களைத் தகர்த்தும் சூறை யாடியும் அதன் வளங்களைக் கொள்ளை கொண்டும் போக, அக்கோயில்களும், அக்கோயில்களைச் சார்ந்த கட்டமைப்பும் தகர்ந்தது. இக்கோயில்களையும் அவற்றைப் பாதுகாத்து வந்த மன்னர்களையும் சார்ந்து வாழ்ந்து வந்த தேவதாசிகள் தங்களைப் பாதுகாப்பார் யாரும் இன்றி அநாதைகளாக்கப் பட்டனர். பிழைக்க வேறு வழியின்றி அவர்கள் தங்களுக்குத் தெரிந்த ஆடல் பாடல்களைத் தொழிலாகக் கொண்டு அதன் வழி ஏதோ சிறு பொருளீட்டி வாழத் தலைப்பட்டனர்.

இப்படிச் செல்வந்தர்கள் வீட்டு இல்ல நிகழ்வுகளுக்குச் சென்று அந்நிகழ்வைச் சிறப்பிக்க, இல்லத்தார்க்கு மகிழ்வூட்ட ஆடல் பாடல்கள் நிகழ்த்தி வந்த இவர்கள், இல்லத்தில் உள்ள சில ஆண்களின் இச்சைக்கு ஆளாக நேர்ந்தது. பிகு செய்து, முரண்டு பண்ணி தொழில் வாய்ப்பை, வருவாய் வாய்ப்பை இழக்க விரும்பாத பெண்கள் அதற்கு இணங்கிப் போகலாயினர். இந்த இணக்கம், இத்தேவதாசிகளின் தகுதி, திறன், தோற்றப் பொலிவுக்கு ஏற்ப பலதரப்பட்டு, சமூகத்தின் படிநிலை அடுக்கில் வெவ்வேறுபட்ட தரத்தில் வெவ்வேறு விதமாக இருந்திருக்கலாம்.

ஆனால், இப்படி நேர்ந்ததன் விளைவே தேவதாசிகள் தாழ் நிலை மதிப்பீட்டிற்குக் காரணமாக அமைந்தது. அதாவது தேவதாசிகள் என உயர் நிலையில் வைத்துப் போற்றப்பட்ட இவர்கள், யார் அழைத் தாலும் வரக் காத்திருக்கும் விபச்சாரி என்னும் தாழ்நிலை மதிப் பீட்டிற்குத் தள்ளப் பட்டனர்.

வடக்கே நேர்ந்த இந்த மாற்றம் தெற்கே சில ஆண்டுகள் கழித்து நேர்ந்தது. அக்காலம் வேற்று மன்னர்களுடன் வெள்ளை ஆதிக்க கிழக் கிந்திய வணிகக் குழுமத்தின் மற்றும் அதனோடு சேர்ந்து வந்த கிறித்துவ மதம் ஆகியவற்றின் தாக்கமும் தமிழகத்தின் தேவதாசி முறை மீது தாக்குதல் தொடுத்தது.

இதன் பிற்காலத்தில் நிலக்கிழமை முறையின் தகர்வும், முதலாளிய உற்பத்தி முறையின் தோற்றமும், பெரு நகரங்களை உருவாக்கி, மக்கள் அதை நோக்கி ஈர்க்கப்பட, பலதரப்பட்ட மக்களும் நகர்ப்புறம் சென்றேகினர். தேவதாசிகளும் தங்களுகான பிழைப்பு நோக்கில் நகர்ப்புறம் நாடிச் சென்றனர். இப்படிக்குடியேறிய இவர்கள் மக்களோடு மக்களாக, மக்களில் ஒருவராகவே கருதப்பட்டு வந்தனர் என்பது முக்கியமானது.

ஆனால், சமுகத்தில் மக்களோடு மக்களாக நிலவும் இவர்களது இருப்பு விரைவாக ஏற்பட்டு வரும் நவீன வளர்ச்சிக்கும் அதை யொட்டிய சமூக மாற்றத்திற்கும் எங்கே இடையூறாக இருக்குமோ என வெள்ளை ஆதிக்கமும், இதனால் எங்கே தங்கள் மேல்சாதிப் புனிதம், ஆதிக்கம் கெட்டு விடுமோ என மேல் சாதி சனாதனிகளும் இவர்களின் இருப்பை எதிர்க்க, இவ்விரு சக்திகளுமாகச் சேர்ந்து நகரில் மக்களோடு மக்களாகக் குடியிருந்த இவர்களை நகரை விட்டு ஒதுக்குப்புறமான இடங்களில் தனிக் குடியிருப்பாக வசிக்க நிர்ப்பந்தித்தது. இதையொட்டி உருவானவையே ‘சிவப்பு விளக்குப் பகுதிகள்’ என அழைக்கப்பட்ட தனிப் பகுதிகள்.

இது ஒரு புறம். இன்னொரு புறம், இவர்களது நிலைமை இத்தாழ் நிலையை அடையுமுன், இத்தேவதாசிகள் வாழ்ந்த வாழ்வும், அவர்களின் செல்வ வளமும், அவர்களுக்கு இருந்த சமூக மரியாதையும் வெள்ளைக் காலனியாதிக்க வாதிகளையும், சாதி ஆதிக்கச் சக்திகளையும் பொறாமை கொள்ள வைத்திருந்தது. எனவே, இதில் இத்தேவதாசிகளுக்கு எதிராக உருவாக்கி வைத்திருந்த மனநிலை சார்ந்த உளவியல் பூர்வமான காரணங்களும் பங்கு வகித்தன.

காட்டாக, அலிகார் பகுதியில் சுந்தரி என்னும் நடனமாது நகரில் எப்போதும் குதிரை பூட்டிய வண்டியில் நான்கு பாதுகாவலர் களுடன்தான் வலம் வருவார். இது நகரத்தில் உள்ள நடு மற்றும் மேல்தட்டு மக்களுக்கு உவப்பாயில்லை. அவர்கள் இதுபற்றி மாவட்ட நடுவர் மன்றத்தில் புகார் கொடுக்க, சுந்தரியின் செயல் திமிரான, பிறரை அவமதிக்கிற, கர்வமிக்க, துடுக்கான செயல் எனச் சொல்லி நடுவர் அம்மாதுவுக்கு சிறைத் தண்டனை அளிக்கிறார். அம்மாது விடவில்லை. இது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க, நீதிமன்றம் இவரின் செயலைக் குற்றச் செயலாகக் கருதமுடியாது என்று தீர்ப்பளித்து, அவரை விடுதலை செய்கிறது. இது மாவட்ட நீதிமன்ற நடுவருக்கும், மற்றவர்களுக்கும் நல்ல அடியாகக் கோபத்தைத் தூண்டியிருக்கிறது.

இதேபோல 1910 - 11இல் ஒரு சம்பவம். உத்திரப் பிரதேச அரசு முதன் முதலாக அலகாபாத்தில் ஒரு மூன்று மாத பொருட்காட்சிக்கு ஏற்பாடு செய்கிறது. நகரின் முக்கிய நிர்வாகிகள், பிரமுகர்கள் பலரும் இந்த ஏற்பாட்டில் பங்கேற்கின்றனர். கண்காட்சி ‘இந்தப் பூமியின் சொர்க்கம்’, “இந்த நூற்றாண்டின் சாதனை” என்றெல்லாம் விளம்பரம் செய்யப் படுகிறது. இந்தப் பொருட்காட்சியில் கல்கத்தாவின் அப் போதைய புகழ்மிகு தாரகையான ‘கௌஹர் ஜான்’ கலந்து கொள்வார் என்று விளம்பரமும் செய்யப்படுகிறது. ஆனால் இந்து ஆண்கள் இவர் இந்த பொருட் காட்சியில் கலந்து கொள்ளக் கூடாது என இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது இக்கண்காட்சியின் மதிப்பையும், சிறப்பையும் கெடுத்துவிடும் எனப் பத்திரிகைகளில் வாசகர் கடிதங்களாக எழுதுகின்றனர். இத்தனைக்கும் கௌஹர் ஜான் சிறந்த பாடகி. ஆங்கில கிராமபோன் கம்பெனியே 1902 இல் இவரை அழைத்துப் பாடவைத்து அவரது பாடலைப் பதிவு செய்து விற்பனை செய்திருக்கிறது. எனினும் அப்படிப்பட்டவருக்கே இந்த எதிர்ப்பு இருந்திருக்கிறது. ஆனால் இந்த எதிர்ப்பு அவரையோ கண் காட்சியையோ எதுவும் செய்து விடவில்லை. மாறாகத் திட்டமிட்டபடி கௌஹர் ஜான் பொருட்காட்சிக்கு வந்தார். அவரைக் காண, அவர் வருகைக்காகவே கூட்டம் திரண்டு வழிந்தது. பொருட்காட்சியின் வர்த்தக ரீதியிலான வசூலுக்கும் அவர் முக்கிய காரணமாக அமைந்தார். அதாவது, சனதான ஆதிக்கச்சக்திகள் அவரை எதிர்த்தாலும் நவின ஆதிக்க சக்திகள் அவரை நன்கு பயன்படுத்திக்கொண்டன.

இப்படிப்பட்ட சம்பவங்கள் அதாவது, தேவதாசிகள் சமூக ரீதியிலான செல்வாக்கில் தங்களுக்குப் போட்டியாக இருப்பது ஆதிக்க சக்திகள் மத்தியில் பொறுக்கமாட்டாததாய், பொறாமையைத் தூண்டுவதாய் ஒருபுறம் இருக்க, இவர்களின் செல்வாக்கையும், வாழ்க்கை முறையையும் பார்த்தால் எங்கே நம் வீட்டுப் பெண்களும் இதன் பால் ஈர்க்கப்பட்டு விடுவார்களோ என்கிற அச்சமும் கூடவே ஆண்களுக்கு இருந்தது. இதனால் இவர்களைக் காண்பதற்கே கூட தங்கள் வீட்டுப் பெண்களுக்குத் தடை போடும் போக்கும் நிலவியது.

அதாவது, ஒவ்வொரு ஆணும் வாய்ப்புக் கிட்டினால் அந்த தேவதாசியோடு தனியே சல்லாபம் புரியத் தயார். ஆனால் சமூகத்தில் நாலு பேருக்கு மத்தியில் அதற்குத் தயாரில்லை. அப்படி இருந்தால் அது சமூக இழுக்கு, தரம் தாழ்வு என்கிற போலிக் கௌரவம். தாங்கள் இத் தேவதாசிகளை விரும்பாதது போலவும், வெறுப்பது போலவும் காட்டிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். இதனாலேயே தங்கள் வீட்டுப் பெண்களையும் அந்தப் பக்கம் போகவிடாமல் தடுக்க வேண்டிய கட்டாயம். இப்படித்தான் சமூகத்தில் தேவதாசிகள் படிப் படியாகத் தாழ்நிலைக்கு, விபச்சாரிகள் என்கிற நிலைக்கத் தள்ளப்பட்டனர்.

இதில் மேற்சொன்ன காரணங்களுடன் மதம் சார்ந்த காரணங்களும் செயல்பட்டுள்ளன. அதாவது தேவதாசிகள் என்றாலே போலி அருவருப்பு, முகச்சுளிப்பு காட்டும் இந்து ஆண்கள், அப்பெண்கள் இசுலாமிய மதத்தைத் சேர்ந்தவர் என்றால் சற்றுக் கூடுதல் எதிர்ப்பு காட்டுவார்கள். அவர்கள் தங்கள் இந்துப் பெண்களைக் கெடுத்து விடுவார்கள் என்றும் வேறு கருதினார்கள்.

தேவதாசிகளின் சமூக இருப்பு, இப்படிக் கேவலத்துக்குரியதாக, கேள்விக்குள்ளாக்கப்பட்டிருந்த நிலையில்தான் இந்து சமய சமூக சீர்திருத்தவாதிகள் மத்தியில் இந்நிலையை ஒழிக்கவேண்டும் என்கிற கருத்து உருவாகியது. அதே வேளை மீளாக்க வாதிகள் மத்தியில் இதை இந்தச் சீரழிவிலிருந்து மீட்டுச் செம்மைப்படுத்த வேண்டும் என்கிற கருத்தும் நிலவியது.

இப்படி இவர்கள் நினைத்ததற்குக் காரணம், தேவதாசி மரபு என்பது சாதாரண ஒன்றல்ல. நினைத்தால் யார் வேண்டுமானாலும் தேவதாசியாகி விடலாம் என்று சொல்வதற்கு. தகுதியும், திறமையும், கலைகளில் தேர்ந்த பயிற்சியும், அதற்கான உழைப்பும் அர்ப்பணிப்பும் இருந்தால் மட்டுமே யாரும் தேவதாசியாய் ஆகமுடியும். அதற்கான தகு நிலைகளைப் பெறமுடியும். அப்படியிருக்க தேவதாசி ஒழிப்பு என்பதன் பேரால் இப்படிப்பட்ட கலைகளையும் ஒழிக்க வேண்டுமா என்பது அவர்களுக்குக் கேள்வியாயிருந்தது.

எனினும் கால மாற்றம், மாறி வரும் சமூகச் சூழல் தேவதாசிகளின் இருப்பை அர்த்தமற்றதாக்கிய நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், பல்வேறு காலக்கட்டங்களில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு இந்தப் பழக்கம் படிப்படியாக நீக்கப்பட்டது. தமிழகத்திலும் 1927இல் இதற்காக முன்மொழியப் பட்ட மசோதா முப்பது ஆண்டுகள் கிடப்பில் கிடந்து 1947இல் சட்டமாக்கப்பட்டது. இதன்படி தமிழகத்திலும் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்தத் தேவதாசி முறை ஒழிப்பின் காரணமாகத் தகுதியும் திறமையும் வாய்ப்பும் பெற்றவர்கள் தங்களது ஆடல், பாடல் திறமைகளை வைத்து ஒரு சிலர் திரைத் துறையில் புகுந்து மிளிர்ந்தார்கள். சிலர் சிறு கைத்தொழில்கள் செய்தோ வேறு பணிகளில் ஈடுபட்டோ வயிற்றைக் கழுவினார்கள். சிலர் வேலை வாய்ப்பு தேடி நகர்ப்புறம் சென்றார்கள். எந்த வாய்ப்பும் அற்றவர்கள் விலை மாதர்களாக ஆனார்கள்.

ஆனால் காலம் தேவதாசிகளை எவ்வளவுதான் சீரழித்த போதிலும், அவர்களின் சமூக மதிப்பு இன்று என்னவாக இருந்த போதிலும், அத் தேவதாசிகள் முறை என்பதும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை என்பதும் வரலாற்றில் தனியிடத்தைப் பெற்ற காலம் என்பது முக்கியம்.

அந்த வாழ்க்கையின் மிச்ச சொச்சங்களும் சமூக மதிப்பும் இன்றும் கூட தஞ்சை மண்ணில் நிலவுவதாகக் கூறப்படுகிறது. இன்றும் கூட தேவதாசி மரபில் வந்தவர்கள் இறந்தால் அவர்களது இறுதி ஊர்வலத்தின்போது, அதாவது அவர்கள் இல்லத்திலிருந்து இடுகாட்டிற்குச் செல்லும்போது, அவர்கள் இதுநாள் வரை செய்த இறைச் சேவைக்குப் பதில் சேவையாகவும், அவர்களைச் சிறப்பிக்கும் வகையிலும் அந்த ஊர்வலம் அவர் சம்பந்தப்பட்ட கோயில் வழியாக வர, காலம் காலமாக உள்ள வழக்கப்படி அக்கோயிலில் இறைவன் கழுத்திலிருக்கும் மாலைகளில் ஒன்றைக் கொண்டு வந்து, அத்தேவதாசியின் சடலத்தின் மீது போட்டு அஞ்சல் செலுத்தியே இடுகாட்டுக்குக் கொண்டு செல்வார்கள் என்று சொல்லப் படுகிறது.

இது ஏதோ பழம்பெருமை பேசும் கடந்த கால ஏக்கம் போலக் கருதி விடக்கூடாது. மனிதகுலம் காலத்துக்குக் காலம் எவ்வளவோ மாற்றங்களை, முன்னேற்றங்களை வளர்ச்சிகளைக் கண்டு வருகிறது. இதில் பழையன பலவற்றை கைவிட்டு மறந்து, பல புதியனவற்றைக் கைக்கொள்கிறது. இவ்வாறு சமூகம் மாறிவரும் சூழலுக்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது என்பது வரலாறெங்கணும் நிகழ்ந்து வருவதுதான்.

என்றாலும் இங்கே நாம் நோக்க வேண்டியது, மனித சமூகத்தில் நிலவும் பாலுறவு என்னும் உன்னதம், ஆதிக்க சக்திகளால் அதிகார வர்க்கங்களால் எப்படித் தங்கள் நலனுக்குட்பட்டு மக்கள் மீது அதிகாரம் செலுத்துவதாக மாறுகிறது, மாற்றப்பட்டு வருகிறது, இதற்கான மதிப்பீடுகள் கட்டமைக்கப்படுகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான்.

மனித உயிரியல் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு என்னும் நோக்கோடு நெருங்கிய இரத்த உறவுகளுக்கிடையேயான பாலுறவைத் தடை செய்து சுதந்திரமாய் வாழ்ந்த மனித சமூகத்தைத் தனியுடைமையின் தோற்றமும் அதையொட்டிய குடும்பத்தின் தோற்றமும் பாலுறவில் என்னவெல்லாம் கட்டுதிட்டங்களைக் கொண்டு வந்து மனிதன் உன்னதமாயும், உல்லாசமாயும், உயிர் உற்பத்திக்கான தேவையாகவும் அனுபவிக்க வேண்டிய பாலுறவைக் குற்றச் செயல்களுக்கான ஊற்றாய் மாற்றிப் போட்டிருக்கிறது என்கிற கோணத்தில் நாம் சிந்திக்க வேண்டும் என்பதுதான்.

சுருக்கமாக, பாலுறவு சார்ந்த குற்றச் செயல்களுக்கும், பாலுறவு நடவடிக்கைகள் குறித்த, இழிந்த நோக்கிற்கும் காரணம் பாலுறவு சார்ந்து சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் மதிப்பீடுகள்தான். இந்த மதிப்பீடுகளுக்குக் காரணம் இதைத் தங்கள் ஆதிக்க நலனுக்கேற்ப கட்டமைத்து வைத்திருக்கும், இதைத் தங்கள் பாதுகாப்புக்காய் உருவாக்கி வைத்திருக்கும் ஆதிக்க சக்திகள் தான்.

இந்தநோக்கில் இத்தேவதாசிகள் சிக்கலை நோக்க, இத்தேவதாசி முறையின் தோற்றத்துக்குக் காரணம் பேரரசுகள் ஆட்சியின் நிலக்கிழமை கட்டமைப்பும், பெருந்தெய்வ, பெருங்கோயில் வழிபாட்டு முறையும்தான். ஆனால் அக்கட்டமைப்பில் தேவதாசிகள் எவரும் இழிவாக நோக்கப்பட வில்லை. மாறாக சமூகத்தில் நல்ல மரியாதையுடனே வாழ்ந்தார்கள்.

தற்போது, இத்தேவதாசிகளை, அவர்களிடம் உள்ள கலைத் திறன்களையும், ஆற்றல்களையும் பயன்படுத்தி, உள்வாங்கி அவர்களுக்கு இழிவு நேராத கண்ணியமான மாற்று வழிகளைக் காட்டி அவர்களைக் கை தூக்கிவிடாமல், அவர்களை விலை மாதர் களாக்கி இழிநிலைக்குத் தள்ளியது யார்?

விலை மாதர்களானாலும் சமூகத்திற்கு எந்த இடர்ப்பாடும் இல்லாமல் சமூகத்தின் ஓர் அங்கமாகவே வாழ்ந்து சமுகத்தின் சில தேவைகளை நிறைவு செய்து வந்த அவர்களை நகரங்களை விட்டு விரட்டி தனிப் பகுதிகளை உருவாக்கி சிவப்பு விளக்குப் பகுதிகள் ஏற்படுத்தியது யார்?

வருவாய்க்கு வேறு வழியற்றோ, அல்லது வேறு காரணங்களுக்காகவோ தன்னை ஒருவனுக்கு அனுபவிக்கத் தந்து அதன் மூலம் பொருளீட்டி வாழ்வதை, சமூகத்தில் உள்ள பல்வேறு தொழில்கள் போலவும் ஒரு தொழில் என அங்கீகரிக்காமல் அதை இழிதொழிலாக நோக்க வைத்தது யார்?

தொழிலை மட்டுமல்ல, அதில் ஈடுபடும் பெண்களையும் இழிவாக நோக்க வைக்க, அத்தொழில் சார்ந்த சொற்களையே வசவுச் சொற்களாக ஆக்கி அதைச் சொன்னாலே, ‘சொர்’ என்று கோபம் பொத்துக் கொண்டு வருகிற மாதிரி உணர்வுக்கு ஆளாக்கி அதைக் கேவலப்படுத்தியது யார்?

எல்லாம் ஆதிக்க சக்திகள். தங்கள் மேல் தட்டு அதிகாரம் காக்க, மேல் சாதிப் புனிதம் காக்க, அவை கட்டுக் குலையாமல் பாது காக்கப்பட, அதற்காகவே பாலுறவில் இத்தனைத் தடைகள், இத்தனைக் கட்டுப்பாடுகள், இத்தனை விதிகள், அதன் மீறல் சார்ந்த இழிவுகள், எல்லாம் எதற்காக? ஆதிக்கச் சக்திகளின் நலன்களைப் பாதுகாக்க. இந்தப் புரிதலில் இது எந்த அளவு தேவை அல்லது தேவையில்லை என்பதை நாம் அறிவியல் நோக்கில் சிந்திக்க வேண்டும். அது சார்ந்த மதிப்பீடுகளை உருவாக்க வேண்டும்.

- இராசேந்திர சோழன்

Pin It