“சுவர்களும் அதற்கு கதவுகளும் கொண்ட எனது வீட்டிற்கு நான் செல்ல வேண்டும், எனக்கான குடியிருப்பு என்று உலகின் எந்த ஒரு மூலையில் கிடைத்தாலும் அதைப் பற்றிய கவலை எனக்கில்லை, அது அட்லாண்டிக் கடலின் மீது இருந்தாலும் சரியே… நான் எனது வீட்டிற்குத் திரும்ப வேண்டும்…" --- சோவியத் குடியரசு உக்ரேனில் இருந்து விரட்டப்பட்ட பெண் அகதி ஒருவரின் வேண்டுதல் இதுதான்.

இயற்கை தன் மீது வரைந்து கொள்ள விரும்பாத, மனிதன் ஏற்படுத்திய வடுக்கள் எல்லைகள். மனிதனால் ஒரு பறவையைப் போல சுதந்திரமாக எல்லைகளைத் தாண்டி பறக்கமுடிவது இல்லை. எல்லைகள் தாண்டும் மனிதர்களை மனித நேயத்தோடு பார்ப்பதற்கு எந்த நாடும் தயாராக இல்லை. எல்லைகள் தாண்டினால் அது தீவிரவாதமாக மட்டும் தான் பார்க்கப்படுகிறது.

eelam_205பொற்கால ஆட்சி நடக்கின்ற வளமான எந்த நாட்டில் இருந்தும் அகதிகளாக யாரும் வெளியேறுவது இல்லை. வாழ்க்கை அச்சுறுத்தலாக்கப்பட்டு நிர்க்கதியற்ற நெருக்கடியில் விரட்டப்படுபவர்கள் மட்டுமே அகதிகளாக்கப்படுகின்றனர்; நாடு இழந்தவர்கள் என முகாம்களில் அடைக்கப்படுகின்றனர்.

ஈழத்தில் இறுதிகட்டப் போரின் பயங்கரத்திற்கு இடையே உயிர் வாழும் ஆசையில் தப்பிப் பிழைக்கலாம் என்று கடலில் தத்ததளித்த மக்களை எந்த நாடும் மனிதாபிமானத்தோடு ஏற்றுகொள்ளவில்லை. உயிர்ப்பிச்சை கேட்டும் எல்லைக் கோடுகள் தீர்க்கமாக மறுத்துவிட்ட நிலையில் கடலோடு செத்து மடிந்த தமிழ் சொந்தங்களின் ஆன்மாக்களின் துடிப்பு இப்படி அலறியிருக்கக் கூடும் “இந்த உலகமே நாசமாகப் போகட்டும்" என்று.

பாலஸ்தீனம். வரலாற்றில் அதிகமாக மனித உயிர்களை பலிகொடுத்து “புனித பூமியாக்கப்பட்ட நாடு". நாட்டைச் சுற்றி முள்வேலிகள். உணவு, மருந்து போன்ற அடிப்படைத் தேவைகளுக்குக் கூட அண்டை நாடுகளை நம்பி இருப்பதும், எல்லைகள் திறக்கப்படாத காரணத்தால் எகிப்து, லெபனான் போன்ற நாடுகளுக்கு இடையே கள்ளத்தனமாக சுரங்கப்பாதை அமைத்து தங்களது வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தம். எல்லை தாண்டிய குற்றத்திற்காக குழந்தைகள், பெண்கள் என்று கூட பாராமல் இஸ்ரேல் ராணுவத்தினர் மிருகத்தனமாக குண்டு வீசி கொன்று வருவதும் இன்றளவும் நடந்து வருகின்றது.

அதிகாரத்துவத்தின் அரசியலில் பலவீனமான மனிதர்கள் பலியிடப்படுவது ஒரு சம்பிரதாயம் தான் என்ற மனநிலைக்கு, பொதுவாக சர்வதேச நாடுகள் அனைத்தும் தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளன‌.

ஓர் இரவில், சில மணித்துளிகளில் வளமாக வாழ்ந்து வந்த எத்தனையோ குடும்பங்கள் நிர்க்கதியற்று யாசித்து உண்ணும் அளவிற்கு அகதிகளாக மாற்றப்பட்ட கொடும் வரலாற்று சம்பவங்களை அடையாள அரசியல்களும், அதிகாரப் போர்களும் உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன‌.

போர்க் கைதிகள் கூட தன் சொந்த நாடு தனக்காக காத்திருக்கிறது என்ற நம்பிக்கையில் காலம் கடத்த முடியும். ஆனால் நாடற்ற அகதிகளுக்கு பூமியில் எந்த நிலப்பரப்பும் சொந்தமில்லை. இது மரணத்தை விட மிகவும் கொடுமையானது. அதிலும் சொந்த நாட்டில் அகதிகளாக வாழும் கொடுமை எந்த ஒரு மனிதனுக்கும் ஏற்படக் கூடாத துயரம் ஆகும்.

ஒரே ஒரு இனக்கலவரத்தினால் இனி எப்பொழுதுமே மீளமுடியாத அழிவு நிலைக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் விரட்டப்படுகின்றனர். சொந்த நாட்டிலேயே அகதிகளாகி விடுகின்றனர்.

இந்தியாவைப் பொருத்தவரை, வேலை வேண்டியோ அல்லது உணவுப் பற்றாக்குறையை எதிர்த்தோ, உயர்கல்வியில் இட ஒதுக்கீடு வேண்டும் என்றோ, அரசு நிறுவனங்களில் அந்நிய முதலீடு கூடாது என்றோ, விலைவாசியை எதிர்த்தோ, அனைவருக்கும் இலவசக் கல்வி, மருத்துவம் வேண்டும் என்றோ எங்கும் கலவரங்கள் தோன்றுவது இல்லை. திரும்பத் திரும்ப மதங்களின் பெயராலும், சாதிய அடிப்படையினாலும், மொழி அரசியலினாலும் தான் கலவரங்கள் தோன்றுகின்றன. ஏனென்றால் எப்பொழுதும் ஒடுக்கப்பட்ட இனமக்கள் மட்டுமே அதிகார வர்கத்தினரின் குறியாக இருப்பார்கள்.

விறுவிறுப்பான அரசியலுக்கு இந்த கலவரங்கள் எப்பொழுதும் தேவைப்படுவதால் நிரந்தத் தீர்வு ஏற்பட்டு அமைதி திரும்பி விடாமல் உள் பகையையும், வெறுப்பு உணர்வையும் மக்களிடம் தணிந்து விடாமல் வளர்த்து வருகின்றனர். 

eelam_tamils_339ஒரு மதக்கலவரத்தை ஏற்படுத்தி, சிறுபான்மை முஸ்லீம்களை அழிப்பதற்கு சில ஆயிரம் ரூபாய்கள் செலவு செய்தால் போதும் என்று நேரடியாக இராம சேனை பயங்கரவாதி முத்தாலிக் பேரம் பேசியது இந்த நாட்டின் நீதித்துறைக்கும், பாதுகாப்புத் துறைக்கும் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. கலவரத்திற்குப் பிறகான அரசு மற்றும் நீதித்துறைகள் எடுக்கும் நடவடிக்கைகள் அதிகபட்சமாக கமிசன், அறிக்கைகள் என்றதோடு முடிந்துவிடும்.

தனி மனித கொலை, குற்ற செயல்களில் அரசாங்கமும், நீதித்துறையும் காட்டும் வேகமும் அக்கறையும் இனப்படுகொலைகள் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் காட்டப்படுவது இல்லை.

சுதந்திரத்திற்குப் பிறகான இந்தியாவில் நடந்தேறிய பல நூற்றுக்கணக்கான கலவரங்களுக்கும், அதனால் உண்டான உயிர், உடமை பாதிப்புகளுக்கும் அரசாங்கம் என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது? எத்தனை பேருக்கு நீதி கிடைத்துள்ளது?.

...ஒரு பசுமாட்டின் தலையோ, பன்றியின் தலையோ போதும், ஒரு மாபெரும் மதக்கலவரத்தை தூண்ட... நூற்றுக்கணக்கில் மக்கள் படுகொலை செய்யப்படலாம், பெண்களை கும்பலாக சேர்ந்து பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தலாம், அவர்களின் சொத்துக்களை அழித்து ஊரைவிட்டு விரட்டலாம்…

அரசின் பாரபட்சமான நடவடிக்கைகளாலும், துணிவற்ற நீதித்துறையினாலும் தங்களுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட அசைக்கமுடியாது என்பதைத் தெரிந்து வைத்துள்ளனர் கலவரங்களை தூண்டும் ஆதிக்க சக்திகள். இவைகள் எல்லாம், எப்படிப்பட்ட முன் உதாரண‌த்தை வரும் தலைமுறையினருக்கு சொல்லித் தருகின்றன‌?

1983ல் இந்திரகாந்தி அவர்கள் பிரதமராக இருந்த நேரத்தில் சுமார் 5000 வங்க மொழி பேசும் சிறுபான்மை இன மக்கள் அஸ்ஸாம் நெல்லி கலவரத்தில் கொல்லப்பட்டனர். பச்சிள‌ம் குழந்தைகளைக் கூட உயிரோடு விட்டு வைக்கவில்லை. 29 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே சிறுபான்மை மக்களின் மீது இன்னொரு கலவரத் தாக்குதல்கள் ஏவப்பட்டுள்ளன‌.

குஜராத்தில் சிறுபான்மை முஸ்லீம்களை அழிப்பதற்கு காவி பயங்கரவாதிகள் கையாண்ட அதே உத்திகளைத்தான் இன்று அஸ்ஸாமில் வங்க மொழி பேசும் முஸ்லீம்களுக்கு எதிராக கையாளப்பட்டது. ஒரு சில நாட்களிலேயே நூற்றுக்கணக்கான வங்கமொழி பேசும் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர்.

பன்மை சமூகமாக வாழ்ந்த ஊர்களில் இஸ்லாமியர்களின் வீடுகள் மட்டும் தனியாக குறியிடப்பட்டு, அவர்களின் சொத்துக்களும், உயிர்களும் கவனமாக அழிக்கப்படுகின்றன‌. பொதுவாக பெரும்பான்மையின சக்திகள் முன் நின்று நடத்தும் கலவரங்களில் எப்படி அரசு இயந்திரங்கள் நடந்து கொள்ளும் என்பதையும், இராணுவமே குவிக்கப்பட்டாலும் சிறுபான்மையினர்களின் பிணக்குவியல்களை தடுக்க முடியாது என்பதையும் மீண்டும் ஒரு முறை அஸ்ஸாமில் நடந்த கலவரம் நிரூபித்துள்ளது.

இரண்டரை இலட்சம் பேர் அகதிகளாக இடம் பெயர்ந்து முகாம்களில் இருக்கின்றனர். கடுமையாக பாதிப்படைந்துள்ள அகதிகளுக்கு வெறும் 117 மருத்துவர்களை மட்டுமே அரசு நியமித்துள்ளது. முகாம்களில் மருத்துவ சிகிச்சை இல்லாமல் பல குழந்தைகள் இறந்துள்ளனர். சுமார் 4000 கர்ப்பிணிப் பெண்கள் அடிப்படை மருத்துவ வசதிகள் கூட இல்லாமல் கைவிடப்பட்டுள்ளனர்.

ஆளும் மத்திய, மாநில காங்கிரஸ் அரசு, பதவித் தட்டில் எந்த இனத்தின் ஓட்டுச் சீட்டு கனமாக இருக்கும் என்ற கணக்கீடு செய்து முடிப்பதற்குள் ஒரு மாபெரும் இனக்கலவரம் திட்டமிட்டபடியே நடந்து முடிந்துவிட்டது.

கலவரம் எல்லா இடங்களுக்கும் பரவி, பிணங்கள் குவிந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் பங்களாதேசத்திலிருந்து எல்லை தாண்டிய ஊடுருவல் தான் இந்த நிலைக்குக் காரணம் என்றும், அந்த மக்களை பங்களாதேசத்திற்கே திருப்பி அனுப்பிவிடுவதின் மூலமாக மட்டுமே இது போன்ற கலவரங்களைத் தடுக்க முடியும் என்றும் துளியளவு மனித நேயம் கூட இல்லாமல் பாரதிய ஜனதா கட்சி ஊடகங்களுக்கு செய்தியளித்துக் கொண்டிருக்கின்றது.

கொல்லப்படுபவர்கள் ஒரே மொழி பேசுபவர்களாக இருந்தும் கிழக்கு வங்க தேசமும், மேற்கு வங்காளமும் தனது எல்லைக் கதவுகளை கவனமாக மூடிவிட்டனர்.

உலகின் மிகவும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை சமூகம் என்று அழைக்கப்பட்ட, மியான்மரின் மேற்கு மாகாணத்தில் அரக்கான் பகுதி ரொகின்கிய முஸ்லீம்கள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட போதும் வஙகதேசத்தின் எல்லைக் கதவுகள் மூடப்பட்டே இருந்தன.

ஆனால் மேற்கு உலகத்தில் ஒரே ஒரு உயிர் தீவிரவாதத்தால் பலியானாலும் அது சர்வதேச செய்தியாகிவிடுகிறது. இந்தியா உட்பட எந்த அண்டை நாடுகளும் இந்த மாபெரும் இன அழிப்பிற்கு எதிராக கேள்வி கேட்கப்போவது இல்லை.

gujrat_victims_400கொல்லப்பட்ட மனித உயிர்களின் எண்ணிக்கையைக் கொண்டும், சிந்திய இரத்தங்களின் தடயம் காட்டியும் உயிர் தப்பியவர்கள் மனிதாபிமான பிச்சை கேட்பதும், நீதி கேட்பதும் மிகவும் கொடுமையான நிலை. ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்ட அதே நிலைதான். மடிந்தவர்கள் போக மீதமிருப்பவர்கள் ஏதேனும் ஒரு முகாமில் அகதிகளாக இருக்கப்போகிறார்கள்.

பங்களாதேசத்திலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவியவர்களை இந்தியாவிலிருந்து விரட்ட வேண்டும் என்றால், பங்களாதேசத்திற்குள் இந்தியாவிலிருந்து ஊடுருவிய பல இலட்சம் உருது பேசும் பீகாரி சிறுபான்மையின மக்களை என்ன செய்வது?

பிரிவினைக்குப் பிறகான பங்களாதேசத்தில் 30 வருடங்களுக்கும் மேலாக பங்களாதேசத்தின் குடிமக்கள் என்ற எந்த அடையாளமும் இல்லாமல், அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வாழ்ந்தனர். அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் என்று எல்லா அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டது. கடைசியாக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பங்களாதேசத்தின் நீதிமன்றம் பீகார் சிறுபான்மையின மக்களுக்கு அந் நாட்டின் குடியுரிமையை , ஓட்டுரிமைகளை உறுதிப்படுத்தியது.

”மரணிப்பதற்கு முன்னால் கிடைக்கப் பெற்ற குடியுரிமையினால் தானும் ஒரு பங்களாதேசத்தவன் என்ற நிம்மதியில் இனி மரணிப்பேன்” என்கிறார் 60 வயதாகும் இர்ஷாத் என்ற பீகாரி இனத்தவர்.

வாழ்வின் விளிம்பு நிலையில் வசிக்கும் அந்த மக்கள் இந்த குடியுரிமையினால் இனி வரும் தலைமுறையினரின் வாழ்கை விடியும் என்று நம்புகின்றனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய எல்லைப் பிரிவினைகள் ஏற்படுத்திய உள் நாட்டு கலவரங்கள், இனப்போர்கள் காரணமாக இதுவரை ஊடக வெளிச்சமே இல்லாத நாடற்ற அகதிகள் என்று இதுவரை 12 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.

தன்னைச் சுற்றி நடக்கும் அரசியல் தெரியாதபோதும் நாடு இழந்தவர்களாக வெளியேறும் பெண்களும், குழந்தைகளும் அவர்களின் இயாலாமையினால் பாலியல் ரீதியான கொடுமைகளையும் உடல் ரீதியான கொடுமைகளையும் அதிகமாக அனுபவிக்கின்றனர்.

பொதுவாக எல்லா நாடுகளிலும் வலுவற்றவர்களை தொடர்ந்து அடக்குமுறைகளுக்கு ஆளாக்குவதன் மூலம் சொந்த நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்புகள் உறுதியாக இருப்பது போன்ற பிம்பத்தை உருவாக்குகின்றனர். அது அவர்களின் சர்வதேச அரசியலுக்கு தேவையானதாகவும் இருக்கிறது.

இன்று போல் தகவல் தொழில் நுட்பம் இல்லாத, நாகரீகம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத ஒரு இருண்ட காலத்தில், அன்றைய அரபு நாட்டின் மக்கா நகரிலிருந்து உயிர் பிழைப்பதற்காக தப்பி ஓடி வந்த அகதிகள் கூட்டம், மதினா நகரில் தஞ்சம் புகுந்தனர். மக்கா நகரிலிருந்து அகதிகளாக தஞ்சம் புகுந்தவர்களும், மதினாவாசிகளும் இனைந்து முகமது நபி அவர்களின் தலைமையில் ஒரு அரபு தேசத்தைக் கட்டமைத்தனர். அதுவரை சிறு சிறு குழுக்களாக தங்களுக்குள் போரிட்டுக் கொண்டு நாடோடிகள் போல வாழ்ந்த அரபு மக்களுக்கான ஒரு தேசியம் உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று அதே அரபு தேசங்களிலிருந்து தான் ஆயிரமாயிரம் மக்கள் கொன்று குவிக்கப்படுகின்றனர், சர்வாதிகாரத்தின் கொடுங்கரங்களால் மக்கள் அகதிகளாக நாடுகடக்கின்றனர்.

இந்தியாவில் பழங்குடியின மக்களும், சிறுபான்மை இஸ்லாமியர்களும், காஷ்மீரிகளும், பூர்வகுடிமக்களும், வடகிழக்கு மாநில மக்களும் இது போன்ற தொடர் நெருக்கடிகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

assam_riot_victims_560

தேசியம் என்ற மாய கட்டமைப்பு சிறிதும் குலைந்துவிடாமல் பாதுகாக்க இது போன்ற தொடர் அடக்குமுறைகள் இந்தியா போன்ற வளரும் நாட்டிற்குத் தேவைப்படுவதாக அதிகார வர்கத்தினர் நினைக்கின்றனர்.

வெளி நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்தவர்களுக்கு கல்வி, வேலை மருத்துவம், பாதுகாப்பு உட்பட ஒரு குடிமகனாக கிடைக்க வேண்டிய எந்த அடிப்படை உரிமைகளும் கிடைப்பது இல்லை. நாட்டின் அடையாள அட்டைகள் மட்டுமே அவர்கள் எந்த தேசத்து மக்கள் என்பதைச் சொல்ல முடியும். சொந்த நாடே அவர்களை விரட்டிவிட்ட பின்னால் எந்த அடையாளமும் இல்லாமல் இந்த பூமியில் ஒட்டிக் கொண்டு வாழும் அகதிகளின் ஒரே நம்பிக்கை இது தான்….

”மரணித்த பின்னர் என் மரணத்திற்கான சான்றினை என்னை தாங்கிக் கொண்டிருக்கும் ஏதாவது ஒரு நாடு தரும் என்ற நம்பிக்கை உள்ளது…"

அந்த மரணச்சான்று நான் இந்த பூமியில் எங்கோ ஒரு இடத்தில் பிறந்தேன் என்பதை உறுதி செய்யும்.

அகதிகள் என்று யாரும் தானாக விரும்பி ஏற்றுகொள்வது இல்லை. அடையாள அரசியல்களும், அதிகாரப் போர்களும் இந்த மக்களை முள்வேலிகளுக்குப் பின்னால் அடைத்து வைத்துள்ளன‌.

அகதிகளின் மன உணர்வுகளை “கையில் ஒரு கோடி ஆர் யூ ரெடி" என்ற மோகத்தில் இருக்கும் நம்மால் முழுமையாக உணர முடியாது. ஆனாலும் மனிதாபிமானத்தைத் துறந்து நாமாக பூசிக்கொள்ளும் எந்த ஒரு அடையாள அரசியலும் நமக்கு வேண்டாம். ஏனென்றால் இந்த பூமி அனைவருக்குமானது.

- மால்கம் X இராஜகம்பீரத்தான் 

Pin It