விட்டில் பூச்சிகளாய்
வீழ்ந்து கிடந்த
தமிழ்ச் சமூகத்திற்கு
விடியலைக் காண்பித்தவன்..!

ஆயுத வழிப் புரட்சியிலிருந்து
காகித வழிப் புரட்சிக்கு
தன்னையே ஒப்பளித்தவன்..!

கருப்பு உடுப்பு
சிவப்புச் சிந்தனை
வெள்ளை அணுகுமுறை
எங்களின் தோழமையே...
உனக்குச் சிவப்பஞ்சலி!

***

vidiyal_siva_243தமிழ்ச் சமூகத்தின் அறிவுலகத்தை குறிப்பாக இளந்தலைமுறையை மார்க்சியக் கண்ணோட்டத்தோடும், தமிழிய ஆர்வத்தோடும் வளர்த்தெடுக்க முனைந்தவர். தனது விடியல் பதிப்பகத்தின் வாயிலாக அரும் பெரும் நூல்களையெல்லாம் தமிழில் மொழி பெயர்த்தவர். உடற் குறைபாட்டிற்கு இடையிலும் தளராமல் இயங்கியவர். நோய் முற்றிய நிலையில் முடங்கிப் போனாலும், அண்மையில் விடியல் பதிப்பகம் குறித்து எழுத்து வியாபாரி ஜெயமோகன் அள்ளி வீசிய அவதூறுகளை மிகக் கண்ணியமான வகையில் பதிலுரைத்து, செருப்பால் அறைந்தவர். உள்ளபடியே தமிழுலகம் ஒப்பற்ற ஒரு கண்ணியவானை இழந்துவிட்டது. அதேபோழ்து, இலக்கியங்களையும், உலக வரலாற்றையும் அள்ளித் தந்த ஒரு பதிப்பகச் செம்மலையும் சாவுக்குக் கொடுத்துவிட்டு தடுமாறுகிறது.

ஒருமுறை மதுரை புத்தகக் கண்காட்சியில் திரு.சிவாவுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, கேள்வியொன்றை அவரிடம் கேட்டேன். 'புத்தகத் திருடர்களும் கண்காட்சிக்கு வருகிறார்கள்தானே. அவர்களில் எவரேனும் ஒருவர் தங்களது அரங்கிற்கு வந்து நூல்களைத் திருடிச் சென்றால் என்ன செய்வீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'ஒன்னும் செய்ய மாட்டேன். வாங்குவதற்கு பணமில்லையென்றால் பரவாயில்லை. எடுத்துச் செல்லுங்கள். ஆனால் தங்களால் இயலும்போது, அதற்கான தொகையை வழங்கிவிடுங்கள் என்றுதான் அறிவுறுத்துவேன். இதே போன்று ஈரோடு, நெய்வேலி புத்தகக்கண்காட்சியிலும் நடந்திருக்கிறது' என்றார். அப்படியொரு பெருந்தன்மையும், தமிழ்ச் சமூகத்தின் அறிவுப் பரப்பை விரிவு படுத்த வேண்டும் என்ற தணியாத தாகமும் கொண்டவர் தோழர் சிவா.

விடியல் சிவா என்ற ஒப்பற்ற, அப்பழுக்கற்ற மனிதனை இனி எங்கே காணப்போகிறோம்?

இருந்தும் வாழ்கின்றார் விடியலாக... அதன் ஒவ்வொரு நூல்களாக...

- இரா.சிவக்குமார், மதுரை

Pin It