ipl_2012_520

விளையாட்டு என்பது இரு மனங்களை, இரு சமூகங்களை ஏன் இரு தேசங்களை இணைக்கின்ற அன்புப் பாலம். காலங்காலமாய் இந்த மண், விளையாட்டை வெறும் விளையாட்டாகத்தான் பார்த்து வந்தது. வெற்றி பெறுகின்ற வீரர், வீராங்கனைகளுக்கு மாலை சூடி, பெருமையோடு பட்டம் சூட்டி மகிழ்ந்திருக்கிறது. ஆனால் மிக அண்மைக் காலங்களில் இளைஞர்களின் ஒற்றைக் கனவாகவும், சாதிக்கின்ற களமாகவும் பார்க்கக்கூடிய விளையாட்டாக கிரிக்கெட் மாறியிருப்பது மிகுந்த அவலத்திற்குரியது. கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகக் கைப்பற்றிய உலகக்கோப்பைக்குப் பின்னர், இந்தியக் கிராமங்களிலும் இந்த விளையாட்டு ஊடுருவி பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கிறது. 

'விளையாட்டு வினையாகிவிடும்' என்பது நம் கிராமங்களில் இப்போதும் வழங்கப்படுகின்ற ஒரு சொலவடை. ஆனால், ஒரு வினையே விளையாட்டாய் மாறி, இன்றைக்கு பல்வேறு வடிவங்களில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. ஐந்து நாட்கள் விளையாடக்கூடிய டெஸ்ட் கிரிக்கெட் என்ற நிலையிலிருந்து, ஒரு நாள் கிரிக்கெட் என்ற நிலைக்கு இறங்கி, இப்போது இருபதுக்கு இருபது என்று வணிகத்தை முதன்மைப்படுத்திய விளையாட்டாக கிரிக்கெட் மாறி, ஒட்டு மொத்தமாக ஐ.பி.எல். என்ற பெயரில் உலகம் முழுவதும் நாறிக் கொண்டிருக்கிறது. இளைஞர்களின் வெறித்தனமான ஆர்வத்திற்கு மேலும் உரமூட்டும் வகையில் திரைப்பட நட்சத்திரங்களின் அணிவகுப்பு, 'சியர்ஸ் கேர்ள்ஸ்' என்றழைக்கப்படுகின்ற நடனப் பெண்களின் ஆபாசக் குத்தாட்டம், போதாக்குறைக்கு ஊதிப் பெருக்கும் ஊடகங்களின் பொறுப்பற்ற போக்கு இவையே ஐபிஎல்லின் மூலதனம்.

தொடங்கும்போதே பல்வேறு சர்ச்சைகளுக்கு இலக்காகி, லலித்மோடியின் மோசடிகள் அம்பலமாகி இன்றைக்கு நாட்டை விட்டே ஓடி, மிக உல்லாசமாக ஒளிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். அரசியல்வாதிகளின் தலையீடு, நிழல் உலக தாதாக்களின் கைவரிசை என ஐ.பி.எல். கிரிக்கெட், இந்திய விளையாட்டுத்துறையின் மிக மோசமான முன்னுதாரணமாகிக் கொண்டிருக்கிறது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஐ.பி.எல். போட்டிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, பணம் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடுகிறது. அத்தோடு, போதைப்பொருட்களின் பயன்பாடும், மாதுக்களுடனான அத்துமீறலும் வரைமுறையின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மேட்ச் ஃபிக்சிங் எனப்படும் சூதாட்டம் பிசிசிஐ மற்றும் ஐபிஎல்லின் ஆதரவோடுதான் நடைபெறுகிறதோ என்ற ஐயமும் ஏற்படாமலில்லை. பல்லாயிரக்கணக்கான கோடிகள் புரளும் இந்தத் 'தொழிலில்', என்னென்ன விதிமீறல்கள் உண்டோ அத்தனையும் செவ்வனே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசும் ஒன்றும் செய்யாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது. டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் சுதீந்திரா, புனே வாரியர்ஸ் அணியின் மோனிஷ் மிஸ்ரா, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்களான ஸ்ரீவஸ்தவா, அபினவ் பாலி, அமித் யாதவ் ஆகியோர் ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்ட வீரர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புனே அணியில் விளையாடும் இந்திய வீரர் இராகுல் சர்மா மற்றும் தென்னாப்பிரிக்க வீரர் வேய்ன் பார்னெல் ஆகியோர் போதைப் பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அமெரிக்கப் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் லூக் பேமெர்ஸ்பேக் என்ற ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த ஐபிஎல் வீரர் ஒருவரும் அண்மையில் கைது செய்யப்பட்டார். இவரும் போதையில் இருந்ததாக காவல்துறை தெரிவித்தது. (அது சரி... அணிகளின் பெயர்களே மது நிறுவனங்களின் பெயரால் தானே அழைக்கப்படுகின்றன. அப்புறம், வீரர்கள் போதையில்தானே இருப்பார்கள்). இந்நிலையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட சோணு மற்றும் பையாஜி ஆகியோர் அளித்துள்ள விபரங்கள் மற்றும் காவல்துறையால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் வாயிலாக இந்திய வீரர்கள் பலருக்கும் இதில் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இலங்கை வீரர் ஒருவருக்கு ரூ.10 கோடி வரை கிரிக்கெட் சூதாட்டத்திற்காக வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

IPL_2012_500

இந்தி நடிகர் ஷாரூக்கான் மும்பை கிரிக்கெட் மைதானத்தில் காவலர்களோடு போதையில் தாக்குதலில் ஈடுபட்டதாக வெளியான செய்திகள் உட்பட, கொஞ்சம் கூட பொது நாகரிகமே இல்லாமல் அரங்கத்தில் புகைப்பிடிப்பது, பெண்களை அருவெறுக்கத்தக்க வகையில் கட்டிப்பிடிப்பது என ஐ.பி.எல். கற்றுக் கொடுத்த 'பண்பாடு' இந்தியாவின் 'பெருமையை' உலகறியச் செய்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். கிரிக்கெட் என்ற விளையாட்டு எந்தளவிற்கு வக்கிரம் பிடித்த ஒன்றாக மாறி விட்டது என்பதற்கு மேற்கண்ட நிகழ்வுகளே நல்ல சான்று. சமூக நோக்கம் கொஞ்சமும் இன்றி, விளம்பரமே பிரதானம் என்ற அளவில் செயல்படுகின்ற ஐபிஎல் என்ற சூதாட்ட வெறிக்கு முடிவு கட்ட வேண்டிய வேளை நெருங்கிவிட்டது

சென்ற முறை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்போது கொஞ்சமும் அதற்கு ஒத்துழைக்காமல், தென்னாப்பிரிக்கா சென்று போட்டிகளை நடத்தி மகிழ்ந்த இந்தக் கும்பல்தான், ஒவ்வொரு முறையும் பள்ளி இறுதித் தேர்வுகளின்போது ஐபிஎல் போட்டிகளை நடத்தி அவர்களின் எதிர்காலத்தைப் பாழடித்து வருகிறது. இந்திய மக்களின் நலனுக்காக ஆட்சி புரிகின்ற நடுவணரசு, இச்சயெலுக்காக ஐபிஎல் கும்பலை எச்சரிக்கும் தொணியில் கூட, கண்டிக்கத் துணியவில்லை.

தன்னை ஏலமெடுக்க ஒப்புதல் அளிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் தன்மானத்தை நினைத்தால் உண்மையில் புல்லரிக்கிறது. வெட்கமாக இல்லை இவர்களுக்கு! தன் புகழுக்காகவும், தனது சொத்துக்காகவும் பணம் சேர்க்கின்ற இந்நபர்களை வீரர்கள் என்று சொல்லவே நாக்கூசுகிறதே! இந்த இலட்சணத்தில் பாரத ரத்னா விருது இவர்களுக்கு ஒரு கேடா..? பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவர் தான் ஈட்டிய பணத்தில் நூறு கோடி செலவில் புற்றுநோய் மருத்துவமனை கட்டியிருக்கிறார். இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் தான் உட்பட நான்கு பேர் கொண்ட தனது குடும்பத்திற்காக நூறு கோடியில் வசந்த மாளிகை கட்டுகிறார். என்னே இவர்களின் தேசப் பாசம்..? 'இந்த நாட்டிற்காகத் தன்னலமின்றிப் பணி செய்த, தேசத்தின் பெருமையை உலகறியச் செய்த, அரசியல், சமூக சீர்திருத்தவாதிகளுக்கே பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும். அதை விடுத்து விளையாட்டில் சாதனை செய்தவர்களுக்கெல்லாம் இவ்விருது பரிந்துரைக்கப்பட்டால், அவ்வுயரிய விருதின் பெருமையும், பாரம்பரியமும் நீர்த்தல்லவா போய்விடும்?' என்று நீதியரசர் மார்க்கண்டேய கட்சூ எழுப்புகின்ற வினா எத்தனை உண்மையானது.

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட்டில் மோதுகின்றன என்றாலே, ஏதோ இரு நாட்டிற்கும் இடையில் நடைபெறும் போர் என்பதுபோல், வெறியூட்டி, வீசுகின்ற ஒவ்வொரு பந்திலும், எடுக்கின்ற ஒவ்வொரு ஓட்டத்திலும் இந்தியாவின் மானமே இருப்பது போன்ற மாயையை ஏற்படுத்தி, மேலும் மேலும் மத அடிப்படைவாதத்திற்கு தூபம் போடுகின்ற செயலை அரசன்றோ கண்டிக்க வேண்டும்! மாறாக, இளைஞர்கள் இது போன்ற போதையில் ஆழ்ந்து கிடப்பதைத்தானே இந்த அரசுகள் விரும்புகின்றன. கிரிக்கெட் என்ற ஒற்றை விளையாட்டைத் தவிர இந்தியாவில் வேறு விளையாட்டுக்களே இல்லையா? அவற்றிலெல்லாம் பங்கேற்கின்ற வீரர், வீராங்கனைகள் சாதனைகளே படைக்கவில்லையா? அதில் வெற்றி பெற்று சாதனை படைப்பவர்களுக்கெல்லாம் இந்தியப் பிரதமரும், பாராளுமன்றமும் ஒன்றாகக் கூடி பாராட்டுத் தெரிவிப்பதில்லையே... அது ஏன்? இந்தியாவின் தேசிய விளையாட்டு எது என்று இன்றைய குழந்தைகளைக் கேட்டுப் பாருங்கள். சத்தமாய்ச் சொல்வார்கள் கிரிக்கெட் என்று. 'ஹாக்கியா... அப்படி ஒன்று இந்தியாவில் இருக்கிறதா என்ன..?

இந்தியக் குழந்தைகளின் வருங்காலம் பாதுகாக்கப்பட வேண்டுமானால், ஐபிஎல்லை வேரோடும் வேரடி மண்ணோடும் அறுத்தெறிவது மட்டுமன்றி, கிரிக்கெட்டை ஒட்டு மொத்தமாக சூனியமாக்க வேண்டும். இல்லாவிட்டால், பதினோரு புத்திசாலிகளும், அவர்களை இயக்கும் தந்திரசாலிகளும், நூற்றுப்பத்து கோடியையும் தொடர்ந்து முட்டாள்களாக்கி, கேடிகளோடு, மது-மாது-சூதுக்களோடு, கோடிகளில் புரண்டு கொண்டுதானிருப்பார்கள். அரசும் இதனை சட்டை செய்யாமல் எப்போதும் போல வாளாவிருக்கும்.

-இரா.சிவக்குமார்
Pin It