ஆக. 18 அன்று நடந்த சென்னை பாராட்டுக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் கோவை இராம. கிருட்டிணன் ஆற்றிய உரை.

மே 2 ஆம் தேதி சேலத்தில் இருந்து மதியம் 2 மணிக்கு ஒரு தகவல் வருகின்றது. இராணுவ வாகனங்களில் ஆயுதம் செல்கின்றது. நாங்கள் தடுத்துப் பார்த்தோம்; நிறுத்தவில்லை. எப்படியாவது தடுக்க வேண்டும். அது ஈழத்துக்கு கொச்சி வழியாக செல்கின்றது என அறிகின்றோம் என்று சொன்னார்கள். எங்களுக்கு வேறு சிந்தனையே வரவில்லை. காரணம் இதற்கு முன்பு மார்ச் மாதம் ஈரோட்டிலிருந்து இரயில் வேகன்களில் 30க்கும் மேற்பட்ட இராணுவ டேங்குகள் கொச்சி வழியாக ஈழத்திற்கு சென்றிருக்கின்றது.

செய்தித் தாள்களிலும் (‘தினத்தந்தி’), தொலைக் காட்சிகளிலும் அந்த செய்திகள் வந்தன. அந்தச் செய்தியை பார்த்தவுடன் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேட்டார்கள், இப்படி ஒரு படம் வந்திருக்கின்றதே பார்த்தீர்களா? அது எங்கு செல்கின்றது தெரியுமா? தடுக்க முடியுமா? என்று கேட்டார்கள். ஆனால் செய்திகள் எங்களுக்கு எட்டுகின்றபோது ஒரு நாள் முடிந்துவிட்டது. ஆனால், அவர்கள் அதற்குள் கடந்திருப்பார்கள். நாங்கள் ஈரோட்டுத் தோழர்களைக் கேட்டோம், ‘இப்படி வாகனங்கள் சென்றதை உடனே எங்களுக்கு சொல்ல வேண்டாமா? சொல்லியிருந்தால் ஈரோட்டி லிருந்து கோவை வரை மக்களை திரட்டி, அந்த வாகனம் ஈழத்திற்கு செல்லாமல் தடுத்திருப்போமே, தெரியாமல் போய்விட்டதே’ என்று வேதனைப் பட்டோம்.

அந்த வேதனையில் இருந்த எங்களுக்கு, மீண்டும் ஆயுதம் ஏற்றிக் கொண்டு 80 இராணுவ லாரிகள் செல்கின்றன என்ற செய்தி கிடைத்தவுடன், நாங்கள் என்ன பாடுபட்டிருப்போம்? எங்களுக்கு வேறு சிந்தனையே இல்லை. இராணுவ வாகனங்கள் எங்கே வருகின்றன என்று சேலம் தோழர்களை கேட்ட போது, இன்னும் 2 மணிநேரத்தில் கோவை வந்து விடும் என்று சொன்னார்கள். நாங்கள் உடனடியாக தோழர்களுக்கு தகவல் தந்தோம். ஏறக்குறைய 300 பேர் கூடினோம். எங்கள் கைகளில் எந்த ஆயுதமும் இல்லை. ஆனால் இருந்த ஆயுதமெல்லாம் தமிழ் ஈழத்திலே இந்த இராணுவம் கொன்று குவிக்கின்றதே அதைத் தடுக்க வேண்டுமே என்ற உணர்வு மட்டுமே எங்களிடமிருந்த ஆயுதம். உடனே தடுத்தோம். உணர்வுள்ள தோழர்கள் வாகனங்களின் கண்ணாடி களை உடைத்தார்கள். உள்ளே இராணுவ வீரர்கள் துப்பாக்கிகளோடு இருந்தார்கள்.

தோழர்களே ஒன்றை புரிந்துக் கொள்ளுங்கள். சிலர் அப்பாவித்தனமாக கேட்கின்றார்கள். இந்த இராணுவம் தானே இந்திய நாட்டை காக்கின்றது. அப்பேர்பட்டவர்களை தாக்கலாமா? என்று. ஆனால், அந்த இராணுவ வீரர்களை தாக்குவது எங்கள் நோக்கமல்ல, அவர்கள் குற்றவாளிகள் அல்ல. இந்த ஆயுதங்கள் எங்கே போகிறது என்பதுகூட அவர்களுக்கே தெரிந்திருக்க வேண்டிய அவசிய மில்லை. ஒவ்வொரு பகுதிக்கும் வந்த பின்னால்தான், அடுத்து எங்கே செல்ல வேண்டும் என்பதையே அவர்களிடம் சொல்லுவார்கள். இது இராணுவ கட்டுப்பாடு.

அந்த இராணுவ வீரன் நமது இனத்தைச் சார்ந்தவன். அவர்கள் எந்த மாநிலத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அத்தனை பேரும் சூத்திரர்கள். ஒருவன்கூட பூணூல் போட்டவன் கிடையாது. இராணுவமாக இருந்தாலும், காவல் துறையாக இருந்தாலும் ஆட்கள் தேர்வு செய்கின்ற போது மைதானத்தில் உள்ளவர்களை படம் பிடித்துப் போடுவார்கள் பாருங்கள், மேல் சட்டை யில்லாமல் இருப்பார்கள். ஒருவர் உடம்பிலும் பூணூல் இருக்காது. சிப்பாய்களாக வருபவர்கள் இராணுவமாக இருந்தாலும், காவல் துறையாக இருந்தாலும் அவர்கள் அத்தனை பேரும் சூத்திரர் கள். நம்மவர்கள். ஆகவே எங்களுடைய நோக்கம் அந்த சிப்பாய்களை அடிப்பதல்ல, தடுப்பதல்ல. ஆனால் அந்த ஆயுதங்கள் ஈழத்தில் எம்மக்களை கொன்று குவிக்கப் பயன்படுமே; எனவே ஆயுதங் களைத் தடுக்க வேண்டும் என்பதே எங்கள் உணர்வு.

அந்த வாகனங்களில் ராக்கட் லாஞ்சர்கள் இருந்தன. எடுத்து கீழே போட்டார்கள். அந்த இராணுவ வீரர்கள் துப்பாக்கி வைத்திருந்தார்கள். அவர்கள் எங்களை சுட முடியும்; ஆனால் எங்களுக்கோ, அந்த பய உணர்வே யில்லை. இராணுவத்தை தாக்கப் போகிறோம். சுடுவார்கள் என்ற பயம் கடுகளவும் இல்லை. காரணம் லட்சக்கணக்கான மக்களை காக்கப் போகின்றோம் என்ற உணர்வுதான் எங்களிடம் மேலோங்கி நின்றது. அவர்கள் சுட்டிருந்தால் நாங்கள் இறந்து, இப்போது 3 மாதம் ஓடியிருக்கும்.

பிரபாகரன் படத்துடன் 10,000 பேர் கூடுவோம்

பிரபாகரன் படத்தை போடக் கூடாது என்று தடை போட்டுள்ளது இந்த ஆட்சி! அண்ணன் வைகோ அவர்களையும், கழகத் தலைவரையும் கேட்டுக் கொள்கின்றேன், மீண்டும் நீங்கள் கூடிப் பேசப் போகின்றீர்கள், பேசுங்கள். 10 ஆயிரம் பேர் இதே மெரினா கடற்கரையிலே அண்ணா சதுக்கத்திற்கு முன்னால் பிரபாகரன் படம் போட்ட பனியனோடு நிற்போம். (கைதட்டல்) கைது செய்யட்டும். சிறைச்சாலையிலே அடைப்பதற்கு இடம் கிடையாது. நினைவில் வையுங்கள். அரசாங்கம் மிரட்டிப் பார்க்கின்றது. கைது செய்தாலும் சிறையிலே அடைக்க மாட்டார்கள். திருப்பி அனுப்பித்தான் ஆக வேண்டும். இப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலே நாம் துணிய வேண்டாமா?

- கோவை இராமகிருட்டிணன் உரையிலிருந்து 

இதே முதலமைச்சர் கலைஞர் 1989 ஆம் ஆண்டு, இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற பெயரிலே இலங்கைக்கு சென்றுவிட்டு திரும்பி, இந்தியா வருகின்றபோது அதை வரவேற்க மாட்டேன் என்று சொன்னார். அதற்கு கலைஞர் சொன்ன காரணம், “எங்கள் தமிழ் மக்களை கொன்று குவித்துவிட்டு வந்த இராணுவத்தை நான் வரவேற்க மாட்டேன்” என்பதுதான்.

அமைதிப்படையில் சென்றிருந்த ஒரு இராணுவ வீரனுக்கு சிறப்பு செய்தது இந்திய அரசாங்கம். (அந்த இராணுவ வீரன் யார் என்றால், பகத்சிங்கின் அண்ணன் மகன்.) அந்த சிறப்பு விருதை பெற அவன் தயாரானான். ஆனால் அந்த வீரனுடைய தந்தை (பகத்சிங்கின் அண்ணன்) மகனிடம், ‘எங்கே போகின்றாய்’ என்று கேட்டார். ‘இந்திய அரசின் சிறப்பு விருதைப் பெறப் போகிறேன்’ என்று சொன்னவுடன், தந்தை கேட்டார், “ஒரு விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கி நசுக்குவதற்காக, விடுதலைப் போராளி களை அழிப்பதற்காக இலங்கைக்கு போனாய்; அதற்கு உனக்கு சிறப்பா? இதே விடுதலைப் போராட்டத்திற்காகத் தானே உன் சித்தப்பா பகத்சிங் தூக்கு மேடையேறினார். உன் சித்தப்பா இங்கே செய்த காரியத்தைத் தானே அங்கே விடுதலைப் புலிகளும், பிரபாகரனும் செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களை கொன்று ஒழிப்பதற்கு போன உனக்கு இந்த மானங்கெட்ட அரசாங்கம் தருகின்ற விருதைப் பெறப் போகலாமா?” என்று கேட்டார். (பலத்த கைதட்டல்)

தோழர்களே நீலாம்பூரிலே இராணுவத் தாக்குதலில் எங்களுடன் கைதான தோழர் சைமன் அவர்களைப் பார்த்து சிறையிலே அதிகாரிகள் கேட்டார்கள், ‘என்ன வழக்கு என்று’! அதற்கு சைமன் கொஞ்சம்கூட அச்சப் படாமல் ஒவ்வொரு முறையும் கூறுவார், “மானங்கெட்ட இந்திய இராணுவத்தை தாக்கிய வழக்கு” என்று. ஒவ்வொரு முறை கேட்கும் போதும் இதையே தான் சொல்லுவார் (கைதட்டல்)

இவர்கள் - ஒருமைப்பாடு, தேசியம் பேசுவது எல்லாம் நம்மிடம் தான். ஆனால், இந்திய இராணுவ அமைச்சர் அந்தோணி ‘இந்தியா’ எனது தேசம் என்ற உணர்வோடுதான் இருக்கின்றாரா? முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றமே கூறினாலும், அம்மாநிலத்தில் காங்கிரஸ் என்றாலும், கம்யூனிஸ்ட் என்றாலும் கட்சிகளை மறந்து எதிர்க்கிறான். அணை வலுவிழந்து இருக்கின்றது என்று பொய்யான காரணத்தைச் சொல்கிறார்கள். அணையை ஆராய்ச்சி செய்வதற்கு அந்தோணியின் பாதுகாப்புத் துறையைச் சார்ந்த இராணுவ வீரர்கள் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தார்கள். தமிழக அரசுக்கே இது தெரியாது. இதற்கு ஆணையிட்டவர்

ஏ.கே. அந்தோணி. இந்திய இராணுவ அமைச்சராக இருந்தாலும் தன்னை ஒரு மலையாளியாகக் கருதி, மலையாளி நலனுக்குத்தானே அவர் செயல்பட்டார்? இராணுவ அமைச்சருக்கே மலையாளி என்ற உணர்வு இருக்கும்போது, தமிழனாகிய நான் மட்டும் எனது இனத்தை அழிக்கச் செல்லும் இராணுவத்தை புனிதமாக மதிக்க வேண்டுமா? (கைதட்டல்)

பெரியார் ஒரு முழக்கத்தை சொல்லுவார், “நான் ஒரு நாத்திகன். என்னை யாராவது தாக்கினால், தாக்க முயற்சித்தால், அவர்களை கொல்லும் வேளையிலே சாவேன்” என்றார் பெரியார். அதை நெஞ்சிலே நாங்கள் தாங்கி இருக்கின்றோம். அதனால்தான் அன்றைக்கு அந்த மறியலை நடத்தினோம்.

இந்த வாகனம் கொச்சிக்குப் போகவில்லை என்று அப்போது மறுத்தார்கள். ஆனால், அதற்கு தலைமை தாங்கி வந்த தென்மண்டல அதிகாரி சொல்லுகின்றார், கொச்சிக்குத்தான் போனது என்று. அங்கிருந்து எங்கு செல்லுகின்றது என்பதை யெல்லாம் சொல்ல முடியாது, அது ரகசியம் என்று சொன்னார்.

நாங்கள் மூன்று மாத காலம் சிறையிலே இருந்ததோம். எவ்வளவோ துயர செய்திகள் எங்களை துயரத்தில் ஆழ்த்தின. ஆனாலும் சிறை எங்களை சிதைத்து விடவில்லை. எங்களை செதுக்கி இருக்கின்றது.

தோழர்களே, இளைஞர்களே இனியும் சிறைச்சாலையைக் கண்டு பயப்பட வேண்டாம். தந்தை பெரியார் காலத்தைப் போல் இப்போது சிறைச்சாலைகள் மோசமாக இல்லை.

1957-லே சாதி ஒழிப்புக்காக சட்டத்தை எரித்து 10 ஆயிரம் கருஞ்சட்டைப் படையினர் கைதானார்கள். 4 ஆயிரம் பேர் பல்வேறு சிறையிலே இருந்தனர். அதிலே 5 பேர் சிறைக்குள்ளேயே இறந்தனர். சிறையிலிருந்து வெளியே வந்த ஒரு மாதத்தில் 13 பேர் இறந்தனர். காரணம் உணவு சரியில்லை. மருத்துவம் சரியில்லை. கழிப்பிடமே இருக்காது. அப்போதைய கழிப்பிடம் ஒரு குழியை வெட்டி அதிலே தான் எல்லோரும் உட்கார வேண்டும். 24 மணி நேரமும் அறைக்குள் பூட்டியே வைத்திருப்பர். இருட்டறையிலே வைத்திருப்பர். இப்பேர்ப்பட்ட கொடுமைகள் எல்லாம் இன்றைக்கு சிறைச்சாலையில் இல்லை. இன்றைக்கு கோழிக்கறி, மின் விசிறி, தொலைக் காட்சி, நவீன கழிப்பிட வசதி போன்றவையெல்லாம் இருக்கின்றன. இவ்வளவு வசதிகள் இருந்தும் கடந்த ஆறு மாதகாலமாக பெரியார் திராவிடர் கழகமும், மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகமும் தான் சிறைக்கு போகின்றது. வேறு யாரும் வரவில்லையே. அவர்கள் நினைக் கின்றார்கள். இந்த சிறைகளைவிட இலட்சக் கணக்கான கோடிக்கணக்கான வருமானம் வெளியிலே இருக்கின்றது என்று நினைக்கிறார்கள். ஆகவே தோழர்களே, சிறையைக் கண்டு அஞ்சாதீர்கள்.

எங்களின் வேதனை எல்லாம் என்ன? 30 ஆண்டுகளாக பாடுபட்டோமே, பல்வேறு சிறைகளிலே தொல்லையை அனுபவித்தோமே, இவ்வளவு பாடுபட்டு, வாசல் வரை வந்த அந்த விடுதலையை இந்திய பார்ப்பன ஆட்சி நசுக்கிவிட்டதே. ஒரே நாளில் 25000 பேரை கொன்று குவித்திருக்கின்றதே. அது தான் வேதனை.

இன்றைக்கு தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசக் கூடாது; படம் வைக்கக் கூடாது என்றெல்லாம் உத்தரவு போடுகிறார்களே, எங்களுக்கு பிரபாகரன் படம் முக்கியமல்ல, அவரது லட்சியம் தான் முக்கியம். அந்த லட்சியத்துக்காக உண்மை யாக போராட வேண்டும். படத்தை மட்டும் காட்டுவதிலே பலன் இல்லை. ஆனால் பிரபாகரன் படத்தை தமிழகத்திலே வைக்க தடை; ஆனால், காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சே படம் வைக்க தமிழ் நாட்டில் தடை யில்லை. கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களிலே வீற்றிருக்கின்ற பிரபாகரன் படம் வைக்கத் தடை போடும் இதே ஆட்சி யில் தான் அண்மையிலே 10 ஆயிரம் பேர் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ நடத்தியிருக்கின்றார்கள் இதே சென்னையிலே; அதற்கு தடையில்லை. ஆர்.எஸ்.எஸ்.சின் நோக்கம் என்ன? மக்களை பிரிப்பதும், கொன்றொழிப்பதும் தானே?

தமிழ்நாட்டு மக்கள் தங்களைக் காப்பாற்றுவார்கள் என்று கடைசி வரை தம்பி பிரபாகரன் நம்பினார்; நம்மால் முடியவில்லை. ஆனாலும், எந்த விடுதலையும் நாள் குறித்து வருவதில்லை. 300 ஆண்டுகளுக்கு பிறகுதான் அயர்லாந்துக்கு விடுதலை கிடைத்தது. எனவே இந்த விடுதலையும் கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கை நமக்கு உண்டு.

தோழர்களே, நாங்கள் சிறையிலிருந்த போது பெரியார் திராவிடர் கழகத்தை தடை செய்யப் போகிறார்கள் என்று செய்தி வந்தது. இந்த நாட்டில் ‘பிளாஸ்டிக்’ பொருள்களை தடை செய்தார்கள். எங்காவது பிளாஸ்டிக்கை ஒழிக்க முடிந்ததா? இதையே ஒழிக்க முடியாதபோது பெரியார் திராவிடர் கழகத்தையா தடை போட்டு ஒழிக்க முடியும்? (கைதட்டல்) முடியாது, முடியாது.

நீங்கள் தருகின்ற இந்தப் பாராட்டு, எங்களை பாராட்டுவதல்ல. மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக, மற்றவர்களும் இதுபோல் துணிய வேண்டும்; போராட வேண்டும் என்பதற்காக எங்களை பாராட்டுகின்றீர்கள் என்று கூறி முடிக்கின்றேன்.

Pin It